காலநிலை மாற்றத்தால் பெண்ணாக மாறும் ஆண் உயிரினங்கள் - ஆபத்தான அதிசயம்

சைபீரியாவில் உள்ள ‘பெர்மஃப்ரோஸ்ட்’ பகுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலத்தின் அடியில் உள்ள வாயுக்கள் வெடிப்பதால் உண்டாகும் குழிகள்
    • எழுதியவர், விக்டோரியா கில் & எல்லா ஹம்லி
    • பதவி, பிபிசி

காலநிலை மாற்றத்தின் பல தாக்கங்கள் மனிதர்களால் தாங்க முடியாத அளவில் உள்ளன. அதில் சில மனிதர்களால் புரிந்து கொள்ள இயலாததாகவும் உள்ளன.

இருளாகும் பூமி

சைபீரியாவில் ‘பெர்மஃப்ரோஸ்ட்’ எனப்படும் பனிப்படலத்தால் மூடப்பட்ட மண் படுகைகள் உள்ளன. இது இரண்டு வருடங்களுக்கும் மேலாக உறைந்து போன நிலமாக கருதப்படுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள பள்ளங்களுக்கு புவி வெப்பமயமாதலை காரணமாக கூறுகின்றனர் ரஷ்ய விஞ்ஞானிகள். வெப்பநிலை பூமிக்கடியில் இருக்கும் வாயுக்களை வெடிக்க வைத்து, பள்ளங்கள் உருவாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் ஆர்டிக் பகுதி நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியிலிருந்து நிலவின் இருளான பகுதிக்கு இரவில் பிரதிபலிக்கப்படும் சூரிய ஒளியை அளந்து அதனை ‘எர்த் ஷைன்’ அல்லது 'அல்பெடோ' (albedo) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

கிழக்கு பசிஃபிக் பெருங்கடலில் உள்ள தாழ் மேகங்களின் எண்ணிக்கை பெருங்கடல் வெப்பமயமாதலால் குறைந்து கொண்டு வருகிறது. இந்த மேகங்கள் ஒரு கண்ணாடியை போல செயல்பட்டு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும். எனவே அந்த மேகங்கள் இல்லாமல் போனால் வெளிச்சம் குறைந்துவிடும்.

எனவே வெப்பமயமாதல் பூமியை இருளாக்கி வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊர்வனவற்றின் பாலின மாற்றம்

புவி வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. சில உயிரினங்கள் ஆச்சர்யமிக்க வகையில் புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படுகின்றன.

சில ஊர்வன உயிரினங்களில் அதன் முட்டை அடைகாக்கப்படும் சமயத்தில் உள்ள வெப்பம்தான் பகுதியளவில் அதன் பாலினத்தை முடிவு செய்யும்.

ஆஸ்திரேலியாவில் காணப்படும் சென்ட்ரல் பியர்டட் ட்ரேகன்ஸ் (central bearded dragons) எனும் ஒரு வகை பல்லிகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அடைக்காக்கப்பட்டால் முட்டைக்குள் இருக்கும் குஞ்சுகள் மரபணு ரீதியாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக மாறிவிடும். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் எல்லாம் பெண்ணாக மாறிவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும்.

அதேபோல பெருங்கடலில் பசுமைக் குடில் வாயுவான கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்தால், மீன்கள் தனது வாசனை சக்தியை இழந்துவிடும்.

அதேபோல ஒரு முழுமையான உணவு சங்கிலித் தொடர் வெப்பமயமாதலால் மாறியுள்ளது.

great tit nestlings
படக்குறிப்பு, கிரேட் டிட் பறவைக் குஞ்சுகள்

மிளகாய் சாஸுக்கு வந்த தட்டுப்பாடு

அதீத வெப்பநிலை உணவுப் பொருட்கள் வளர்வதையும் கடினமாக்குகிறது. கோதுமை, மக்காச் சோளம் மற்றும் காஃபி பயிர்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் சில பயிர்களின் உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளது.

கலிஃபோர்னியாவில் உள்ள ஹை ஃபாங் புட்ஸ் என்னும் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் பாட்டில் பச்சை மிளகாய் சாஸை தயாரித்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிறுவனம் பச்சை மிளகாய் உற்பத்தி குறைந்து வருவதால் தனது வாடிக்கையாளர்கள் சாஸை குறைவாக பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிஜான் வகை கடுகுகள்

கோடைக் காலத்தில் ஃபிரான்ஸில் உள்ள சூப்பர் மார்கெட்டுகள் 'டிஜான்' வகை கடுகுகள் தங்களிடம் இல்லை என தெரிவித்தது. இந்த வகை கடுகு கனடாவில்தான் அதிகம் விளைகிறது. ஆனால் பருவநிலை மாற்றம் அதன் உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளது.

 அதேபோல பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கார்பன் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஃபிரான்ஸில் போதுமான குளிர்ந்த நீர் இல்லை என்ற காரணத்தால் இடிஎஃப் என்ற ஆற்றல் நிறுவனம் ஃபிரான்ஸில் உள்ள அணு ஆலைகளில் உற்பத்தியை குறைத்தது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா பருவநிலை கூட்டத்தில் 200 நாடுகள் இணைந்து கார்பன் பயன்பாட்டை குறைப்பதாக ஒப்புக் கொண்டன.

புவி வெப்பமயமாதல் பல பிரச்னைகளை நாளுக்கு நாள் ஏற்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் மேலும் பல ஆச்சரியமான தாக்கங்களை நாம் எதிர்கொள்ளவும் தயாராகவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: