ட்யூட் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர் வெற்றியை கொடுக்குமா? - ஊடக விமர்சனம்

மமிதா பைஜு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

பட மூலாதாரம், Mythri Movie Makers

படக்குறிப்பு, மமிதா பைஜு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ட்யூட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

கட்சி சேர, ஆச கூட என சுயாதீன பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, ட்யூட் படம் பற்றி ரசிகர்கள் சொல்வது என்ன?

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதன்பின் லவ் டுடூ, டிராகன் படங்களில் கதாநாயகனாக களமிறங்கினார். இந்த 2 படங்களும் இவருக்கு வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து வந்துள்ள படம்தான் ட்யூட்.

இப்படம் கதாநாயகனாக இவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா?இதுவும் வழக்கமான கதையாக உள்ளதா? அல்லது இவரின் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டுள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?

ட்யூட் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Mythri Movie Makers

படத்தின் கதை என்ன?

படத்தின் நாயகன், நாயகியானஅகன் மற்றும் குறளரசி, இருவரும் உறவினர்கள். அகனின் மாமன் மகள்தான் குறள்.

முதலில் குறள் தனது காதலை அகனிடம் கூறும்போது அவர் நிராகரித்துவிடுகிறார். பின் அகனுக்கும் குறள் மீது காதல் ஏற்படுகிறது.

இருவருக்கும் திருமணம் நடக்கும் வேளையில் குறள் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். இருவருக்கும் திருமணம் நடந்ததா? நின்றதா? என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.

இந்தப் படம் நகைச்சுவையுடன் சேர்ந்து உணர்ப்பூர்வமான விஷயத்தையும் கையாள்வதாக ஊடக விமர்சனம் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Mythri Movie Makers

படக்குறிப்பு, இந்தப் படம் நகைச்சுவையுடன் சேர்ந்து உணர்ப்பூர்வமான விஷயத்தையும் கையாள்வதாக ஊடக விமர்சனம் தெரிவிக்கிறது.

படத்தின் ப்ளஸ் என்ன?

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் நிஜ உலக பிரச்னையை நம்பத்தகுந்த முறையில் பேசுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது.

"இந்தப் படம் நகைச்சுவையுடன் சேர்ந்து உணர்ப்பூர்வமான விஷயத்தையும் கையாளுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது.

"இந்த படமும் பிரதீப்பின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட்" என தி இந்து தமிழ் பாராட்டியுள்ளது.

"படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே கதையும் ரகளையாக தொடங்கிவிடுகிறது. படம் முழுக்க பிரதீப்புக்காகவே பல காட்சிகளை எழுதியிருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஜென் Z தலைமுறையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை சைலன்ட் ஆக காட்டுகிறது என்பதை நச் என்று சொன்ன விதத்துக்காக இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்." என்கிறது அந்த விமர்சனம்.

தினமணி நாளிதழ் தனது விமர்சனத்தில், "ஒரு கமர்சியலான, இளம் ரசிகர்களை கவரும் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியாக நடிக்கிறார், கத்துகிறார், குதிக்கிறார் என நெகடிவ்வாக சொல்லப்பட்ட விஷயங்களையே இந்த படத்தில் தன்னுடைய பாசிட்டிவாக காட்டியுள்ளார்" என தெரிவித்துள்ளது.

"மாஸ் இருந்தாலும் அதே நேரத்தில் படம் அர்த்தமுள்ளதாகவும் கையாளப்பட்டு சமநிலையை பெறுகிறது. சமீபத்தில் ஒரு சில கமர்சியல் படங்களே இதை சரியாக செய்கின்றன." என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் தனுஷ் + பிரபுதேவாவின் கலவை என விமர்சனம் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Mythri Movie Makers

படக்குறிப்பு, பிரதீப் ரங்கநாதன் தனுஷ் + பிரபுதேவாவின் கலவை என விமர்சனம் தெரிவிக்கிறது.

நடிகர்களின் நடிப்பு எப்படி உள்ளது?

"பிரதீப் ரங்கநாதனின் உடல் மொழிக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதைப் போல அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆரவாரம் எழுகிறது. தனுஷ் + பிரபுதேவாவின் கலவை போல இருக்கும் அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகளிலும் மிளிர்கிறது." என தி இந்து தமிழ் விமர்சனம் கூறுகிறது.

தினமணி தனது விமர்சனத்தில், "நடிப்போடு சேர்த்து படம் முழுவதும் ஸ்டைலாக வலம் வந்திருக்கிறார் பிரதீப். படம் கேட்கும் ஹீரோவாக தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்" என தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் மமிதா பைஜு.

