நடிகர் விஜய் பேசிய 'அசுரன்' பட வசனம் குறித்து வெற்றிமாறன் கருத்து: என்ன சொன்னார் தெரியுமா?

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE
- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற தமிழக மாணவர்களை, நடிகர் விஜய் சந்திப்பதற்கான நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய், மாணவர்களை வருங்கால வாக்காளர்கள் எனக் குறிப்பிட்டு, "நீங்கள்தான் நாளை வரும் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்” எனப் பேசினார்.
மேலும் மாணவர்களிடம் பேசிய விஜய், ‘அசுரன் படத்தில் படிப்பு குறித்து வரும் ஒரு வசனம்தான் இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு காரணமாக அமைந்தது’ என கூறினார்.
இந்த நிலையில், “அசுரன் பட வசனம் குறித்து விஜய் பேசியிருப்பது, மிகவும் நேர்மறையான ஒரு விஷயம்” என்று இயக்குனர் வெற்றிமாறன் எதிர்வினையாற்றியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, நடிகர் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவரின் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறிகளாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று அவர் மாணவர்களிடம் பேசியிருப்பது வரும் தேர்தல்களில் அவர் நேரடியாக களத்தில் இறங்குவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசினார்?
நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசத் துவங்கிய விஜய், ”இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு, படிப்பு குறித்து ’அசுரன்’ படத்தில் இடம்பெற்ற வசனம்தான் முக்கிய காரணம்” என சுட்டிக்காட்டினார்.
‘நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துகினுவானுங்க
ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க
ஆனா படிப்பு மட்டும்தான் உன்கிட்ட இருந்து
எடுத்துக்குவே முடியாது’
என்று அசுரன் படத்தில் வரும் வசனம், தன்னை வெகுவாக பாதித்ததாக நடிகர் விஜய் குறிப்பிட்டார்.
அதனால் ஏற்பட்ட நீண்டநாள் யோசனையின் விளைவாகவே தற்போது இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அவர், “நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். வருங்காலத்தில் நீங்கள்தான் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். எனவே நீங்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.
காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது. இதனை மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் எடுத்துக்கூற வேண்டும். ஓட்டுக்கு காசு கொடுப்பவர்கள் அதற்கு முன்னால் அரசியலில் எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்,” என்று கூறினார்.
அதேபோல் சமூக வலைதளங்களில் இன்றைக்கு அதிகமாக போலி செய்திகள் பரவுகிறது என்று பேசிய நடிகர் விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இது குறித்து அவர் பேசும்போது, "இன்றைக்கு நாம் அதிகமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அங்கேதான் அதிகமான போலி செய்திகள் உலவுகின்றன. குறிப்பிட்ட அஜெண்டாக்களை வகுத்து அதற்கேற்ப கவர்ச்சிகரமான பல போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. அதில் எல்லாம் ஏமாறாமல் இருக்க பாடப்புத்தகங்களை தாண்டி நிறைய படிக்க வேண்டும். பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை நீங்கள் படிக்க வேண்டும்,” என்று கூறினார்.
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மாணவர்களை, கௌரவிப்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்வில், நடிகர் விஜய் தேர்தல் குறித்தும், தலைவர்கள் குறித்தும் பேசியிருப்பது, மீண்டும் அவரது அரசியல் பிரவேசத்தை நோக்கி விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
விஜய்க்கு எதிர்வினையாற்றிய வெற்றிமாறன்
நடிகர் விஜய் அசுரன் படத்தின் வசனத்தை மேற்கோள்காட்டி பேசியதும், பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை படிக்க வேண்டும் என அறிவுறுத்தியதும் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், “அசுரன் பட வசனம் குறித்து விஜய் பேசியிருப்பது, மிகவும் நேர்மறையான ஒரு விஷயம்” என்று இயக்குனர் வெற்றிமாறன் இன்று எதிர்வினையாற்றியுள்ளார்.
ஒரு தனியார் நிகழ்வில், செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன் இது குறித்து பேசும்போது, ”சினிமாவில் நாம் சொல்லும் ஒரு விஷயம், சமூகத்தில் மிகந்த செல்வாக்குடைய நபர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினால், அதன் மூலம் எப்படியொரு நேர்மறை விளைவுகள் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக இதை பார்க்கிறேன்” என்று கூறினார்.
