பாகிஸ்தானுடன் இணைய திட்டமிட்ட ஜோத்பூர் சமஸ்தானம்: மவுண்ட் பேட்டன் தடுத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வகார் முஸ்தஃபா
- பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
பிரிட்டிஷ் இந்தியாவில் பாம்பே மற்றும் கராச்சிக்கு இடையே இயங்கிய சிந்து ரயில் (Sindh Mail) செல்லும் பாதை நெடுகிலும் அமைந்திருந்த ஜோத்பூர் சமஸ்தானம், வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
1947ம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்ததையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிந்தன. அப்போது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் அதன் கால்பகுதி மக்கள்தொகையை மொத்தமாக கொண்டிருந்த 600 சமஸ்தானங்களுள் ஜோத்பூரும் ஒன்று. இந்த சமஸ்தானங்கள், சுதந்திரமாக நீடிக்கவோ அல்லது ஏதேனும் ஒரு நாட்டுடன் இணையவோ வேண்டும்.
வைசிராய் லூயிஸ் மவுண்ட்பேட்டனின் அழுத்தம் இல்லாதிருந்தால் ஜோத்பூர் இன்னும் சில அருகிலுள்ள சமஸ்தானங்களுடன் சேர்ந்து பாகிஸ்தானுடன் இணைந்திருக்கும் என வரலாற்று ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.
அப்படி நடந்திருந்தால், சிந்து ரயில் பாதையில் முன்பு இணைக்கப்பட்டிருந்த ஜோத்பூர் மற்றும் பாகிஸ்தானின் ஹைதராபாத் மற்றும் கராச்சி நகரங்களுக்கு இடையேயான முக்கியமான இணைப்பு ஒருபோதும் துண்டிக்கப்பட்டிருக்காது.
ஜோத்பூர் மற்றும் அதன் அருகிலுள்ள மாகாணங்களின் ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பால் ஜோத்பூர் மற்றும் ஹைதராபாத் இடையே அமைக்கப்பட்ட 650 கி.மீ. ரயில் பாதை, பல ஆண்டுகளாக பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனை மக்கள், "ராஜா ஜி ரயில்" (அரசரின் ரயில்) என அழைத்ததாக பத்திரிகையாளர் ஏ.பி. அஹ்ரிசர் குறிப்பிடுகிறார்.
""ராஜஸ்தான் தோராயமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியை சந்திக்கும்," என எழுதியுள்ள அஹ்ரிசர், "பசியால் பாதிக்கப்பட்ட மக்கள் தானியங்களை தேடி சிந்து பகுதியில் உள்ள செழிப்பான பகுதிகளுக்கு இந்த ரயில் மூலம் பயணித்தனர். அவர்களுள் சிலர் அங்கேயே நிரந்தரமாக தங்கினர்; மற்றவர்கள் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளுடன் வீடு திரும்பினர்." என குறிப்பிடுகிறார்.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தகவலின்படி, ஜோத்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் 1818ம் ஆண்டு வந்தது, இதையடுத்து, பிரிட்டிஷ் நிர்வாக அமைப்பில் (Rajputana Agency) இருந்த மிகப்பெரிய மாகாணமாக மாறியது. இன்றைய மத்திய மற்றும் தென்மேற்கு ராஜஸ்தானின் பெரும் பகுதியை அது உள்ளடக்கியிருந்தது. 1949ம் ஆண்டு ஜோத்பூர் ராஜஸ்தான் மாநிலத்துடன் அதிகாரபூர்வமாக இணைந்தது.
துப்பாக்கி குண்டு முழக்கங்களின் எண்ணிக்கையின் (21 குண்டுகளே அதிகபட்ச மதிப்பாக கருதப்பட்டது) அடிப்படையில் சமஸ்தானத்தின் படிநிலை அளவிடப்பட்டது. ஜோத்பூர் மகாராஜாவுக்கு அதன்படி அதிகளவாக 15 துப்பாக்கி குண்டு மரியாதை அளிக்கப்பட்டது.
Dethroned: Patel, Menon and the Integration of Princely India எனும் தன் புத்தகத்தில் ஜான் ஸுப்ஸீட்ஸ்கி இவ்வாறு எழுதுகிறார்:
"முகமது அலி ஜின்னா தன்னுடைய கரகுல் தொப்பிக்கு (karakul cap) அரிதான அலங்கார நகையை தேடியிருந்தால், அது ஜோத்பூராகத்தான் இருந்திருக்கும்."
Understanding Kashmir and Kashmiris எனும் தன் புத்தகத்தில் கிறிஸ்டோஃபர் ஸ்னெடென், முஸ்லிம் பெரும்பான்மை மாநிலங்கள் பாகிஸ்தானுடன் இணைய ஜின்னா ஆதரித்ததாகவும், இந்தியாவின் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நிலப்பரப்பை குறைக்கும் பொருட்டு, முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களை கொண்ட பரோடா, இந்தோர் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைய தயங்கினால் சுதந்திரமான பகுதிகளாக நீடிக்கவும் வலியுறுத்தியதாக குறிப்பிடுகிறார்.
"இந்து பெரும்பான்மை மாநிலங்களை பாகிஸ்தானுடன் இணையவும் ஜின்னா வலியுறுத்தினார், தொகை குறிப்பிடாமல் அவர்களுக்கு வெற்று காசோலையையும் வழங்கினார். அதில் முக்கியமானது ஜோத்பூர், ஏனெனில் ஜோத்பூர் பாகிஸ்தானுக்கு அருகில் உள்ளது, அதனுடன் எளிதாக இணையக்கூடிய சாத்தியம் கொண்ட பகுதியாகவும் இருந்தது."
இந்தியாவுடன் ஜோத்பூர் இணைவது உறுதியற்ற வாய்ப்பாக இருந்தது: ஜோத்பூரின் இந்து ஆட்சியாளர் சுதந்திரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டார், அதுவும் இந்திய அரசுடன் சில சலுகைகளை பெற்ற பின்னரே ஒத்துக்கொண்டதாகவும் மவுண்ட்பேட்டனிடம் இருந்து கடும் அழுத்தத்தை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
The Great Divide எனும் தன் புத்தகத்தில் வரலாற்று அறிஞர் ஹெச்.வி.ஹாட்சன், "பாகிஸ்தானுக்கு சில குறிப்பிட்ட மாகாணங்களை இணைப்பதற்கு ஜின்னா எந்தளவுக்கு தயாராக இருந்தார் என்பதற்கும் அதைத் தடுக்க மவுண்ட்பேட்டன் எவ்வளவு கடுமையாக வேலை பார்த்தார் என்பதற்கும் ஜோத்பூர் முக்கிய உதாரணம்" என்கிறார்.
பாகிஸ்தானின் எல்லையில் அமைந்திருக்கும் ராஜ்புத் மாகாணமான ஜோத்பூரில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர், மேலும் இந்து மகாராஜா ஆட்சி செய்தார். மகாராஜா ஹன்வந்த் சிங், ஜின்னா மற்றும் போபாலின் நவாப் போன்ற மற்ற முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார், மேலும் பாகிஸ்தானுடன் இணைய கிட்டத்தட்ட சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது.
1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக்கு ஜோத்பூர் ஏற்கெனவே பிரதிநிதிகளை அனுப்பியதாகவும், அதன் அப்போதைய ஆட்சியாளர் மகாராஜா உமைத் சிங், தங்கள் சமஸ்தானத்தின் எதிர்காலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க உறுதியாக இருந்ததாகவும் ஸுப்ஸீட்ஸ்கி எழுதுகிறார்.ஆனால், இரண்டு மாதங்கள் கழித்து அவருடைய திடீர் இறப்பால், அவரின் இளைய மகன் ஹன்வந்த் சிங் ஆட்சிக்கு வந்தார்.
