முள்ளும் மலரும் போல ரஜினி நடித்த தனித்துவமான 6 திரைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமான கூலி திரையரங்குகளில் நேற்று (ஆகஸ்ட் 14) வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் ரஜினி.
பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா, சிவாஜி போன்ற வணிகரீதியான திரைப்படங்கள் மூலம் 'சூப்பர் ஸ்டார்' என்ற இடத்தை அவர் அடைந்திருந்தாலும், நடிப்புக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் நடித்த திரைப்படங்களும், விமர்சகர்களின் பாராட்டையும் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளன. அத்தகைய 6 திரைப்படங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
முள்ளும் மலரும் (1978)

பட மூலாதாரம், Youtube
"இந்தப் படத்திற்கு ரஜினி வேண்டாம் என தயாரிப்பாளர் கூறினார். ரஜினி இல்லையென்றால் இந்தக் கதையை எடுக்கமுடியாது எனச் சொன்னேன். திரைப்படம் வெற்றிபெற்றதற்கு ரஜினியின் நடிப்பு முக்கியக் காரணம். வேறு எந்த நடிகரும் அந்த 'காளி' கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியாது"
முள்ளும் மலரும் திரைப்படத்தின் இயக்குநர் மகேந்திரன் ஒரு பழைய நேர்காணலில் பகிர்ந்த தகவல் இது.
'முள்ளும் மலரும்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, இயக்குநர்கள் லிங்குசாமி, அல்போன்ஸ் புத்திரன், லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் விஜய் சேதுபதி, மணிகண்டன், என திரைத்துறையைத் சேர்ந்த பலரின் விருப்பமான திரைப்படமாகவும் உள்ளது என்பதை நேர்காணல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
"'காளி' என்ற கதாபாத்திரம் பாசக்கார அண்ணன் கதாபாத்திரம் அல்ல. தான் என்ற அகங்காரம் கொண்ட ஒரு கதாபாத்திரம். அவன் தன்னுடைய 'ஈகோ'-விற்காக எதையும் செய்யக்கூடியவன். இந்தக் கண்ணோட்டத்தில் தான் எனது தந்தை அந்தப் படத்தை எடுத்திருந்தார்" என மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன் ஒருமுறை நேர்காணலில் கூறியிருந்தார்.
ஆறிலிருந்து அறுபது வரை (1979)

பட மூலாதாரம், Youtube
"இந்தப் படம் எடுக்கும்போது எனக்கு ஈடுபாடே இல்லை. மேடை நாடகம் வெறும் சோகக் காட்சிகளாக எடுக்கிறார்கள் என நினைத்து பாதியிலேயே நடிக்கமாட்டேன் என சென்றுவிட்டேன். பிறகு எடுத்தவரை என்னிடம் போட்டுக்காட்டினார் இயக்குநர். அதன் பிறகு படத்தின் அருமை புரிந்தது" என வேட்டையன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியிருப்பார் ரஜினிகாந்த்.
'ரஜினி' என்றதும் 90'ஸ் மற்றும் 2கே தலைமுறைக்கு நினைவுக்கு வரக்கூடிய ஸ்டைல், பன்ச் வசனங்கள், மாஸ் காட்சிகள் என எதுவும் இல்லாத ஒரு திரைப்படம். சிறுவயதில் தந்தையை இழந்த 'சந்தானம்' என்ற கதாபாத்திரம், தந்தை பொறுப்பில் இருந்து தன் உடன்பிறந்தவர்களை வளர்த்து, அவர்களுக்கு என ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதே திரைப்படத்தின் கதை.
சோகக் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் ரஜினியின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணியே காதல் என்பது கற்பனையோ..', 'வாழ்க்கையே வேஷம்…' போன்ற இளையராஜாவின் பாடல்களும் ரசிகர்களால் இன்றும் விரும்பப்படுகின்றன.
வாழ்க்கை முழுவதும் குடும்பத்திற்காக உழைத்து, துரோகங்களை அதற்குப் பரிசாகப் பெற்று, முதிர்ச்சியடையும் ஒரு கதாபாத்திரம் தான் சந்தானம். சினிமாவில் அறிமுகமான நான்கே வருடங்களில் இத்தகைய ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினி. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட 'ஆறிலிருந்து அறுபது வரை', ரஜினியின் தனித்துவமான படங்களில் முக்கிய இடம் பிடிக்கிறது.
ஜானி (1980)

