மத்திய பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள்- வருமான வரியில் என்ன மாற்றம், மொபைல் போன் விலை குறையுமா?

பட மூலாதாரம், Getty Images
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார்.
நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்று ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளார்.
பட்ஜெட்டில் உற்பத்தி, வேலை வாய்ப்புகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது விஷயங்களுக்கு முன்னுரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன என நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் பட்ஜெட் உரையில், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலன் சார்ந்து திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். அத்துடன் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே அரசின் கொள்கை இலக்காக உள்ளது எனவும் அவர் கூறினார்.
''உலகளவில் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தாலும், பல இடங்களில் வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இல்லாமல் உள்ளது. அரசியல் நிச்சயமற்ற தன்மை, பன்னாட்டு உறவுகளில் நீடிக்கும் சிக்கல், கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி உயர்வு உலகளவில் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது, வரும் நாட்களிலும் இது தொடரும்'' என நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் இந்தியாவின் பணவீக்கம் 4% ஆக உள்ளது என்றார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வருமான வரியில் என்ன மாற்றம்?
- புதிய வருமான வரி திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு, நிலையான கழிவு (standard deduction) ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- மேலும் புதிய வருமான வரி திட்டத்தில், மூன்று லட்சம் வரை சம்பளம் பெற்றால் வரி இல்லை. மூன்று முதல் ஏழு லட்சம் வரை 5% வரி. ஏழு முதல் 10 லட்சம் வரை 10% வரி. 10 முதல் 12 லட்சம் வரை 15% வரி. 12 முதல் 15 லட்சம் வரை 20% வரியும், 15 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெற்றால் 30% வரியும் விதிக்கப்படும்
- பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

2024 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
- அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்
- விவசாய துறையில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன
- 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம்
- தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி, சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
- விவசாயத்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
- பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.
- நாட்டின் கிழக்கு பகுதி மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- பீகார் மாநிலத்தில் மட்டும் 3 அதிவேக சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
- ஆந்திரா வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி நிதி உதவி.
- ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்
- ஹைதராபாத் - பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம் அமைக்கப்படும்
- பிகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்.
- முத்ரா கடன் திட்டத்தின் மூலம் வழங்கும் கடன் தொகையின் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. (முன்பு கடனை சரியாக செலுத்தியவர்களுக்கு)

பட மூலாதாரம், SANSAD
- ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
- நியாய விலைக் கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதமர் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கப்படும்
- சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பல்வேறு திட்டங்களுக்காக பிகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என அறிவிப்பு. ஆந்திராவுக்கு 15,000 கோடி ரூபாயும், பிகாருக்கு 26,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படும்.
- வீடுகளின் மேல், சூரிய ஒளித் தகடுகள்(சோலார் பேனல்) மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் 1 கோடி வீடுகளுக்கு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 300 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும் நிலை உருவாகும்.
- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- இந்தியாவிலுள்ள 100 பெருநகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
- அரிய வகை கனிம(Rare Earth Metals) உற்பத்திக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்
- பிரதமர் ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்
- சென்னை - விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு சாலை அமைக்கப்படும்.
- மொபைல் பிசிடிஏ (பிரிண்டட் சர்க்யூட் டிசைன் அசெம்பிளி) மற்றும் மொபைல் சார்ஜர்களுக்கான அடிப்படை சுங்க வரி (பிசிடி) 15% ஆக குறைக்கப்படுகிறது.
- அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரம் ஐந்து மடங்காக விரிவுபடுத்துகிறது. இந்த இலக்கை அடைய, ரூ.1,000 கோடி மூலதன நிதி நிறுவப்படும்.
- காலநிலை மாற்றம் மற்றும் தணிப்பு(Climate change and mitigation) திட்டங்களுக்கு சிறப்பு கொள்கை உருவாக்கப்படும்

