முகலாயப் பேரரசின் வீழ்ச்சியை முன்பே கணித்த ஔரங்கசீப் - எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இன்றும் கூட, காலையில் ராசிபலனை படித்த பிறகே சிலர் தங்கள் நாளை தொடங்குகிறார்கள். அதேபோல், ஜோதிடத்தை நம்பாதவர்களும் உள்ளனர்.
சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களைப் புரிந்துகொள்வதில் மனிதர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. பண்டைய கிரேக்கத்திலிருந்து இந்தியா வரை வானியல் துறையில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இடைக்காலத்தில், கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்கள் கணிப்புகளுடன் இணைக்கப்பட்டன.
இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த முகலாயர்களில் பலரும் ஜோதிடத்தை நம்பினர். ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்றே தங்கள் முக்கியமான வேலைகளைச் செய்தனர்.
இஸ்லாம், கிறிஸ்தவம் என பல மதங்கள் ஜோதிடத்தை மத நம்பிக்கைகளுக்கு முரணானதாகக் கருதுகின்றன. அல்லாவுக்கு மட்டுமே எதிர்காலத்தை முன்னறிவிக்கும் திறன் உள்ளது என்று இஸ்லாமிய மத கோட்பாடுகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Bloomsbury
அண்மையில், பிரபல பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் எழுதிய 'After Me Chaos, Astrology in the Mughal Empire' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது, அதில் அவர் ஜோதிடம் குறித்த முகலாய பேரரசர்கள் பலரின் கருத்துகளையும் விரிவாக எழுதியுள்ளார்.
"ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கிர், ஔரங்கசீப் என பல முகலாய அரசர்களும் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அக்பரின் அரசவையில் ஜோதிடர்கள் முக்கிய அங்கம் வகித்தனர். ஔரங்கசீப் கூட முக்கியமான விஷயங்களில் ஜோதிடர்களின் ஆலோசனையை பெற்று செயல்பட்டார். இந்த முகலாயப் பேரரசர்கள் அனைவரும் மத அடிப்படையிலான தூய்மைவாதம் அரசியல் நிலைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்பினார்கள்" என எம்.ஜே. அக்பர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Sang-e-Meel Publications
உலகம் முழுவதும் ஜோதிடம்
வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான பென்சன் பாப்ரிக் தனது 'கலீஃப்ஸ் ஸ்ப்ளெண்டர்' என்ற புத்தகத்தில், "பாக்தாத் நகரத்தின் அடிக்கல் அபு ஜாபர் அல்-மன்சூரால் ஜூலை 31, 762 அன்று பிற்பகல் 2:40 மணிக்கு நாட்டப்பட்டது, ஏனெனில் அது நல்ல நேரம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வரலாற்றாசிரியரான பேராசிரியர் முகமது முஜீப் தனது 'தி இந்தியன் முஸ்லிம்' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "இந்தியாவில் முகலாய ஆட்சி ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அற்புதங்கள், விலைமதிப்பற்ற கற்களின் மர்மமான பண்புகள் மற்றும் சகுனங்களை நம்பத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில், ஜோதிடம் ஒரு அறிவியலாகக் கருதப்பட்டது, இஸ்லாமியர்களும் அதை நம்பினர்."
இடைக்கால வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பர்னி 'தாரிக்-இ-ஃபிரோஸ்ஷாஹி'என்ற புத்தகத்தில், "எந்தவொரு மரியாதைக்குரிய குடும்பத்திலும் ஜோதிடரின் ஆலோசனையின்றி எந்த சடங்குகளோ அல்லது முக்கியமான வேலைகளோ செய்யப்படவில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு தெருவிலும் ஜோதிடர்கள் இருந்தனர், அவர்களில் இந்து மற்றும் முஸ்லிம் இருபாலரும் இருந்தனர்" என்று எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அக்பரின் பிறப்பைத் தள்ளிப்போட முயற்சி
1542 அக்டோபர் 15 அன்று அதிகாலை 1:06 மணிக்கு மூன்றாவது முகலாயப் பேரரசர் அக்பர் பிறந்த கதை சுவாரஸ்யமானது. அது, முகலாயப் பேரரசர்களுக்கு இருந்த ஜோதிட நம்பிக்கையைப் பற்றிய ஒரு புரிதலை அளிக்கிறது.
பேரரசர் ஹுமாயூன் ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்ட போது, ராஜபுத்திர மன்னர் அவருக்கு உமர்கோட் கோட்டையில் அடைக்கலம் கொடுத்தார். அந்த சமயத்தில் ஹுமாயூனின் மனைவி ஹமீதா பேகம் கர்ப்பமாக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
"ஹுமாயூன் 30 மைல் தொலைவில் உள்ள தட்டாவில் இருந்தார். தனக்கு பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தை துல்லியமாக கணிப்பதற்காக, குழந்தையின் சரியான நேரத்தை அறிந்துக் கொள்ளவேண்டும் என நினைத்தார். எனவே, தனது தனிப்பட்ட ஜோதிடர் மௌலானா சந்த்-ஐ தனது மனைவியுடன் விட்டுச் சென்றார். ஹமீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட அக்டோபர் 14 ஆம் தேதி இரவு குழந்தை பிறந்துவிடும் என்ற நிலை உருவானது. ஆனால், மௌலானா சந்த் மிகவும் பதற்றமடைந்தார்" என்று எம்.ஜே. அக்பர் கூறுகிறார்.
அசுப நேரமான அப்போது குழந்தை பிறந்தால் சரியாக இருக்காது என்று கணித்த அரச ஜோதிடர், சிறிது நேரம் கழித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் ஒரு அரிய நட்சத்திர அமைப்பு உருவாகும் என்பதையும் கணித்தார். நல்ல நேரம் வரும்வரை பிரசவத்தை சில மணி நேரங்கள் தள்ளி வைக்க முடியுமா என்று மருத்துவச்சிகளிடம் மௌலானா சந்த் கேட்டார்.
நின்றுபோன பிரசவ வலி
ஜோதிடரின் ஆலோசனையைக் கேட்ட மருத்துவச்சிகளும், பிரசவத்திற்காக உதவி செய்ய நியமிக்கப்பட்ட பெண்களும் திகைத்துப் போனார்கள். இயற்கையின் விதிகள் தெய்வீக கட்டளைகள் என்று கூறிய அவர்கள், குழந்தை பிறப்பு போன்ற விஷயங்களில் மனித விருப்பத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

பட மூலாதாரம், Bloomsbury
"எனவே, விசித்திரமான யோசனை ஒன்று அவருக்குத் தோன்றியது. இருண்ட அந்த இரவில், அவர் ஒரு மருத்துவச்சியின் முகத்தை பயங்கரமானதாக மாற்றி, ஹமீதா பானோவின் படுக்கைக்கு அழைத்துச் சென்றார். ஒரு மெல்லிய திரைச்சீலை வழியாக அந்த பயங்கரமான முகத்தை ஹமீதா பானோவுக்குக் காட்டினார். இருட்டில் அதைப் பார்த்ததும், ஹமீதா பானோ பயந்து போனார், பிரசவ வலி நின்றுபோனது, தூங்கிவிட்டார்" என்று அபுல் ஃபசல் அக்பர்நாமாவில் எழுதியுள்ளார்.
"அசுப நேரத்தில் ஹமீதா பானோ தூங்கிவிட்டாலும், நல்ல நேரம் வரும்போதும் அவர் தூங்கக்கூடாது, பிரசவ வலி வரவேண்டும் என்று யோசித்த மௌலானா சந்த் நல்ல நேரம் நெருங்கியதும், ராணியை உடனடியாக எழுப்ப உத்தரவிட்டார். தூங்கிக் கொண்டிருந்த ராணியைத் தொந்தரவு செய்ய மருத்துவச்சிகள் துணியவில்லை. அப்போது, ஹமீதா பேகம் தானாகவே உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார். அவருக்கு மீண்டும் பிரசவ வலி தொடங்கியது, அக்பர் பிறந்தார்" என்று அக்பர்நாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை அக்பர் பிறந்ததும் அவரது ஜாதகத்தைக் கணித்த மௌலானா சந்த், அக்பரின் ஜாதகத்துடன் ஹுமாயூனுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அது, இந்த சிறுவன் மிக நீண்ட காலம் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வார் என்பதே.

பட மூலாதாரம், Atlantic Publishers
ஜோதிட ஆலோசனையின் பேரில் முடிவெடுத்த ஹூமாயூன்
1542 நவம்பர் 22-ஆம் நாளன்று ஜோதிடர்கள் நிர்ணயித்த நேரத்தில் ஹமீதா பேகம் ஹுமாயூனைச் சந்தித்தார். ஹுமாயூன் முதன்முதலில் அக்பரைப் பார்த்தபோது, அவர் 35 நாட்கள் குழந்தையாக இருந்தார். அக்பரின் வளர்ப்பின் ஒவ்வொரு அடியும் ஜோதிடக் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது.
"நாலாபுறமும் ஆபத்துகள் சூழ்ந்திருந்த சூழ்நிலையில், தனது மகனுக்கு தெய்வீகப் பாதுகாப்பு இருந்ததால் அவருக்கு எதுவும் நடக்காது என்று ஹுமாயூன் முழுமையாக நம்பினார். அவரது நம்பிக்கை பொய்யாகவும் இல்லை. ஹுமாயூன் மீது பகை இருந்தபோதிலும், அவரது சகோதரர் அஸ்காரி, அக்பரை நன்றாகவே கவனித்துக்கொண்டார். காந்தஹார் கோட்டையின் மேல் பகுதியில் வசிக்க அக்பருக்கு ஒரு அறை வழங்கப்பட்டது. அஸ்காரியின் மனைவி சுல்தான் பேகம் 14 மாதக் குழந்தை அக்பர் மீது அன்பைப் பொழிந்தார்" என்று அபுல் ஃபசல் எழுதியுள்ளார்.
1545 மார்ச் 14 அன்று, ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில், ஹுமாயூன் ஒரு நல்ல நேரத்தில் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான தனது நடவடிக்கையை தொடங்கினார். 1545 செப்டம்பர் 3-ஆம் நாள், அஸ்காரி சரணடைந்தார். ஹுமாயூன் முன்பு வாள் முனையில் அஸ்காரி கொண்டுவரப்பட்டார். தனது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் ஹுமாயூன், அஸ்காரியை மன்னித்து உயிருடன் விட்டார்.
முல்லா இஸ்லாமுதீன் இப்ராஹிமின் மேற்பார்வையில் அக்பருக்கு கல்வி பயிற்றுவிக்கத் தொடங்கிய போது அவருக்கு நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் மற்றும் நான்கு நாட்கள். ஜோதிடர்களின் ஆலோசனையைப் பின்பற்றியே ஹுமாயூன் கல்வியைத் தொடங்குவதற்கான நாளாக 1547-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஐத் தேர்ந்தெடுத்தார். இருப்பினும், அக்பருக்கு இந்த நல்ல நேரம் பலனளிக்கவில்லை. ஏனெனில் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அக்பர் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ளவில்லை என்று நம்புகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
தனது மரணம் குறித்து முன்கூட்டியே கணித்த ஹுமாயூன்
ஹுமாயூன் தனது அதிர்ஷ்ட எண் ஏழு என்று நம்பினார். அவரது ஆடைகளின் நிறம் அன்றைய நட்சத்திரத்திற்கு ஏற்றாற்போலவே முடிவு செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் மஞ்சள் நிறம் மற்றும் திங்கட்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளையும் அவர் தேர்ந்தெடுத்து அணிந்தார்.
"அவரது இறுதி காலகட்டத்தில், 15 நாட்களுக்கான அபின் ஹுமாயூனுக்கு கொடுக்கப்பட்டது. தனக்கு ஏழு நாட்களுக்கு மட்டுமே அது தேவை என்று வேலைக்காரர்களிடம் கூறிய அவர், ஏழு நாட்களுக்கானதை மட்டுமே தனியாக எடுத்து வைத்தார். 1556 ஜனவரி 24-ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று அவர் அபினை ரோஸ் வாட்டருடன் குடித்தார்.'இன்று, நம் காலத்தின் மிகப்பெரிய மனிதர் ஒருவர் பெரிய அடியை அனுபவித்துவிட்டு இந்த உலகத்தில் இருந்து சென்றுவிடுவார்' என்று ஹுமாயூன் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்று மதியம் கூறினார்" என எம்.ஜே. அக்பர் விளக்குகிறார்.
அன்று மாலையில், ஹுமாயூன் சில கணிதவியலாளர்களை கோட்டையின் மேல்தளத்திற்கு அழைத்துச் சென்றார். அன்றிரவு வெள்ளி கிரகம் உச்சத்தில் முழு பிரகாசத்துடன் இருக்கும் என்று அவரிடம் கூறப்பட்டிருந்தது. அவர் அதை பார்க்க விரும்பினர். அதைப் பார்த்துவிட்டு ஹுமாயூன் படிக்கட்டுகளில் இறங்கும்போது, தொழுகைக்கான அழைப்பைக் கேட்டு சிரம் பணிந்தார்.

பட மூலாதாரம், Bloomsbury
"கோட்டையின் படிக்கட்டுகள் செங்குத்தானவை, அவற்றில் பதித்திருந்த கற்கள் வழுக்கும் தன்மை கொண்டவை. ஹுமாயூன் தொழுகைக்காக அமர்ந்தபோது, அவரது கால் அவர் அணிந்திருந்த அங்கியில் சிக்கிக் கொண்டதில், தடுமாறியபோது வழுக்கி கீழே விழுந்தார். அவரது நெற்றியில் ஆழமான காயம் ஏற்பட்டது, வலது காதில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. பேரரசரின் காயம் பெரிதானதாக இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த பேரரசரை முறையாக அறிவிப்பதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்காகவே அரசவை உறுப்பினர்கள் வேண்டுமென்றே இப்படி அறிவித்தனர்" என்று அபுல் ஃபசல் எழுதியுள்ளார்.
ஜனவரி 27-ஆம் நாளன்று ஹுமாயூன் தனது இறுதி மூச்சை விட்டார். அவர் கீழே விழுந்த பதினேழு நாட்களுக்குப் பிறகு, 1556 பிப்ரவரி 10 அன்று அவரது மரணச் செய்தி பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதே நாளில், அடுத்த அரசர் என அக்பரின் பெயர் வெளியிடப்பட்டது. இமாம் கஸ்னவி தலைமையிலான ஜோதிடர்கள் அக்பரின் முடிசூட்டு விழாவிற்கான முகூர்த்தத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
அரச ஜோதிடரை நியமித்த அக்பர்
ஜோதிடர்களின் ஆலோசனையைப் பின்பற்றியே ஹெமுவுக்கு எதிராக அக்பர் போரைத் தொடங்கினார். போரின் போது, ஹெமுவின் கண்ணில் பாய்ந்த அம்பு ஒன்று, அவரது தலையின் பின்புறமாக வெளியேறிச் சென்றது. இதைக் கண்ட ஹெமுவின் வீரர்கள் தைரியத்தை இழந்து அக்பரின் படையிடம் சரணடைந்தனர்.
போர்க்களத்திலிருந்து அக்பர் டெல்லிக்குத் திரும்பும் நேரத்தையும் ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்தனர். அக்பர் "ஜோதிக் ராய்" அதாவது ஜோதிடர்களின் மன்னர் என்ற புதிய பதவியை உருவாக்கினார்.
அக்பரின் காலத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான அசாது-உத்-தௌலா ஷிராசி, 'அக்பர் திருமண உறவுகள் மூலம் தனது அதிகாரத்தை வலுப்படுத்துவார்' என்று கணித்தார்.
அக்பரின் அலமாரியில் ஆயிரம் ஆடைகள் இருந்தன, அவற்றில் 120 அணிவதற்காக எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஹுமாயூனைப் போலவே, அக்பரும் அன்றைய நட்சத்திரங்களின் நிறத்திற்கு ஏற்ப உடை அணியும் வழக்கத்தைப் பின்பற்றினார்.
"வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, மற்றும் சூரிய மாதத்தின் முதல் நாளிலும், சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்களிலும் இறைச்சி சாப்பிட மாட்டார்" என்று அபுல் ஃபசல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜஹாங்கிர் மற்றும் அவரது பேத்தி
அக்பரைப் போலவே, அவரது மகன் ஜஹாங்கிரும் ஜோதிடத்தை உறுதியாக நம்பினார். தந்தையைப் போலவே, ஜஹாங்கிருக்கு நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் மற்றும் நான்கு நாட்கள் ஆனபோது, கல்வி பயிற்றுவிக்கத் தொடங்கப்பட்டது.
ஜஹாங்கிரின் முடிசூட்டு விழாவுக்கான தேதி 1606 மார்ச் 20 என்றும் ஜோதிடர்கள் தேர்ந்தெடுத்தனர். அதேபோல, ஜோதிடர்களின் ஆலோசனையைப் பின்பற்றிய ஜஹாங்கிர், தனது மகன் குஸ்ராவின் மகள் பிறந்து மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தையைப் பார்த்தார்.
துசுக்-இ-ஜஹாங்கிரி என்ற தனது சுயசரிதையில் ஜஹாங்கிர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "13-ஆம் தேதி, குஸ்ராவின் மகளை, எனது பேத்தியை வரவழைத்து முதல்முறையாகப் பார்த்தேன். அவளுடைய பிறப்பு அவளுடைய தந்தைக்கு நல்லதாக இருக்காது, ஆனால் தாத்தாவுக்கு அதாவது எனக்கு, நல்லதாக இருக்கும் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். இருந்தாலும் அவளுக்கு மூன்று வயது ஆன பிறகே அவளை முதல் முறையாக சந்திக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி, அவருக்கு மூன்று வயதானபோது தான் முதல் முறையாகப் பார்த்தேன்."
ஜஹாங்கிரின் "ஜோதிக்ராய்" அரச ஜோதிடரின் பெயர் கேசவ் சர்மா. அவர் அரசரின் நான்கு வயது பேரன் ஷா ஷுஜாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதை கணித்தார்.
"17-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, ஷா ஷுஜா ஒரு ஜன்னல் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அன்று ஜன்னல் பூட்டப்படவில்லை, திறந்திருந்தது. விளையாடிக் கொண்டிருந்த இளவரசர் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தபோது நிலை தடுமாறி தலைகீழாக விழுந்து மயக்கமடைந்துவிட்டார். இதைக் கேட்டவுடன், நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கீழே ஓடினேன். குழந்தைக்கு சுயநினைவு வரும் வரை என் மார்பில் அணைத்துப் பிடித்துக் கொண்டேன். குழந்தைக்கு சுயநினைவு திரும்பியவுடன், கடவுளுக்கு நன்றி சொன்னேன்" என்று ஜஹாங்கிர் எழுதியிருக்கிறார்.
ஔரங்கசீப் ஜாதகம்
1592 ஜனவரி 5-ஆம் நாளன்று லாகூர் கோட்டையில் ஷாஜகான் பிறந்தபோது, அவரது தாத்தா அக்பர் குழந்தையைப் பார்க்க வந்தார். குழந்தையின் பெயர் 'க்' என்ற எழுத்தில் தொடங்க வேண்டும் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியதால், அக்பர் அந்த குழந்தைக்கு குர்ரம் என்று பெயரிட்டார்.
ஜஹாங்கிரின் பேரனும் அக்பரின் கொள்ளுப் பேரனுமான ஔரங்கசீப்பும் ஜாதகத்தை மிகவும் நம்பினார். அவரது அரசவை ஜோதிடர்கள் அவரது முடிசூட்டு விழாவிற்கு நேரம் குறித்துக் கொடுத்திருந்தனர்.
"ஜூன் 5, ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்திற்குப் பிறகு மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் கழித்து ஔரங்கசீப்பின் முடிசூட்டு விழாவிற்கு மிகவும் பொருத்தமான நேரம் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தனர்" என்று ஜாதுநாத் சர்க்கார் தனது 'தி ஹிஸ்டரி ஆஃப் அவுரங்கசீப்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார். சரியான நேரம் வந்தவுடன், ஜோதிடர்கள் சமிக்ஞை செய்ததும், திரைக்குப் பின்னால் தயாராக அமர்ந்திருந்த அவுரங்கசீப் வெளியே வந்து பேரரசராக அரியணையில் அமர்ந்தார்."
ஔரங்கசீப் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த பிரெஞ்சு பயணி பிரான்சுவா பெர்னியர், ஔரங்கசீப்பிற்கு ஜோதிட நம்பிக்கை இருந்ததை உறுதிப்படுத்துகிறார்.
"ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில், ஔரங்கசீப் 1664 டிசம்பர் 6 அன்று பிற்பகல் மூன்று மணிக்கு தெற்கு நோக்கிப் புறப்பட்டார். நீண்ட பயணத்திற்கு இதுவே மிகவும் பொருத்தமான நேரம் என அவர் நம்பினார்" என்று பெர்னியர் எழுதினார்.
"தனது ஜோதிடர் ஃபாசில் அகமது எழுதிய தனது ஜாதகக் கணிப்புகள் அனைத்துமே இதுவரை சரியாக இருந்திருப்பதாக, ஒளரங்கசீப் தனது மகனிடம் கூறினார். என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதும் எனது ஜாதகத்தில் எழுதப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 'அஸ் மாஸ்த் ஹமா ஃபசாத்-இ-பாகி', அதாவது நான் இறந்த பிறகு எங்கும் குழப்பம் நிலவும். எனக்குப் பிறகு அறியாமையும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட பேரரசர் வருவார். நான் என்னுடைய திறமையான அமைச்சர் ஆசாத் கானை விட்டுச் செல்வேன், ஆனால் என்னுடைய நான்கு மகன்களும் அவர் தனது வேலையைச் செய்ய விடமாட்டார்கள்" என்று எம்.ஜே. அக்பர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Juggernaut
தவறான ஜோதிட கணிப்புகள்
ஜோதிடர்களின் அனைத்து கணிப்புகளும் சரியானவை என நிரூபிக்கப்படவில்லை, தவறான கணிப்புகள் பெரும்பாலும் மறக்கப்பட்டன அல்லது பதிவு செய்யப்படவில்லை.
அத்தகைய ஒரு தவறான ஜோதிட கணிப்புக்கு உதாரணம் கதை பாபரின் மகள் குல்பதன் பேகத்துடன் தொடர்புடையது.
'ஹுமாயுன் நாமா' புத்தகத்தில், "நட்சத்திரங்கள் பாபருக்கு சாதகமாக இல்லாததால், கான்வா போருக்குச் செல்லாமல் இருப்பது நல்லது என்று ஜோதிடர் முகமது ஷெரீப் கூறினார். இதைக் கேட்டதும், அரச படையில் பதற்றமும் விரக்தியும் பரவியது, ஆனால் பாபர் ஜோதிட கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, தனது திட்டத்தில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை."
தனது படைகளை ஒன்று திரட்டிய பாபர், "ஆக்ராவிலிருந்து காபூலுக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகலாம். இந்தப் போரில் உயிரிழந்தால் தியாகி என்று அழைக்கப்படலாம், உயிர் பிழைத்தால், புகழும் கௌரவமும் அதிகரிக்கும்" என்றார்.
போர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பாபர் மது அருந்துவதை கைவிட்டார். ஜோதிட கணிப்புகளுக்கு மாறாக, பாபர் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற போரில் வெற்றி பெற்று, ராணா சங்காவை தோற்கடித்து, இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியை நிறுவினார். இந்திய வரலாற்றில் துப்பாக்கி குண்டுகளின் பயன்பாடு முக்கிய பங்கைக் கொண்டிருந்த முதல் போர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
போரில் தோல்வி ஏற்படும் என்று கணித்த ஜோதிடர் முகமது ஷெரீப், வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியதாக பாபர் குற்றம் சாட்டினார். அவர் தண்டிக்கப்படவில்லை என்றாலும், அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டு காபூலுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