இவரைப் பற்றி தனது விமர்சனத்தில், "திரை முழுவதும் அழகாக வலம் வருகிறார், அழும் காட்சிகளில் சோகமடைய வைக்கிறார், சீரியஸான காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார், சில இடங்களில் புதுமையாக தெரிகிறார்." என தினமணி குறிப்பிட்டுள்ளது.

"மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார்." என தி இந்து தமிழ் தெரிவித்துள்ளது.

மமிதாவின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

பட மூலாதாரம், Mythri Movie Makers

படக்குறிப்பு, மமிதாவின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

இப்படத்தில் மமிதாவின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

இவரைப் பற்றி, "நடிப்பிலும் கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார். படம் முழுவதும் சிரிக்க வைப்பதுடன் சீரியஸான வில்லனாக ரசிக்கவும் வைக்கிறார்" என தினமணி எழுதியுள்ளது.

"படத்தின் மற்றொரு ஹீரோ சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறார்." என தி இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.

மீதமுள்ள சிறிய கதாபாத்திரங்களில் வரும் அனைவருமே சரியாக நடித்து படத்திற்கு பலம் சேர்துதுள்ளதாக தினமணி விமர்சனம் கூறுகிறது.

கட்சி சேர, ஆச கூட என சுயாதீன பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பட மூலாதாரம், X/Pradeep Ranganathan

படக்குறிப்பு, கட்சி சேர, ஆச கூட என சுயாதீன பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை ரசிக்க வைக்கிறதா?

"சாய் அபயங்கரின் இசை படம் முழுவதும் பொருத்திப்போகிறது. பின்னணி இசையும், பாடல்களும் மனதில் நின்றுவிடுகிறது." என்கிறது தினமணி விமர்சனம்.

தி இந்து தமிழ் நாளிதழ், "ஊரும் ப்ளட் பாடல் படத்தில் வைக்கப்பட்ட இடம் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார்." என விமர்சித்துள்ளது.

மற்றபடி, "நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை தந்திருக்கிறது." என தொழில்நுட்ப குழுவை பாராட்டியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அறிமுக இயக்குநர்

"தனது முதல் படத்தை வெற்றிகரமாக எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். காமெடி படம் எடுப்பதை தனது நோக்கமாக கொண்டிருந்ததால் அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார்." என தினமணி விமர்சனம் குறிப்பிடுகிறது.

மேலும், "முதல் பாதி எந்த தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளையை நெருங்கும்போது அரங்கம் சிரிப்பில் அதிர்கிறது. இரண்டாம் பாதியில் லேசான சறுக்கலை கொண்டிருந்தாலும் சரியான நேரத்தில் நிமிர்ந்து நின்று ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது" எனவும் எழுதியுள்ளது.

இது முற்போக்கான படம் அல்ல என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Mythri Movie Makers

படக்குறிப்பு, இது முற்போக்கான படம் அல்ல என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

படத்தில் குறை?

"இந்த கதை களம் கண்டிப்பாக சிலரை முகம் சுழிக்க வைக்கலாம் என்பதை புரிந்து வசனங்களால் அவர்களையும் சேர்த்து சமாதானம் செய்ய முயன்றிருப்பது சிறப்பு" என தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

"இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதாக உணர வைக்கின்றன. ஹீரோ 'ரொம்ப நல்லவர்' என்று ஆடியன்ஸுக்கு ஏன் திரும்ப திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை." என தி இந்து தமிழ் எழுதியுள்ளது.

மேலும் "ஹீரோயினை திட்டினால் கைதட்டல் பெறலாம் என்று யோசித்து சில வசனங்கள் வைக்கப்பட்டதாக தோன்றுகிறது. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸும் அதீத சினிமாத்தனம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம்." என தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

அதேபோல "படத்தில் பெண்களுக்கு ஆதரவான வசனங்கள் அதிகம் இருந்தாலும், இப்படம் காட்டிக்கொள்வதைப் போல முற்போக்கான படம் அல்ல." என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

"இதயத்தின் வலிகளைப் பற்றிய எந்தப் படமும் சற்று இழுபறியாகத்தான் இருக்கும். அதுவும் ட்யூட், குறிப்பாக இரண்டாம் பாதியில், ஒரு கட்டத்தில் யாராவது ஒரு முடிவெடுங்கள் என்ற உணர்வு ஏற்படும்" என தி இந்து விமர்சனம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு