'ரத்தம் குடிக்க விரும்பிய கைதி'; மும்பை நிழலுகத்தின் 4 மோசமான கொலையாளிகள்

பட மூலாதாரம், PTI
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் வலது கை என்று அழைக்கப்படும் சோட்டா ஷகீல், சாதிக் ஜலாவரிடம், "உன் சகோதரியின் கணவரை கொன்றுவிடு, உன்னிடம் ஏதாவது சிறப்பம்சம் இருக்கிறதா என்று அப்போதுதான் எனக்குப் புரியும்" என்று ஒரு முறை கூறினார்.
சோட்டா ஷகீலின் வார்த்தைகளைக் கேட்ட சாதிக் மனமுடைந்து போனார். அவரால் தன் காதுகளை நம்ப முடியவில்லை; அவரது முகம் வெளிறிப்போய், கைகள் நடுங்கத் தொடங்கின. சாதிக் தனது சகோதரியை மிகவும் நேசித்தார்; அவரது கணவரின் பெயர் சுல்பிகர். மைத்துனர் சுல்பிகர் இறந்த பிறகுதான் தன்னை அழைக்க வேண்டும் என்று சாதிக்கிடம் சோட்டா ஷகீல் கூறிவிட்டார்.
இதைக் கேட்ட சாதிக், மேசையில் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு, வேலை முடிந்துவிடும் என்று ஷகீலிடம் கூறினார். சாதிக்கை முழுமையாக சோதிக்க விரும்பிய ஷகீல், அவருக்கு எந்த சலுகையும் கொடுக்க விரும்பவில்லை.
'இதில் துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டாம்' என ஷகீல் சாதிக்கிடம் கூறியதாக எஸ். ஹுசைன் ஜைதி தனது 'தி டேஞ்சரஸ் டஜன், ஹிட்மென் ஆஃப் தி மும்பை அண்டர் வேர்ல்ட்' (The Dangerous Dozen, Hitmen of the Mumbai Underworld) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
தாதா அருண் காவ்லியின் கும்பலில் இருந்து சாதிக் வெளியேறிய சமயம் அது. சோட்டா ஷகீலின் நம்பிக்கையை எப்படியாவது பெற விரும்பிய சாதிக், தன்னுடைய சகோதரியின் கணவரைக் கொல்லவும் தயங்கவில்லை.
சரியான சந்தர்பம் கிடைத்ததும், சுல்பிகரை கட்டிப்பிடித்த சதிக், அவரின் முதுகுப் பக்கத்தில் கத்தியால் குத்தினான்.
"தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கூறிக் கொண்டே, சுல்பிகரை ஐந்து முறை குத்திய சாதிக், சகோதரியின் வீட்டை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, தன் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறினான். பின்னர், ஷகீலை அழைத்த சாதிக் வேலை முடிந்துவிட்டது என்று சொன்னார்.
அந்த செய்தியைக் கேட்டு ஷகீல் திகைத்துப் போனார். ஏனென்றால், சகோதரியின் கணவரை கொல்லமுடியாது. அது தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்று சொல்லிவிட்டு, வேறு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்று தன்னிடம் சாதிக் கேட்டுக்கொள்வார் என்றே ஷகீல் நினைத்தார்.
தனது ஆணையை அப்படியே நிறைவேற்றிய சாதிக்கை ஷகீல் முழுமையாக நம்பினார். சாதிக் ஜலவார் என்ற அவர் அன்றிலிருந்து "சாதிக் காலியா" என்று அறியப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, தன்னை சந்திக்க துபை வருமாறு சாதிக்கை சோட்டா ஷகீல் அழைத்தார்.

பட மூலாதாரம், Simon & Schuster
சாதிக் காலியா என்கவுண்டர்
சாதிக்கின் மீது நம்பிக்கை வந்ததால், அவரை மற்றொரு பிரபல தாதாவான சலீம் சிக்னா-வின் கும்பலிடம் அறிமுகப்படுத்தினார் சோட்டா ஷகீல். மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் நிபுணரான சிக்னாவும், சாதிக்கும் இணைந்து, 1990களின் நடுப்பகுதியில் மும்பையில் சோட்டா ராஜனின் கும்பலுடன் கடுமையாக போட்டியிட்டனர். ஷகீலின் உத்தரவின் பேரில் இருவரும் இருபதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக மும்பை காவல்துறை மதிப்பிடுகிறது.
ஆனால் சோட்டா ஷகீல் தனக்குக் கொடுத்த ஒரு பணியை அவர் முடிக்க சாதிக் தவறிவிட்டார். சாதிக் முதலில் இணைந்து வேலை பார்த்த தாதா அருண் காவ்லி, அரசியலில் ஈடுபடத் தொடங்கியிருந்தார். அவரை கொலை செய்ய சோட்டா ஷகீல் உத்தரவிட்டிருந்தார்.
இது குறித்து ஹுசைன் ஜைதி இவ்வாறு எழுதுகிறார், "மும்பைக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்ற அருண் காவ்லி புனேவிலிருந்து வருகிறார் என்பது சாதிக்கிற்குத் தெரியும். அந்தக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் சாதிக் தன்னை சுடப் போகிறார் என்பதைத் தெரிந்துக் கொண்ட காவ்லி, கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்

பட மூலாதாரம், Getty Images
சாதிக் காலியா மணிக்கணக்கில் காத்திருந்த போதிலும் காவ்லி வரவில்லை. பேயைப் போல மறைந்து போவதில் திறமையானவர் என்பதால், போலீஸ் வட்டாரத்தில் "பூத்" என்று சாதிக் அறியப்பட்டார்.
சாதிக் காலியாவைப் பிடிக்க முயன்ற போலீசாரால் அது முடியவில்லை, ஆனால் அவரது பேஜர் எண்ணை கண்டுபிடித்த போலீசார், அதன் மூலம் முதலில் சலீம் சிக்னாவைக் கைது செய்தனர், பின்னர், அவரது உதவியுடன், 1997 டிசம்பர் 12 அன்று தாதர் மலர் சந்தையில் சாதிக் காலியாவைச் சுற்றி வளைத்த போலீசாரின் நூற்றுக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்களால் சாதிக் கொல்லப்பட்டார்.
பின்னர்,'மென்ஸ் வேர்ல்ட்' நிகழ்ச்சியில் மஞ்சுளா சென்னுடனான நேர்காணலில் இந்த சம்பவம் குறித்து பேசிய சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக், "சோட்டா ஷகீலின் சிறந்த துப்பாக்கிச் சூடு வீரர்களில் ஒருவரான சாதிக் காலியாவைக் கொன்றதுதான் எனது மிகப்பெரிய வெற்றி. தாதர் மலர் சந்தையில் அவரை நாங்கள் சுற்றி வளைத்தோம். அவருடைய ஆறு தோட்டாக்கள் என்னை தாக்கின, என்னுடைய இடது தொடையில் காயம் ஏற்பட்டது, ஆனால் நாங்கள் அவரை செயலிழக்கச் செய்தோம்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Men's World
வெங்கடேஷ் பக்கா ரெட்டிக்கு மிகவும் பிடித்த பானம்
மும்பை மாஃபியா கும்பல்களில் பிரபலமான மற்றொரு கொலையாளி வெங்கடேஷ் பக்கா ரெட்டி எனப்படும் பாபா ரெட்டி பற்றிப் பேசலாம். பாபா ரெட்டியைக் கைது செய்த போலீசார் நீண்ட காலமாக கடுமையான விசாரணை செய்தபோதும், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் வாங்க முடியவில்லை.
அப்போது பாபா ரெட்டியை பேச வைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்த காவல்துறைக் குழுவில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் தனது அதிகாரியிடம் வந்து, "ஐயா, அவருக்குப் பிடித்த பானத்தின் ஒரு பாட்டிலை வாங்கிக் கொடுத்தால், அவர் நமது கேள்விகளுக்கு பதிலளிப்பதாக கூறுகிறார்" என்று கேட்டார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த அதிகாரி, "உங்களுக்குப் பைத்தியமா? சிறையில் எப்படி மது வாங்கிக் கொடுக்க முடியும்?" என்று கடுமையாக பேசிவிட்டார்.
