ஃபஹத் ஃபாசில் நடித்த மறக்க முடியாத 10 கதாபாத்திரங்கள்

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, காதலுக்கு மரியாதை, மணிச்சித்ரதாழ், ஹரிகிருஷ்ணன்ஸ், என பல வெற்றிப் படங்களை இயக்கிய மலையாள திரைப்பட இயக்குநர் ஃபாசில் 2002-ல் தனது மகன் ஷானுவை நாயகனாக்கி 'கையெத்தும் தூரத்து' எனும் திரைப்படத்தை எடுக்கிறார்.
பொதுவாக கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது வெளியாகும் சுமாரான திரைப்படங்கள் கூட ஓரளவு வெற்றி பெற்றுவிடும். அதிலும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் சிறப்புத் தோற்றம், அனியாதிப்ராவுக்கு (தமிழில் காதலுக்கு மரியாதை) பிறகு ஃபாசில் இயக்கும் ஒரு காதல் கதை என இப்படத்திற்கு கேரளாவில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், திரைப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. "மம்மூட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களின் திறமையை உலகிற்கு காட்டிய இயக்குநர் ஃபாசிலின் மகனுக்கு நடிக்கத் தெரியவில்லை" என விமர்சனங்கள் எழுந்தன.
"என் தோல்விக்கு என் தந்தையைக் குறை சொல்லவேண்டாம், ஏனென்றால் என்னை தயார்படுத்திக்கொள்ளாமல் நடிக்க வந்தது என் தவறு" என படத்தின் தோல்வி குறித்து பேசிய ஷானு, அதன் பிறகு நடிப்பை விட்டு விலகி, உயர் கல்வி பயில அமெரிக்கா செல்கிறார். மீண்டும் 5 வருடங்கள் கழித்து எந்த அடையாளமும் இன்றி கேரளாவுக்கு வருகிறார்.

பட மூலாதாரம், SainaMusic
2018 -ல் தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் என்ற மலையாளப் படத்திற்காக நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. பொதுவாக இந்திய குடியரசுத் தலைவரின் கையால் வழங்கப்படும் தேசிய விருது, சில விதிமுறை மாற்றங்களால் அப்போதைய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இதனால் கோபமடைந்த ஃபஹத், விருது வேண்டாம் எனக் கூறிவிட்டு, டெல்லியிலிருந்து கேரளாவுக்கு திரும்புகிறார்.
2002இல் ஒரு நடிகனாக தோற்றுப்போய் அமெரிக்கா சென்று அடையாளமின்றி கேரளா திரும்பிய ஷானு தான், 2018இல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மறுத்துவிட்டு கேரளா திரும்பிய ஃபஹத் ஃபாசில் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இன்று 43வது வயதில் அடியெடுத்து வைக்கும் புகழ்பெற்ற பான் இந்தியா நடிகராக அறியப்படும் ஃபஹத் ஃபாசிலின் சிறந்த பத்து கதாபாத்திரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
'மாமன்னன்' ரத்னவேலு

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
மாமன்னன் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் தான் ரத்னவேலு. 'உன்னை உட்காரச் சொன்னது என் அரசியல், உன் அப்பாவை நிற்க வைத்தது என் அடையாளம்' என தனது சாதி வெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தார் ஃபஹத்.
தான் பாசமாக வளர்த்த நாயைக் கொல்லும்போது காட்டும் ஆவேசம், இரண்டாம் பாதியில் அதிகாரத்திற்காக சாதித் தலைவர்களின் காலில் விழுவதற்கு முன் மனைவியை கட்டிப்பிடித்து விட்டு வரும் காட்சி என அந்த கதாபாத்திரத்தில் ஃபஹத்தின் நடிப்பு, அவர் ஒரு வேற்றுமொழி நடிகர் என்பதை மறந்து திரைப்படத்தோடு பார்வையாளர்களை ஒன்ற வைத்தது.
அதேசமயம், சாதிய வன்மம் நிறைந்த அந்த எதிர்மறை கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
"மாமன்னன் வெளியான பிறகே, அதில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவனாக நடித்துள்ளேன் என்பதை அறிந்துகொண்டேன். ஒரு நடிகனாக, அத்தகைய விவரங்களை தெரிந்துகொள்வது என் வேலையில்லை." என ஃபஹத் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
'ஆவேஷம்' ரங்கா

