ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதையால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தா?

தனுஷ்கோடி
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே கடற்கரைக்கு அருகில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய ரயில் பாதையால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய கேந்திரமாகவும், இந்தியாவின் தென் கடலோர வணிக மையமாகவும் விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. ஒரு நாள் புயலில் அந்தப் பெருமை முழுவதும் மண்ணோடு மண்ணானது.

1964 டிசம்பர் 17-ல் காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் கடல் பகுதியில் உருவானது. அது புயலாக மாறி டிசம்பர் 23-ல் தனுஷ்கோடியை தாக்கியதில் கடல் பொங்கி, பேரலை வீசி ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து தனுஷ்கோடி வந்த ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் இயற்கையின் இந்த சீற்றத்தில் உயிரிழந்தனர். ரயிலில் ஆடல் பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவிகளும் இதில் அடங்கும்.

ஒரு ரயிலை மட்டுமல்லாமல், தனுஷ்கோடி முழுவதையும் அழித்த இந்தப் பேரலை, ரயில் பாதை முழுவதையும் கடலுக்குள் அடித்துச் சென்றுவிட்டது. அதன் பிறகு தனுஷ்கோடி வரையிலான ரயில் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டது.

தனுஷ்கோடி நகரம் புயலால் அழிந்து 50 ஆண்டுகள் கடந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 17கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது.

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

அதை தொடர்ந்து சென்னை ஐஐடி பொறியாளர்கள் தனுஷ்கோடிக்கான ரயில் பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ரயில் பாதையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க சாலை மட்டத்தில் இருந்து 6 முதல் 7 மீட்டர் உயரத்தில் இந்தப் பாதையை அமைக்கப் பரிந்துரைத்தனர்.

10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோதனை

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பாதை

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரையில் ரயில் பாதை அமைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கட்டமாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 18 மீட்டர் ஆழத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு மற்றும் கோதண்டராமர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 30 மீட்டர் ஆழம் வரையில் எந்திரம் மூலம் துளையிடப்பட்டு ஆய்வுக்காக மண் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கடற்கரைக்கு மிக அருகே ரயில் பாதை அமைய உள்ளதால் அந்த தூண்கள் அதிக உறுதியோடு இருக்கவேண்டும் என்பதற்காக பல கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே அமைய உள்ள புதிய ரயில் பாதை தொடர்பான ஏற்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ரயில் போக்குவரத்தால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்து

ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே கடற்கரைக்கு மிக அருகே அமைய உள்ள புதிய ரயில் பாதையால் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் வலசை வரும் பிளமிங்கோ, கடல்புறா மற்றும் வெளிநாட்டு பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரிக்க வரும் ஆமைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதுடன், பல்லுயிர் பெருக்கத்திற்கு பேராபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் வரை அமைய உள்ள இந்த ரயில் பாதையில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளால் கடல் மாசுபடக்கூடும் என்பதால் இந்த புதிய ரயில் பாதையை கடற்கரையை விட்டு மாற்று பாதையில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் எங்கு செல்லும்?

இது குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தனுஷ்கோடி பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வரும் பைஜூ பிபிசி தமிழிடம் பேசுவையில், தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள கடல் பகுதிக்கு வெளிநாட்டு வலசைப் பறவைகள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் வந்து செல்கின்றன.

இந்த கடற்பரப்பில் சிற்றுயிரிகள் மற்றும் புழுக்கள் என பறவைகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதால் இரை தேடி வருடா வருடம் பறவைகள் இங்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால் தற்போது புதிய ரயில் பாதை அங்கு அமைய உள்ளதால் வலசை வரும் பறவைகள் பாதிக்கப்படும் என்கிறார் அவர்.

இந்த ரயில் பாதை அமையவுள்ள நிலப்பகுதி பேக் வாட்டர் என்று அழைக்கப்படும் உப்பங்கழிப் பகுதியாகும். ஆண்டுக்கு பாதி நாள்கள் இது வற்றி சதுப்புத் தன்மையோடு இருக்கும். இந்த சதுப்பு நிலத்தில்தான் பறவைகளுக்குத் தேவையான புழுக்கள், சிற்றுயிர்கள் இருக்கும்.

பறவைகள் ஆர்வலர் பைஜு
படக்குறிப்பு, பறவைகள் ஆர்வலர் பைஜு

ரயில் பாதை அமைப்பதற்காக இந்த சதுப்பு நிலத்தை கற்கள், பாறைகள், செம்மண் உள்ளிட்டவைகளை கொட்டி உயரப் படுத்தி நிலத்தின் தன்மையை கடினமாக்கி விடுவார்கள். இதனால் சதுப்பு நிலத்தை மட்டுமே நம்பி உணவுக்காக வரும் வலசை பறவைகள் இங்கு வருவதை தவிர்க்கும் நிலை ஏற்படும்.

கடந்த ஐந்து ஆண்டு கணக்கெடுப்பில் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரை பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் கோதண்டராமர் கோவில் முதல் முகுந்தராயர் சத்திரம் வரை பறவைகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை ஆயிரக்கணக்கில் தனுஷ்கோடி வரும் வலசை பறவைகளுக்காக தமிழக வனத்துறை கோதண்டராமர் பகுதியில் சரணாலயம் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் புதிய ரயில் பாதை அமைய உள்ளதால் சரணாலயம் அமைப்பதற்கான திட்டம் கைவிடப்படும்.

தற்போது தனுஷ்கோடி வரை அமைக்கப்பட்டுள்ள சாலையால் கடலில், சாலையின் வடக்கிலிருந்து தெற்குப் பகுதிக்கும் தெற்கிலிருந்து வடக்கு கடல் பகுதிக்கும் ஆமைகள் முட்டையிட செல்ல முடியாமல் ஆமை முட்டை எண்ணிக்கை குறைந்துள்ளது என்கிறார் பைஜு.

மக்கள் வசிக்கத் தகுதியற்ற பகுதிக்கு ரயில் சேவை எதற்கு?

தொடர்ந்து பேசிய பறவைகள் ஆர்வலர் பைஜு, ரயில்வே துறையை பொறுத்தவரை 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டுமே ரயில் பாதை திட்டம் அமைக்கப்படும் என முடிவு செய்துள்ள நிலையில் தனுஷ்கோடி என்ற மக்கள் வாழத் தகுதியற்ற, தடை செய்யப்பட்ட பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதிக்கு ஏன் மீண்டும் ரயில் பாதை அமைக்கவேண்டும் என்பது மிகப்பெரிய கேள்வி என்கிறார் பைஜு.

ரயிலில் செல்லும் பயணிகள் பிளாஸ்டிக், மனித கழிவுகளை தனுஷ்கோடி ரயில் பாதையில் விட்டு செல்வார்கள் அதனால் கடற்கரை மாசுபட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அங்கு கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த கட்டடங்கள் அனைத்தும் கடற்காயலை அழித்து கட்டப்படும்.

தனுஷ்கோடி வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் சாலை வழியாக வண்டிகளில் சென்று சென்று தனுஷ்கோடி கடலின் அழகை ரசித்து செல்கின்றனர். எனவே பேட்டரி கார்கள் சுற்றுலாப் பேருந்துகள் உள்ளிட்டவைகளை அரசு அதிகமாக இயக்கி சுற்றுலாவை மேம்படுத்தலாம்.

தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்துவதாக கூறி இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை சிதைத்து விட வேண்டாம் என்கிறார் பறவைகள் ஆர்வலர் பைஜு.

தனுஷ்கோடி புதிய ரயில் பாதை தற்கொலைக்கு சமமானது

தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை அமைப்பது தற்கொலைக்கு சமமான ஒன்று என்கிறார் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி.

இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையின் முதல் சரத்தின் அடிப்படையில் நன்னீர் கடல் நீர் கலக்கும் கடற்கரைக்காயல் பகுதியில் கட்டுமான பணிகள் அமைக்க கூடாது என்ற விதி உள்ளது.

கடற்கரைக்காயல் பகுதியில் மீன்கள் உருவாக அதிக வாய்ப்புகள் உண்டு. அந்த இடத்தில் கற்களை கொட்டி சேதப்படுத்தினால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்படும்.

தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி

ஆனால் அதற்கு பதில் தூண்கள் அமைத்து ரயில் பாதை அமைத்தால் கடல் நீரோட்டம் செல்ல அதிக வாய்ப்பு உண்டு. புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் மீனவர்களை இணைத்து அவர்களிடம் ஆலோசனை பெற்று கட்டுமான பணி செய்ய வேண்டும். தனுஷ்கோடி புதிய ரயில் பாதை கோதண்டராமர் கோவில், முகுந்தராயர் சத்திரம் சதுப்பு நில பகுதிகளில் அமைய உள்ளதால் மனிதர்கள் வெளியிடும் கழிவுகளால் கடல் வளம் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் கரைவலை, நாட்டுப்படகு சிறு தொழில் மீன் பிடிப்பு பாதிக்கப்பட்டு பாரம்பரிய மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும்.

தனுஷ்கோடி சென்று வர 24 மணி நேர சாலை போக்குவரத்து உள்ள நிலையில் ஏன் புதிய ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்? தனுஷ்கோடியில் வீசிய புயலால் அந்த நகரம் அழிந்த வரலாற்றுத் தரவுகள் உள்ளன.

எதிர்காலத்தில் இது போன்ற புயல் தெற்கு கடல் பகுதியில் உருவாகி மீண்டும் தனுஷ்கோடி நகரத்தை அழிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே தனுஷ்கோடி பகுதியில் ரயில் பாதை அமைப்பது தற்கொலைக்கு சமமானது.

நவீனம் என்ற பெயரில் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செலவை குறைத்து திட்டங்களை மேற்கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் ரயில் பாதை அமைத்தால் மீனவர்கள் நிச்சயம் வரவேற்கிறோம் என்கிறார் சின்னதம்பி.

சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பில் ரயில் பாதை அமைக்கப்படும்

கடந்த வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே அமைய உள்ள புதிய ரயில் பாதை குறித்து ஆய்வு செய்ய தனுஷ்கோடி வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்கிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள் ஆகியோரின் கவலை குறித்து பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த அவர், ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்

தேவையான நிலம் கிடைத்தவுடன் ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

சுற்றுச்சூழல், பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு அறிக்கை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைத்த உடன் கடல் வாழ் உயிரினங்கள், பறவைகளுக்கு தொந்தரவு இல்லாமல் சுற்றுச் சூழலுக்கு குறைவாகவே பாதிப்பு இருக்கும் வகையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே ரயில் பாதை பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

காணொளிக் குறிப்பு, மழை நீரைப் பருகுவது உடலுக்கு நல்லதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: