"யானையும் டிராகனும் ஒன்றிணைய வேண்டும்" : மோதி, ஜின்பிங் சந்திப்பில் பேசியது என்ன?

சீன அதிபருடன் பிரதமர் மோதி சந்திப்பு

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, பிரதமர் மோதி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்

சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டிற்கு முன், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, "இந்தியா, சீனா இரண்டும் மூலோபாய சுயாட்சியை (strategic autonomy) விரும்புகின்றன, மேலும் இரு நாடுகளின் உறவுகளை மூன்றாவது நாட்டின் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது," என பிரதமர் மோதி கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான உரையாடலின்போது, பிரதமர் மோதி எல்லையில் அமைதியைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பிரதமர் மோதி ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவுக்குச் சென்றுள்ளார். 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இது பிரதமர் மோதியின் முதல் சீனப் பயணமாகும்.

அதே நேரம் "சீனாவும், இந்தியாவும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளாகவும், தென் புவிக்கோளத்தின் அங்கமாகவும் உள்ளன, இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பதும், நல்ல அண்டை நாடுகளாக இருப்பதும், டிராகனும், யானையும் இணைந்திருப்பதும் மிகவும் முக்கியம்," என ஷி ஜின்பிங் கூறினார்.

இந்தியா கூறியது என்ன?

மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையே நடந்த சந்திப்பு

பட மூலாதாரம், MEAIndia @x

படக்குறிப்பு, மோதி மற்றும் ஷி ஜின்பிங் இடையே நடந்த இருதரப்பு சந்திப்பின் புகைப்படத்தை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024 அக்டோபரில் கசானில் மோதியும் ஷி ஜின்பிங்கும் சந்தித்த பிறகு, இரு நாடுகளின் உறவுகளில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

"வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல, பங்காளிகளாக உள்ளன, இரு நாடுகளுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அவை பிணக்குகளாக மாறக் கூடாது," எந அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது அறிக்கையில் "பன்முக உலகத்தையும் ஒரு பன்முக ஆசியாவையும்" வலியுறுத்தியது, மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான நிலையான உறவுகளும் ஒத்துழைப்பும் மக்களிடையே பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன்கள் மற்றும் பரஸ்பர உணர்வுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று கூறியது.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையை குறிப்பிட்டு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு எல்லையில் அமைதி முக்கியமானது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு படைகள் திரும்பப் பெறப்பட்டது மற்றும் அதன்பிறகு எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவுவது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, பொருத்தமான மற்றும் பரஸ்பரம் ஏற்கத்தக்க தீர்வுக்கு உறுதியளித்தனர்.

கைலாஸ் மானசரோவர் யாத்திரை, சுற்றுலா விசாக்கள், விசா வசதிகள் மற்றும் நேரடி விமானங்கள் மூலம் மக்களிடையே உறவுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோதி, இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார் என ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும், விமான சேவை எப்போது தொடங்கப்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. கோவிட் தொற்றுநோய் காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன.

சீனாவுடனான வளர்ந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை

வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வர்த்தக விவகாரங்கள் குறித்து, "இரு தலைவர்களும் சர்வதேச வர்த்தகத்தை நிலைப்படுத்துவதில் தங்கள் பொருளாதாரங்களின் பங்கை வலியுறுத்தினர். மேலும், இருதரப்பு வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிப்பதுடன், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்."

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆவணத்தின்படி, இந்தியா-சீனா வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.

2024-25 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள், இந்தியா சீனாவுக்கு 14.25 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதிகள் செய்ததாகவும், அதே காலகட்டத்தில் சீனாவிலிருந்து 113.46 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதி செய்ததாகவும் காட்டுகின்றன. அதாவது, வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 99.21 பில்லியன் டாலர்களாக இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, இந்தியாவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதி படிப்படியாகக் குறைந்து, சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. 2020-21இல் வர்த்தகப் பற்றாக்குறை 44.02 பில்லியன் டாலர்களாக இருந்தது, ஆனால் 2024-25இல் இது 99.21 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஷி ஜின்பிங்குடனான சந்திப்பின்போது, பிரதமர் மோதி, "இந்தியா, சீனா இரண்டும் மூலோபாய சுயாட்சியை விரும்புகின்றன, அவற்றின் உறவுகளை மூன்றாவது நாட்டின் பார்வையில் இருந்து பார்க்கக் கூடாது" என்று கூறினார்.

மேலும், மோதி, ஷி ஜின்பிங்கை 2026இல் இந்தியா நடத்தவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு அழைத்தார். இதற்கு பதிலளித்த ஷி ஜின்பிங்,பிரிக்ஸ்க்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

ஷி ஜின்பிங் என்ன கூறினார்?

சீனாவின் அரசு நடத்தும் செய்தி இணையதளமான குளோபல் டைம்ஸின் படி, எஸ்சிஓவில் ஷி ஜின்பிங், சீனாவும் இந்தியாவும் போட்டியாளர்கள் அல்ல, மாறாக பங்காளிகள் என்றும், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தல் அல்ல, மாறாக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்றும் கூறினார்.

