இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டில் காலிதா ஜியா யாருக்கு நெருக்கமாக இருந்தார்?

பட மூலாதாரம், @narendramodi
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
காலிதா ஜியா கடைசியாக 2012-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போதைய வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
இந்திய அரசாங்கம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அவரைச் சந்தித்தனர்.
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவரை மதிய உணவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தவிர, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜையும் அவர் சந்தித்தார்.
ஹைதராபாத் இல்லத்தில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் அவர் நீண்ட நேரம் உரையாடினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடனான சந்திப்புடன் காலிதா ஜியாவின் பயணம் நிறைவடைந்தது.
அதற்கு முன்னதாக, வங்கதேச பிரதமராக இருந்தபோது 2006-இல் காலிதா ஜியா இந்தியா வந்திருந்தார். அந்தப் பயணம் சாதகமான முடிவுகளைத் தரவில்லை.
இருதரப்பு உறவுகளில் தீர்க்கப்படாத பிரச்னைகளான சமமற்ற வர்த்தகம், அதிக வரி விகிதங்கள், நதிநீர் பங்கீடு போன்றவற்றை அவர் எழுப்பியதால், இந்தியா அவரது வருகையில் ஆர்வம் காட்டவில்லை என்று ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத அமைப்புகள் வங்கதேச நிலப்பரப்பைப் பயன்படுத்துவதை வங்கதேசம் தடுக்கவில்லை என்று இந்தியா கவலை தெரிவித்திருந்தது.
வடகிழக்கு மாநிலங்களுடன் தரைவழி இணைப்புகளை வலுப்படுத்த வங்கதேச நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருந்ததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்தியப் பயணத்திற்குப் பிறகு, காலிதா ஜியா பாகிஸ்தான் சென்றார்.
'பேகம்களின் போர்'

பட மூலாதாரம், Getty Images
காலிதா ஜியா மற்றும் ஷேக் ஹசீனா இடையிலான அரசியல் போர் 'பேகம்களின் போர்' (Battle of the Begums) என்று அழைக்கப்பட்டது.
இந்தப் போருக்கான அடித்தளம் 1975-இல் 'வங்கதேசத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவப் புரட்சியில் படுகொலை செய்யப்பட்ட போது போடப்பட்டது. ஷேக் ஹசீனாவின் தந்தை அவர். இந்தப் படுகொலையில் ஷேக் ஹசீனா மற்றும் சகோதரி ஷேக் ரெஹானாவைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
அந்த நேரத்தில், காலிதா ஜியாவின் கணவர் ஜியாவுர் ரஹ்மான் வங்கதேச ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, வங்கதேச அரசாங்கம் அவரது கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. 1981-இல் மற்றொரு ராணுவப் புரட்சியில் ஜெனரல் ஜியாவும் படுகொலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு, அவரது மனைவி காலிதா ஜியா 'வங்கதேச தேசியவாதக் கட்சி'யின் (BNP) தலைமையை ஏற்று, ஹுசைன் முகமது எர்ஷாத்தின் அரசாங்கத்தை எதிர்த்தார்.
காலிதாவும் ஹசீனாவும் ஒரு காலத்தில் எர்ஷாத்துக்கு எதிராக ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டனர். இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் காலிதாவும் ஹசீனாவும் வங்கதேசத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
காலிதா ஜியா 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் வங்கதேச பிரதமராக இருந்தார்.
2008-இல் ஆட்சிக்கு வந்த பிறகு, பிஎன்பி கட்சியினர் மீது ஹசீனா கடுமையான நடவடிக்கை எடுத்தார். ஊழல் வழக்கில் காலிதா ஜியாவும் கைது செய்யப்பட்டார். இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் என்று பிஎன்பி நம்புகிறது.
காலிதா ஜியாவுடன் உறவை மேம்படுத்த இந்தியா முயற்சி

பட மூலாதாரம், Getty Images
காலிதா ஜியாவின் அரசியல் எதிரியான ஷேக் ஹசீனா 2008-இல் ஆட்சிக்கு வந்தபோது, அவர் செய்த முதல் காரியம் இந்தியாவுக்குச் சென்று, நேசக்கரம் நீட்டியதுதான்.
வங்கதேச மண் இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்குப் பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம் என்று அவர் இந்தியாவுக்கு உறுதி அளித்திருந்தார்.
வங்கதேசத்தில் இருந்த சில தீவிரவாதக் குழுக்களின் தலைவர்களை வங்கதேசம் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தது.
ஆனால் அப்போதும் நதிநீர் பங்கீடு விவகாரம் தீர்க்கப்படவில்லை. ஏனெனில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னை ஆலோசிக்காமல் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
2012 நவம்பர் 4-ஆம் தேதி வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான 'தி டெய்லி ஸ்டார்' பத்திரிகையில் 'Khaleda Zia Tempting History' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், முன்னாள் வங்கதேச தூதர் அஷ்ஃபாகூர் ரஹ்மான் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
"காலிதா ஜியாவை இந்தியா இவ்வளவு அன்புடன் வரவேற்றதன் பின்னணியில் ஒரு நோக்கம் இருந்தது. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கடந்த கால வரலாறு இந்தியா-வங்கதேச உறவுகளைச் சீரமைப்பதில் தடையாக இருக்கக் கூடாது என்பதே அது. பிராந்தியத்தின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பின் பலன்களை வங்கதேசம் இழக்க விரும்பாததே இந்தியா வழங்கிய விருந்தோம்பலை காலிதா ஜியா ஏற்றுக்கொண்டதற்குக் காரணம். சார்க் (SAARC) என்ற கருத்தாக்கத்தை வழங்கியதன் மூலம் பிராந்திய ஒத்துழைப்புக்கான முயற்சியை காலிதா ஜியாவின் கணவரும் பிஎன்பி-யின் நிறுவனத் தலைவருமான ஜியா முன்னெடுத்திருந்தார்."
காலிதாவை ஈர்க்க இந்தியா முயற்சி