ஆனால், அதற்கு பிறகு காவலர் சொன்ன விசயம் அதிகாரியை திகைக்க வைத்தது, "ஐயா, அவர் மது கேட்கவில்லை, ஒரு பாட்டில் ரத்தம் கேட்கிறார்."
பின்னர், அருகிலுள்ள இறைச்சிக் கூடத்திலிருந்து ஆட்டின் ரத்தம் கொண்டு வந்து கொடுத்தப் பிறகு, பாபா ரெட்டி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார்.
ஹுசைன் ஜைதி எழுதுகிறார், "28 வயதில், மும்பை நிழல் உலக வரலாற்றில் மிகவும் மர்மமான கதாபாத்திரமாக இருந்த பாபா ரெட்டி, இந்துக்கள் அல்லாதவர்களை மட்டுமே குறிவைத்தார். ஹைதராபாத் அருகே உள்ள முஷீராபாத்தில் வசித்துவந்த அவர், ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை விட்டுவிட்டார்."

பட மூலாதாரம், Roli Books
வெங்கடேஷ் பக்கா ரெட்டியின் முடிவு
அதன்பிறகு இந்தோனீசியா சென்ற வெங்கடேஷ் பக்கா ரெட்டியை, சோட்டா ராஜன் போதைப்பொருள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பாளராக நியமித்தான். 2002 டிசம்பர் மாதத்தில் இந்தியா திரும்பிய ரெட்டிக்கு தாவூத் இப்ராகிமின் ஆட்கள் தன்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள் என்பது நன்றாகவேத் தெரியும்.
இந்தோனீசியாவில் இருந்து வந்து முதலில் வாரணாசியில் இருந்த ரெட்டி, பிறகு ஹைதராபாத்திற்குச் சென்றான். ஹைதராபாத்தில் ஆயுத விநியோகஸ்தராக மாறி, குற்ற கும்பல்களுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விநியோகம் செய்யத் தொடங்கினான்.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் அவருக்கு 40 ஏக்கர் நிலம் இருந்தது. கடத்தல் செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை காசோலை மூலமாகவே வசூலிக்கும் விசித்திரமான பழக்கம் பாபா ரெட்டிக்கு இருந்தது.
2008 மே மாதத்தில், ஜூபிலி ஹில்ஸ் பகுதிக்கு ரெட்டி வரப்போவதாகப் போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அவர் வருவதற்கு முன்பே அப்பகுதியைக் கைப்பற்றிய டாஸ்க் ஃபோர்ஸ் கமாண்டோக்கள் அந்தப் பகுதிக்குள் வாகனங்களை நுழைய அனுமதிக்கவில்லை. பாபா ரெட்டி காரில் அங்கு வந்ததும், போலீசார் அந்தக் காரை சூழ்ந்துகொண்டனர்.
அந்த சம்பவம் பற்றி பின்னர் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பி. பிரசாத் ராவ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், "தனது இரு கூட்டாளிகளுடன் பணம் வசூலிப்பதற்காக ஜூபிலி ஹில்ஸ் பகுதிக்கு ரெட்டி வரும் தகவல் கிடைத்தது. இரண்டு மணிநேரம் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினோம். இரவு 11:15 மணியளவில் பி.என். ரெட்டி நகர் செல்லும் சாலை எண் 46-ல் அந்தக் காரை வழிமறித்தோம்.
போலீசார் ரெட்டியை நோக்கிச் சென்றபோது, அவர்கள் தப்பிக்க முயன்றனர். சரணடையச் சொன்னபோது, ரெட்டி 9 எம்.எம் பிஸ்டலை எடுத்து போலீசாரை நோக்கிச் சுடத் தொடங்கினான். போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில், காயமடைந்த ரெட்டி கீழே விழுந்துவிட்டான். அவனது கூட்டாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்," என்று விளக்கமாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Telangana Police
டி.சி.பி.யின் கண்கள் கட்டப்பட்டிருந்தபோது நடந்தது என்ன?
