தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்ற அமைச்சர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரா?

தமிழ்நாடு முதலமைச்சர்
படக்குறிப்பு, தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட டி.ஆர்.பி. ராஜா மற்றும் இலாகா மாற்றப்பட்ட அமைச்சர்கள் மனோ தங்கராஜ், பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மு.பெ. சாமிநாதன், தங்கம் தென்னரசு ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தி.மு.க. ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கவிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அமைச்சர்களிடமும் கட்சிக்காரர்களிடமும் மிகுந்த கடுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த நேர்காணலின் எழுத்துவடிவம் கீழே:

"தமிழக அமைச்சரவை மாற்றம் முன்கூடியே நடந்திருக்க வேண்டும். சில அமைச்சர்கள் மீது புகார் இருந்தது. சில அமைச்சர்கள் செயல்படவில்லையெனக் கூறப்பட்டது. உளவுத் துறை மூலமாக இதெல்லாம் முதலமைச்சருக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அப்போதே அமைச்சரவையை மாற்றியிருந்தால் சாதாரணமாக போயிருக்கும். இப்போது பி.டி.ஆரின் ஆடியோ சர்ச்சைக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதால், விவகாரம் வேறு மாதிரி பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அந்தச் சர்ச்சையில் சிக்கிய பி.டி.ஆரை மாற்ற வேண்டுமா இல்லையா என்ற கேள்வியை தி.மு.க. அரசு சரியாகக் கையாளவில்லை.

2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஒரு ஆடியோ சர்ச்சையில் சிக்கினார். காவல்துறை அதிகாரியான உபாத்யாயாவிடம் ஒரு வழக்குக்காக பரிந்து பேசினார் பூங்கோதை.

அந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டு, ஆடியோவாக வெளிவந்த பிறகு, பூங்கோதை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

ஆறேழு மாதங்கள் கழித்து, அந்த ஆடியோ போலியானது என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் வரவழைத்துவிட்டு, மீண்டும் பூங்கோதை அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதுபோன்ற முன்யோசனையுடன் இந்த விவகாரத்தை தற்போதைய அரசு கையாளவில்லை.

குபி
படக்குறிப்பு, குபேந்திரன், மூத்த பத்திரிகையாளர்

பிடிஆர் இலாகா மாற்றம் - எழும் கேள்விகள்

"இந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல" என பி.டி.ஆர். சொல்லிவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலினும் தனது 'உங்களில் ஒருவன்' கேள்வி - பதில் அறிக்கையில், இந்த விவகாரம் பற்றிப் பேசும்போது, "இது போன்ற ஆடியோ சர்ச்சைகள் மட்டரகமானவை; இதற்கெல்லாம் பதில் சொல்லப்போவதில்லை" என்று கூறிவிட்டார். ஆகவே, இந்த விவகாரம் ஓய்ந்துவிட்டது எனக் கருதப்பட்ட நிலையில், பி.டி.ஆர். மாற்றப்பட்டிருக்கிறார். முதலில் அவரைக் காப்பாற்றிவிட்டு, இப்போது மாற்றியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

பி.டி.ஆர். நிதி தொடர்பாக படித்தவர். ஆகவே அவரே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்பாக நிதியமைச்சராக இருந்தவர்கள் யாரும் நிதி தொடர்பான படிப்பையோ, எம்.பி.ஏவோ படித்தவர்கள் அல்ல. சங்கத் தமிழ் பேசிக் கொண்டிருந்தவர்கள்தான் அந்தப் பதவியில் இருந்தார்கள்.

நாவலர் நெடுஞ்செழியன், ஏம்.ஏ. தமிழ் படித்த பேராசிரியர் க. அன்பழகன், மு. கருணாநிதி ஆகியோர் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணி என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக வரலாற்றில் அதிக முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் அவரும் ஒருவர்.

நிதித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகள்தான் பட்ஜெட்டை எழுதுகிறார்கள். அந்தத் துறையின் அமைச்சருக்கு நிதித் துறையில் நிபுணத்துவம் இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், அதுவே எல்லாம் என ஆகிவிடாது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக மருத்துவரான விஜய பாஸ்கர்தான் இருந்தார். அந்தத் துறையில் ஊழல் இல்லாமலோ, பிரச்சனை இல்லாமலோ இருந்ததா? எத்தனை பிரச்னைகள் வெடித்தன? ஆகவே, அந்தத் துறையில் நிபுணத்துவம் கொண்டவர்தான் அமைச்சராக இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளின் துணையுடன் யார் வேண்டுமானாலும் அதை சரியாகச் செய்யலாம்.

ஸ்டாலின்
படக்குறிப்பு, அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட டி.ஆர்.பி. ராஜாவுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சமூக ஊடகங்களில் பெரும் ஆதரவு

பி.டி.ஆரை பொறுத்தவரை, அவருக்கு சாதாரணமான துறை ஒதுக்கப்பட்டிருப்பதால் அவருடைய செயல்பாடுகளும் ஈடுபாடும் குறைந்து விடும் என எதிர்பார்த்தால் அது தவறு.

பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தண்டனைப் பதவியாக, அதிகாரமில்லாத இடத்தில் நியமனம் செய்வார்கள். திறமையான அதிகாரியாக இருந்தால், அவர்கள் அந்த இடத்திலும் தங்களால் முடிந்ததைச் செய்து காட்டுவார்கள். அதேபோலத்தான் அமைச்சர்களும்.

"நான் நிதித் துறை போன்ற பெரிய துறையை நிர்வகித்தேன். அதில்தான் என் முழுத் திறமையும் வெளிப்படும்" எனக் கூறி, பி.டி.ஆர். பட்டும்படாமல் இருந்தால், அது வருத்தமளிக்கும் விஷயம்தான். ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கவிருக்கிறது என்பதால் ஆறு மாதம் கழித்துகூட மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கலாம்.

அவரை முதல்வர் கையாண்டவிதம் தவறு என சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். அவர் மத்திய அரசுக்கு எதிராக எப்படியெல்லாம் பேசினார், செயல்பட்டார் என்பதைச் சுட்டிக்காட்டிவருகிறார்கள். நிதி அமைச்சராக அவருக்கு அந்த வாய்ப்பு இருந்தது, அதனால் செய்தார். வாய்ப்பு கிடைத்தால் எல்லா அமைச்சர்களும் அதைச் செய்வார்கள்.

தங்கம் தென்னரசுவின் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பள்ளிக் கல்வித் துறையைச் சிறப்பாக கையாண்டவர். அவர் அந்தத் துறையை வைத்திருக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரை முருகன், ஒரு சர்ச்சையில் சிக்கியதால் முதலமைச்சர் மு. கருணாநிதி அந்தத் துறையை அவரிடமிருந்து எடுத்துக் கொண்டார். அதனை தங்கம் தென்னரசுவிடம் தர முன்வந்தார்.

ஆனால், தங்கம் தென்னரசு அதனை ஏற்க மறுத்துவிட்டார். இவ்வளவு முக்கியமான துறையைக் கொடுத்தும் ஏற்க மறுத்ததற்காக மு.கருணாநிதியே அவரைப் பாராட்டினார்.

பொதுப் பணித் துறை அமைச்சராக இல்லாதபோதே, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது ஆகியவற்றை தொடர்ந்து மேற்பார்வை செய்தார். ஆகவே, நிதித் துறையைக் கையாள்வது தங்கம் தென்னரசுவுக்கு பெரிய விஷயமாக இருக்காது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

டிஆர்பி ராஜாவுக்கு உள்ள சவால்கள்

டி.ஆர்.பி. ராஜாவைப் பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். இப்போது மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

இருந்தாலும், இவ்வளவு பெரிய துறையை அவர் எப்படி கையாள்வார் என்பது குறித்த கேள்விகள் இருக்கின்றன. குறிப்பாக தொழில் அதிபர்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் வலுவாகவே இருக்கின்றன.

வரும் ஜனவரி மாதம் புதிதாக ஒரு தொழிலாளர் மாநாட்டிற்கு தொழில்துறை தயாராகி வருகிறது. 60 சதவீத பணிகளை தங்கம் தென்னரசுவே முடித்துவிட்டார்.

ஆனாலும் டி.ஆர்.பி. ராஜா எப்படி இந்தத் துறையைக் கையாள்வார் என்ற பயம் தொழிலதிபர்களிடம் இருக்கிறது. அவர் புதியவர் என்பதால் அல்ல. அவருடைய தந்தையும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் தலையீடு இந்தத் துறையில் இருக்குமோ என்ற அச்சம்தான் அது. சமூக வலைதளங்களிலும் இதைப் பற்றி பலர் எழுதி வருகிறார்கள். டி.ஆர். பாலுவின் தலையீடு இல்லாமல் இருந்தால் அவருக்கும் அந்தத் துறை கைவந்துவிடும்.

நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைப் பொறுத்தவரை அதற்குப் பல காரணங்கள். ஆவினைப் பொறுத்தவரை அது மக்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட துறை. அதில் சின்ன தவறு நேர்ந்தாலும் அமைச்சருக்கும் ஆட்சிக்கும் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

ஆறேழு மாதங்களுக்கு முன்பிருந்தே, ஆவின் பால் கெட்டுப்போனதாகவும், பால் பாக்கெட் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதற்குப் பிறகு, அந்தத் துறையில் இருந்த அதிகாரிகள் இந்த அமைச்சரோடு பணியாற்றுவதில் சிக்கலை எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஏற்கெனவே பால் கொள்முதல் குறைவாக இருக்கும் நிலையில் இனிப்புகள், ஐஸ் க்ரீம் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஏழை மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் சரியான விலையில் பால் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆவின் செயல்படுகிறது. அதற்காகத்தான் பால் விலையும் குறைக்கப்பட்டது. ஆனால், தனியார் பால் பாக்கெட்டுகள்தான் அதிகம் விற்பனையாயின. காரணம், ஆவின் பால் கிடைக்கவில்லை.

நாசர் பதவி நீக்கம் ஏன்?

மேலும், திருவள்ளூர் மாவட்ட அரசியலில் இவருடைய தலையீடும் இவருடைய குடும்பத்தினரின் தலையீடும் மிக மோசமாக இருந்தது. முதல்வர் அங்கு பொதுக் கூட்டத்திற்குச் சென்றால், அவர் பெயரைச் சொல்லி கடைகளில்கூட வசூல் வேட்டை நடத்தப்பட்டது. இது அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியது.

அடுத்ததாக, ஆவடி மாநகராட்சியின் மேயராக தன் மகனைக் கொண்டுவர மிகவும் முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போதுள்ள மேயர், மேயருக்கான கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்த விடாமல், அமைச்சரின் மகன் கார் நிறுத்தப்படும். இதெல்லாம் உளவுத் துறை முதல்வரிடம் தெரியப்படுத்திய பிறகு அவரை அழைத்து முதல்வர் கடுமையாக எச்சரித்தார். அதற்குப் பிறகும் அவர் மாறவில்லை என்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நிகழ்வில் கட்சிக்காரர் மீதே கல்லை எடுத்து வீசினார். அது தி.மு.க மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த குளறுபடிகளை மனதில் வைத்துத்தான் அவர் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜும் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாற்றப்படவில்லை. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றாலும் அமைச்சராக அவரது செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட அரசியலில் அவரது செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் இருந்தன.

ஆனால், அவரை நீக்கினால் அவருக்குப் பதிலாக யாரைப் போடுவது என்ற கேள்வி எழுந்தது. சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவையோ முன்னாள் அமைச்சரும் மானாமதுரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசியையோ புதிய அமைச்சராக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது. அவரைப் பொறுத்தவரை, இப்போதைக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

மனோ தங்கராஜைப் பொறுத்தவரை, ஐ.டி. துறையிலிருந்து பால் வளத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பது ஒரு பதவி உயர்வைப் போலத்தான். ஏனென்றால் ஆவின் மக்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட துறை. ஒரு நாள் பிரச்னை என்றாலும் பெரிய விவகாரமாகிவிடும்.

தி.மு.க ஆட்சி வந்தால், அ.தி.மு.க. ஆட்சியின் போது பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிதான் முதலில் சிறைக்குச் செல்வார் என எல்லோரும் பேசினார்கள். முதலமைச்சரே பேசினார். அந்த அளவுக்கு அவர் மீது புகார்கள் இருந்தன.

ஆனால், அதைவிட மோசமாக இருந்தார் நாசர். இப்போது பெயரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மனோ தங்கராஜுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவரைப் பொறுத்தவரை இது ஒரு உயர்வுதான்.

இன்னும் நிறைய அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், எதிர்க்கட்சிகள் கண்கொத்திப் பாம்பாக காத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் அ.தி.மு.க. இருக்கிறது. மற்றொரு பக்கம் பா.ஜ.கவின் அண்ணாமலை எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுகிறார். இது போதாதென ஆளுநர் ஆர்.என். ரவியும் இருக்கிறார். இந்த ஆட்சியைக் குறித்து பல விமர்சனங்களை அவர் முன்வைக்கிறார். அதில் பல விஷயங்கள் பொய். அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் தி.மு.க. ஆட்சி மீது பாயக் காத்திருக்கின்றன. இப்படியான சூழலில் தி.மு.க. எப்படிச் செயல்பட வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் செய்தி ஒன்று வெளியானது. அதில், கோவளம் மழைநீர் வடிநிலத் திட்டம் குறித்து அதில் பேசப்பட்டிருந்தது. 740 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் அது.

