வெனிசுவேலாவில் அமெரிக்கா அடுத்து என்ன செய்யப் போகிறது? மதுரோ பிடிபட்ட பிறகும் நீடிக்கும் ஆபத்து

 வெனிசுவேலா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அயோன் வெல்ஸ்
    • பதவி, தென் அமெரிக்கச் செய்தியாளர்

அமெரிக்கா தனது எதிரிகள் பலர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று விரும்பலாம். ஆனால் பொதுவாக அது ராணுவத்தை அனுப்பி அவர்களை நேரடியாக அப்புறப்படுத்தாது.

வெனிசுவேலா திடீரென இரு வழிகளில் அதிர்ச்சியை எதிர்கொண்டது

நாட்டின் மக்கள் பெரும் சத்தத்துடன் ஏற்பட்ட வெடிப்புகளால் விழித்தெழுந்தனர். அவை தலைநகர் கராகஸில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்கள்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் ராணுவ தலையீடு அல்லது ஆட்சி மாற்றம் என்பது தொலைதூரமான அச்சுறுத்தல் அல்ல என்பதை வெனிசுவேலா அரசு உணர்ந்தது.

வெனிசுவேலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ பிடிபட்டதாகவும், அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மதுரோ மிகப்பெரிய அதிகாரத்தைக் கொண்டிருந்தவர். அவரது அரசு தேர்தல் முறை, நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியதுடன், சக்திவாய்ந்த ஆயுதக் குழுக்களின் விசுவாசத்தையும் பெற்றிருந்தது.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, சிறைபிடித்து அழைத்து வரப்பட்ட வெனிசுவேலா அதிபர்

சனிக்கிழமை அன்று, அவர் சாம்பல் நிற டிராக்சூட் அணிந்த நிலையில், கைகள் கட்டப்பட்டு, கண்கள் மறைக்கப்பட்டவாறு காவலில் வைக்கப்படுவதற்காக அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படும் காட்சி வெளியானது. இது அதிகாரத்திலிருந்து ஒரு அசாதாரணமான வீழ்ச்சி.

மதுரோ ஒரு குற்ற கடத்தல் அமைப்பை வழிநடத்துவதாக அமெரிக்கா நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது, ஆனால் அவர் அதைத் திட்டவட்டமாக மறுக்கிறார்.

கார்டெல் டி லாஸ் சோல்ஸ் என தான் அழைக்கும் குழுவை அமெரிக்கா வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இது வெனிசுவேலாவில் உள்ள சில செல்வாக்கு வாய்ந்தவர்களை குறிக்க அமெரிக்கா பயன்படுத்தும் பெயர்.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத சுரங்கத் தொழில் போன்ற சட்டவிரோத செயல்களை இந்தக் குழு ஒருங்கிணைக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

மதுரோ இப்போது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்காவில் விசாரணையை எதிர்கொள்கிறார்.

அமெரிக்கா அழைத்து வரப்படும் மதுரோ

பட மூலாதாரம், TruthSocial/@realDonaldTrump

படக்குறிப்பு, டிரம்ப் பகிர்ந்த மதுரோவின் புகைப்படம்

மனித உரிமை மீறல் புகார்

பல ஆண்டுகளாக, மதுரோவின் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வாளர்கள், வெனிசுவேலா அரசாங்கம் சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, வன்முறை மற்றும் காணாமல் போதல் போன்ற "கொடூரமான மீறல்களை" செய்துள்ளதாகக் கூறினர் - இவை மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குச் சமமானவை என்றும், இதில் மதுரோ மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு தடுத்து வைக்கப்பட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் நாட்டில் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் பதிவு செய்துள்ளன.

நாட்டில் இன்னும் மதுரோவுக்கு சில விசுவாசமான ஆதரவாளர்கள் இருந்தபோதிலும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலர் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று விரும்பியதற்கு இவைதான் காரணங்கள். ஆனால் அது சனிக்கிழமை நிகழ்வுகளை எளிதாக்கிவிடாது.

கராகஸில் அதிபர் நிக்கோலஸ் மதூரோவைச் சித்தரிக்கும் சுவரோவியத்தைக் கடந்து செல்லும் நபர்.

பட மூலாதாரம், Getty Images

அப்போதும் இப்போதும்

1989-ஆம் ஆண்டு அப்போதைய ராணுவ ஆட்சியாளர் மானுவல் நோரிகாவை பதவியிறக்க பனாமாவிற்குள் நுழைந்த பிறகு, லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்கா இது போன்ற நேரடி ராணுவத் தலையீட்டைச் செய்தது இல்லை.

அப்போதும், இப்போதும் போலவே, அமெரிக்கா இதனை போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே சித்தரித்தது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைநகருக்குள் நேரடியாகத் தாக்குதல் நடத்தும் இந்த சமீபத்திய நடவடிக்கை, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டில் ஏற்பட்டுள்ள வியத்தகு தீவிர மாற்றமாகும்.