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
ஒரு வணிக சினிமாவில் மெலிந்த உடல்தோற்றம் கொண்ட நடிகர் ஒரு 'கேங்ஸ்டர்' கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது, அவரால் மற்றவர்களை அடிக்க முடியும் அல்லது அவர் பலம் கொண்டவர் தான் என்பதை பார்வையாளர்களுக்கு கடத்த, பெரும்பாலும் முதல் பாதியில் ஓரிரு காட்சிகளையாவது ஒரு இயக்குநர் வைத்துவிடுவார். உதாரணம், புதுப்பேட்டை திரைப்படம்.
'ஆவேஷம்' திரைப்படத்தின் இறுதிக்காட்சி வரை ரங்கா கதாபாத்திரம் யாரையும் நேரடியாக அடிப்பதை பார்க்க முடியாது. அவர் பேசும் வசனங்கள் நகைச்சுவையாக இருக்கும், இன்ஸ்டாகிராமில் நடனமாடி, ரீல்ஸ் கூட பதிவிடுவார்.
'அம்மா பாசத்தால் தான் ரங்கா அண்ணன் யாரையும் அடிக்க மாட்டார்' என ஒரு கதாபாத்திரம் சொல்லும். இப்படி ஒரு காமெடி ரவுடியாகவே ரங்கா சித்தரிக்கப்படுவார்.
ஆனால், இறுதிக்காட்சியில் ரங்கா இருபதுக்கும் மேற்பட்டோருடன் சண்டையிடும்போது, அது எந்த லாஜிக் கேள்விகளையும் எழுப்பாத வகையில் சுவாரசியமாக இருக்கும்.
அதுவரை துணைக் கதாபாத்திரங்கள் ரங்காவுக்கு கொடுத்த 'பில்டப்' உண்மைதான், அவன் வெறும் படைபலத்தையும் ஆயுதத்தையும் நம்பி கேங்ஸ்டர் ஆனவன் இல்லை என்பது ஃபஹத்தின் ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் விளங்கிவிடும்.
இறுதிக்காட்சி முழுவதும் 'ரங்கா சேட்டன்' கதாபாத்திரத்தின் ஒரு புதிய முகத்தை காட்டியிருப்பார் ஃபஹத்.
'மகேஷிண்டே பிரதிகாரம்' மகேஷ்

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
இந்தத் திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு சிறு நீர்நிலையில் குளிக்கும்போது தனது செருப்பைத் சுத்தமாக தேய்த்து, கழுவி ஓரமாக வைப்பான் நாயகன் மகேஷ். புகைப்படக் கலைஞர் என கூறிக்கொள்ளும் அவனுக்கு ஒரு காதல் தோல்வி ஏற்படும்.
பின்னர் ஒரு காட்சியில், ஜிம்சன் என்ற நபரிடம் சண்டையிட்டு, தன் சொந்த ஊரில் தனக்கு நன்கு பரிச்சயமான மக்கள் முன் அடிவாங்கி, அவமானப்பட்டு, மீண்டும் ஜிம்சனை அடிக்கும்வரை செருப்பு போடமாட்டேன் என்று சபதம் எடுப்பான்.
மற்றொரு காட்சியில் நாயகி, 'உண்மையில் உனக்கு புகைப்படம் எடுக்கத் தெரியாது அல்லவா?' என கேட்பாள். பிறகு, அவன் தனது தவறை உணர்ந்து, ஒரு நல்ல புகைப்படம் எடுப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வான்.
இறுதியில், ஜிம்சனை அடித்து, பழிவாங்கி, மீண்டும் செருப்பு அணிவான். இப்படி ஒரு நாயகனுக்கான அனைத்து பிம்பங்களும் உடைக்கப்பட்டு, மிக யதார்த்தமான நபராக படம் முழுவதும் நடித்திருப்பார் ஃபஹத். எந்த அதிரடி அல்லது மாஸ் காட்சிகளும் இல்லாமலே நாயகன் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்குள் கடத்தியிருப்பார்.
"ஃபஹத் நடித்ததில் 'மகேஷ்' கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் பிடித்தது. இப்போதும் அவர் வீட்டிற்கு சென்றால், சில சமயம் மகேஷ் என்று அழைத்துவிடுவேன்." என்று நடிகர் மம்மூட்டி ஒரு விருது வழங்கும் விழாவில் கூறியிருப்பார்.
'கும்பளங்கி நைட்ஸ்' ஷம்மி