அது தற்போது அங்குள்ள எம்.எல்.ஏவாலும் மண்டல குழுத் தலைவர்களாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் புகார் கூறுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த ஊழலைக் குறைப்பதாகக் கூறித்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதிகரித்திருப்பதாக பலர் வெளிப்படையாக பேட்டியளிக்கிறார்கள். இந்த சூழலில், அமைச்சரவை பெரிய அளவில் மாற்றியிருக்க வேண்டும்.

"திராவிட மாடல் முழக்கம் மட்டும் கைகொடுக்காது"

2024ல் மோடி எதிர்ப்பும் திராவிட மாடல் கோஷமும் மட்டுமே கைகொடுக்காது. 40 எம்.பி. இடங்களையும் பிடிக்க வேண்டுமென்றால் இது போன்ற ஊழலையோ, சர்ச்சையையோ அனுமதிக்கக்கூடாது. 20 - 30 வருடங்கள் அமைச்சர்களாக இருந்தவர்களை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமிக்க வேண்டும். அமைச்சரவை மாற்றம் இதைவிட சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு ஆட்சி நூறு சதவீதம் தூய்மையானதாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பார்கள். ஆனால், முதல்வர்தான் அவர்களை சரியாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.

கவுன்சிலர்களில் இருந்து அமைச்சர்கள் வரை அனைவரும் அவரவர் சந்தோஷத்தைத்தான் பார்க்கிறார்கள். ஆகவே முதலமைச்சர் கருணையே பார்க்கக்கூடாது. நாகரிகமாகவும் மென்மையாகவும் நடந்துகொள்வதால் நல்ல பெயர் கிடைக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கும்போதுதான் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வரும்.

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை 40 சதவீத 'கமிஷன் ஆட்சி' என முத்திரை குத்திவிட்டார்கள். அதுபோல இங்கேயும் தி.மு.க. ஆட்சியை முத்திரை குத்திவிட முதல்வர் அனுமதிக்கக்கூடாது.

தி.மு.கவை வீழ்த்த பா.ஜ.க என்ன வேண்டுமானாலும் செய்யும். அதற்கு நல்ல உதாரணம், ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த சமீபத்திய பேட்டி. அவர் ஒருவர்போதும் இந்த ஆட்சியைக் கலகலக்கச் செய்வதற்கு. ஆகவே, முதல்வர் மிகக் கடுமையாக அடுத்த மூன்று ஆண்டுகள் நடந்தால்தான் பெயரைக் காப்பாற்ற முடியும்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆரம்பத்திலிருந்து அவர் புலம்பிக் கொண்டிருக்கிறாரே தவிர, நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்கும்வரை இவர் பேச்சைக் கேட்டார்கள். அதற்குப் பிறகு கேட்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய இடங்களைக் கொடுக்கச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டாலும் கட்சிக்காரர்கள் கேட்பதில்லை.

"உங்கள் முன் வெட்கித் தலைகுனிகிறேன்" என்றார். அப்போதும் கூட்டணிக் கட்சியினருக்கு கொடுக்க வேண்டிய இடங்களை கட்சிக்காரர்கள் தரவில்லை.

துரைமுருகனைப் போன்ற ஒரு தி.மு.க. விசுவாசியைப் பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். அழைத்தும் அ.தி.மு.கவுக்குச் செல்லாதவர். ஆனால், பிரச்னை ஏற்பட்டபோது, அவரையே பொதுப் பணித் துறையிலிருந்து நீக்கி, வெறும் சட்ட அமைச்சராக மட்டும் வைத்திருந்தார் மு. கருணாநிதி.

மு.க. ஸ்டாலினுக்கு இது தெரியாத விஷயமல்ல. ஆகவே, அவர் மென்மையாக நடந்து கொண்டால் அவரது கட்சியினர் சிக்கலான சூழலை உருவாக்குவார்கள். அது அ.தி.மு.க, பா,ஜ.க மற்றும் ஆளுநருக்கு சாதகமாகப் போய்விடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: