'ஒரு லட்சம் ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்' - தமிழ்நாட்டில் டெட் தேர்வு யாரெல்லாம் எழுத வேண்டும்?

TET EXAM

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' என செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

'அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் கட்டாய ஓய்வு வழங்கலாம்' எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள்' என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.

"ஆசிரியர்களை அரசு கைவிடாது" என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படுவதால் என்ன பிரச்னை?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் என்ன உள்ளது?

'இந்தியாவில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு அவசியமா?' என்பது குறித்து மூன்று உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.

அஞ்சுமன் இசாத்-இ-தலீம் அறக்கட்டளை (ANJUMAN ISHAAT-E-TALEEM TRUST) எதிர் மகாராஷ்டிரா அரசு மற்றும் இதர மாநில அரசுகளை இணைத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.

வழக்கின் விசாரணையில், 'கட்டாய கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 23, துணைப் பிரிவு 1ன்கீழ் 2011, ஜூலை 29 அன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக புதிதாக சேர்க்கப்பட்ட விதிமுறையின்படி ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபான்கர் தத்தா மற்றும் மன்மோகன் அமர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்துவதற்கான காரணம் குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) 2011, பிப்ரவரி 11 அன்று வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள் காட்டியுள்ளது.

  • கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு டெட் தேர்ச்சி பெறுவது கட்டாய நிபந்தனை எனக் கூறப்பட்டுள்ளது.
  • டெட் தேர்வு குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களின் முக்கிய பகுதியாக உள்ளது.
  • டெட் தேர்வின் மூலம் தேசிய தரநிலைகள் மற்றும் ஆசிரியர் தரத்துக்கான அளவுகோல் கொண்டு வரப்படுகிறது.
  • மாணவர்களின் செயல் திறனின் தரத்தை மேலும் மேம்படுத்துவதை ஊக்குவிக்கும். ஆசிரியருக்கான தரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும்போது அது அனைத்து தரப்பிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனைக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், 'தொடக்கக் கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு, சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்வது நோக்கமாக உள்ளது. தகுதித் தேர்வு என்பது கட்டாய கல்வித் தகுதி மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையும் ஆகும்' எனத் தெரிவித்துள்ளது.

'ஆசிரியர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142ன்கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் டெட் தகுதி பெறாமல் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பணியில் தொடரலாம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் பதவி உயர்வுக்கு விரும்பினால் டெட் தேர்ச்சி பெறாமல் தகுதி உடையவராக கருதப்பட மாட்டார் எனத் தெளிவுபடுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

TET EXAM

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின்படி,

  • 1 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் தொடர்வதற்கு டெட் தேர்வு கட்டாயம்.
  • டெட் தேர்வு எழுத விருப்பம் இல்லாத ஆசிரியர்கள், பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது ஓய்வுகால சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வு வழங்கலாம்.

அதேநேரம், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு டெட் தேர்வு பொருந்துமா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதற்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆசிரியர் சங்கங்கள் கூறுவது என்ன?

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளதால் ஓய்வுபெறும் வயதில் உள்ளவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது" எனக் கூறுகிறார்.

'பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி அவசியம்' என்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதாகக் கூறும் தாஸ், "தற்போது ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெறுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆசிரியைகளாக உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் பணிச் சூழலால் தேர்வை எழுதுவது சிரமம்" எனக் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசின் கணக்குப்படி 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் உயர்நிலைப் பள்ளிகளில் 31,531 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 82 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களில் ஐந்தாண்டுகளில் ஓய்வு பெறும் ஆசிரியர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு மேல் டெட் தேர்வு எழுத வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ்.

இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதனைக் குறிப்பிட்டுப் பேசும் தாஸ், "2011 ஆம் ஆண்டு முதல் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2022 வரை மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னரே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தால் அனைவரும் தேர்வை எழுதியிருப்பார்கள்" என்கிறார்.

TET EXAM, டெட் தேர்வு
படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ்

யாருக்கெல்லாம் பொருந்தும்? என்ன பாதிப்பு?

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் தகுதியை தீர்மானிப்பதற்கு தகுதித் தேர்வு நடத்தப்படும் என, 2010, ஆகஸ்ட் 23 அன்று அறிவிக்கப்பட்டது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்பது 1 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. அதன்படி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியில் சேரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) என்பது கட்டாயமாக உள்ளது.

"உயர்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் தான் தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வுக்கு செல்ல முடியும்" எனக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வர மாட்டார்கள் என்பதால், இந்தச் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது" எனக் கூறுகிறார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்.

"கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இதனை ஏற்க முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம் தனக்குரிய 142வது சிறப்புப் பிரிவை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், "தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்கிறார்.