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தில், தந்தையை இழந்த ஒரு குடும்பத்தின் மூத்த பெண்ணை திருமணம் செய்திருப்பார் ஷம்மி. கொஞ்சம் கொஞ்சமாக அங்கு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி, அந்த வீட்டின் தலைவர் என்ற இடத்தை அவர் அடையும் காட்சி ஒன்று வரும்.
'நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தான் உணவு உண்ண வேண்டும்' என மனைவி, மனைவியின் தங்கை, மாமியாரை கட்டாயப்படுத்தி அமர வைத்து, நடு இருக்கையில் ஷம்மி அமர்ந்து, சிரித்துக் கொண்டே உணவருந்தும் காட்சி வரும். அந்த ஒரு காட்சியே ஷம்மி யார் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடும்.
இதுதவிர, மனைவியும், மனைவியின் தங்கையும் சமையலறையில் பேசும்போது, மெல்ல எட்டிப்பார்த்து, ஒரு பயமுறுத்தும் சிரிப்புடன் 'என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?' என மீண்டும் மீண்டும் கேட்கும் காட்சி…
நாயகன் தன் சகோதரனோடு பெண் கேட்டுவரும்போது அவர்களை சிரித்துக்கொண்டே அவமானப்படுத்தும் காட்சி, இறுதிக்காட்சியில் 'ஷம்மி ஹீரோ டா' என மிரட்டுவது, இப்படி படம் முழுவதும் எந்த வன்முறைக் காட்சிகளும் இல்லாமல், தனது கண்கள் மற்றும் உடல்மொழி மூலமாக வில்லத்தனத்தின் உச்சத்தை காட்டியிருப்பார் ஃபஹத்.
"ஷம்மி ஒரு 'ஆல்பா ஆண்' கதாபாத்திரம், பெண்களையும் வீட்டையும் அடக்கி ஆள வேண்டுமென நினைப்பவன். அவனைப் போன்ற ஒருவன் யதார்த்தத்தில் என்ன செய்வான் என்பதை மிகக் கச்சிதமாக சித்தரித்திருக்கிறார் ஃபஹத்" என விமர்சனங்கள் பாராட்டின.
இந்தப் படம் அவருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை (2019) பெற்றுத் தந்தது.

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
'புஷ்பா 1 மற்றும் 2' பன்வார் சிங் ஷெகாவத்
புஷ்பா 1 திரைப்படத்தின் கடைசி சில நிமிடங்களில் தான் பன்வார் சிங் ஷெகாவத் கதாபாத்திரம் அறிமுகமாகும். தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரம் என்றாலே பெரும்பாலும் மிகவும் பலசாலியாக, முரடனாக, அதிகம் சத்தம் போட்டு பேசுபவராக அல்லது மிகப்பெரும் படைபலத்துடன் இருப்பவராக சித்தரிக்கப்படும்.
அப்படியிருக்க, அதற்கு நேர்மாறாக இருந்த பன்வார் சிங் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
புஷ்பா இரண்டாம் பாகத்தில் பன்வார் சிங் கதாபாத்திரம் ஒரு கோமாளி போல சித்தரிக்கப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தாலும், ஃபஹத்தின் நடிப்பு பாராட்டப்பட்டது.
ஃபஹத் எனும் மலையாள நடிகரை பான் இந்தியா நடிகராக்கிய படம் தான் புஷ்பா. ஆனால், "புஷ்பா திரைப்படங்களால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதில் எனக்கு என எதுவும் இல்லை. இயக்குநர் சுகுமாருக்காக அதைச் செய்தேன். எனது இடம் கேரள சினிமாவில்தான்" என ஒரு நேர்காணலில் வெளிப்படையாகக் கூறியிருப்பார் ஃபஹத்.
'விக்ரம்' ஏஜென்ட் அமர்

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
கமல் ஹாசன், விஜய் சேதுபதி, என பிரபல நடிகர்கள் இருக்க, விக்ரம் திரைப்படத்தின் முதல் பாதி முழுவதும் ஃபஹத் ஏற்று நடித்த அமர் கதாபாத்திரத்தின் பார்வையில் தான் நகரும்.
வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களைத் தொடர்ந்து விக்ரம் என்பது ஃபஹத்தின் மூன்றாவது தமிழ் திரைப்படம் தான், ஆனால் தனது நடிப்பின் மூலம் விக்ரம் போன்ற ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இடைவேளை வரை மிக எளிதாக நகர்த்திச் சென்றிருப்பார் ஃபஹத். அவரது தமிழ் வசன உச்சரிப்புகளும் கூட நெருடல் இல்லாத வகையில் இருக்கும்.
"ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போலவே ஃபஹத் ஃபாசிலின் ஏஜென்ட் அமர் கதாபாத்திரத்தை பிரதானமாக வைத்து, ஒரு முழுமையான படமாக கூட 'விக்ரம்' திரைப்படத்தை எடுத்திருக்கலாம்" என 'தி இந்து' ஆங்கில நாளிதழின் திரைப்பட விமர்சனம் பாராட்டியது.
'வரதன்' அபின் மேத்யூ

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
வரதன் என்பதற்கு மலையாளத்தில் அந்நியன் அல்லது வெளியாள் என்று பொருள். துபை நாட்டில் தனது மனைவியுடன் வசிக்கும் மேத்யூ, ஒரு மாறுதலுக்காக கேரளாவில் இருக்கும் தனது மனைவியின் பூர்வீக கிராமத்திற்கு இடம்பெயர்வார். அந்த கிராமத்தாரைப் பொருத்தவரை மேத்யூ ஒரு அந்நியன்.
அங்கு, மனைவியின் பூர்வீக வீட்டைச் சுற்றி வசிக்கும் சில நபர்களால் மனைவிக்கு பிரச்னை வரும். முடிந்தளவு அதையெல்லாம் பேசித் தீர்க்கவே மேத்யூ முயற்சிப்பார். ஒருகட்டத்தில், பிரச்னை எல்லை மீறிச் செல்ல மேத்யூ ஆக்ஷன் அவதாரம் எடுப்பதே கதை.
ஆனால், இதில் ஆக்ஷன் என்பது கடைசி 20 நிமிடங்களில் தான். அதற்கு முந்தைய காட்சிகளில் மனைவிக்கு உதவ முடியாத தனது இயலாமையை மிகச் சிறப்பாக உணர்த்தியிருப்பார் ஃபஹத்.
'என் அப்பா இருந்தால் இப்படி எனக்கு நடந்திருக்காது' என மனைவி சொன்னதும், வீட்டிற்கு வெளியே வந்து தனது இயலாமையை நினைத்து அழும் காட்சி, அதற்கு சில நிமிடங்கள் கழித்து வில்லன் கும்பல் தன் வீட்டின் முன் நின்று மிரட்டும்போது, அதில் ஒருவனை அடித்துவிட்டு வீட்டின் கதவைப் பூட்டும் காட்சி என இரு பரிணாமங்களை எளிதாகக் காட்டியிருப்பார்.
"மேத்யூ கதாபாத்திரம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவன் உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாதவன். அவன் அழுவது கூட எந்த சத்தமுமின்றி இருக்கும். எனவே அதில் நடிப்பது சவாலானதாக இருந்தது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் ஃபஹத்.
'டிரான்ஸ்' விஜு பிரசாத் என்ற பாஸ்டர் ஜோஷ்வா கார்ல்டன்

பட மூலாதாரம், FahadhFaasil/Facebook
மதம் எப்படி வணிகமாக மாறுகிறது, அது எத்தனை பேரின் வாழக்கையைப் பாதிக்கிறது என்பதே டிரான்ஸ் திரைப்படத்தின் கதை. இதில் மதப்பிரச்சாரகர் ஜோஷ்வா கார்ல்டன் எனும் கதாபாத்திரம் ஃபஹத்திற்கு. மதம், மன ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையின் பேரில் நடக்கும் சுரண்டல் ஆகிய கருப்பொருள்களை இந்தத் திரைப்படம் ஆராய்ந்தது.
விஜூ பிரசாத் என்பவன் ஒரு சாதாரண மனிதன், அவன் கடவுள் நம்பிக்கை அற்றவனும் கூட. ஒரு கும்பல் அவனை மதத்தின் பெயரால் போலியான அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய பாஸ்டர் ஜோஷ்வா கார்ல்டனாக நடிக்க வைக்கிறது.

வாழ்வில் விரக்தி அடைந்தவனாக, மன அழுத்தம் கொண்டவனாக, பயந்தவனாக அறிமுகமாகும் விஜூ பிரசாத் ஒரு கட்டத்தில் அந்த ஜோஷ்வா எனும் கதாபாத்திரத்தில் கரைந்து, முழுமையான ஏமாற்றுக்காரனாக, அதிகாரம் செலுத்துபவனாக, கணிக்க முடியாதவனாக மாறிவிடுகிறான்.
ஒரு கதாபாத்திரம் இப்படி மாற்றம் அடைவதை, மிகச் சிறப்பாக செய்திருப்பார் ஃபஹத். திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஃபஹத்தின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்தத் திரைப்படங்கள் தவிர, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' படத்தின் பிரசாத் கதாபாத்திரம், 'பெங்களூரு டேஸ்' ஷிவதாஸ், 'அயூபின்டே புஸ்தகம்' அலோஷி கோம்பர், 'நான் பிரகாஷன்' படத்தின் பிரகாஷன், போன்றவையும் ஃபஹத்தின் முக்கியமான கதாபாத்திரங்களே.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












