பிரான்ஸ் தேர்தலில் நான்காம் இடம் பிடித்த கூட்டணியை சேர்ந்தவர் புதிய பிரதமராக தேர்வு- இது எப்படி நடந்தது?

பட மூலாதாரம், STEPHANE DE SAKUTIN/AFP
- எழுதியவர், பால் கிர்பி, லாரா கோஸி
- பதவி, பிபிசி செய்திகள்
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மிஷேல் பார்னியை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
"அனைத்து அரசியல் சக்திகளும் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்," என்று கூறிய அவர் பிரான்ஸ் ஒரு மிக முக்கியமான தருணத்தை அடைந்துவிட்டது என்றும் அதனை பணிவுடன் எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
தேர்தலுக்கு பிறகு இரண்டு மாதங்களாக அரசியல் கட்சிகள் மற்றும் சாத்தியமான வேட்பாளர்களுடன், பல கட்டமாக பேச்சுவார்த்தைகளை நடத்திய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை பிரெக்ஸிட் மத்தியஸ்தரான மிஷேல் பார்னியை பெயரை பரிந்துரை செய்தார்.
73 வயதான பார்னியை, வியாழன் மாலை பாரிஸில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வந்தடைந்தார். கடந்த எட்டு மாதங்களாக பிரதமராக பதவி வகித்து வந்த பிரான்ஸின் இளைய பிரதமரான கேப்ரியல் அட்டலிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நிலையில், மூன்று பெரும் கட்சிகளாக பிரிந்துள்ள நாடாளுமன்றத்தில் தாக்குபிடிக்கக்கூடிய ஒரு அரசை அமைப்பதுதான் அவருக்கான முதல் பணியாக இருக்கும்.
ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து செயல்படுவதற்காக பார்னியை தன்னுடைய அனைத்து அரசியல் திறன்களையும் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே மைய- இடது சோசியலிஸ்டுகள் அவரின் நியமனத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.
சவால்கள், கோபம், கைவிடப்பட்ட உணர்வு, நகரங்கள் கிராமப்புறங்களில் நடக்கும் அநீதி என அனைத்துக்கும் வரும் நாட்களில் பதிலளிப்பேன் என்று அவர் கூறினார்.
நாடு எதிர்கொள்ளும் நிதி மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து பிரெஞ்சு மக்களுக்கு உண்மையைச் சொல்ல இருப்பதாகவும், நல்ல நம்பிக்கை உள்ள அனைவருடனும் மிகுந்த மரியாதை மற்றும் ஒற்றுமையுடன் பணியாற்ற இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பாரிஸ் ஒலிம்பிக்கின் போது, 'அரசியல் நிறுத்தம்' என்று கூறி பிரதமரை தேர்வு செய்ய மக்ரோங் 60 நாட்கள் எடுத்துக் கொண்டார்.
பிரதமர் இல்லத்தின் முன்பு தன்னுடைய பிரியாவிடை உரையை நிகழ்த்திய அட்டல், "பிரெஞ்சு அரசியல் நோய்வாய்ப்பட்டிருக்கிறது, ஆனால் நாம் அனைவரும் தீவிர மத உணர்வில் இருந்து விலகிச் செல்ல ஒப்புக்கொண்டால் குணப்படுத்த முடியும்" என்று கூறினார்.
2016 மற்றும் 2019 க்கு இடையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த தொடர் பேச்சுக்களை நடத்திய பார்னியை, அரசியல் முட்டுக்கட்டை பற்றிய கணிசமான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
பிரான்ஸிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் நீண்ட அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கும் அவர், வலதுசாரி குடியரசுக் கட்சியில் முக்கிய அங்கம் வகிக்கிறார்.
பிரான்ஸில் 'திரு பிரிக்ஸெட்' என்று அழைக்கப்படும் அவர், 1958-ஆம் ஆண்டில் ஐந்தாவது குடியரசு உருவானதில் இருந்து பிரான்ஸில் பிரதமராக பதவி வகிக்கும் நபர்களில் மிகவும் வயதானவர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் ஈடுபட்ட அவர், அவருடைய கட்சியின் வேட்பாளராக தேர்வாகும் முயற்சியில் தோல்வி அடைந்தார். குடியேற்றத்தை குறைக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், STEPHANE DE SAKUTIN/POOL/EPA-EFE
சவால்கள் என்ன?
மக்ரோங்கின் அதிபர் பதவி காலம் 2027-ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் சில வார இடைவெளியில் நடத்தப்படுவதால் பொதுவாக அதிபரின் கட்சியில் இருந்துதான் ஆட்சி அமைக்கப்படும்.
ஆனால், தன்னை "காலத்தின் மாஸ்டர்" என்று என அழைத்துக்கொள்ளும் மக்ரோங் ஜூன் மாதம் திடீரென தேர்தல்களை அறிவித்தார்.
தேர்தல் முடிவுகளில் இடதுசாரியான புதிய பாப்புலர் ஃப்ரண்டிற்கு அடுத்தபடியாக அவரது மையவாத கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது.