இந்தியாவுடனான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிப்பிட்டு, இரு நாடுகளும் மூலோபாய மற்றும் நீண்டகால பார்வையில் இருதரப்பு உறவுகளை அணுக வேண்டும் என்று ஷி ஜின்பிங் கூறினார். "இந்த பரந்த திசையில் இரு நாடுகளும் உறுதியாக இருக்கும் வரை, இருதரப்பு உறவுகளை நிலையாகவும் நீண்டகால வளர்ச்சியுடனும் பேண முடியும்" என்று அவர் கூறினார்.

"உலகம் மாற்றத்தை நோக்கி நகர்கிறது. சீனாவும் இந்தியாவும் உலகின் மிகப் பழமையான நாகரிகங்கள். நாம் இருவரும் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் மற்றும் உலக தெற்கின் பகுதியாக உள்ளோம். நல்ல நண்பர்களாக, நல்ல அண்டை நாடாக,, டிராகன் மற்றும் யானையின் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது," என்று அவர் கூறினார்.

இரு நாடுகளும் மூலோபாய உரையாடலை வலுப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்தவும், பரிமாற்றங்களை அதிகரிக்கவும், இரு தரப்பிற்கும் பயனளிக்கும் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது அறிக்கையில் எல்லைப் பிரச்னை குறித்தும் குறிப்பிடப்பட்டது, ஆனால் அதைப் பற்றி விரிவாக எதுவும் கூறப்படவில்லை. "ஆசியாவின் இந்த இரு அண்டை நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், மேலும் எல்லைப் பிரச்னை இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணத்தையும் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது," என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகள்

பிரதமர் மோதியும் ஷி ஜின்பிங்கும் சந்தித்தது குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இந்தச் சந்திப்பை சில பின்னணிகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைத்தள பக்கத்தில் எழுதினார்.

2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாக 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், இதையும் மீறி, பிரதமர் மோதி கோழைத்தனமாக சீனா குற்றமற்றது என சான்று வழங்கினார், என அவர் எழுதினார்.

"லடாக் எல்லையில் பழைய நிலை முழுமையாக மீட்டெடுக்கப்படவேண்டும் என்று ராணுவத் தளபதி கோரியிருந்தார், ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. ஆயினும், மோதி அரசு சீனாவுடன் நல்லிணக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது மறைமுகமாக அந்தப் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியுள்ளது," என அவர் மேலும் கேள்வி எழுப்பினார்:

இந்த ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடந்த ராணுவ மோதலை குறிப்பிட்டு, "ஆபரேஷன் சிந்தூரின் போது, சீனாவின் பாகிஸ்தானுடனான கூட்டணி குறித்து ராணுவத் துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் சிங் தெளிவாகவும் வலுவாகவும் பேசினார். ஆனால், இதற்கு கடுமையாக பதிலளிப்பதற்கு பதிலாக, மோதி அரசு இதை அமைதியாக ஏற்றுக்கொண்டது," என்று கூறினார்.

யார்லுங் சாங்போவில் கட்டப்படும் நீர் மின்சார அணை குறித்து குறிப்பிட்ட அவர், இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். "இந்த விவகாரத்தில் மோதி அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு, திபெத்திய பகுதியில் உலகின் மிகப்பெரிய நீர் மின்சார அணைக்கு சீன அதிகாரிகள் அடிக்கல் நாட்டினர். இந்த ஆறு, திபெத்திய பீடபூமியில் உருவாகி இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பாய்கிறது.

இந்த அணை இந்தியாவிலும் வங்கதேசத்திலும் மில்லியன் கணக்கான மக்களையும், உள்ளூர் திபெத்திய மக்களையும், கீழ்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கலாம்.

சீனாவிலிருந்து பொருட்கள் இந்தியாவில் குப்பை போல் குவிக்கப்படும் விவகாரத்தையும் ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார். "சீனாவிலிருந்து கட்டுப்பாடற்ற இறக்குமதி, இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், மற்ற நாடுகளைப் போல கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, இந்தியா சீன இறக்குமதியாளர்களுக்கு கிட்டத்தட்ட முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது," என அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"சீனாவிலிருந்து வரும் பொருட்களைச் சார்ந்திருப்பது பெருகி வருவதால், தொடர்ந்து குறைந்து வரும் இந்தியாவின் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளின் வணிகத்தின் மீது, இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேலையின்மை அதிகரித்து வருகிறது," என அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.

அவர் இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையையும் குறிப்பிட்டு, சீனா இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வருவதாகவும், பாஜக அரசு அமைதியாக இருப்பதாகவும் கூறினார்.

"ஆட்சி தொடங்கியபோது நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு இருந்ததோ, இப்போதும் அதே அளவு உள்ளதா, அல்லது சீனாவின் ஆக்கிரமிப்பால் அது குறைந்துவிட்டதா? என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்," என அவர் கேலியான தொனியில் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு