"மிகப்பெரிய அச்சுறுத்தல்" - ரஷ்யா, சீனாவைக் குறிப்பிட்டு இவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், gov.uk / Reuters
- எழுதியவர், கோர்டன் கொரேரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
"பனிப்போருக்குப் பின் நாம் இதுவரை கண்டிராத வகையில், சர்வதேச உலக ஒழுங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
யுக்ரேனில் புதினின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் ரஷ்யாவையும் எதிர்ப்பதில் இரு நாடுகளும் ஒன்று பட்டுள்ளன என்று பிரிட்டனின் உளவு சேவை அமைப்பான எம்ஐ6 மற்றும் அமெரிக்காவின் முக்கிய உளவு முகமையான சிஐஏ-வின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
பைனான்சியல் டைம்ஸில் முதல் முறையாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவர்கள் கூட்டாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர். அதில் சர் ரிச்சர்ட் மூர் மற்றும் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோர் யுக்ரேனில் போர் வருவதை கண்டறிந்து "சர்வதேச சமூகத்தை எச்சரிக்க முடிந்தது" என்றும் யுக்ரேனுக்கு உதவும் வகையில் ரகசியங்களை வகைப்படுத்தி வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் ரஷ்யாவின் பொறுப்பற்ற, அழிவை ஏற்படுத்தும் ராணுவ நடவடிக்கைகளை தடுக்கவும், இஸ்ரேல்-காஸா போரின் தீவிரத்தை குறைக்கவும், மீண்டும் எழுச்சி பெறும் ஐஎஸ் (IS) இயக்கத்தை முறியடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அபாயத்தை எதிர்த்து போராட ஒன்றிணைந்த இருநாடுகள்
"சர்வதேச உலக ஒழுங்கு என்பது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்து, உயரும் வாழ்க்கைத் தரம், வாய்ப்புகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்கிய சீரான அமைப்பாகும். இது ஒப்பீட்டளவில் பணி போருக்குப் பிறகு நாம் கண்டிராத வகையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை."
"இந்த அதிகரித்து வரும் அபாயத்தை எதிர்த்துப் போராடுவது" தான் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறப்பு உறவின் அடித்தளம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கும் யுக்ரேன் மோதல், இரு நாடுகளும் சமாளிக்க வேண்டிய "முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல்களில்" ஒன்று.
மேற்கூறியவாறு, பைனான்சியல் டைம்ஸில் op-ed பக்கத்தில், அவர்கள் எழுதியிருந்தனர்.
சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 7) லண்டன் கென்வுட் ஹவுஸில் நடந்த பைனான்சியல் டைம்ஸின் வார இறுதி விழாவில் பாதுகாப்பு முகமைகளின் தலைவர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் தங்கள் முதல் கூட்டு உரையை வழங்கினர்.
அவர்கள் மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை உரையாற்ற போகிறவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
ஒன்றாக, நிதானமாக வந்த அவர்கள், தங்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு இடையிலான நெருங்கிய பணி ரீதியான கூட்டுறவை வலியுறுத்தினார்கள்.
"ரஷ்ய அதிபரின் பிடி தளரவில்லை"
யுக்ரேன் சமீபத்தில் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு பகுதியைக் கைப்பற்றியது "குறிப்பிடத்தக்க தந்திரோபாய வெற்றி" என்று பர்ன்ஸ் கூறினார். அதே சமயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதிகாரத்தின் மீதான பிடி தளர்கிறது என்பதற்கான எந்த அறிகுறியையும் தான் காணவில்லை என்றும் கூறினார்.
மேற்கு நாடுகளிடம் யுக்ரேன், அதிக ஆயுதங்களை வழங்கவும், ரஷ்யாவின் உள்பகுதியில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவும் வலியுறுத்தி வருகிறது.
யுக்ரேன் கேட்பதை சில சமயங்களில் செய்யத் தவறியதற்கு காரணம் ரஷ்யா எப்படி நடந்துகொள்ளும் என்ற அச்சத்தில் தான், ஆனால் யுக்ரேனுக்கான ஆதரவை நிறுத்தக் கூடாது என்று உளவுத் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.
"அதிகரிக்கும் அபாயங்களை நாம் யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று பர்ன்ஸ் கூறினார்.
2022 இன் பிற்பகுதியில், போர்க்களத்தில் பின்னடைவுகள் ஏற்பட்ட போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழல் நிலவியது. இதனை "உண்மையான ஆபத்து" இருந்த ஒரு தருணம் என்று அவர் விவரித்தார்.
அப்போது ரஷ்ய அதிகாரிகளிடம் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பர்ன்ஸ் எச்சரித்திருக்கிறார்.
"எவ்வாறாயினும், இதனால் நாங்கள் தேவையில்லாமல் மிரட்டலை எதிர்கொள்ளலாம் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. " என்று சிஐஏ இயக்குனர் பர்ன்ஸ் தொடர்ந்தார்.
"புதின் ஓர் ஆதிக்கவாதி. அவர் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், FT
"ரஷ்ய உளவுத்துறையின் சில செயல்கள் கொடூரமானவை"
ஐரோப்பாவில் நாசவேலைகளை மேற்கொள்வதற்கான ரஷ்ய உளவுத்துறையின் விருப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்ட போது, தாக்குதல்களை நடத்த குற்றவாளிகளைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட அளவிலான அவநம்பிக்கையைக் குறிக்கிறது என்று சர் ரிச்சர்ட் மூர் பதிலளித்தார்.
"ரஷ்ய உளவுத்துறையின் சில செயல்கள் சற்றே காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளன." என்றும் அவர் கூறினார்.
பர்ன்ஸ் மேலும் கூறுகையில், அவர்களின் திட்டங்கள் சில சமயங்களில் திறமையற்றவை என்று தோன்றினாலும், அவை "பொறுப்பற்றதாகவும் ஆபத்தானதாகவும்" மாறி விடும் அபாயம் உள்ளது என்றார்.
பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் கட்டுரையில், இருவரும் யுக்ரேனுக்கு ஆதரவாக வரும்போது, "யுக்ரேனுக்கு உதவுவதில் முன்னெப்போதையும் விட தற்போதைய பாதையை பின் தொடர்வது மிகவும் முக்கியமானது." என்று எழுதியுள்ளனர் மேலும் புதின் "வெற்றி பெற மாட்டார்" என்றும் கூறினர்.
மோதலின் முடிவை தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றும் என்பதை இந்த போர் நிரூபித்ததாகவும், புதுமை, பரிசோதனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் அவர்கள் கூறினர்.
அவர்களின் கட்டுரையில்: "யுக்ரேனுக்கு அப்பால், ரஷ்ய உளவுத்துறையால் ஐரோப்பா முழுவதும் நடத்தப்படும் பொறுப்பற்ற நாசவேலைகளை தடுக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுகிறோம். எங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட பொய்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதற்கு தொழில்நுட்பத்தை இழிந்த முறையில் பயன்படுத்துகின்றனர்." என்று குறிப்பிட்டுள்ளனர்.
இரு நாடுகளின் உளவுத்துறை முகமைகளும் சீனாவின் எழுச்சியை இந்த நூற்றாண்டின் முக்கிய உளவுத்துறை மற்றும் புவிசார் அரசியல் சவாலாக பார்க்கின்றன.
அவர்கள் (சீனா) தங்கள் சேவைகளை "முன்னுரிமையை பிரதிபலிக்கும் வகையில்" மறுசீரமைத்துள்ளனர், என்று இருவரும் எழுதியுள்ளனர்.
மத்திய கிழக்கில் கட்டுப்பாடு மற்றும் தீவிரத்தை குறைக்க தாங்கள் "கடினமாக" அழுத்தம் கொடுத்ததாகவும், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த "இடைவிடாமல்" உழைத்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
போர் நிறுத்த முயற்சிகளுக்கு மையமாக செயல்பட்ட பர்ன்ஸ், பைனான்சியல் டைம்ஸ் நிகழ்வில் வரவிருக்கும் நாட்களில் இன்னும் விரிவான திட்டம் செயல்படுத்தப்படலாம் என்று சுட்டிக்காட்டினார்.
"அரசியல் விருப்பமே இறுதியில் இதை தீர்மானிக்கிறது’’ என்று கூறிய அவர், இரு தரப்பிலும் உள்ள தலைவர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்று தனது உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 11 மாதங்கள் ஆகிறது. சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பேரை பணயக் கைதிகளாக்கினர்.
அன்றிலிருந்து காஸாவில் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்ரேலின் தற்போதைய ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