பட மூலாதாரம், K. R. G Productions
இயக்குநர் மகேந்திரன்- ரஜினி கூட்டணியில் வந்த இரண்டாவது திரைப்படம். அதற்கு முன் வெளியான 'காளி' திரைப்படத்தில் கதை- வசனம் மட்டுமே மகேந்திரன். இதில் ரஜினிக்கு, ஜானி என்கிற திருடன், வித்யாசாகர் எனும் சிகை அலங்கார கலைஞன் என இரு வேடங்கள். உருவ ஒற்றுமையால் இரு கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் படத்தின் கதை.
இதேபோன்ற கதை தான் ரஜினியின் போக்கிரி ராஜா, ராஜாதி ராஜா போன்ற திரைப்படங்களிலும் இருக்கும், ஆனால் வித்தியாசம் என்பது மகேந்திரனின் இயக்கம் மற்றும் திரைக்கதை தான்.
அதிலும், ஜானி என்பவன் அர்ச்சனா (ஸ்ரீதேவி) என்ற பிரபல பாடகிக்கு பெரும் ரசிகனாக இருப்பான். அவர்களுக்கு இடையே தொடங்கும் நட்பு காதலாக மாறும் காட்சிகளும், அதற்கு ஏற்ற இளையராஜாவின் இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
"பெரும்பாலான நாயகர்கள் முரட்டுத்தனமானவர்களாக, அழகிய பெண்களால் காரணமேயின்றி விரும்பப்படுபவர்களாக, போலியான அறிவுரைகளை வழங்கக் கூடியவர்களாக இருக்கும்போது, ஜானி அந்தக் கூட்டத்திலிருந்து தனித்துத் தெரிகிறார்" என 'ஜானி' கதாபாத்திரம் சினிமா விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

எங்கேயோ கேட்ட குரல் (1982)
1980களின் தொடக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படங்கள் அவரது சூப்பர்ஸ்டார் பிம்பத்தை வலுப்படுத்த பெரிதும் உதவின. பில்லா, முரட்டுக்காளை, பொல்லாதவன், ரங்கா, தீ, கழுகு, போக்கிரி ராஜா, ராணுவ வீரன் என ரஜினின் மாஸ் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருந்தன.
அதிலும் பில்லா, முரட்டுக்காளை திரைப்படங்களின் வசூல் ரஜினியை தவிர்க்க முடியாத தமிழ் நடிகர்களின் பட்டியலில் இடம்பெறச் செய்தது. ஆனால், மற்றொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது, "ரஜினி ஒரேமாதிரியான ஆக்ஷன் வேடங்களில் நடிக்கிறார், சிகரெட் பிடிப்பது, கராத்தே பாணியிலான சண்டைக் காட்சிகள் அவரது படங்களில் தொடர்ந்து இடம்பெறுகின்றன."
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதே காலகட்டத்தில் ரஜினி நடித்த படம் தான் எங்கேயோ கேட்ட குரல். ரஜினியை அதிகம் இயக்கிய எஸ்.பி.முத்துராமனின் திரைப்படம் இது. 'திருமண உறவில் தோல்வியடைந்த ஆண்' என்ற ஒரு 'முன்னணி ஆக்ஷன் ஹீரோ' நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தை ரஜினி ஏற்று நடித்திருந்தார்.
இதில் ஒரு சுவாரசியமான விஷயம், கமல் நடித்த 'சகலகலா வல்லவன்' திரைப்படமும், எங்கயோ கேட்ட குரல் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது, 1982 ஆகஸ்ட் 14.
முற்றிலும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட இரு திரைப்படங்களையும் இயக்கியது எஸ்.பி.முத்துராமன் தான். 'எங்கேயோ கேட்ட குரல்' 100 நாட்கள் ஓடியது. 'சகலகலா வல்லவன்' வெள்ளிவிழா கொண்டாடியது.
எந்திரன் (2010)