அதிபர் மக்ரோங் பிரதமர் பதவிக்காக பல சாத்தியமான வேட்பாளர்களை நேர்காணல் செய்தார். ஆனால், தேர்தேடுக்கும் நபர் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தோன்றும்போது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும். இதன் காரணமாக மக்ரோங்கின் தேர்வு பணி சவால் மிகுந்ததாக இருந்தது
பார்னியை நியமித்ததன் மூலம் பிரதமரும், வருங்கால அரசாங்கமும் ஸ்திரத்தன்மையையும், ஒற்றுமையையும் வழங்குவதை மக்ரோன் உறுதி செய்துள்ளதாக எலிசீ அரண்மனை (அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம்) தெரிவித்துள்ளது.
நாட்டிற்கும் பிரெஞ்சு மக்களுக்கும் சேவை செய்யும் ஒரு ஒருங்கிணைந்த அரசாங்கத்தை உருவாக்கும் பணி பார்னியைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று எலிசீ அரண்மனை தெரிவித்துள்ளது.
பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் பார்னியை முன் இருக்கும் சவால்களில் மிக முக்கியமான ஒன்று 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது. மேலும் நாடாளுமன்றத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று அதற்கான வரைவு திட்டத்தை சமர்பிப்பது ஆகும்.
இந்த கோடை காலத்தில் ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான பணிகளை அட்டல் மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த பட்ஜெட் ஒப்புதல் பெறுவதற்கு தற்போது பார்னியையின் அரசியல் திறன்கள் தேவைப்படுகின்றன.
பிரதமராக இவரை தேர்வு செய்திருப்பது புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அக்கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்ட பிரதமர் வேட்பாளரை மக்ரோங் நிராகரித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நான்கு கட்சிகளை உள்ளடக்கிய புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரிய கட்சியான பிரான்ஸ் அன்பவுடின் தலைவர் ஜாங் லுக் மெலாங்ஷாங், பிரெஞ்ச் மக்களிடம் இருந்து தேர்தல் உரிமை திருடப்பட்டுவிட்டது என்று கூறினார்.
ஜூலை 7-ஆம் தேதி வெளியான முடிவுகளில் அதிக இடங்களை பெற்ற கூட்டணியில் இருந்து பிரதமரை தேர்ந்தேடுக்காமல், கடைசி இடத்தை பெற்ற குடியரசு கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரதமராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் என அவர் குற்றஞ்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சியின் தலைவரை குறிப்பிட்டு ''இது ஒரு மக்ரோங் - லே பென் அரசாகதான் இருக்கிறது'' என்று மெலாங்ஷாங் கூறினார்.
மக்ரோங்கிற்கு எதிரான இடதுசாரி போராட்டங்களில் மக்களை பங்கேற்க அவர் அழைத்தார். இந்த போராட்டம் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
577 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றி பெற 289 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பார்னியைக்கு தேவை.
பார்னியையின் அரசில் தனது தேசிய பேரணிக் கட்சி இடம்பெறாது என மரைன் லே பென் தெளிவாக கூறியுள்ளார். ஆனால், பரந்த கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகளை மதிக்கும் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற தங்களது தேசிய பேரணிக் கட்சியின் முதல் தேவையை பூர்த்தி செய்யும் நபராக அவர் உள்ளார் என லே பென் கூறியுள்ளார்.
அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படும் பிரான்ஸின் பட்ஜெட் வாயிலாக,பார்னியையின் பேச்சு, செயல் மற்றும் முடிவுகள் என அனைத்தும் உற்று கவனிக்கப்படும் என்று தேசிய பேரணிக் கட்சியின் தலைவர் ஜோர்டர் பர்தெல்லா கூறினார்.
இங்கு விலைவாசி உயர்வு, பாதுகாப்பு, குடியேற்றம் போன்றவை பிரெஞ்ச் மக்கள் அதிகமாக எதிர்கொள்ளும் சவாலாக உள்ளது. வரவிருக்கும் வாரங்களில் இது முறையாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால், அதற்கு எதிரான அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
பார்னியை, மக்ரோங்கின் மையவாத கூட்டணியின் ஆதரவை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
புதன்கிழமை மாலைக்கு பிறகே பார்னியை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதற்கு முன்பு வரை, இரண்டு அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் யாரோ ஒருவர் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஒருவர் முன்னாள் சோசலிஸ்ட் பிரதமர் பெர்னார்ட் காசெனியூவ். மற்றொருவர் குடியரசுக் கட்சியின் பிராந்தியத் தலைவர் சேவியர் பெர்ட்ராண்ட். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் இருவருமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று பிறகு தெரிய வந்தது.
இடதுசாரி வேட்பாளராக களம் இறங்கிய பாரிஸின் மூத்த அரசு ஊழியரான லூசி காஸ்டெட்ஸை நிராகரித்ததற்கு விளக்கம் அளித்த மக்ரோங், அவர் முதல் தடையை கூட கடந்திருக்கமாட்டார் என கூறினார்.
பிரான்சில் அரசியல் நெருக்கடியை தூண்டியதாக அதிபர் மீது பரவலாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
சமீபத்திய கருத்துக் கணிப்பில் 51% பிரெஞ்சு வாக்காளர்கள் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கருதினர்.அதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஆனால் 2017ல் மக்ரோங்கால் முதல் முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்வார்ட் பிலிப், அடுத்த அதிபர் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்ற சூழலில் தேர்தலில் போட்டியிட இப்போதே விருப்பம் தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