தன் விருப்பப்படி செயல்படும், அனுபவம் இல்லாத ஹன்வந்த் சிங் விமான போக்குவரத்து, பிரிட்டிஷ் மணப்பெண்கள், பால்ரூம் நடனம், மேஜிக் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தார், பிற்காலத்தில் அவர் லண்டனின் பிரபலமான மேஜிக் சர்க்கிளின் உறுப்பினராக ஆனார்.
அரியணை ஏறிய பிறகு அவர் ஜோத்பூர் அரசியல் நிர்ணய சபையின் பகுதியாகவே இருக்கும் என அறிவித்தார். ஆனால், ஹன்வந்த் சிங்கின் முடிசூட்டு விழாவில் போபாலின் நவாப் ஹமிதுல்லா கான், இந்த இணைப்பு "மரண தண்டனையாக" இருக்கும் என கூறியது, இளம் மகாராஜாவை ஜின்னாவை நோக்கி இழுக்க விரும்புகிறார் என்ற ஊகத்தைக் கிளப்பியது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஜோத்பூரின் திவான் கடாம்பி வெங்கடாச்சார், மவுண்ட்பேட்டனிடம், ஹமிதுல்லா மற்றும் முஸ்லிம் லீக்கின் சட்ட ஆலோசகர் முகமது ஸஃபருல்லா கான் ஆகியோர் ஜின்னாவுடன் சந்தித்த கூட்டத்திற்கு பின், ஹன்வந்த் சிங் ஜோத்பூர் சுதந்திரமான பகுதியாக நீடிக்குமாறு அறிவிக்க முடிவு செய்ததாக கூறினார்.
ஜின்னா அசாதாரணமான சலுகைகளை வழங்க முன்வந்தார்:
- கராச்சி துறைமுகத்தை பயன்படுத்துவதற்கான சுதந்திரம்
- ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமை
- ஜோத்பூர் - ஹைதராபாத் (சிந்து) ரயில்வே மீதான கட்டுப்பாடு
- பசியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தானிய விநியோகம்

பட மூலாதாரம், Getty Images
ஜோத்பூரில் 22% பேர் மட்டுமே முஸ்லிமாக இருந்தாலும், ஜின்னாவின் இத்தகைய சலுகைகள் வரலாற்று பூர்வமாக தர்க்க ரீதியாக சரியானதாக இருந்தது. பண்டைய ஜோத்பூர், கிழக்கு சிந்துவில் உமர்கோட்டிலிருந்து சிந்து நதியில் ஹைதராபாத் வரையிலான பகுதிகளை கட்டுப்படுத்தியிருந்தது.
இந்த பகுதிகள், 1843ம் ஆண்டில் ஜெனரல் சார்லஸ் நேப்பியர் தலைமையில் சிந்து மாகாணத்தை இணைத்தபோது இழக்கப்பட்டன, இதையடுத்து அவற்றுக்கு இழப்பீடாக வெறும் ரூ. 10,000 ஆண்டு வாடகை ஜோத்பூருக்கு அளிக்கப்பட்டது, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு இத்தொகை மாறாமல் இருந்தது.
வரலாற்று அறிஞர் கே.எம். பணிக்கர், "பாகிஸ்தானின் ஆதரவுடன் ஒட்டுமொத்த ராஜஸ்தானையும் ஆளலாம் என்ற கனவுகள் மகாராஜாவை ஆட்கொண்டன" என எழுதியுள்ளார்.
நவாப் ஹமிதுல்லாவுடன் ஒருகாலத்தில் நட்புடன் இருந்த மவுண்ட்பேட்டன், 1947ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சேர்த்து பொதுவான கவர்னர்-ஜெனரலை (மவுண்ட்பேட்டன்) ஒத்துக்கொள்ளுமாறு ஜின்னாவை சமரசம் செய்ய வற்புறுத்தினார். ஆனால், ஹன்வந்த் சிங் ஜின்னாவை சந்தித்ததை அறிந்த மவுண்ட்பேட்டன் கோபம் கொண்டார்.
எனினும் ஹமிதுல்லாவின் எதிர்ப்பு தார்மீக ரீதியிலானது.
தன் கவலைகளை மவுண்ட்பேட்டன் நிராகரித்த போது, காங்கிரஸ் லஞ்சம், கட்டாயப்படுத்துதல் மற்றும் மாகாணங்களை மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக ஹமிதுல்லா குற்றம் சாட்டினார், மேலும் அத்தகைய சூழ்ச்சிகளை பிரிட்டிஷ் ஆதரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "வெற்று காசோலையில் நாங்கள் கையெழுத்திட்டு காங்கிரஸ் விரும்பிய ஒன்றை நிரப்பிக்கொள்ளும் வகையில் அவர்களிடம் வழங்க வேண்டுமா?" என கேள்வி எழுப்பினார்.
ஸுப்ஸீட்ஸ்கியின் கூற்றுப்படி, நவாப் ஹமிதுல்லா, உதய்பூரின் மகாராஜா போபால் சிங்கை பாகிஸ்தான் பக்கம் சாய்க்க முயன்றார், அதற்கு ஹன்வந்த் சிங் உதவ முன்வந்தார். இந்த யோசனை வியூக ரீதியிலானது: உதய்பூர் மேற்கில் ஜோத்பூரை மத்திய இந்திய பகுதிகளான இந்தோர் மற்றும் போபாலுடன் இணைத்தது.
உதய்பூர் ஒப்புக்கொண்டிருந்தால், ஹமிதுல்லாவின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில், இந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தான் ஒரு தொடர்ச்சியான வழித்தடத்தை அடைந்திருக்கலாம்.
ஆனால், ஜோத்பூரின் திவான் இந்தியாவின் உள்துறை செயலாளர் ஹெச்.வி.ஆர். ஐயங்காருக்கு ரகசியமாக தானே ஒரு குறிப்பை அனுப்பினார். அதில், ஜின்னா மகாராஜாவிடம் இதுகுறித்து பேசியிருப்பதாக எச்சரித்திருந்தார். ஐயங்கார் அந்த குறிப்பை சர்தார் படேலிடம் எடுத்துச் சென்றார், படேல், "ஜோத்பூர், உதய்பூர், இந்தோர் மற்றும் போபால் ஓர் கூட்டணியை உருவாக்கினால் அது ஆபத்தானது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஸுப்ஸீட்ஸ்கி எழுதுகையில், கடைசி சந்திப்பில் ஹன்வந்த் சிங்கிடம் ஜின்னா தான் கையெழுத்திட்ட வெற்று தாளை வழங்கி, "உங்களின் நிபந்தனைகள் அனைத்தையும் நீங்களே இதில் எழுதுங்கள்." என்று கூறினார்" என எழுதியுள்ளார்.
அதற்கு மகாராஜா ஒப்புக்கொண்டிருப்பார், ஆனால் அவருடைய உதவியாளர் கர்னல் கேஸ்ரி சிங் தலையிட்டு, அவருடைய தாயாருடன் முதலில் ஆலோசிக்குமாறு வலியுறுத்தினார். ஜோத்பூரில் அவருடைய ஆன்மீக குருவான தாயார், முஸ்லிம் பெரும்பான்மை நாட்டுடன் இணைவது இந்து ராஜ்ஜியத்திற்கு ஆபத்தானதாக இருக்கும் என எச்சரித்தார்.
ஜின்னாவுடனான கடைசி சந்திப்பில், ஜெய்சல்மரின் இளவரசர் ஒரு நிபந்தனையின் பேரில் தான் பாகிஸ்தானுடன் இணைவதாக கூறியதாக ஹாட்சன் கூறுகிறார், அதாவது இந்து-முஸ்லிம் மோதல் நேரும் பட்சத்தில், ஜின்னா இந்துக்களின் பக்கம் இருக்க வேண்டும் என அவர் கூறினார். இந்த கருத்து ஜோத்பூர் மகாராஜாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹன்வந்த் சிங் உடனடியாக டெல்லியில் மவுண்ட்பேட்டனை சந்தித்தார். ஹாட்சனின் கூற்றுப்படி, பாகிஸ்தானுடன் இணைவதற்கான சட்டபூர்வ உரிமை இருக்கும்போதிலும், அதனால் ஏற்படப் போகும் மோசமான விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும், அந்த முடிவால் வகுப்புவாத கலவரம் தூண்டப்பட்டு, பிரிவினையின் நோக்கம் மீறப்படும் என்றும் ஹன்வந்த் சிங்கிடம் வைசிராய் கூறியுள்ளார். அவருடைய தந்தை தன்னுடைய நண்பர் என்றும், அவர் இந்தியாவை தேர்ந்தெடுத்திருப்பார் என்றும் மவுண்ட்பேட்டன் ஹன்வந்த் சிங்கிடம் தெரிவித்தார்.
அதுவும் தோல்வியடைந்தபோது, ஜின்னா அளித்த வாக்குறுதிகளை இந்தியாவும் நிறைவேற்றும் என மகாராஜாவுக்கு வி.பி. மேனன் உறுதியளித்தார், அதாவது, ஆயுதங்களை இறக்குமதி செய்தல், தானிய விநியோகம், மற்றும் துறைமுகம் வரையிலான ரயில்வே பாதை உள்ளிட்வை:
"நீங்கள் எளிதில் பாகிஸ்தானுடன் இணைய முடியாது. உங்களின் பிரபுக்கள், மக்கள், ஏன் உங்களின் தாயே கூட அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்." என உறுதியுடன் எச்சரித்தார்.
இந்தியாவின் உள்துறை அமைச்சர் படேல் இறுதியில், "நீங்கள் விரும்பினால் நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம், ஆனால், உங்கள் மாகாணத்தில் பதற்றம் வெடித்தால், இந்திய அரசு உங்களுக்கு உதவிக்கு வராது." என்றார்.
அந்த சமயத்தில், மகாராஜாவுக்கு வியர்த்து, "இப்போதே நான் மவுண்ட்பேட்டனிடம் சென்று, இணைப்பு ஒப்பந்தத்தில் (Instrument of Accession) கையெழுத்திடுகிறேன்!" என கூறியதாக கூறப்படுகிறது.
மேனனின் கூற்றுப்படி, அப்போது மகாராஜா நாடகத்தன்மையுடன் "ரிவால்வரை" எடுத்து, "உங்களின் ஆணைகளை என்னால் ஏற்க முடியாது," என கூறியுள்ளார். அதற்கு மேனன் நிதானமாக, "குழந்தைத்தனமான கோமாளித்தனங்களை நிறுத்துங்கள்." என கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பின்னர் இதுகுறித்த பதிவுகளில் அதுவொரு நகைச்சுவையான சம்பவம் என்றும் "ரிவால்வர்" என்பது தங்க முலாம் பூசப்பட்ட பேனா என பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் குறித்து மவுண்ட்பேட்டன் சிரித்துள்ளார். பின்னர், அதே பேனாவை ஹன்வந்த் சிங் மவுண்ட்பேட்டனுக்கு பரிசளித்தார், அந்த பேனாவை பின்னர் மவுண்ட்பேட்டன் மேஜிக் சர்க்கிள் அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். 2013ம் ஆண்டு, பிரிட்டனில் உள்ள ராயல் ஆயுதக்களஞ்சியங்கள் அருங்காட்சியகத்தில் அந்த பேனா 13,000 பவுண்டுக்கு விலை போனது.
இறுதியில் ஜோத்பூர் இந்தியாவுடன் இணைந்தாலும், உதய்பூரின் மகாராஜாவும் பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்பது புது டெல்லிக்கு ஆசுவாசத்தை அளித்தது.
ஜோத்பூர் பாகிஸ்தானுடன் இணைந்தால், உதய்பூர் போன்ற மற்ற ராஜ்புத் மாநிலங்களும் பின்தொடர்ந்து, ஒரு கூட்டணியை உருவாக்கும் என, இந்தியா அச்சப்பட்டதாக ஹாட்சன் குறிப்பிடுகிறார். ஆனால், ஜோத்பூர், ஜெய்சல்மர் மற்றும் பிகனேர் ஆகியவை இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இதை அடைவதில் பிகனேர் ஆட்சியாளர் முக்கிய பங்கு வகித்தார்.
மவுண்ட்பேட்டனுக்கு இது தனிப்பட்ட வெற்றி. அனைத்துவித அச்சங்களுக்கும் முரணாக, பெரும்பான்மையான சமஸ்தானங்கள் ஒன்று இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்தன, பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதியில் நீடித்த குழப்பம், இதனால் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டது.
மவுண்ட்பேட்டனே இளவரசர்களிடம், "இது என்னுடைய திட்டம்," என கூறினார், மேலும் இதில் சவால்கள் எழுந்தபோது தானே அதில் தலையிட்டார்.
வரலாற்று அறிஞர் யாகூர் கான் பங்காஷ் கூற்றுப்படி, மகாராஜாவை மவுண்ட்பேட்டன் அழைத்து, இந்தியாவுடன் இணைய வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையவோ, அல்லது சுதந்திரமாக நீடிக்கவோ ஜோத்பூருக்கு உரிமை இருந்தபோதிலும், வைசிராய் மற்றும் கவர்னர்-ஜெனரலாக மவுண்ட்பேட்டன் இந்தியா மீது எவ்வளவு பாரபட்சமாக நடந்துள்ளார் என்பதை இது காட்டுகிறது."
A Princely Affair: The Accession and Integration of the Princely States of Pakistan 1947–1955 எனும் புத்தகத்தின் ஆசிரியரான பங்காஷ், பிபிசியிடம் கூறுகையில், பாகிஸ்தானுடன் இணைந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் அல்லது அதற்கான நிபந்தனைகள் குறித்து ஜின்னாவிடம் இந்தோர் மகாராஜா விசாரித்திருக்கிறார், இது பாகிஸ்தானுடன் இணைவதற்கான யோசனையின் மூலம் ஈர்க்கப்பட்ட ஒரே இந்து-பெரும்பான்மை சமஸ்தானம் ஜோத்பூர் மட்டுமல்ல என்பதற்கான உதாரணம் என குறிப்பிடுகிறார்.
அவர் கூறுகையில், "பாகிஸ்தானுடன் இணைய ஜோத்பூர் ஒத்துக்கொண்டிருந்தால், இன்னும் பல ராஜ்புத் மாகாணங்கள் அதை பின்தொடர்ந்திருக்கும். ஜோத்பூரின் மையப்பகுதியை கருத்தில்கொண்டால், அது ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஆல்வார் ஆகியவற்றின் மீது அழுத்தத்தை அதிகரித்திருக்கும், மேலும் இந்தோரும் இணைந்திருக்கும். இதன்மூலம், தெற்காசியாவில் பாகிஸ்தானின் விரிவாக்கம் மிகவும் அதிகரித்திருக்கும்." என்றார்.
ஆனால், அப்படியல்ல என்கிறார் பங்காஷ்.
பங்காஷ் குறிப்பிடுகையில், "அவ்வாறு நடந்திருந்தால், இந்தியா கோபத்துடன் எதிர்வினையாற்றியிருக்கும். இவை இந்துக்கள் ஆட்சி செய்யும் இந்து பெரும்பான்மை மாகாணங்கள். அவை இணைந்தால் 'முஸ்லிம் நாடு' என்ற பாகிஸ்தானின் அடையாளத்திற்கு கடுமையாக சவால் விடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஜோத்பூர் மற்றும் இந்தோர் மீதான மவுண்ட்பேட்டனின் அழுத்தம், பாகிஸ்தானின் கதையில் அத்தகைய அத்தியாயம் எப்போதும் தொடங்காமல் இருப்பதை உறுதி செய்தது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