"பல ஆண்டுகளாக தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதே பாடத்தை சொல்லித் தருகின்றனர். அவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தைப் படித்து தேர்வு எழுதுமாறு கூறுவது சாத்தியமில்லாதது" என்கிறார், அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் எட்டாம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப் போவதில்லை. தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தாலும் ஐந்தாம் வகுப்புக்கு மட்டுமே பாடம் எடுப்பார்கள்" என்கிறார்.

"எந்த வகுப்பு வரை பாடம் எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கேற்ப தேர்வு வைக்கலாம். தவிர, பணி நெருக்கடியில் இருந்தவாறு தேர்வு எழுதுவது என்பது சிரமமானது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தீர்ப்பு பொருந்தும் என்பது தான் சரியானதாக இருக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆதரவும் எதிர்ப்பும்

TET EXAM, டெட் தேர்வு, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி
படக்குறிப்பு, தரமான கல்வி என்பது முக்கியமானது என்கிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி

"டெட் தேர்வை கட்டாயமாக்குவதில் எந்த தவறும் இல்லை. தரமான கல்வி என்பது முக்கியமானது. தொழில்நுட்பத்துடன் இணைந்த கல்வியை ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் எவ்வாறு பெறப் போகின்றனர் என்பது முக்கியமானது" எனக் கூறுகிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கல்வித்தரம் தொடர்பாக எடுக்கப்படும் எந்த சீர்திருத்தங்களும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாணவர்களின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்" என்கிறார்.

"தற்போதுள்ள ஆசிரியர்களில் எத்தனை பேர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பாடம் எடுப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பும் ஜெயப்பிரகாஷ் காந்தி, "நான்கு பேர் பாதிப்பதால் நல்ல விஷயங்களை வரவேற்காமல் இருக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

இதனை மறுத்துப் பேசும் தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ், "இத்தனை ஆண்டுகாலம் மருத்துவம், பொறியியல் உள்பட பல்வேறு படிப்புகளில் தரமான மாணவர்களை உருவாக்கியது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான். இதே அளவுகோலை பிற துறைகளுக்கும் வைக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

"சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஆசிரியரிடம் தேர்வு எழுதுமாறு கூறுவது சரியானதல்ல" என்கிறார், கல்வியாளர் நெடுஞ்செழியன்.

"ஆசிரியர்களின் திறனை அவர்கள் பாடம் நடத்தும் முறை உள்பட பல்வேறு அளவுகோல்களில் மதிப்பிடலாம். தேர்வை மட்டுமே அடிப்படையாக வைத்து ஆசிரியர்களை வெளியேற்றுவதை ஏற்க முடியாது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

TET EXAM, டெட் தேர்வு , கல்வியாளர் நெடுஞ்செழியன்
படக்குறிப்பு, ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் வழங்கலாம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்

"தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சிகளைக் கொடுத்து அவர்களை மேம்படுத்தலாம். அவர்களுக்கு தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசத்தை வழங்கலாம்" என்கிறார், நெடுஞ்செழியன்.

இதனை தனது தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வழக்கில் அடிப்படை எதார்த்தம் மற்றும் நடைமுறை சவால்களை கவனத்தில் கொள்வதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்னரே பணியில் இணைந்த மற்றும் 2 அல்லது 3 தசாப்தங்களாக பணியில் உள்ள ஆசிரியர்களும் உள்ளனர்" எனக் கூறியுள்ளனர்.

அவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருவதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "டெட் தகுதி பெறாத ஆசிரியர்களால் மாணவர்கள் தங்கள் வாழ்வில் பிரகாசிக்கவில்லை என்பதல்ல. அவர்களைப் பணியில் இருந்து நீக்குவது என்பது சற்று கடுமையானதாக தோன்றும். ஆனால், சட்டத்தின் செயல்பாட்டை ஒருபோதும் தீமையாக கருத முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் பதில் என்ன?

TET EXAM
படக்குறிப்பு, ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டுவிடாமல் அரவணைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வோம் என்கிறார், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதால், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ், "பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில் இப்படியொரு தீர்ப்பு வந்துள்ளது" என்கிறார்.

தீர்ப்பை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்று (செப்டம்பர் 1) தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளருடன் கலந்தாலோசித்தோம். முழுமையான தீர்ப்பு வந்த பிறகு சட்ட ஆலோசகர்கள் மூலம் ஆலோசித்து முடிவெடுப்போம்" எனக் கூறினார்.

ஆசிரியர்களுக்கு அரணாக பள்ளிக்கல்வித்துறை உள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டுவிடாமல் அரவணைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வோம். அரசாங்கம் யாரையும் கைவிட்டுவிடாது" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு