தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - எப்படி நடைபெறும்?

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட உள்ளது.

போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாக இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் , சமீபத்தில் பிகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தை "வாக்கு திருட்டு" எனக் கூறி நிராகரித்துள்ளது. மேலும் நிஜமான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சுமத்தியிருந்தது.

முதல் கட்ட சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்ததாக ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வருகிற 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எஸ்.ஐ.ஆர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தீவிர திருத்தம் எங்கெல்லாம் மேற்கொள்ளப்பட இருக்கிறது?

  • அந்தமான் நிகோபார்
  • சத்தீஸ்கர்
  • கோவா
  • குஜராத்
  • கேரளா
  • லட்சத்தீவு
  • மத்திய பிரதேசம்
  • புதுச்சேரி
  • ராஜஸ்தான்
  • உத்தர பிரதேசம்
  • மேற்கு வங்கம்
  • தமிழ்நாடு

சிறப்பு தீவிர திருத்ததுக்கான தேவை பற்றி முன்னர் பல முறை விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஞானேஷ் குமார் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

"கடந்த சில தசாப்தங்களாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் குறைபாடு உள்ளது எனப் புகார் அளித்துள்ளனர். 1951 - 2004 வரை எட்டு முறை தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டு 21 வருடங்கள் ஆகிவிட்டது." எனத் தெரிவித்தார்.

பிகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அங்கு சிறப்பு தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்டது. அங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் திருத்தம்

பட மூலாதாரம், ECI

படக்குறிப்பு, டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

சிறப்பு தீவிர திருத்தத்திற்கான அவசியத்திற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.

அவை

  • விரைவான நகரமயமாக்கல்
  • மக்கள் இடப்பெயர்வு
  • இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெறுவது
  • வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது

பிகார் மக்கள் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வெளிப்படுத்தியதாக ஞானேஷ் குமார் தெரிவித்தார். இந்தப் பணியின் போது தேர்தல் ஆணையத்துடன் பல தேர்தல் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

சராசரியாக ஒவ்வொரு 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியும் ஒரு வட்டார நிலை அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது.

வட்டார நிலை அலுவலர் பணிகள் என்ன?

  • புதிய வாக்காளர் பெயர்களை சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ சேகரித்து அவற்றை பட்டியலுடன் இணைக்க உதவி செய்வது
  • படிவத்தை பூர்த்தி செய்ய வாக்காளர்களுக்கு உதவுவது
  • ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை செல்வது. நகர்ப்புற வாக்காளர்கள் அல்லது தற்காலிகமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இணையத்திலும் வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்யலாம்
  • இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிவு செய்த வாக்காளர்களை அடையாளம் காண்பது
  • முதல் கட்டத்தில் வாக்காளர் படிவத்துடன் வேறு எந்த ஆவணமும் சேகரிக்க வேண்டிய அவசியமில்லை
தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகாரில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது

ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் யாவை?

அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்ட சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட பல ஆவணங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் என்பது குடியுரிமை, இருப்பிடம் அல்லது பிறந்த நாளுக்கான சான்று இல்லை எனத் தெரிவித்த ஞானேஷ் குமார், ஆனால் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு அதை ஒரு அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

முக்கியமான நாட்கள்

அச்சிடுதல்/பயிற்சி: அக்டோபர் 28 - நவம்பர் 3, 2025

வீடு வாரியாக சென்று தகவல் சேகரிப்பது: நவம்பர் 4 - டிசம்பர் 4, 2025

வரைவு வாக்காளர் பட்டியல்: டிசம்பர் 9, 2025

ஆட்சேபனை தெரிவிக்கும் காலகட்டம்: டிசம்பர் 9, 2025 - ஜனவரி 8, 2026

ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு: டிசம்பர் 9, 2025 - ஜனவரி 31, 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி 7 , 2026

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர திருத்தம், தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

அசாம் ஏன் இடம்பெறவில்லை?

நவம்பர் மாதம் நடைபெறும் பிகார் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இடங்களில் அசாம் இடம்பெறவில்லை. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கான விளக்கத்தை வழங்கினார் ஞானேஷ் குமார்.

"இந்திய குடியுரிமை சட்டத்தில் அசாமிற்கு தனி பிரிவுகள் உள்ளன. மேலும் அங்கு உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் குடியுரிமை சரிபார்ப்பு திட்டம் தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது."

"எனவே ஜூன் 24-ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆணை ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. ஆனால் அது அசாமிற்கு மட்டும் பொருந்தாது. எனவே அந்த மாநிலத்திற்கென்று தனி ஆணை பிறப்பிக்கப்படும்." என்றார்.

எனினும் பிகாரில் நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

மேற்கு வங்கத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டு தலைவர்கள் சொல்வது என்ன?

இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் அறிவிப்பு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசியதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 2-ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது எக்ஸ் தளப் பதிவில், "தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் #SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது." எனப் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக சிறப்பு தீவிர திருத்தத்தை வரவேற்பதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், "இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள S.I.R எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் திருத்தப்பணிகளை மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள் தான் செய்யப்போகிறார்கள் என்பதால் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பதில் " சதி" உள்ளது என்பது உண்மைதான். வாக்காளர் திருத்த பட்டியல் தமிழகத்தில் முறையாக நடக்குமா என்பது சந்தேகமே." எனத் தெரிவித்தார்.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் தமது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு