லண்டன் பேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளம் - தாரை, தப்பட்டை இசை ஒலிக்க மேடையேறிய நெசவாளர்

- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
''அந்த மேடையில் கையில் கைத்தறி இராட்டை மாதிரியுடன் என்னை நடக்க வைத்து, வார்த்தைகளின்றி சைகைகளால் இவர்தான் அவற்றை நெய்தவர் என்று என்னை அறிமுகம் செய்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். கரவொலி எழுப்பினர். அது எனக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற கைத்தறி நெசவாளர்களுக்கான ஓர் அங்கீகாரமாக இருந்தது!''
லண்டனில் செப்டெம்பர் 21-ஆம் தேதி டிவான்ஷைர் சதுக்கத்தில் (Devonshire Square) நடந்த ஃபேஷன் ஷோவில் ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜாவுடன், கைகளில் இரும்பு கைத்தறி இராட்டை மாதிரி வடிவத்துடன் வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரத்துடன் நடந்து வந்த 69 வயது கைத்தறி நெசவாளர் சக்திவேல் பெரியசாமியின் வார்த்தைகள் இவை.
சக்திவேல் பெரியசாமி, ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள பெரியகோளபாளையத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர். அவருடைய கைத்தறித் துணியில் தயாரித்த கைப்பைகளுடன் வலம் வந்த மாடல் அழகிகளின் அணிவகுப்பு, அவர் தயாரித்த பவானி ஜமுக்காளத்தை வைத்து அதே மேடையில் நடந்த நடன நிகழ்ச்சி அனைத்தும் காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பலராலும் கொண்டாடப்படுகின்றன.
பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு, பாரம்பரியம் மற்றும் தனித்துவத்தை போற்றும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வகையிலும் அந்த மேடையில் அவரை வலம் வரச் செய்ததாகச் சொல்கிறார், இதற்கு ஏற்பாடு செய்த ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா.
'இந்த அங்கீகாரத்தால் பவானி ஜமுக்காளத்திற்கு சிறியதொரு வர்த்தக வாய்ப்பு கிடைத்தாலும் அதுவே பெருமகிழ்ச்சியளிக்கும்' என்கிறார் சக்திவேல்.

டெல்லி செங்கோட்டைக்குள் பவானி ஜமுக்காளத்தை நெய்தவர்
இந்த கெளரவத்தைப் பெற்றுள்ள சக்திவேல் பெரியசாமி, பவானி அருகேயுள்ள பெரியகோளப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தனக்கென ஒரே ஒரு கைத்தறியை மட்டுமே வைத்துள்ள சக்திவேல், மற்றொரு தறியை நிறுவினாலும் அதில் பணி செய்வதற்கு ஆள் யாருமில்லை என்று கருதி, ஒரே ஒரு தறியில் பவானி ஜமுக்காளத்தை நெய்து வருகிறார். பிபிசி தமிழிடம் தன்னைப் பற்றி விரிவாக விளக்கினார் சக்திவேல்.
''எங்களுடையது நெசவாளர் குடும்பம். வறுமையால் நான் ஆறாம் வகுப்பையே கடக்கவில்லை. ரேஷனில் போடும் செஞ்சோளத்தை வாங்கவே முடியாத நிலையில், 13–14 வயதிலேயே தறியில் உட்கார்ந்துவிட்டேன். சிறு வயதிலேயே பட்டுத்துணியில் பார்டர் போடக் கற்றுக்கொண்டேன். முதல் முதலாக ஜேசீஸ் அமைப்புக்கு, அவர்கள் தந்த சின்னத்தை ஜமுக்காளத்தில் நெய்து கொடுத்தேன். அதன்பின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் படத்தை அப்படியே நெய்தது பலருடைய கவனத்திற்கும் போனது. ஆனால் கூலிக்குப் போகுமிடத்தில் இதைச் செய்ய முடியாது என்று தனியாக ஒரு தறி போட்டு, இதுபோன்று புதுப்புது டிசைன்களைப் போட்டு, ஜமுக்காளங்களைத் தயாரித்தேன்!'' என்கிறார்.