பெரியார் , அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என விஜய் பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தபோது, “ நமது வரலாறு குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம். எனவே அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் என அனைவரை குறித்தும் நாம் படிக்க வேண்டும்” என்று வெற்றிமாறன் கூறினார்.
விஜய்யின் பேச்சு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், SOCIAL MEDIA
நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வேண்டுமென்றால், நீண்ட நாட்கள் அவர் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அரசியலுக்கு வருவதற்கு நீண்ட நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதேபோல் சினிமாவில் இருக்கும்போதே அரசியல் நிலைப்பாட்டை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். எம்ஜிஆர் அப்படித்தான் செய்தார். தன்னுடைய படங்களிலும், பாடல்களிலும் அவர் தன்னுடைய அரசியல் நிலைபாட்டை வெளிப்படுத்தினார். அது போன்ற ஏதாவதொரு முயற்சியை விஜய் துவங்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
ஆனால் இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் மற்றொரு மாறுபட்ட பார்வையை முன்வைக்கிறார்.
”நடிகர் விஜய் ஏற்கனவே அரசியலுக்குள்தான் இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் அவருடைய இயக்கம் சார்பாக போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றுள்ளனர். எனவே விஜய்யின் இயக்கம் ஏற்கனவே அரசியலுக்குள்தான் இருக்கிறது. அவர் இன்னும் நேரடியாக களத்திற்குள் வரவில்லை அவ்வளவுதான்,” என்று குபேந்திரன் கூறுகிறார்.
பிபிசியிடம் தொடர்ந்து பேசிய அவர், “வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக நிச்சயம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். ஆனால் விஜய் நேரடியாக களத்தில் இறங்க மாட்டார்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதேபோல் ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று விஜய் பேசியிருப்பது குறித்து அவர் கூறுகையில், ”ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் நேர்மை, ஊழலற்ற ஆட்சி என்றுதான் ஆரம்பிக்கிறார்கள். நடிகர் கமலஹாசன் கூட அப்படித்தான் தனது அரசியல் நிலைபாட்டை வெளிப்படுத்தினார்.
தற்போது நடிகர் விஜய்யும் அதே வழியில் வருவாரா, அல்லது பின்னாளில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பாரா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டார் என்றால், அவர் அரசியலில் தனித்து தெரிவது கடினம்,” என்று பத்திரிக்கையாளர் குபேந்திரன் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், SOCIAL MEDIA
அதேபோல் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து பேசும் பத்திரிக்கையாளர் ஷியாம், “நடிகர் விஜய் எம்ஜிஆர் போல வர வேண்டும் என்று நினைத்தால், முதலில் அவரை போல தீவிரமாக உழைக்க வேண்டும்,” என்று குறிப்பிடுகிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “ பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் குறித்து மாணவர்களை படிக்க சொன்னது வரவேற்புக்குரிய விஷயம்தான், ஆனால் அவற்றை மாணவர்கள் படிப்பதற்கான வழிவகைகளை விஜய் ஏற்பாடு செய்ய வேண்டும்.
60களில் நிறைய பேர் எம்ஜிஆர் மன்றங்களிலிருந்து வந்தோம். எம்ஜிஆர் மன்றங்களில் படிப்பகங்கள் இருந்தன. அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கும். தினமும் பத்திரிக்கைகள் வரும். நிறைய படிப்பதற்கான வழிகளை எம்ஜிஆர் மன்றங்கள் ஏற்படுத்தி கொடுத்தன. அங்கேதான் நாங்கள் திராவிட அரசியலை கற்றுக்கொண்டோம். அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் போன்ற மேதாவிகள் குறித்து படித்தோம்.
அதேபோல் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற் போன்ற நவீன படிப்பகங்களை நடிகர் விஜய் உருவாக்கினால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். படிப்பகங்கள் அரசியலை கற்றுகொடுக்கும் இடமாக இருக்க வேண்டும். இந்த முயற்சியில் அவர் தன்னுடைய ரசிகர்களை அரசியல்படுத்தாவிட்டால் வெற்றி கிடைப்பது கடினம்,” என்று தெரிவித்தார்.
அரசியல் வரவேற்பு எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM/YOUTUBE
தமிழக அரசியல் சூழலில், விஜய் அரசியலுக்குள் இறங்கினால் அவருக்கான வரவேற்பு எப்படியிருக்கும் என்ற கேள்வியை பிபிசி தமிழ் எழுப்பியது.
அதற்கு பதிலளித்த பத்திரிக்கையாளர் ஷியாம், “இன்றைய சூழலில் சினிமாவில் இருக்கும் பிரபலத்தையும், செல்வாக்கையும் வைத்து மட்டுமே யாராலும் அரசியலில் நீடிக்க முடியாது. ஆனால் விஜய்யை பொறுத்தவரை அரசியலில் பெரும் ஆர்வம் இருந்தால், அவர் தேர்தல் அரசியலுக்குள் நுழையாமல்., தன்னிடம் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மக்களுக்கான பணிகளில் இப்போதே இறங்கலாம். நம் மண்ணில் பெரியார் அப்படித்தான் மக்களுக்காக உழைத்தார். கர்நாடகாவில் அந்த காலத்தில் நடிகர் ராஜ்குமார் அப்படித்தான் மக்கள் பணிகளில் ஈடுபட்டார்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
பத்திரிக்கையாளர் குபேந்திரன் இதுகுறித்து பேசும்போது, “மக்களிடம் அவருக்கு வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
அரசியல் புரிதல் இருக்கிறதா?
தற்போது நிலவும் அரசியல் சூழல்களை முழுமையாக புரிந்துகொண்டு, அதனை கையாளும் பக்குவம் விஜய்க்கு இருக்கிறதா என்ற கேள்வியை பிபிசி தமிழ் முன்வைத்த போது,
‘இங்கு யாருமே முழு அரசியல் புரிதலுடன் அரசியலுக்குள் இறங்குவது இல்லை’ என்பதே மூத்த பத்திரிக்கையாளர்களின் பதிலாக இருந்தது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய பத்திரிக்கையாளர் குபேந்திரன் “தமிழகத்தில் அரசியலை முழுவதுமாக புரிந்து வந்தவர்கள் வெகு சிலரே. எம்ஜிஆர் கூட முழு புரிதலுடன் அரசியலுக்கு வந்தாரா என்று தெரியாது. அடுத்தடுத்து இங்கு வெற்றி பெற்ற பலரும் யோகத்தில்தான் வந்தார்கள். முழு கொள்கை பற்றுடன், தெளிவான அரசியல் புரிதலோடு அரசியலுக்குள் இருப்பவர்கள் அரிது,” என்று அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “ 2000ஆம் ஆண்டிற்கு பின்னால், பணம் சம்பாதிப்பதை முன்னிலைப்படுத்தியே இங்கு அரசியல் நடைபெறுகிறது. இந்த நிலையில் மாணவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என விஜய் பேசியிருப்பது வரவேற்புக்குரியதுதான் என்றாலும், காலம் செல்ல செல்ல இவரின் செயல்பாடுகள் எப்படி மாறும் என்பதை சொல்ல முடியாது.” என்று குறிப்பிடுகிறார்.
முதல்முறையாக மக்களை நேரடியாக சந்தித்திருக்கும் விஜய்

பட மூலாதாரம், VIJAY MAKKAL IYAKKAM/YOUTUBE
“மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக மக்களிடம் நேரடியாக சென்று, பல சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்தித்து உரையாடுவது இதுவே முதல்முறை,” என்கிறார் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் கார்த்திக்.
மாணவர்களிடம் இன்று விஜய் உரையாடியது, அவருடைய அரசியல் பிரவேசத்திற்கான அடுத்த முயற்சியா, வரும் தேர்தல்களில் அவர் நேரடியாக களம் இறங்குவாரா என்ற கேள்விகளை பிபிசி தமிழ் அவரிடம் முன்வைத்தது.
அதற்கு பதிலளித்த கார்த்திக், “ வரும் தேர்தலில் அவர் நேரடியாக களம் இறங்குவாரா, மாட்டாரா என்பது குறித்து இப்போது நாங்கள் எதுவும் கூற முடியாது. ஆனால் அரசியலுக்குள் இறங்குவதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்து விட்டோம்.
இத்தனை ஆண்டுகளாக மக்கள் இயக்க உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் மட்டுமே சந்தித்து வந்த விஜய், முதல்முறையாக இன்று நேரடியாக மக்களை சந்தித்திருக்கிறார். இது மிகவும் முக்கியமான படி.
இது நிச்சயம் வரும் காலத்தில் தீவிர அரசியலில் அவர் நுழைவதற்கான அறிகுறிகள்தான்.” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












