உத்தரப் பிரதேசம்: ஹாத்ரஸ் மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - பலி 122 ஆக உயர்வு - சமீபத்திய தகவல்கள்

ஹாத்ரஸ் மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், EPA

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.

மத நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், EPA

80-ஆயிரம் பேர் வருவார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாகவும், வந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட மிகவும் அதிகம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்தபிறகு, சாமியாரின் கால் பாத மண்ணை எடுக்க நடந்த போட்டியின் காரணமாக நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களால் எழுந்திருக்க முடியவில்லை என்றும், பகலில் பெய்த மழையால் மண் ஈரமாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருந்ததால் நிலைமை மேலும் கடினமாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மக்களவையில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோதி

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி ஹத்ராஸ் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்தார்.

“இந்த விவாதத்திற்கு இடையே எனக்கு ஒரு சோகமான செய்தி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், DHARMENDRA CHAUDHARY

முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதல்வர், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்து, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆக்ரா ஏடிஜி மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.”

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், DHARMENDRA CHAUDHARY

மக்களின் கோபம்

காயமடைந்தவர்கள் சிக்கந்த்ராவ் அவசர சிகிச்சை மையத்துக்கு (Sikandrarao Trauma Centre) கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிபிசி பத்திரிக்கையாளர் தர்மேந்திர சவுத்ரி அந்த சிகிச்சை மையத்திலிருந்து சில வீடியோக்களை அனுப்பியுள்ளார், அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை தெளிவாகக் காண முடிகிறது.

சிகிச்சை மையத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், "இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது, ஆனால் ஒரு மூத்த அதிகாரி கூட இங்கு இல்லை. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை இங்கு நடத்த போலே பாபாவுக்கு அனுமதி வழங்கியது யார். அரசு நிர்வாகம் எங்கே போனது?" என்கிறார்.

காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சை மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

வீடியோவில், சிகிச்சை மையத்திற்கு வெளியே தரையில் பெண்களின் சடலங்கள் கிடப்பதைக் காண முடிகிறது

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், Getty Images

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என்ன சொன்னார்?

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் எக்ஸ் தளத்தில், "ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மனவேதனையை கொடுக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீட்புப் பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்தது யார்?

உத்தப்பிரதேசம் : ஹத்ராஸில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார்

இந்தச் சம்பவம் பற்றி ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில், ​​"மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி சப்-கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி. இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதே நிர்வாகத்தின் முதன்மை நோக்கம். காயமடைந்தவர்களுக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் முடிந்த உதவிகள் செய்து வருகிறோம்," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)