அலுவலகத்தில் மலரும் காதல் - வேலையைப் பறிக்குமா?

பட மூலாதாரம், Getty Images/BBC
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான 'அஸ்ட்ரோனமர்', நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொழில்முறை காரணத்திற்காக அல்லாமல், தனிப்பட்ட காரணத்திற்காக வேலையில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.
மாசசூசெட்ஸின் ஃபாக்ஸ்பரோவில் ஜில்லெட் ஸ்டேடியத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கேமரா சுழன்றது. அப்போது, ஒரு ஜோடி பிரம்மாண்டமான திரையில் தெரிந்தது. அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
'அஸ்ட்ரோனமர்', நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரனுடன் இருந்த பெண், அஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்.
பிரபலமான இசை நிகழ்ச்சியை காண வந்தவர்கள் எதிர்பாராத விதமாய் வைரலான பிறகு, அலுவலக காதல், பணியிட உறவுகள் பற்றிய பேச்சு எல்லா இடங்களிலும் தொடங்கிவிட்டது.
உங்கள் பணியிடத்தில் நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
அலுவலகத்தில் அல்லது சக ஊழியர்களுடனான காதல் உறவு காரணமாகப் பல உயரதிகாரிகள் தங்கள் வேலையை இழந்துள்ளனர், இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன .
சக ஊழியருடன் அலுவலக வளாகத்திற்கு வெளியே காதல் உறவு இருந்தாலும், அது அலுவலக உறவு என்றே அழைக்கப்படுகிறது.
பணியிடத்தில் ஊழியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட பணியாளர் கையேடுகள் நடத்தை விதிகளைக் கொண்டுள்ளன.
சக பணியாளர்களுடனான காதல் உறவு மட்டுமல்ல, வேலை பார்க்கும் இடத்தில் விஷயங்கள் சிக்கலாகத் தொடங்கினாலோ அல்லது உறவுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கினாலோ, சில விஷயங்களை எப்போதும் மறந்துவிடக்கூடாது.
நிறுவனத்தின் கொள்கை என்ன சொல்கிறது?
ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கும். நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கொள்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளவும். பல நிறுவனங்கள், காதல் உறவு குறித்த அதிகாரப்பூர்வ கொள்கைகளையும் வைத்துள்ளன.
எனவே, பணியாளர்கள், தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளைச் சரியாக புரிந்து கொள்வது அவசியமாகும். எவையெல்லாம் அனுமதிக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அவை உதவும்.
உதாரணமாக, பல நிறுவனங்களில், மேலாளருக்கும் அவருக்குக் கீழ் பணிபுரியும் ஒருவருக்கும் இடையிலான காதல் உறவு அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் இது பணியிடத்தில் பாரபட்சமாக நடந்துக் கொள்ள வழிவகுக்கும்.
சில நிறுவனங்களில், ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களில் ஒருவர் வேலையை விட்டு விலகிவிட வேண்டும்.
பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கிடையேயான உறவுகளை எதிர்ப்பதில்லை என்றாலும், பணியாளர்கள் அத்தகைய உறவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
பெரும்பாலும், ஒரே குழுவில் இருக்கும் ஜோடிகள், தொழில்முறை உறவில் முதலாளி-பணியாளர் உறவாக இருப்பது என்பது போன்ற சந்தர்ப்பங்களில், நிறுவனம் இருவரையும் வெவ்வேறு குழுவிற்கு மாற்றலாம்.
எனவே ஊழியர்களுக்கு இடையிலான உறவு குறித்த உங்கள் நிறுவனத்தின் கொள்கைகள் என்ன என்பதைச் சரிபார்க்கவும்.

பட மூலாதாரம், Getty Images
'வேலையில் தொழில்முறையாக இருங்கள்'
அலுவலகத்தில் சக பணியாளராக இருப்பவருடன் உறவு கொள்வது என்பது மிகவும் நுட்பமான விஷயம். எனவே, அதை மிக்க உணர்திறனுடன் பார்த்து, தொழில்முறை எல்லைகள் மீறப்படவில்லை என்பதை உறுதி செய்வது அவசியம். பிபிசி வொர்க்லைஃப் இது குறித்து ஒரு கட்டுரையில், முக்கியமான சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியது.
உங்கள் அலுவலகக் குழுவில் உள்ள ஒருவருடன் நெருக்கமான உறவு இருந்தாலும், அதைப் பற்றி வேலைநேரத்தில் பேச வேண்டாம். தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயங்களைப் பற்றி அலுவலகத்தில் விவாதிக்க வேண்டாம்.
உங்கள் அலுவலக உறவுகளை தொழில்முறையாக வைத்திருங்கள். மேலும் இந்த உறவு, தெரிந்தோ தெரியாமலோ, அலுவலகத்தில் உங்கள் வேலையைப் பாதிக்காது அல்லது வேலையில் எந்தவித பாகுபாட்டையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடங்கும் எல்லா உறவும் என்றென்றும் நிலைத்திருக்காது. எனவே, வேலை செய்யும் இடத்தில் டேட்டிங் செய்யும் ஒருவரை பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால் அல்லது அந்த உறவு பலனளிக்கவில்லை என்றால், அதை பொறுமையாக கையாளுங்கள்.
ஏனென்றால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டாலும், அந்த நபர் இன்னும் அதே அலுவலகத்தில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தனிப்பட்ட உணர்வுகளை பணி வாழ்க்கையில் கொண்டு வருவது சரியாக இருக்காது. அதாவது, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயத்தின் எதிரொலியை தொழில்முறை வாழ்க்கையில் வெளிப்படுத்தக்கூடாது.

பணியிடத்தில் உருவாகும் தனிப்பட்ட உறவுகளால் சுரண்டலுக்கு ஆளாகலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
குறிப்பாக இந்த உறவு பணிநிலையில் மேலிடத்தில் இருப்பவருக்கும், அவரின் கீழ் பணிபுரிபவருக்கும் இடையே உருவாகினால், அது தொழில்முறை நடத்தை விதிமுறைகளை மீறி, ஒருவர் மற்றொருவருக்கு அழுத்தம் கொடுக்கவோ, குறிப்பிட்ட பணிகளைச் செய்ய வைக்கவோ பயன்படுத்தப்படலாம்.
எனவே, நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் உறவு உண்மையானதா அல்லது அந்த உறவு உங்களைப் பயன்படுத்த உதவுகிறதா என்பதையும் சரிபார்க்கவும்.
நீங்கள் அத்தகைய உறவில் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தால், நிறுவனத்தின் மனிதவள அதிகாரியிடம் இது குறித்து கலந்தாலோசிக்கலாம்.
பணியிட உறவுகளைச் சிறப்பாக நிர்வகிப்பது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், இன்றைய மற்றும் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கும் முக்கியமானது ஆகும்.
ஏனென்றால், பணியாற்றும் நிறுவனத்தின் விதிகள் மற்றும் கொள்கைகளை மீறினால் அல்லது உங்கள் செயலால் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் உண்டானால் அல்லது நிறுவனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தினால் அது உங்களுடைய வேலையைப் பறிக்கலாம். அதுமட்டுமல்ல, உங்களுக்கு வேறு வேலை கிடைப்பதையும் தடுக்கக்கூடும், எனவே பணியிடத்தில் தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடம் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