1994 ஆகஸ்ட் 25 அன்று காலை 10 மணியளவில், பாந்த்ராவின் பரபரப்பான ஹில் ரோட்டில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் இருந்து வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்று வெளியே வந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த இருவர், ஏகே-56 ரகத் துப்பாக்கியால் காரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த போலீஸ் பாதுகாவலர் தனது ஸ்டென் துப்பாக்கியால் பதிலடி கொடுக்க முயன்றார், ஆனால் தாக்குதல்தாரிகள் அவரையும் சுட்டு வீழ்த்தினர்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த பாஜக நகரத் தலைவர் ராமதாஸ் நாயக் அங்கேயே உயிரிழந்தார். ஒட்டுமொத்த மும்பை காவல்துறையும் கொலையாளிகளைத் தேடும் பணியில் இறங்கியது. அப்போது மும்பை காவல்துறை துணை ஆணையர் ராகேஷ் மரியாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த சம்பவம் குறித்து ராகேஷ் மரியா தனது சுயசரிதையான Let Me Say It Now என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "தொலைபேசியில் அழைத்தவர் என்னிடம், 'சார், ராமதாஸ் நாயக் கொலை வழக்கு பற்றிய தகவல் உங்களுக்கு வேண்டுமா?' என்று கேட்டார். உடனே நான் 'ஆமாம்' என்றேன். அதற்கு அவர், 'நீங்கள் என்னை வெளியே வந்து சந்திக்க வேண்டும்' என்றார். 'எங்கே?' என்று நான் கேட்டதற்கு, அவர் அனுப்பும் காரில் வரச் சொன்னார். முதலில் இதுவொரு சதித்திட்டமாக இருக்கும் என்றே தோன்றியது. சரியாக மதியம் 2 மணிக்கு எனது அலுவலகத்தின் முன்னே ஒரு கார் என்னை வந்து அழைத்துச் செல்லும் என்று அந்த நபர் கூறினார். சிறிது நேரத்தில், கறுப்பு கண்ணாடிகள் கொண்ட வெள்ளை நிற மாருதி வேன் ஒன்று வந்து நின்றது. அதன் பெயர் பலகையில் அதன் பதிவு எண் தெரியாதவாறு சேறு பூசப்பட்டிருந்தது."
"நான் காரில் ஏறியதும், உள்ளே இருந்தவர்கள் எனது கண்களைக் கட்டினார்கள். 15 நிமிடப் பயணத்திற்குப் பிறகு கார் ஓரிடத்தில் நின்றதும், குளிர்சாதன வசதி கொண்ட அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது என்னிடம் போனில் பேசிய அதே குரலை மீண்டும் கேட்டேன். அவர், 'சார், உங்களை இப்படி இங்கு அழைத்து வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்றார். நான், 'அதெல்லாம் தேவையில்லை, உங்களுக்குத் தெரிந்த விஷயத்தைச் சொல்லுங்கள்' என்றேன். அதற்கு அவர், 'பெரோஸ் கொங்கணி என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?' என்று கேட்டார். நான் 'இல்லை, அவன் யார்?' என்றேன். அவர், 'அவன் ஒரு துணிச்சலான இளைஞன். இந்த வேலையை அவன்தான் செய்தான்' என்றார். அதன் பிறகு, அந்த கார் என்னை மீண்டும் என்னை எங்கிருந்து அழைத்து வந்ததோ அதே இடத்தில் கொண்டு வந்து விட்டது."

பட மூலாதாரம், Westland
பெரோஸ் கொங்கணி கைது
1994 அக்டோபர் 19 அன்று, மரியாவுக்கு மீண்டும் அதே நபரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர், "உங்களுக்குப் பெரோஸ் கொங்கணி வேண்டுமா?" என்று கேட்டார். மரியா, "நிச்சயமாக" என்று பதிலளித்ததும், "அவன் தற்போது பெங்களூரில் இருக்கிறான். அவனைப் பிடிக்க நீங்கள் நேரில் செல்ல வேண்டும்" என்று அந்த நபர் கூறினார். ஆனால் மரியாவின் மேலதிகாரிகள் அவர் பெங்களூர் செல்ல அனுமதி வழங்கவில்லை.
