உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியாவின் 'துல்லியத் தாக்குதல்'

பட மூலாதாரம், Hockey India/Twitter
ஒடிஷா மாநிலத்தில் தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கியின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 12 நிமிடத்தில் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றார்கள். அதை இந்திய வீரர்கள் அற்புதமாகக் கோலாக மாற்றினார்கள்.
26-ஆவது நிமிடத்தில் ஸ்பெனின் டி பகுதிக்குள் அற்புதமாக பந்தைக் கடத்தி வந்த இந்திய வீரர்கள் மற்றொரு கோலை அடித்தனர்.
ஆட்டத்தின் பாதி நேரத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
32-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்புக் கிடைத்தது. ஹர்மன்ப்ரீத் சிங் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். ஆனால் ஸ்பெயின் கோல் கீப்பர் ரஃபி அற்புதமாக அந்தப் பந்தைத் தடுத்தார்.
பந்தை அடிப்பதற்கு முன்னதாக கோல் லைனை விட்டு கோல் கீப்பர் வெளியே வந்துவிட்டதாக இந்திய அணி சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அது காணொளியில் உறுதி செய்யப்படவில்லை. இதனால் மறுமுறை பெனால்ட்டி ஸ்ட்ரோக்கை அடிக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.
மூன்றாவது கால்பகுதி ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. பெனால்ட்டி கார்னர் மற்றும் பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டது.
48-ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரருடன் மோதிய இந்திய வீரர் அபிஷேக்கிற்கு 10 நிமிட சஸ்பென்சன் வழங்கப்பட்டது.
ஆட்டம் முழுவதிலும் ஸ்பெயின் அணிக்கு சில கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த போதும் இந்திய தடுப்பரண் வீரர்களும், கோல் கீப்பரும் அவற்றை கோலாக்க விடாமல் தடுத்தார்கள்.
51-ஆவது நிமிடத்தில் இந்திய கோலை நோக்கி அடிக்கப்பட்ட ஷாட்டை இந்திய வீரர் கிரிஷன் தடுத்தார்.
அதன் பிறகு இரண்டு கார்னர் வாய்ப்புகள் ஸ்பெயினுக்கு கிடைத்தன. இந்த இரு வாய்ப்புகளையும் ஸ்பெயின் வீரர்கள் வீணாக்கினர்.
இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Hockey India/Twitter
கோப்பை கனவில் இந்திய அணி
15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிஷாவின் ரூர்கேலா மற்றும் புவனேஷ்வரில் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்காக, பழங்குடியின புரட்சியாளர் பிர்ஸா முண்டாவின் பெயரில் ரூர்கேலாவில் ஒரு மைதானம் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் நாட்டின் ஒரே நகரம் புவனேஷ்வர். 2018 உலகக் கோப்பையும் இங்குதான் நடந்தது.
முன்னதாக இந்தியா மும்பை, புதுடெல்லி மற்றும் புவனேஷ்வரில் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் இந்தியாவால் வெற்றி மேடையில் ஏறமுடியவில்லை.
ஆனால் 47 ஆண்டுகளாக நிலவி வரும் பதக்க வறட்சிக்கு இம்முறை முடிவு கட்டப்படும் என்ற முழு நம்பிக்கையுடன் இந்தியா உள்ளது.

பட மூலாதாரம், Hockey India/Twitter
இந்தியாவுக்கு சவால்
கடந்த ஐந்தாண்டுகளைப் பற்றி பேசினால், பெல்ஜியத்தை காட்டிலும் வேறு எந்த அணியும் சிறப்பாகச் செயல்படவில்லை. இதன் போது, டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2018 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றது மட்டுமல்லாமல், 2019 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் அந்த அணி வென்றது.
அதனால் மீண்டும் ஒருமுறை பட்டம் வெல்லும் வலுவான போட்டியாளராக அந்த அணி கருதப்படுகிறது. உண்மையில் பெல்ஜியம் அணி மிகவும் சமநிலையான அணி. தனது தாக்குதல் ஆட்டத்தால் எந்த அணியையும் சிதறடிக்கும் திறன் கொண்டது அது.
இந்தக் குழுவில் உள்ள மற்ற அணிகள் ஜெர்மனி, தென் கொரியா மற்றும் ஜப்பான். குழுவில் முதல் இடத்தைப் பிடிக்க பெல்ஜியம், ஜெர்மனியிடமிருந்து மட்டுமே ஓரளவு வலுவான சவாலை எதிர்கொள்ளும்.
2016 ரியோ ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டீனாவிடம் தோற்றதைத் தவிர, சமீப காலங்களில் அந்த அணியால் எந்த வலுவான ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடியவில்லை. கொரியா மற்றும் ஜப்பான் அணிகளும்கூட திடீர் ஆச்சரியங்களைக் கொடுக்கும் திறன் உள்ளவை.
ஆஸ்திரேலியாவும் யாருக்கும் குறைந்ததல்ல கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக விளையாடிய அணியைப் பற்றி நாம் பேச வேண்டுமென்றால், அது ஆஸ்திரேலியாதான். கடந்த இருபது ஆண்டுகளாக உலகக் கோப்பையில் முதல் நான்கு அணிகளில் எப்போதும் அது இருந்து வருகிறது. இதன் போது ஒலிம்பிக், உலகக் கோப்பை, எஃப்ஐஎச் புரோ லீக், காமன்வெல்த் கேம்ஸ் என எல்லா முக்கிய பட்டங்களையும் அது கைப்பற்றியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் அது திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

பட மூலாதாரம், Hockey India/Twitter
ஆஸ்திரேலியாவின் குரூப் ஏ பிரிவில் 2016 ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டீனா, பிரான்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளன. ஆஸ்திரேலியா தற்போது விளையாடி வரும் விதத்தைப் பார்க்கும்போது இந்த அணிகள் எதற்கும் அவர்களைத் தடுக்கும் திறன் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்த மூன்று அணிகளும் வேகமான ஹாக்கி விளையாடுவதை நம்புகின்றன. எனவே எதிர்பாராத ஒன்றை நிகழ்த்திக் காட்டவும் அந்த அணிகளால் முடியும். ஆனால், இம்முறை பட்டம் வெல்வோம் என ஆஸ்திரேலிய கேப்டன் ஒகெண்டேய்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நெதர்லாந்து அணி கடந்த இரண்டு உலகக்கோப்பை போட்டிகளின் இறுதிப் போட்டியில் விளையாடிய போதிலும் கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. கடந்த முறை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்திடம் அது தோற்றது. ஆனால் இம்முறை நான்காவது பட்டத்தை வெல்லும் நம்பிக்கையுடன் அது உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நெதர்லாந்து, இளைஞர் படையுடன் ஒரு அணியைத் தயார் செய்துள்ளது. ஆனால் அந்த அணி கடைசியாக உலகக் கோப்பையை வென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது ஒரு திறமையான அணிதான். ஆனால் தங்கத்தைக் கைப்பற்ற முடியுமா எனச் சொல்வது சற்று கடினம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












