வெளிநாட்டில் மருத்துவம் படித்த அனைவராலும் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற முடியாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் மருத்துவராகும் கனவில் உள்ள பலரும் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்குச் சென்றும் மருத்துவம் பயில்கின்றனர். வெளிநாடுகளில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மருத்துவம் பயின்று இந்தியா திரும்பிய பின்னரும் தாங்கள் அடுக்கடுக்கான சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மருத்துவப் பணி செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு இங்கு மருத்துவம் பயின்றவர்களை விடவும் தங்களுக்கு கூடுதல் காலம் ஆவதாகவும், பணிச் சூழலில் பாகுபாட்டை சந்திப்பதாகவும் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் சொல்கின்றனர். இந்தியாவில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வு
வெளிநாட்டில் இளநிலை மருத்துவம் பயின்றவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணியாற்றிட வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வு (Foreign Medical Graduate Examination - FMGE) எனும் தேர்வை எழுத வேண்டும்.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் ஓராண்டு காலம் செய்முறைப் பயிற்சி பெற வேண்டும். செய்முறைப் பயிற்சிக்கு இடம் ஒதுக்க கோரி அந்தந்த மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மாணவருக்கு இடம் ஒதுக்கப்பட்ட பிறகு, நேரடியாக சென்று செய்முறைப் பயிற்சி பெற வேண்டும்.
அதன் பிறகே அவருக்கு மருத்துவர் உரிமத்திற்கும், மருத்துவ கவுன்சில் பதிவிற்கும் விண்ணப்பிக்க முடியும். இந்த நடைமுறைகள் முடிந்த பின்பே, வெளிநாட்டில் இளநிலை மருத்துவம் பயின்ற ஒருவர், இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற அனுமதிக்கப்படுவார்.
சம்பந்தப்பட்ட இந்திய தூதரகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், எம்பிபிஎஸ் அல்லது அதற்கு இணையான படிப்புகளை வழங்கும் வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் / பல்கலைக் கழகங்களின் பட்டியலை முன்பு இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியது. ஆனால் இப்போது தேசிய மருத்துவ ஆணையம் அப்படிப்பட்ட எந்த பட்டியலையும் வெளியிடுவதில்லை.
இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் அல்லது அதற்கு இணையான படிப்பில் சேருவதற்கு முன்பு, கட்டணங்களை உறுதிப்படுத்துதல், பாடத்திட்ட விவரங்கள் - அதாவது உள்ளடக்கம், காலம் மற்றும் செய்முறைப் பயிற்சி போன்றவை இந்தியாவில் உள்ள எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திடமிருந்து நேரடியாக பெறப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்துகிறது.
" 2018 ஸ்கிரீனிங் தேர்வு விதிமுறைகள் அறிவிப்பின் படி, இந்தியாவுக்கு வெளியே உள்ள எந்தவொரு மருத்துவ நிறுவனத்திலிருந்தும் முதன்மை மருத்துவத் தகுதியைப் பெற்ற அனைத்து இந்திய குடிமக்களும் வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்களும், இந்தியாவில் பதிவு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஸ்கிரீனிங் தேர்வில் தகுதி பெற வேண்டும். அத்துடன் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்" என்று தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது.
மாணவர் எந்த நாட்டில் படிக்கிறாரோ, அந்த நாட்டில் மருத்துவராக பதிவு செய்து பணியாற்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ படிப்பாக அது இருக்க வேண்டும்.
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்புவோர், இந்தியாவில் நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு முடிவுகள் மூன்று ஆண்டு காலம் செல்லுபடியாகும்.
ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ பட்டங்களை பெற்று, அந்த நாட்டில் மருத்துவராக பதிவு செய்து பணியாற்ற தகுதிப் பெற்றிருப்பவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற தகுதித் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி விகிதம் குறைவு
இந்த தேர்வை எழுதும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வியடைகின்றனர் என்பதை புள்ளிவிவரம் காட்டுகிறது. 2023-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 16.65% ஆக இருந்தது. அந்த ஆண்டு தேர்வு எழுதிய 61,616 பேரில்10,261 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர். கடந்த ஆண்டு 79 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 20,382 பேர் அதாவது 25.80% பேர் தேர்ச்சிப் பெற்றனர்.
2023-ம் ஆண்டு ரஷ்யாவிலிருந்து படிப்பை முடித்து திரும்பிய நிகிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நான்கு முறை FMGE தேர்வு எழுதியுள்ளார். "இன்னும் வெற்றி பெறவில்லை. FMGE தேர்வில் ஒரு நோயாளிக்கான அறிகுறிகளை சொல்லி, அவருக்கு என்ன நோய் என்று கண்டறிய சொல்வார்கள். சில நேரம் பரிசோதனை முடிவுகளை சொல்லி அவருக்கு என்ன நோய் இருக்கலாம் என்று கேட்பார்கள். இதற்கென தனியாக பயிற்சி பெற்று தயாராகாமல் தேர்ச்சிப் பெற முடியாது. நான் இப்போது புதிய செயலிகள் மூலம் இந்த தேர்வுக்கான பயிற்சி எடுத்து வருகிறேன். " என்கிறார்.
"நான் 2022-ம் ஆண்டு படிப்பை முடித்து வந்தேன். ஆறு முறை இந்த தேர்வை எழுதியுள்ளேன், இன்னும் வெற்றி பெறவில்லை. இந்த தேர்வை எழுதி முடித்த பின், அந்த தேர்வில் வந்த கேள்விகள் சரியா, அதற்கு நான் அளித்த விடைகள் சரியா என்று பார்க்க வழியே இல்லை." என்றார் ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
"இந்த தேர்வை எழுதிய பின், வினாத்தாளை வெளியே கொடுக்க மாட்டார்கள், பதில்களுக்கான குறிப்பும் கிடையாது. இந்த தேர்வில் 300க்கு 150 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சிப் பெறலாம். பலரும் 140 முதல் 149 வரையிலான மதிப்பெண்கள் எடுத்து தோற்று போயுள்ளனர். அவர்களுக்கு தாங்கள் என்ன தவறு செய்தோம் என்று தெரிவதே இல்லை." என்றார் ரஞ்சனி.
மருத்துவ பயிற்சி மேற்கொள்ள முடியாது என்பதால் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திலும், ஒரு தனியார் சுகாதார நிறுவனத்திலும் பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்து மருத்துவ ஆலோசனை வழங்கும் வேலை செய்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
"முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றேன்"
இந்த தேர்வை வெற்றிகரமாக முடித்தவர்களில் ஒருவரான மருத்துவர் அருள் வர்மன், " நான் 2014 முதல் 2020ம் ஆண்டு வரை ரஷ்யாவில் உள்ள Mordovia State Medical University -ல் படித்தேன். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படிப்பை முடித்து இந்தியா திரும்பினேன். ஓராண்டு பயிற்சியெடுத்து, 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வில் முதல் முறையாக எழுதி தேர்ச்சிப் பெற்றேன். என்னோடு படித்து முடித்த சிலர், இன்னமும் அந்த தேர்வில் தேர்ச்சிப் பெற முடியாமல் இருக்கிறார்கள். நான் தினமும் 10 முதல் 12 மணி நேரம் படித்ததால் என்னால் தேர்ச்சிப் பெற முடிந்தது" என்கிறார்.
வெளிநாட்டில் தரமான கல்லூரியை தேர்வு செய்தால், தேர்ச்சிக்கு உதவியாக அமையும் என்று கூறினார் மருத்துவர் லகாந்தி, "2014-ம் ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்தேன். பின்னர் மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் சென்றேன். 2021-ம் ஆண்டில் மருத்துவப் படிப்பை முடித்து, அதே ஆண்டில் FMGE தேர்விலும் தேர்ச்சிப் பெற்றேன். பிலிப்பைன்சில் நான் படித்த கல்லூரியில் கல்வி தரமாக இருந்தது. நல்லப் பயிற்சி கிடைத்தது." என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளில் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?
வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் நடைமுறைகளும், விதிமுறைகளும் மாணவர்களின் கல்வியை சிக்கலாக்குவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவில் படித்த மருத்துவர் அருள் வர்மன் கூறும்போது "அந்த நாட்டின் மொழி தெரிந்தால் தான் நோயாளிகளுடன் பேச முடியும். அங்குள்ள நோய்களும், நம் ஊரில் உள்ள நோய்களும் வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக படர் தாமரை அந்த ஊரில் கிடையாது. ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம். அங்கு பயிற்சிக் காலத்தில் அறுவை சிகிச்சைகளின் போது உடனிருந்து கவனிக்க அனுமதிப்பார்கள். அதை தவிர செய்முறை அனுபவம் கிடைக்காது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவில் விதிகளின்படி ஒரு தேர்வை மூன்று முறைக்கு மேல் எழுத முடியாது என்பதால் சில மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது என்றார் அருள் வர்மன்.
"என்னோடு 35 இந்திய மாணவர்கள் அந்தக் கல்லூரியில் படித்தார்கள். அதில் எட்டு பேர் நீக்கப்பட்டனர். அந்த கல்லூரியில் ஒரு தேர்வை எழுத மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் மூன்று முறையும் தோற்றதால், அந்நாட்டு விதிகள் படி தொடர்ந்து படிக்க முடியாது என்று பாஸ்போர்ட்டில் சீல் வைத்து விட்டனர். பின்னர் அவர்கள் ஆர்மீனியா உள்ளிட்ட வேறு நாடுகளில் சென்று படிப்பை முடித்தனர்" என்கிறார்.

இந்தியாவில் பாகுபாடு காட்டப்படுகிறதா?
வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் FMGE தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் கூட, மற்ற மருத்துவருக்கு நிகராக நடத்தப்படுவதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவர் லகாந்தி, "வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்தியாவில் முன்னுரிமை சற்று குறைவுதான். அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அதன் பிறகே வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் – இது தான் முன்னுரிமை வரிசை." என்கிறார். இந்தியாவில் படித்த மருத்துவர்களை விட வெளிநாட்டில் படித்து வந்தவர்களுக்கு சம்பளம் குறைவாக நிர்ணயிக்கப்படுவதாக அருள் வர்மன் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் கீர்த்தி வர்மன் பேசுகையில், "வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் குறைவு என்பதே இதற்குக் காரணம்." என்றார்.
மேலும் பேசிய அவர், "மருத்துவராவதும், மருத்துவராக பணியாற்றுவதும் இன்றைய காலத்தில் சவாலானதே என்பதை மாணவர்கள் உணர வேண்டும். இன்றைய சூழலில் எம்.பி.பி.எஸ். மட்டுமே படித்தால் போதாது. கண்டிப்பாக முதுநிலை மற்றும் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற வேண்டும். எனவே அதற்கான திட்டமிடலும் மாணவர்களிடம் இருக்க வேண்டும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