எதன் விலை குறையும்
- பட்ஜெட்டில் சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- சார்ஜர்கள் மீதான சுங்க வரியும் 15 சதவீதம் குறைக்கப்படும்
- தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி ஆறு சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
எதன் விலை அதிகரிக்கும்
- அம்மோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரி 10 சதவீதம் அதிகரித்துள்ளது
- மக்காத பிளாஸ்டிக்கிற்கான சுங்க வரி 25% அதிகரித்துள்ளது.
- பங்குச்சந்தையில் ஓராண்டுக்கும் குறைவான முதலீடுகள் மீதான வரி 15ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
- பங்குச்சந்தையில் ஓராண்டுக்கு மேல் முதலீட்டுக்காம வரி 10ல் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
- சில வகையான தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான சுங்க வரி 10ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு திட்டங்கள்
- அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் ஐடிஐ-க்கள் உருவாக்கப்படும்
- இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும்.
- பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மூலம் 12 மாதங்களுக்கு பயிற்சிவழங்கப்படும். இத்திட்டத்தின்போது மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 5000 வழங்கப்படும்.
- 4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் வகையில், புதிய கொள்கை வகுக்கப்படும்.
- வேலை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
- முதல் முறையாக வேலைக்கு செல்வோரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ஊக்கத்தொகை செலுத்தப்படும்.
- வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம்.

பட மூலாதாரம், SANSAD TV
கல்வி திட்டங்கள்
- 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு அரசு நிதியுதவி அளிக்கும். இ-வவுச்சர்கள் மூலம் இந்த உதவி வழங்கப்படும், இது ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் மற்றும் கடன் தொகையில் 3 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்படும்.
- இது தவிர, திறன் மேம்பாட்டுத் துறைக்கான பல திட்டங்களை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டினார்.
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
- விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் வளர்ச்சிக்காக 1.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் காரீஃப் பயிர்கள் குறித்து டிஜிட்டல் சர்வே நடத்தப்படும்.
- ஐந்து மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்ட் வழங்கப்படும்
- இறால் இனப்பெருக்க மையங்களின் கட்டமைப்பை நிறுவ நிதி உதவி வழங்கப்படும்
- அதிக மகசூல் மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கும் வகையில் 32 விவசாய பயிர்களில் 109 ரகங்கள் வெளியிடப்படும். இதன் மூலம் விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறை மேம்படும்.
- இயற்கை விவசாயம் குறித்து நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்படும்
நகைகளுக்கான வரி
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6% ஆகவும், பிளாட்டினம் மீதான சுங்க வரியை 6.5% ஆகவும் குறைக்கப்படும்.
பிகார், ஆந்திராவுக்கு திட்டங்கள்
பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து துறை வளர்ச்சிக்காகவும் ‘பூர்வோதயா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும்.
பிகார் மாநில வளர்ச்சிக்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
ஏற்கனவே உருவாக்கப்படும் இரண்டு விரைவு வழிச்சாலை இல்லாமல், மேலும் 3 விரைவு வழிச்சாலை பிகார் வழியாக அமைக்கப்படும்.
பக்சர் மாவட்டத்தில் உள்ள கங்கா ஆற்றின் மேல், புதிய பாலம் அமைக்கப்படும். இது இருவழிச்சாலையாக அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவிப்பு.
நாளந்தா சுற்றுலா மையத்தை மேம்படுத்த நிதியுதவி அளிக்கப்படும்.
விஷ்ணுபாத் கோவில் மற்றும் கயாவிலுள்ள மகாபோதி கோவிலும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு இணையாக மேம்படுத்தப்படும். இத்துடன் ராஜ்கீரிலுள்ள சமண கோவிலும் மேம்படுத்தப்படும்.
பிகாரில் வெள்ளத்தால் ஏற்படும் சேதம், பயிர் பாதிப்புகளை களைய உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். குறிப்பாக கோசி ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பட மூலாதாரம், RASHTRAPATIBHVN
பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்துக்கள் என்ன?
இந்த பட்ஜெட் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்கிறது மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கு வழி வகுக்கிறது என பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி கட்சிகளை, பெரு நிறுவனங்களை திருப்திப்படுத்தும், காப்பி, பேஸ்ட் செய்யப்பட்ட பட்ஜெட் இது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
வரி குறைப்பு, வேலைவாய்ப்புத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை, தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட் உரை முடிந்த பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இடம்பெற்று இருந்த அப்ரண்டிஸ்ஷிப் திட்டத்தை பட்ஜெட்டில் பாஜக அறிவித்து இருக்கிறது. இது போல இன்னும் எத்தனை திட்டங்கள் பெயர் மாற்றி அறிவித்து இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று கூறினார்.
“கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக ஆந்திரா மற்றும் பிகார் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, திட்டங்கள் அறிவித்து இருப்பது எனக்கு புரிகிறது,” என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