எனவே அவருக்குப் பதிலாக அவருடைய குழு பெங்களூருக்குச் சென்றது. அந்த நபர் மீண்டும் மரியாவைத் தொடர்புகொண்டு, கொங்கணி இன்று திரைப்படம் பார்க்கச் செல்லவிருப்பதாகவும், அங்கேயே அவனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார். அனைத்துத் திட்டங்களும் தயார் நிலையில் இருந்தபோது, கொங்கணி படம் பார்க்கச் செல்லும் முடிவை மாற்றிவிட்டதாக மீண்டும் அந்த நபரிடமிருந்து போன் வந்தது. கொங்கணி ஹோட்டலிலேயே தங்கித் தனது நண்பர்களுடன் மது அருந்தப் போவதாகத் தெரிவித்தார்.
ராகேஷ் மரியா எழுதுகிறார்: "'புளூ டைமண்ட்' என்ற ஹோட்டலின் அறை எண் 206-ல் பெரோஸ் தங்கியிருந்தான். நாங்கள் ஹோட்டல் மேலாளருடன் பேசி நிலைமையை புரியவைத்துவிட்டோம். இரவு ஏழரை மணியளவில் அறை எண் 206-லிருந்து 'சிக்கன் லாலிபாப்' ஆர்டர் செய்யப்பட்டது.
உணவுத் தள்ளுவண்டியில் உணவை வைத்துக்கொண்டு அறைக்குள் செல்வது என்று குழு முடிவு செய்தது. திட்டப்படி, சப்-இன்ஸ்பெக்டர் வார்பே உணவு பரிமாறுபவரைப் போல வேடமிட்டார். அவர் தனது ரிவால்வரை தள்ளுவண்டிக்குள் மறைத்து வைத்தார். அறைக்குள் சென்ற வார்பே, தட்டுகளை எடுப்பதற்காகக் குனிந்தபோது, சட்டென்று தனது ரிவால்வரை எடுத்து பெரோஸ் கொங்கணியை நோக்கிக் குறிவைத்தார். உடனே எங்கள் குழுவின் பிற உறுப்பினர்களும் அறைக்குள் புகுந்து கொங்கணியைக் கைது செய்தனர்."

கைது செய்யப்பட்ட கொங்கணி விமானம் மூலம் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டான். மொத்தம் 21 கொலைகளைச் செய்திருப்பதாக அவன் ஒப்புக்கொண்டான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1998 மே 6-ஆம் தேதியன்று, மும்பை காவல்துறையின் பிடியிலிருந்து பெரோஸ் கொங்கணி தப்பித்துவிட்டான். நேபாள எல்லையைக் கடந்து துபைக்கு சென்றுவிட்டான். பின்னர் 2003-ஆம் ஆண்டில், தாவூத்தின் ஆட்களால் அவன் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தது.
தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிமை பெரோஸ் கொங்கணி திட்டுவதை யாரோ பதிவு செய்திருக்கலாம் என்று உசேன் ஜைதி கருதுகிறார். அவன் செய்த அந்தத் தவறு அவனது உயிருக்கே ஆபத்தாக முடிந்ததாக கூறப்படுகிறது.
ராகேஷ் மரியா எழுதியது: "அண்டர்வேர்ல்ட் உலகில் கொங்கணியை 'டார்லிங்' என்று அழைத்தார்கள். சிறைக் காவலர் அவனைப் பற்றிய விசித்திரமான தகவலை என்னிடம் கூறினார், அதை என்னால் மறக்கவே முடியாது. சிறையில் அவனது அறையில் கறுப்பு எறும்புகள் இருந்தால், அவற்றைத் தனது விரல்களால் பிடித்து, ஒவ்வொன்றாக அதன் கால்களை உடைப்பான். கால்கள் இல்லாத எறும்புகளின் உடல் தரையில் தவிப்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பான்."

பட மூலாதாரம், Roli Books
இதே போன்ற கதை முகம்மது ஹுசைன் ஷேக் என்பவருடையது. 'உஸ்தாரா' என்று அழைக்கப்பட்ட அவருக்கு, தாவூத் இப்ராகிமின் வலது கையான சோட்டா ஷகீல் மீது மிகுந்த வெறுப்பு இருந்தது. துப்பாக்கி சுடுவதில் அவர் கைதேர்ந்தவராக இருந்தபோதிலும், ரேசர் பிளேடுகளைப் பயன்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தால் சவரக்கத்தி என்ற பொருள்படும் உஸ்தாரா என்ற பெயர் வந்தது.
காவல்துறைக்கு நிழல் உலகத்தைப் பற்றிய ரகசியத் தகவல்களைக் கொடுத்து வந்ததால், போலீசார் அவரைத் துரத்தவில்லை.
உசேன் ஜைதி எழுதுகிறார்: "உஸ்தாரா தனது சட்டைக் கைக்குள் மறைத்து வைத்திருந்த பிளேடை என்னிடம் காட்டினார். ஒரு பிஸ்டலை மூன்று வினாடிகளுக்குள் தன்னால் பொருத்த முடியும் என்று அவர் பெருமையாகக் கூறுவார். 1914-ல் தயாரிக்கப்பட்ட மவுசர் ரகத் துப்பாக்கியே அவருக்குப் பிடித்தமான ஆயுதம். உஸ்தாராவின் நெருங்கிய வட்டத்தில் ஆறு பேர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் உடல் ரீதியாக மாறுபட்டவர்கள். ஒருவரின் கண்கள் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் என்றால், மற்றொருவருக்கு ஒரு காது பெரியதாக இருக்கும். உடல் ரீதியான குறைபாடுகள் அல்லது மாற்றங்கள் கொண்டவர்கள் இது போன்ற வேலைகளில் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள் என்பது உஸ்தாராவின் அசைக்கமுடியாத நம்பிக்கை."
உஸ்தாராவின் பலவீனம் என்று சொன்னால் பெண்கள் தான். திருமணமாகி பல குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த போதிலும், பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதைத் தெரிந்துகொண்ட தாவூத் இப்ராகிம், திட்டமிட்டு உஸ்தாராவின் வாழ்க்கையில் ஒரு பெண்ணை அனுப்பி வைத்தார்.
உசேன் ஜைதி உஸ்தாராவின் முடிவை இவ்வாறு குறிப்பிடுகிறார்: "மெய்க்காப்பாளர்கள் இல்லாமல் தனியாக வந்து தன்னைச் சந்திக்குமாறு அந்தப் பெண் உஸ்தாராவிடம் கோரிக்கை விடுத்தார். அதற்குச் சம்மதித்த உஸ்தாரா, வேறு யாரையும் அழைத்துச் செல்லாமல் தனியாகவே அந்தப் பெண்ணை சந்திக்கச் சென்றார். 1998-ஆம் ஆண்டு, ஒருநாள் காலை வேளையில், அந்தப் பெண்ணைச் சந்தித்துவிட்டு உஸ்தாரா வெளியே வந்தபோது, சோட்டா ஷகீல் அனுப்பிய ஆறு பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர்.
"நான் பலருக்காகக் கல்லறைகளைத் தோண்டியிருக்கிறேன். ஒருநாள் யாராவது எனக்காகவும் ஒரு குழியைத் தோண்டுவார்கள்," என்று உஸ்தாரா அடிக்கடி சொல்வார், அவருடைய அந்த வார்த்தை உண்மையானது.
மூன்று வினாடிகளில் பிஸ்டலை இணைக்கும் திறன் கொண்ட உஸ்தாரா மீது நாலாபுறமிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, அவர் உடலில் மொத்தம் இருபத்தேழு குண்டுகள் பாய்ந்திருந்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












