மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம்

பட மூலாதாரம், Getty Images
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி நாற்பது நிமிடங்களை ஆக்கிரமித்திருந்தவர் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே.
ஒரே பக்கமாகச் சென்று கொண்டிருந்த போட்டியை இழுத்துப் பிடித்து பிரான்ஸின் பக்கம் கொண்டுவந்தவர் அவர். போட்டியை மாற்றுவதற்கு அவருக்கு இரண்டே நிமிடங்கள்தான் தேவைப்பட்டன.
80-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் ஒரு கோலும், 81-ஆவது நிமிடத்தில் மற்றொரு மின்னல் வேக கோலும் அடித்து பிரான்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்தார்.
அந்த இரு நிமிடங்களில் 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி, அர்ஜென்டினா அணி ரசிகர்களின் மனங்களில் நினைவுக்கு வந்திருக்கும். அந்தத் தொடரின் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸும் அர்ஜென்டினாவும் மோதின.
19 வயது வீரராகக் களமிறங்கினார் எம்பாப்வே. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தபோது, அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றியைத் தேடித் தந்தார் எம்ப்பாப்வே.
கத்தார் இறுதிப் போட்டியிலும் எம்பாப்பேவை பொறுத்தவரை, இரண்டாவது பாதி ஆட்டம் அப்படித்தான் இருந்தது. கடைசி நொடி வரை எம்பாப்வே பிரான்ஸுக்கு வெற்றியைத் தேடித் தருவதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பிரான்ஸ் வீரர்களின் விட்டுவிடாத மன உறுதியையும் எம்பாப்பேயின் ஹாட்ரிக் கோல்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மின்னல் வேகக் கோல்
80-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்த எம்பாப்பேக்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு வாய்ப்புக் கிடைத்தது. இந்த முறை எதிர்பாராத வகையில் மெஸ்ஸியிடம் இருந்து பந்தைப் பறித்து பிரான்ஸ் வீரர்கள் அதை கோலை நோக்கிக் கொண்டு வந்தார்கள்.
பெனால்ட்டி பாக்ஸுக்கு சற்று உள்ளேயிருந்து மிகத் துல்லியமாகவும் அதி வேகமாகவும் கோலுக்குள் அடித்தார் எம்பாப்பே. ஓடியபடியே சாய்ந்த நிலையிலும் அவரது தாக்குதல் மிகவும் வலிமையாக இருந்தது.
சுமார் 90 நொடிகள் இடைவெளியில் அவர் அடித்த இரண்டு கோல்களும்தான் பிரான்ஸ் அணி போட்டியில் புத்துயிர் பெறக் காரணமாக அமைந்தன. போட்டியை பெனால்ட்டி ஷூட் அவுட் வரைக்கும் அவர்தான் எடுத்துச் சென்றார்.

பட மூலாதாரம், Getty Images
எம்பாப்பேயின் சாதனைகள்
உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4.
அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது.
போட்டி தொடங்கியபோது மெஸ்ஸியும், எம்பாப்பேயும் இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தார்கள். மெஸ்ஸி முதல் கோலை பெனால்ட்டி முறையில் அடித்து தங்கக் காலணிக்கான போட்டியில் முந்தினார். ஆனால் 80 மற்றும் 81-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து தனது எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார்.
போட்டி அப்போதும் முடியவில்லை கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்து மீண்டும் இருவருக்குமான போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். அப்போது தங்கக் காலணி மெஸ்ஸிக்கே கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மற்றொரு கோலை அடித்து மெஸ்ஸியை முந்தினார். இப்போது தங்கக் காலணி விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
23 வயதில் ஜாம்பவான்களை முந்தியவர்
23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார்.
இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