இவருடைய வடிவமைப்புகளைப் பற்றி அறிந்த கோவை குமரகுரு பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் பூங்கொடி, ராமகிருஷ்ணன் ஆகியோர் இவரை நேரில் வந்து பார்த்து, இவருடைய ஜமுக்காளம், வடிவமைப்புகள் குறித்த தரவுகளைச் சேகரித்து டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். அதனால் மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் துறை சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடந்த கைவினைக் கண்காட்சியில் ஒரு மாதம் தங்கி இவற்றைச் செய்து காண்பிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.
''அது கோவிட் பெருந்தொற்றுக்காலம். தொற்றுக்கு பயந்து வடிவமைப்பாளர்கள் வரவில்லை. அதனால் நானே வடிவமைத்து ஜமுக்காளத்தைத் தயாரித்துக் கொடுத்தேன். அதை இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் ஆடை வடிவமைப்புத் துறையினர் பார்த்துப் பாராட்டினர். டெல்லியில் இரு முறை இதைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்பை வழங்கினர்.'' என்று விளக்கினார் கைத்தறி நெசவாளர் சக்திவேல்.

அதற்குப் பின்பே தன்னை ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா தேடி வந்ததாகக் கூறுகிறார் சக்திவேல் பெரியசாமி. தனக்கு துணிகளில் சாயம் போடத்தெரியாது என்று கூறியதால், அவரே துணிகளை சாயமிட்டு வாங்கி வந்து, அவற்றில் டிசைன்களைக் கொடுத்து நெய்வதற்கு தந்ததாகத் தெரிவித்த சக்திவேல், அப்படித்தான் தனக்கு லண்டன் ஃபேஷன் ஷோவில் பங்கேற்க அழைப்பு வந்ததாக விளக்கினார்.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த வினோ சுப்ரஜா, தற்போது துபாயில் வசிக்கிறார். தன்னை நீடித்த தன்மைக்குரிய ஆடை வடிவமைப்பாளர் (sustainable fashion designer) என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வினோ சுப்ரஜா, ஒரு சிறிய ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். துபாய் மற்றும் சிங்கப்பூரில் தங்கள் நிறுவனத்துக்கான சந்தை இருப்பதாகக் கூறும் வினோ, இதற்கான துணி வகைகளை சென்னிமலை நெசவாளர்களிடமிருந்தே கொள்முதல் செய்கிறார்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய வினோ சுப்ரஜா, ''கடந்த 2024 ஆம் ஆண்டில் சென்னிமலைக்கு வந்திருந்தபோது, பவானி ஜமுக்காளம் செய்யும் கைத்தறி நெசவை நேரில் காண விரும்பி அங்கே சென்றேன். அங்கே தறியில் இருந்தவர்களில் எல்லோருமே 60 வயதுக்கு மேற்பட்டோராக இருந்தனர். பெரும்பாலான தறிகள் உடைந்திருந்தன. அவற்றைப் பயன்படுத்தியே வெகுநாளாகியிருந்தது தெரியவந்தது.'' என்றார்.
''கைத்தறி நெசவாளர்களிடம் பேசிய போது, இதில் வருமானம் பெரிதாக இல்லாததால் வீட்டிலுள்ள இளைஞர்கள் வேறு வேலைக்குச் செல்கின்றனர் என்று கூறினர். அதனால் 5 ஆயிரம் கைத்தறிகள் இருந்த ஊரில் இப்போது ஐந்தில் ஒரு பங்குதான் தறிகள் இருந்ததை அறியமுடிந்தது. பவானி ஜமுக்காளத்தில் பந்தி விரித்துச் சாப்பிட்டு, வீட்டு விசேஷங்களில் கூட்டமாக விளையாடி, படுத்துத் துாங்கிய அனுபவம் எனக்கு இருப்பதால் அதன் நிலையை அறிந்து எனக்குப் பெரும் வருத்தமாக இருந்தது.'' என்றார் வினோ.
பவானி ஜமுக்காளத்திலிருந்து விதவிதமாய் கைப்பை தயாரிப்பு!

கடந்த 2021–2022 ஆம் ஆண்டிலிருந்து லண்டன் ஃபேஷன் ஷோவுக்காக, ஆக்ஸ்போர்டு பேஷன் ஸ்டூடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ள வினோ சுப்ரஜா, ''இப்போது பெரும்பாலும் மேஜை, நாற்காலிகளையே பயன்படுத்துவதால் தரையில் யாரும் அதிகம் அமர்வதில்லை. இதனால், பவானி ஜமுக்காளத்தின் தேவை குறைந்துவிட்டது. இதனால், ஜமுக்காளத்தின் வண்ணம், கோடு வடிவமைப்பு, துணியின் தன்மை ஆகியவற்றின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அதில் கைப்பைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.'' என்கிறார் வினோ சுப்ரஜா. அதை அரங்கேற்றம் செய்யும் மேடையாகவே லண்டன் ஃபேஷன் ஷோ இருந்ததாகச் சொல்கிறார் அவர்.
''கடந்த ஜனவரியில் லண்டன் ஆக்ஸ்போர்டு ஃபேஷன் ஸ்டூடியோவிடமிருந்து அழைப்பு வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டில் தெருக்கூத்தை கருவாகக் கொண்டு ஷோவை வடிவமைத்ததுபோல இந்த முறையும் புதுமையான கருவை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது பவானி ஜமுக்காளத்தைப் பற்றியும் சக்திவேல் பற்றியும் அவர்களிடம் கூறினேன்" என்கிறார் வினோ.
லண்டன் ஃபேஷன் ஷோ நிகழ்வைப் பற்றி விளக்கிய அவர், ''சக்திவேல் அய்யாவை மேடையேற்றும் போது, இந்தியாவை ஏழைத்தொழிலாளர்கள் உள்ள நாடாக யாரும் பார்த்துவிடக்கூடாது, அவரை ஒரு கலைஞராகவே அங்கீகரிக்க வேண்டுமென்பதிலும் நாங்கள் கவனமாக இருந்தோம். அதேநேரத்தில் ஃபேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளத்தை அறிமுகம் செய்ய நினைத்து, மாடல் பெண்களை அந்த கைப்பைகளை கொண்டு வரச் செய்தேன். சில ஆடைகளையும் ஜமுக்காள டிசைனில் வடிவமைத்தேன்.'' என்கிறார்.
பவானி ஜமுக்காளத்துடன் ஒன்றரை நிமிட நடனம்!

சென்னையைச் சேர்ந்த நாட்டிய நாடகக் கலைஞர் வான்மதி ஜெகன், கையில் பவானி ஜமுக்காளத்தை வைத்தபடி ஆடும் ஒன்றரை நிமிட நடனமும் நிகழ்த்தப்பட்டது. இதற்கான நடன அசைவுகளை தெருக்கூத்து பழனி முருகன் கற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் கையில் பவானி ஜமுக்காளத்துடன் நடனமாடியது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நாட்டிய நாடகக் கலைஞர் வான்மதி ஜெகன், ''பவானி ஜமுக்காளத்தை அதில் அறிமுகம் செய்யவேண்டுமென்று திட்டமிட்டே, அதற்குரிய இசை தயார் செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப நடன அசைவுகளை வடிவமைப்பது சவாலாயிருந்தது. முற்றிலும் நம்மூர் நாட்டுப்புற நடனமாகவும் இருக்கக் கூடாது. அதேநேரத்தில் அதில் சில அசைவுகள் இடம் பெற வேண்டுமென்று கருதி, தேவராட்டம், தப்பாட்டம் என எல்லாவற்றிலும் கலந்து சில நடன அசைவுகளை பழனி முருகன் அண்ணா சொல்லிக்கொடுத்தார். நான் பவானி சென்று கைத்தறியின் அசைவுகளை பார்த்துவந்து, அதன் அசைவிலிருந்து சிலவற்றை பயன்படுத்திக் கொண்டேன்" என்றார் வான்மதி.
இவரது நடனத்துக்குப் பிறகு இறுதியில் நெசவாளர் சக்திவேல் கையில் ராட்டை மாதிரி வடிவத்துடன் வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து மேடையில் வலம் வந்தார். வழக்கமாக ஃபேஷன் ஷோக்களில் இசைக்கப்படும் மேற்கத்திய ராப் இசைக்குப் பதிலாக இவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இசைக்கோர்வை அவர் நடந்து வரும் போது இசைக்கப்பட்டது. அவரைப் பற்றி வேறு எந்த குறிப்புகளும் திரையில் இடம் பெறவில்லை. ஒலிபெருக்கியிலும் விளக்கம் தரப்படவில்லை. ஆனால் சக்திவேலுடன் வந்த ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா, அந்த ஜமுக்காளத்தை நெய்தவர் இவர்தான் என்பதைக் குறிக்கும் விதமாக தனது சைகைகளால் விளக்கியுள்ளார்.

''வழக்கமாக ஃபேஷன் ஷோவில் பயன்படுத்தும் இசை வடிவம் தவிர்த்து, தாரை தப்பட்டை இசையைக் கேட்டதும் எல்லோரும் முதலில் 'வாவ்' என்றனர். அங்கே வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களையே அதிகம் பயன்படுத்துவர். ஆனால் இந்த ஷோவில் பவானி ஜமுக்காளத்தில் வருவது போன்று பல வண்ணங்களில் ஆடை, கைப்பைகள் இடம் பெற்றதைப் பார்த்து மீண்டும் 'வாவ்' என்றனர். நாங்கள் வெளியேறியபின் மேலும் அற்புதம் நிகழ்ந்தது.'' என்றார் வினோ சுப்ரஜா.
அதைப் பற்றி விளக்கிய அவர், ''நிகழ்வு முடிந்தபின் என்னைச் சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நீங்களிருவரும் மேடையிலிருந்து வந்ததும் கைதட்டுவார்கள், விசில் அடிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் நீங்கள் ஒரு நிமிடம் அரங்கம் அமைதியானது, எல்லோரும் எழுந்தனர். எல்லோர் முகத்திலும் புன்னகை, சிலர் கண்களில் கண்ணீர். அதன்பின் பலத்த கரவொலி. அரங்கமே நெகிழ்ந்த தருணம் அது என்றனர். அந்த வகையில் கைத்தறி நெசவாளருக்கு அங்கீகாரம் கிடைத்ததில் திருப்தி.'' என்றார்.

அந்த நிகழ்வை நினைவு கூர்ந்த கைத்தறி நெசவாளர் சக்திவேல், இதனால் எங்களுடைய பவானி ஜமுக்காளத்துக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கும் ஒரு வர்த்தக வாய்ப்பு கிடைத்தால் பெருமகிழ்ச்சி என்றார். பவானி சுற்றுவட்டாரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கைத்தறிகள் இப்போது ஆயிரத்துக்கும் குறைவாகி விட்டதாக வருந்திய அவர், இதைக் காப்பாற்றுவதற்கு ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கம், நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கிறார்.
பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு
பவானி ஜமுக்காளத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்க தீவிர முயற்சி செய்தவர்களில் ஒருவர் தவமணி. சிந்தாமணி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர், பவானி ஜமுக்காளத்தின் பெயர்க்காரணத்தையும், சிறப்பையும் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
''பவானி ஜமுக்காளம் என்பது, நுாறாண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த பாரம்பரியத் தயாரிப்பு ஆகும். கோரைப்பாய் உற்பத்தியிலிருந்து இது தோன்றியது. இதற்குப் பயன்படும் கைத்தறியை குழித்தறி என்பார்கள். இதிலுள்ள மூங்கில் பண்ணை, படி, பலகைக்குண்டு எல்லாமே மரத்தால் செய்யப்பட்டவை.
இதில் வலது இடதுமாக நாடா மூலமாக நுாலைக் கோர்த்து, இரு புறமும் இருவர் இருந்து நெய்வர். தனியாகவும் சிலர் நெய்வார்கள்.'' என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், ''விசைத்தறி போலன்றி, இந்த நுாலைத் தள்ளும்போது 'வி' வடிவில் சென்று அந்த நுால் 'அடாப்ட்' ஆகும். இதுபோல கெட்டியான நுால் கோர்வையை வேறு எந்த துணியிலும் பார்க்க முடியாது. இதில் நெசவாளரின் கை, கால், கண், உடல் என எல்லா பாகங்களும் இணைந்து உழைக்க வேண்டியிருக்கும்.'' என்றார்.
''லண்டன் ஃபேஷன் ஷோவில் சக்திவேல் அய்யாவை கெளரவித்ததிலும் பவானி ஜமுக்காளத்தை அறிமுகம் செய்ததிலும் பெருமகிழ்ச்சி. அதனால் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் வர்த்தக பலன்களை இனிமேல்தான் அறிய முடியும்.'' என்றும் தவமணி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