பட மூலாதாரம், Sun Pictures
இந்தப் பட்டியலில் எந்திரன் திரைப்படம் இடம்பெறுவதற்கான முக்கியக் காரணம், ரஜினி ஏற்று நடித்த கதாநாயகன் வசீகரன் கதாபாத்திரம். படத்தின் இரண்டாம் பாதியில், நாயகி சனாவிடம் 'பச்சமுத்து' என்ற கதாபாத்திரம் வம்பிழுக்கும் போது, வசீகரனாக நடித்த ரஜினி சண்டையிடுவார் என நாம் எதிர்பார்ப்போம். ஆனால், பச்சமுத்துவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, நாயகியோடு தப்பி ஓடிவிடுவார் வசீகரன்.
இந்தப் படத்திற்கு முன், ஷங்கர்- ரஜினி கூட்டணியில் வெளியான 'சிவாஜி' அதன் மாஸ் காட்சிகளுக்காக ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக இருக்கும்போது, எந்திரன் படத்தின் வசீகரன் கதாபாத்திரம் 'ரஜினி' பிம்பத்திற்காக என எந்த சமரசமும் செய்யாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல, அப்பாவி 'சிட்டிபாபு' எனும் எந்திரனாகவும், வில்லத்தனம் நிறைந்த 'சிட்டி' எனும் எந்திரனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி. இது கமல்ஹாசன் நடிக்க வேண்டிய ஒரு திரைப்படம் என ஷங்கர் ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். ஆனால், அந்த வில்லன் 'சிட்டி' கதாபாத்திரத்தில் ரஜினி தவிர வேறொரு நடிகரை கற்பனை செய்வது சற்று கடினமே.
வழக்கமாக ரஜினி திரைப்படங்களில் இருக்கும் சமூக கருத்துகளுடன் கூடிய அறிமுகப் பாடல், பன்ச் வசனங்கள், இந்தப் படத்தில் இருக்காது. ஆனால், கதை, திரைக்கதை மற்றும் சுவாரசியமான காட்சிகளுக்காக 'எந்திரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
ப்ளட் ஸ்டோன் (1988)

பட மூலாதாரம், Youtube
1988இல் ரஜினி நடிப்பில் வெளியான 'ப்ளட் ஸ்டோன்' திரைப்படமும் தனித்துவமானது தான், ஆனால் ரஜினியின் கதாபாத்திரத்திற்காக அல்ல. இதில் 'ஷ்யாம் சாபு' என்ற டாக்சி ஓட்டுநராக, வழக்கமான ஸ்டைலுடன் ஆக்ஷன் ஹீரோவாக ரஜினி நடித்திருப்பார். விஷயம் என்னவென்றால், அவர் நடித்த ஒரே ஹாலிவுட் திரைப்படம் இதுதான்.
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறவில்லை, ஆனால் ரஜினியின் நடிப்பும் அவரது ஆங்கில வசன உச்சரிப்புகளும் பாராட்டப்பட்டன.
"முதலில் அவரது ஆங்கிலம் அவ்வளவு நன்றாக இல்லை, நாங்கள் அமெரிக்க [துணை] தூதரகத்தில் இருந்து அவருக்கு ஒரு ஆங்கில ஆசிரியரை நியமித்தோம். ஆறு, ஏழு நாட்களில் ரஜினி நன்றாக கற்றுக்கொண்டார். ஆங்கிலம் பேசும்போது திரையில் தான் எப்படி தெரிவோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை." என்று ப்ளட் ஸ்டோன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ராமநாதன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்தத் திரைப்படங்கள் தவிர, மூன்று முடிச்சு (1976), 16 வயதினிலே (1977), நெற்றிக்கண் (1981) ஆகிய திரைப்படங்களும் ரஜினியின் 'வில்லன்' நடிப்பிற்காகவும், கதைக்காகவும் தனித்துவமானவையே.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