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவைப் போலல்லாமல், சீனாவானது வங்கதேசத்தின் அரசியல் கட்சிகளுடன் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் தொடர்பில் உள்ளது.
டாக்கா அரசியல் வட்டாரத்தில் இந்தியா மீது ஒரு புகார் உண்டு. அவாமி லீக் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தியா பெரும்பாலும் அவர்களுடனேயே தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பிஎன்பி ஆட்சியில் இல்லாதபோது, அவர்களுக்கு இந்தியா முக்கியத்துவம் தருவதில்லை.
இந்த விமர்சனத்தைக் கருத்தில் கொண்டே, காலிதா ஜியா ஆட்சியில் இல்லாதிருந்த போது அவர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டதாக வல்லுநர்கள் கருதினர்.
காலிதா அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, தான் திறந்த மனதுடன் இந்தியா வந்திருப்பதாகவும், பழைய கசப்புகளையும் காயங்களையும் குணப்படுத்துவதே தனது பயணத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
இந்தியா வருவதற்கு முன்பு காலிதா ஒரு கட்டுரையில், "நமது இரு நாடுகளிலும் பரஸ்பர சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஊக்குவிக்கும் சக்திகள் இப்போதும் இருக்கின்றன. நமது சிந்தனையை மாற்ற வேண்டியது காலத்தின் தேவை. இந்தியா அவாமி லீக்கிற்கு நெருக்கமானது என்றும், பிஎன்பி இந்தியாவுக்கு எதிரானது என்றும் நிலவும் பிம்பம் மாற வேண்டும்." என்று எழுதியிருந்தார்
இந்தியாவுக்கு எதிரான கருத்துகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பயணம் இந்தியாவின் பார்வையிலும் வெற்றிகரமான ஒன்றாகவே கருதப்பட்டது. ஆனால் வங்கதேசம் திரும்பிய உடனேயே, அவர் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டு இந்தியாவின் புரிதல் எல்லாவற்றையும் மாற்றினார்.
'ஷேக் ஹசீனா இந்தியாவின் பொம்மை' என்று காலிதா கூறியிருந்தார்.
ஆனால், இந்தியாவை இன்னும் அதிருப்தி அடையச் செய்தது என்னவென்றால், இந்தியாவின் பரம எதிரியான ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் காலிதாவுக்கு இருந்த நெருக்கம்.
சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைவதில் முக்கியப் பங்காற்றிய சிக்கிமின் முதல் முதலமைச்சர் காசி லெண்டுப் டோர்ஜியுடன் ஷேக் ஹசீனாவை ஒப்பிட்டு ஜமாத் பகிரங்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
ஆனால் காலிதா ஜியா, "நீங்கள் ஒரு அடிமையாக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு எடுபிடியாக இருக்க விரும்புகிறீர்களா? இந்த அடிமைத்தனம் உங்களைக் காப்பாற்றாது. காசி லெண்டுப் டோர்ஜியின் கதையைப் படியுங்கள்." என்று கூறினார்.
இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சுஜாதா சிங்கை காலிதா சந்தித்த சில நாட்களிலேயே இந்த அறிக்கை வெளியானது. இது இந்தியாவில், ஒரு பிரிவினையைத் தூண்டும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.
இருதரப்பு உறவுகளில் கசப்பு

பட மூலாதாரம், Getty Images
காலிதாவின் இத்தகைய அறிக்கைகள், இந்தியாவில் உள்ள கடும்போக்காளர்களுக்கு 'பிஎன்பி தலைமை இந்தியாவின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை' என்று கூறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன.
2013 மார்ச் மாதம், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வங்கதேசத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, அவருடனான சந்திப்பை கடைசி நிமிடத்தில் காலிதா ஜியா ரத்து செய்தார். இதற்கு டாக்காவின் வீதிகளில் நடந்த போராட்டங்களை அவர் காரணமாகக் கூறினார்.
இந்தப் போராட்டத்தை ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது. காலிதாவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு அதிருப்தி அளித்தது.
பத்திரிகைச் செய்திகளின்படி, தேர்தலுக்கு முன்பாக ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் காலிதா மீண்டும் மீண்டும் எழுப்பினார்.
வங்கதேசத்தில் அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு வரம்புக்குட்பட்டது என்பதே இதற்கு இந்தியத் தலைவர்களின் பதிலாக இருந்தது.
பாகிஸ்தான் மீது காலிதா ஜியா காட்டிய அனுதாபம் இந்தியாவுக்கு ஒருபோதும் விருப்பமானதாக இருக்கவில்லை.
இதற்கு நேர்மாறாக, ஷேக் ஹசீனா எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார். அவரது 15 ஆண்டுகால ஆட்சியில், இந்தியா-வங்கதேச உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்த விதமும் பிஎன்பி கட்சிக்கு உவப்பானதாக இருக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