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

மதுரோவை வலுக்கட்டாயமாக அகற்றியது, நேரடித் தலையீடு மூலம் மட்டுமே மதுரோவை அதிகாரத்திலிருந்து அகற்ற முடியும் என்று வாதிட்டு வந்த அமெரிக்க நிர்வாகத்திற்குள் இருக்கும் சில முக்கிய நபர்களுக்கு இது பெரிய வெற்றியாகக் கருதப்படும்.

2024 தேர்தலுக்குப் பிறகு அவரை நாட்டின் அதிபராக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் வெளியிட்ட மின்னணு வாக்குப்பதிவுத் தரவுகள், தாங்களே தேர்தலில் வென்றதை நிரூபிப்பதாகக் கூறின.

சர்வதேச தேர்தல் பார்வையாளர்களால் அந்தத் தேர்தல் முடிவு சுதந்திரமானதாகவோ அல்லது நியாயமானதாகவோ கருதப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ அதில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

ஆனால் வெனிசுவேலா அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் இறுதி இலக்கு ஆட்சி மாற்றம் என்று அது நீண்ட காலமாக குற்றம்சாட்டி வந்தது இந்தத் தலையீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

எண்ணெய் இருப்பு

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு மற்றும் பிற வளங்களை அமெரிக்கா "திருட" விரும்புவதாகவும் வெனிசுவேலா குற்றம் சாட்டியுள்ளது.

கடற்கரையை ஒட்டிய பகுதியில் குறைந்தது இரண்டு எண்ணெய் டாங்கர் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றிய பிறகு, இந்த குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாக உணர்ந்தது.

இந்தத் தாக்குதல்கள் மற்றும் சிறைபிடிப்பு நடவடிக்கைகள், இந்தப் பிராந்தியத்தில் பல மாதங்களாக அமெரிக்க ராணுவத்தின் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு நடந்துள்ளன.

போர் விமானங்கள், ஆயிரக்கணக்கான துருப்புக்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் உள்ளிட்ட கடந்த பல தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய ராணுவப் படையை அமெரிக்கா இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது.

கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிறிய கப்பல்கள் மீது டஜன் கணக்கான தாக்குதல்களை நடத்தி, குறைந்தது 110 பேரைக் கொன்றுள்ளது.

காணொளிக் குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்பு - உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அடுத்து என்ன?

வெனிசுவேலாவிற்குள் அடுத்து என்ன நடக்கும் என்பது இன்னும் மிகத் தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்கா இப்போது வெனிசுவேலாவை "நிர்வகிக்கும்" என்று டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் அதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளக்கவில்லை.

அமெரிக்கா புதிய தேர்தல்களுக்கு அழுத்தம் கொடுக்குமா? அல்லது அரசாங்கம் அல்லது ராணுவத்தின் பிற மூத்த உறுப்பினர்களைப் பதவியிறக்கி அவர்களை அமெரிக்காவில் நீதியை எதிர்கொள்ள கட்டாயப்படுத்துமா?

ராணுவ "துருப்புகளை அனுப்ப" தான் பயப்படவில்லை என்று டிரம்ப் கூறினார், மேலும் தேவைப்பட்டால் இன்னும் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதையும் சூசகமாகத் தெரிவித்தார்.

ராணுவ தளம் பற்றி எரியும் காட்சி

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, வெனிசுவேலாவின் மிகப்பெரிய ராணுவத் தளங்களில் ஒன்றான 'ஃபுவேர்டே தியுனா' தாக்கப்பட்டது.

டிரம்ப் ஆதரவு யாருக்கு?

மேலும் ஆச்சரியமளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவரும் நோபல் அமைதிப் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோவிற்கு வெனிசுவேலாவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான "ஆதரவோ அல்லது மரியாதையோ" இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.

அவர் அடிக்கடி டிரம்பைப் பாராட்டியவர் மற்றும் அவர்கள் கூட்டாளிகளாக இருந்தனர். அதிகார மாற்றத்தில் டிரம்ப் அவரை ஆதரிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

அதற்குப் பதிலாக, வெனிசுவேலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் தான் இணைந்து செயல்படக்கூடும் என்று டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். "வெனிசுவேலாவை மீண்டும் சிறந்ததாக்கத் தேவையானதைச் செய்ய அவர் தயாராக இருக்கிறார்" என்றும் அவர் கூறினார்.

டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோவின் ஆட்சியில் ஒரு அங்கமாக இருந்தவர். ஒரு பேச்சுவார்த்தை மூலம் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த அவருடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக டிரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

மதுரோவைப் போன்ற விதியைச் சந்திக்காமல் இருப்பதற்குப் பதிலாக, அதிகாரத்தை விட்டுக்கொடுப்பதைக் இது குறிக்கிறதா? அல்லது அதிகாரத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டு அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைக் குறிக்கிறதா? (உதாரணமாக, அதன் பரந்த எண்ணெய் இருப்புகளுக்கு அதிக அணுகலை அனுமதிப்பது). அப்படியென்றால், அமெரிக்காவை ஏகாதிபத்தியப் போக்குடையது என்று நீண்டகாலமாகக் குற்றம் சாட்டும் மதுரோவின் பிற கூட்டாளிகளும், மதுரோவின் ஆட்சியை வெறுக்கும் வெனிசுவேலாவின் எதிர்க்கட்சியினரும் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவார்கள்?

எதிர்க்கட்சியின் 2024 தேர்தல் வேட்பாளர் எட்முண்டோ கோன்சலஸ் அதிபர் பதவியை "ஏற்க" வேண்டும் என்று மச்சாடோ கூறியுள்ளார், மேலும் இந்த நடவடிக்கையை வெனிசுவேலாவின் "சுதந்திர" நாளாக வரவேற்றுள்ளார்.

மதுரோ (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மதுரோவுக்கு எதிரானவர்கள் அனைவரும் டிரம்ப்பின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. (கோப்புப் படம்)

ஆபத்து என்ன?

இருப்பினும், எதிர்க்கட்சியுடன் இணைந்த அனைவரும் இதை ஒத்துக்கொள்ளவில்லை. சிலர் மதுரோவின் கடும் விமர்சகர்களாக இருக்கலாம், ஆனால் அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டின் மீது ஆழ்ந்த சந்தேகம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் - குறிப்பாக அமெரிக்கா முன்பு ஆதரித்த ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் ஆட்சி மாற்றங்கள் பல சர்வாதிகார ஆட்சிக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்த வரலாற்றைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கருதுகின்றனர்.

நாட்டில் அரசாங்கத்திற்கு இருக்கும் அதிகாரப் பிடியைக் கருத்தில் கொண்டால் இது அவ்வளவு எளிதல்ல என்றும் மற்றவர்கள் எச்சரிக்கின்றனர்.

நீதித்துறை, உச்ச நீதிமன்றம், ராணுவம் ஆகியவை அதன் கட்டுப்பாட்டில் உள்ளன - மேலும் "கலெக்டிவோஸ்" என்று அழைக்கப்படும் சக்திவாய்ந்த ஆயுதமேந்திய துணை ராணுவக் குழுக்களுடன் அது இணைந்துள்ளது.

மதுரோ

பட மூலாதாரம், Reuters

அமெரிக்கத் தலையீடு வன்முறையான பிளவுக்கும் நீண்ட கால அதிகாரப் போராட்டத்திற்கும் வழிவகுக்கும் என்று சிலர் அஞ்சுகின்றனர்.

மதுரோவின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு, சனிக்கிழமை நிகழ்வுகள் அவர்களது சொந்த எதிர்காலம் குறித்த அவசர கேள்விகளையும் அச்சங்களையும் எழுப்புகின்றன.

தங்களுக்கு ஏதேனும் ஒரு வகையான பாதுகாப்பு அல்லது தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற உறுதிமொழி கிடைக்காவிட்டால், அவர்களில் பலர் போராட்டத்தைக் கைவிடவோ அல்லது அதிகார மாற்றத்திற்கு அனுமதிக்கவோ மாட்டார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்பைப் பொறுத்தவரை அவரது நிர்வாகம், அர்ஜென்டினாவுக்கு நிதி உதவி வழங்கியது, டிரம்ப் கூட்டாளியும் முன்னாள் அதிபருமான ஜெய்ர் போல்சனாரோவின் ஆட்சி கவிழ்ப்பு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க பிரேசில் மீது வரிகள் விதித்தது மற்றும் இப்போது வெனிசுவேலாவில் ராணுவத் தலையீடு செய்தது என இந்தப் பிராந்தியத்தில் அதிக அளவில் தனது பலத்தைக் காட்டி வருகிறது.

ஈக்வடார், அர்ஜென்டினா மற்றும் சிலியில் சமீபத்திய தேர்தல்களில் வலதுசாரிப் பக்கம் திரும்பியுள்ள கண்டத்தின் அரசியல் சூழல் டிரம்பிற்குச் சாதகமாக உள்ளது. மதுரோவிற்கு இந்தப் பிராந்தியத்தில் ஆதரவாளர்கள் குறைவாக இருந்தாலும், பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற சில பிராந்திய நாடுகள் அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை ஆதரிக்கவில்லை.

மேலும், "அமெரிக்க நலனே முதல்" என்று உறுதியளித்த பிறகு டிரம்பின் பெருகிவரும் இந்தத் தலையீட்டுப் போக்கு குறித்து அமெரிக்காவிலுள்ள அவரது சொந்த 'MAGA' ஆதரவாளர்களில் சிலரும் மகிழ்ச்சியாக இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு