ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி - நாம் தமிழர் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.
படக்குறிப்பு, திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இந்த தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிலவரம் என்ன?

திமுக - 1,15,709 வாக்குகள்

நாதக - 24,151 வாக்குகள்

ஈரோடு இடைத்தேர்தல்

இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என்றும், மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியது என்ன?

திமுக வேட்பாளர் வி.சந்திரகுமார், "46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக மட்டுமே 75 சதவீத வாக்குகள் பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இது கிழக்கு தொகுதிக்கான வெற்றி அல்ல, இந்த வெற்றி 2026இல் ஒவ்வோர் இடத்திலும் சென்று சேரும்," என்று தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு,

மேலும், "இன்று எதிர்க்கட்சிகளுக்கு எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளதோ, அதேபோன்று 2026 தேர்தலிலும் தமிழக முழுவதும் ஏற்படும். 2026 தேர்தலிலும் ஸ்டாலின்தான் முதல்வர் என்று நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர்.

ஏற்கெனவே முதல்வரும் துணை முதல்வரும் மக்கள் மீது உள்ள நம்பிக்கையில் பொதுத் தேர்தல் போல வெற்றி பெற்று வாருங்கள் எனச் சொல்லியிருந்தனர். ஆகவே இந்த வெற்றி முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் சொந்தமானது," எனக் கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி நாம் தமிழர் வேட்பாளர் கூறியது என்ன?

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்

"இது பின்னடைவு இல்லை, சீமான் மக்களைச் சிந்திக்க வைத்துள்ளார்," என்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்துப் பேட்டியளித்தபோது நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

"கடந்த தேர்தலைவிட நாம் தமிழர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இது திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பணம், விலை பேசி மிரட்டி செலுத்தப்பட்ட கள்ள வாக்குகள் அனைத்தையும் கடந்து மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்," என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், "இதே நிலை தொடர்ந்தால், 2026 தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்திக்கும். எங்களுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்குகள் வேறு கட்சிக்கு மாறாது. 2026 தேர்தலில் இந்த மண்ணில் புரட்சி ஏற்படும்.

பெரியாரை விமர்சித்த காரணத்தால் வாக்கு குறையவில்லை. புரிதல் இருப்பவர்கள் மட்டுமே எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பணம், அதிகாரத்தைக் கடந்து தனித்து நின்று இவ்வளவு வாக்குகளை வாங்கியுள்ளோம்," என்று கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)