இஷான் கிஷன்: ரோஹித்துக்கு பதில் களமிறங்கி இரட்டை சதம் விளாசிய இளம் புயல்

இஷான் கிஷண்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்

புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அப்படித்தான் இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் நடந்திருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு கையில் காயம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை களமிறக்க வேண்டும்.

வெறும் 10க்கும் குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள இஷான் கிஷன் ரோஹித்துக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தேர்வானார். அதற்கு பின்னர் நடந்த அதிரடிகள் தனிக்கதை.

வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் 3வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷன், கிடைத்த வாய்ப்பை புத்திசாலித்தனமாக கையாண்டிருக்கிறார். வெறும் 126 பந்துகளில் இரட்டை சதம் விளாசி இன்று கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் இந்த இளம் வீரர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்கிற சாதனை இப்போது அவர் வசமாகியுள்ளது. சச்சின் டெண்டுல்கர், சேவாக், ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களோடு இரட்டைச் சதம் அடித்த இந்தியர்களின் பட்டியலிலும் அவர் தற்போது இடம் பிடித்துவிட்டார்.

யார் இந்த இஷான் கிஷன்?

அதிரடியான ஆட்டத்தின் மூலம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள இஷான் கிஷன், 1998 ஜூலை 18ம் தேதி பட்னாவில் பிறந்தவர். எம்.எஸ்.தோனியின் பிறந்த மண்ணான ஜார்கண்டிற்காக டிசம்பர் 2014ல் தனது 16வது வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார் இவர்.

தோனியை போன்றே இவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடர்களில் பலமுறை தோனி - இஷான் கிஷன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் அதிகம் காணக்கிடைக்கும். தோனியிடம் பாடம் கற்றவர். 2014 ரஞ்சி தொடரில் ஜார்கண்ட் அணிக்காக முதல்முதலாக கிரிக்கெட் ஆடத் தொடங்கினார் இஷான் கிஷன். முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான பின் முதல் 10 போட்டிகளிலேயே 1 சதம் 5 அரைசதம் அடித்து அபாரமான பேட்ஸ்மேனாக திகழ்ந்தார்.

இதன்மூலம் அவருக்கு 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்கிடைத்தது. 2016ல் வங்கதேசத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பும் இஷான் கிஷனுக்கு கிடைத்தது.

அந்த தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்று வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியைத் தழுவியது. நவம்பர் 2016ல் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி ஆட்டம் இஷான் கிஷனின் கிரிக்கெட் அவதாரத்தை வெளி உலகிற்கு அறிமுகம் செய்தது.

6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய இஷான் கிஷன், தனி ஆளாக களத்தில் நின்று 336 பந்துகளில் 273 ரன்கள் குவித்தார். ரஞ்சி வரலாற்றில் ஜார்கண்ட் வீரர் அடித்த உட்சபட்ச ஸ்கோராக அது அமைந்தது. இது அவரது கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனையாக மாறியது.

இளமையிலேயே ஐபிஎல் பயணம்

தொடர்ச்சியாக ரன்களை குவித்து கவனம் ஈர்க்கத் தொடங்கிய இஷான் கிஷனுக்கு 2016ல் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் அடித்தது. 17-வயதிலேயே இவரை 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் லயன்ஸ் அணி.

ரஞ்சி தொடரில் சிறப்பான இடது கை பேட்ஸ்மேனாக வலம் வந்த இஷான் கிஷனுக்கு 2018 ஐபில் போட்டியில் மவுசு அதிகரித்தது. சென்னை சூப்பர் கிங்ஸும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் போட்டிப்போட்டு அவரை ஏலம் எடுக்க முனைந்தன. இறுதியில் 6.2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷனை அணியில் எடுத்தது. “ஏலம் நடந்த சமயத்தில் நான் நண்பர்களுடன் கால்பந்து விளையாட வெளியே சென்றிருந்தேன். எனக்கு போன் கால் வந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் 6.2 கோடிக்கு ஏலம் எடுத்ததாக அறிந்தேன். வீடு திரும்பியபோது எனது தாய் மகிழ்ச்சியில் போன் பேசிக்கொண்டிருந்தார். தந்தை BP பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருந்தார்” என நேர்காணல் ஒன்றில் இந்த சம்பவத்தை நகைசுவையோடு பகிர்ந்திருந்தார் இஷான் கிஷன்.

இஷான் கிஷன்

பட மூலாதாரம், Getty Images

2022 ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷன் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டார். அதற்கு காரணம் 2022ல் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற பெருமை கிஷனுக்கு கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 15.25 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் எடுத்தது. இருப்பினும் அந்த தொடர் இஷான் கிஷனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அமையவில்லை.

முன்னதாக 2021ல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டம் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அறிமுக ஆட்டத்திலேயே 56 ரன்களை விளாசி நம்பிக்கை அளித்தார். இதுவரை இஷான் கிஷன் சுமார் 30 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒருமுறை கூட அவர் டக் அவுட்டானதில்லை.

சாதனை மேல் சாதனை

இன்றைய ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் பல சாதனைகளை குவித்திருக்கிறார் இஷான் கிஷன்.

  • குறைந்த பந்துகளில் (126) இரட்டை சதம் அடித்த வீரர். ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்த கையோடு இரட்டை சதம் அடித்த வீரர்

  • குறைந்த வயதில் (24) இரட்டை சதம் அடித்த வீரர். ரோஹித் சர்மா 26 வயதில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசியிருந்தார்.

  • வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் தனி ஒருவர் விளாசிய அதிகபட்ச ரன்கள் - இஷான் கிஷன் (210 ரன்கள்)
  • குறைந்த பந்துகளில் 150 ரன்களை பதிவு செய்த வீரர் (103 பந்துகள்). முன்னதாக சேவாக் 112 பந்துகளில் 150 ரன்கள் விளாசியிருந்தார்.
  • ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக அதிக ரன் குவித்த ஜோடி (இஷான் கிஷன் & விராட் கோலி 290 ரன்கள்)

  • வங்கதேசத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இந்தியா இன்று சேர்த்த 409 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும்
X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: