இந்தியா - வங்கதேசம் இடையே மீண்டும் வார்த்தைப் போர் - என்ன காரணம்?

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திபு சந்திர தாஸ் கொலையைத் தொடர்ந்து இந்தியாவில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

வங்கதேசத்தின் மைமென்சிங் என்ற இடத்தில் கடந்த வாரம் திபு சந்திர தாஸ் கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தியா வெளியிட்ட இந்த அறிக்கையை வங்கதேசம் நிராகரித்துள்ளது. இந்தியாவின் கூற்று வங்கதேசத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரால் குறிப்பிடப்பட்ட நபர் (திபு சந்திர தாஸ்) 'பட்டியலிடப்பட்ட குற்றவாளி' என்றும் வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

வங்கதேசம் கூறியது என்ன ?

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்.எம் மஹ்புபுல் ஆலம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலை குறித்து இந்தியா வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம். மஹபூபுல் ஆலம் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

"அவர்களின் (இந்தியாவின்) கருத்துகள் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை. வங்கதேசத்தின் நீண்ட கால நல்லிணக்க பாரம்பரியத்தை தவறாக சித்தரிக்கும் எந்தவொரு பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட அல்லது வேண்டுமென்றே புனையப்பட்ட கதைகளையும் வங்கதேச அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது"என்று வங்கதேச வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினர் விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பினருக்கும் வங்கதேசம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்ட நபர் (திபு சந்திர தாஸ்) , ஒரு 'பட்டியலிடப்பட்ட குற்றவாளி' என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"அவர் தனது இஸ்லாமிய கூட்டாளியிடம் பணம் பறிக்க முயன்றபோது உயிரிழந்தார், அந்த கூட்டாளி பின்னர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை சிறுபான்மையினர் நடத்தப்படும் கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியல்ல, அது தவறாக வழிநடத்துவதாகும்" என்று வங்கதேச வெளியுறவுஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினர் தொடர்பாக சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் 'கவலையளிக்கின்றன' என்றும், இந்தியா அவை குறித்து 'பாரபட்சமற்ற விசாரணை' நடத்தும் என்று நம்புவதாகவும் வங்கதேசம் தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடூரமான கொலைகள், கும்பல் தாக்குதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் மதச் சடங்குகளுக்கு இடையூறு விளைவிப்பது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம்," என்று ஆலம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த வாரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து வங்கதேசம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. இந்தச் சம்பவங்களை வெறுப்பு குற்றங்களாகவும், திட்டமிட்ட வன்முறையாகவும் நாங்கள் கருதுகிறோம்," என்றார்.

இந்தியா என்ன சொன்னது?

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, திபு சந்திர தாஸ் கொலைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 26 அன்று, மைமென்சிங்கில் திபு சந்திர தாஸ் கொல்லப்பட்டதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டித்திருந்தார்.

"வங்கதேசத்தில் பரப்பப்படும் பொய்யான இந்திய எதிர்ப்புப் பிரசாரங்களை இந்தியா நிராகரிக்கிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பது வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது"என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்தியா வங்கதேசத்தின் நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்துகள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் விரோதப் போக்கு குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது"என்று அவர் கூறினார்.

மைமென்சிங்கில் சமீபத்தில் இந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கண்டித்ததுடன், இந்த குற்றத்தைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று இந்தியா நம்புவதாகவும் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பல்வேறு ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவங்களை வெறும் மிகைப்படுத்தப்பட்ட ஊடகச் செய்திகள் என்றோ அல்லது அரசியல் வன்முறை என்றோ கூறி ஒதுக்கிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னணி என்ன ?

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தில் சமீபத்திய நாட்களில் வன்முறை போராட்டங்கள் நடந்துள்ளன.

வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்திலுள்ள பலுகாவில் , 'மதத்தை அவமதித்ததாக' கூறி இந்து இளைஞரை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றது.

இதுகுறித்து பலுகா காவல் நிலைய அதிகாரி ரிபன் மியான் பிபிசி பங்களாவிடம் கூறுகையில், அந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதோடு, அவரது உடல் மரத்தில் கட்டப்பட்டு தீவைக்கப்பட்டது என்று தெரிவித்தார். உயிரிழந்தவர் திபு சந்திர தாஸ் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

"டிசம்பர் 18-ஆம் தேதி அன்று இரவு 9 மணியளவில், முஹம்மது நபியை அவமதித்ததாகக் கூறி ஆவேசமடைந்த சிலர் அவரைப் பிடித்து அடித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலைத் தீயிட்டுக் கொளுத்தினர்" என்று பலுகா காவல் நிலைய அதிகாரி ரிபன் மியா பிபிசி பங்களாவிடம் தெரிவித்தார்.

வங்கதேச இடைக்கால அரசை வழிநடத்தும் முகமது யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மைமென்சிங்கில் நடந்த கொலையை கண்டித்துள்ளார்.

முகமது யூனுஸின் ஊடகப் பிரிவு ஃபேஸ்புக்கில், "மைமென்சிங்கில் ஒரு இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். புதிய வங்கதேசத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் தப்பிக்க முடியாது"என்று பதிவிட்டுள்ளது.

இதற்கிடையில், டிசம்பர் 20-ஆம் தேதி புது டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன் நடந்த ஒரு போராட்டத்தைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.

வங்கதேச தூதரகத்தின் முன் நடந்ததாகக் கூறப்படும் போராட்டத்தைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த சம்பவம் தொடர்பாக சில வங்கதேச ஊடகங்களில் 'தவறான பிரசாரம்' பரப்பப்படுவதை இந்தியா கவனித்துள்ளதாகக் கூறியிருந்தார்.

அதே சமயம், புது டெல்லியில் உள்ள தனது தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்திற்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதை வெறும் 'தவறான பிரசாரம்' என்று கூறி நிராகரிக்க முடியாது என்றும் கூறியது.

ஹாதீ மரணத்திற்குப் பிறகு வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம்

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உஸ்மான் ஹாதீயின் மரணத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதீயின் மரணத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து அகற்றிய போராட்டத்தில் ஹாதீ ஒரு பிரபலமான தலைவராக இருந்தார்.

இன்குலாப் மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உஸ்மான் ஹாதீயின் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவரும், மைமென்சிங்கின் ஹாலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக டாக்கா பெருநகர காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி பங்களா செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட பைசல் கரீம் மசூத் மற்றும் ஆலம்கீர் ஷேக் ஆகியோர் இந்தியாவை அடைந்த பிறகு, முதலில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தஞ்சம் புகுந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இந்திய அரசோ அல்லது மேகாலயா மாநில அரசோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு