இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய ‘ட்விஸ்ட்’

பட மூலாதாரம், Twitter/BCCI
ஐபிஎல் தொடரில் மரியாதை, சர்வதேச போட்டியில் அறிமுகம், முதல் போட்டியிலேயே அசத்தல் என ஷிவம் மாவிக்கு இந்தப் புத்தாண்டு இனிமையாகவே தொடங்கியிருக்கிறது.
சில நாள்களுக்கு முன்புதான் அவரை ஐபிஎல் தொடருக்காக குஜராத் டைட்டான்ஸ் அணி சுமார் ஆறு கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது. அடுத்த சில நாள்களில் இந்தியாவின் டி 20 அணிக்கான அழைப்பு அவருக்கு வந்தது. இப்போது அறிமுகப் போட்டியிலேயே இந்திய அணியின் வெற்றிக்கு உதவிப் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி என முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத குறையை ஷிவம் மாவி போக்கினார். தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.
இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களை வீசிய அவர், 22 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 162 ரன்களை எடுத்த அந்த அணி இரண்டு ரன்களில் வெற்றி பெறுவதற்கு அவரது பந்துவீச்சு பெரிதும் உதவியது.
பந்துவீச்சில் ஷிவம் மாவி என்றால், ரோஹித் ஷர்மா, கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் இல்லாத அணியில் தீபக் ஹூடாவும் அக்ஸர் படேலும் நின்று மரியாதையான அளவுக்கு ரன்களைக் குவிக்க உதவ வேண்டியதாயிற்று. கடைசி ஓவரில் இவர்கள் இருவரும் பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் இலங்கை அணியைக் கட்டுப்படுத்தி வெற்றியை வசமாக்கினார்கள்.
சரிந்த முன்வரிசை, காப்பாற்றிய பின்வரிசை
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த போட்டியின் மூலம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் மற்றும் பந்துவீச்சாளர் ஷிவம் மாவி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாயினர். திறமையை வெளிப்படுத்தியும் அணியில் இடம் தரப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட சஞ்சு சாம்சனும் அணியில் இடம்பிடித்தார்.
இலங்கை அணி கேப்டன் டாசன் ஷனகா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - சுப்மான் கில் ஜோடி களமிறங்கியது.
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் விளாசி உலக சாதனை படைத்த உற்சாகத்துடன் களம் கண்ட இஷான் கிஷன் சற்று நிதானமாகவே ஆடினார்.
மறுபுறம் சுப்மான் கில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன் எடுத்த நிலையில் ஹசரங்கா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், அண்மைக்காலமாக டி20 போட்டிகளில் கலக்கி வரும், நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் களமிறங்கினார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரும் 7 ரன்களில் கருணாரத்னே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் 5 ரன்களில் அவுட்டாகி, ஏமாற்றம் அளிக்க இந்திய அணி 7 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

பட மூலாதாரம், twitter/bcci
பின்னர், இஷான் கிஷனுடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3 ஓவர்களில் 30 ரன் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 29 பந்துகளில் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்சர், 3 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் ஹர்திக் பாண்டியா நிதானமாக ஆடி 27 பந்துகளில் 29 ரன்களையே சேர்த்தார்.
இறுதிக்கட்டத்தில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடாவும், அக்ஷர் படேலும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தீபக் ஹூடாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. தீபக் ஹூடா - அக்ஷர் படேல் இணை அதிரடியாக 50 ரன்களுக்கும் மேல் சேர்த்ததால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது.
தீபக் ஹூடா 23 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களும், அக்ஷர் படேல் 20 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பட மூலாதாரம், Twitter/BCCI
இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த ஷிவம் மாவி
163 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நிஷாங்கா ஒரு ரன்னிலேயே ஷிவம் மாவியின் அபார பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த தனஞ்ஜெயாவையும் 8 ரன்களில் ஷிவம் மாவி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
மறுமுனையில் தொடக்க வீரர் குசால் மென்டிஸ் நிதானமாக ஆடினார். 4-வது வரிசையில் களமிறங்கிய அசலங்காவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நிதானத்தை கடைபிடித்தார். ஆனால், 15 பந்துகளில் 12 ரன் சேர்த்திருந்த அவரை உம்ரான் மாலிக் வெளியேற்றினார். உம்ரான் மாலிக் பந்துவீச்சில் விக்கெட்கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து அசலங்கா பெவிலியன் திரும்பினார்.
நிலைத்து ஆடிய குசால் மென்டிசும் 28 ரன்களில் அடுத்த ஓவரில் ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டாகி வெளியேற இலங்கை அணி தடுமாறியது. அந்த அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 66 ரன்களை எடுத்து தத்தளித்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பானுகா ராஜபக்சே 10 ரன்களில் அவுட்டான பிறகு, ஆறாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் டாசன் ஷனகாவும், ஹசரங்காவும் அதிரடி காட்டினர்.
அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களை விளாசி இருவரும் இந்திய பந்துவீச்ச்சாளர்களை திணறடித்தனர். இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக மாறிய இந்த ஜோடியை மீண்டும் பந்துவீச வந்த ஷிவம் மாவி பிரித்தார். ஹசரங்கா 10 பந்துகளில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடம் 21 ரன் எடுத்த நிலையில் ஷிவம் மாவி பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
27 பந்துகளில் தலா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில் இலங்கை கேப்டன் டாசன் ஷனகாவும் சிறிது நேரத்தில் வெளியேறினாலும், வெற்றி இலக்கு அருகில் இருந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது.

பட மூலாதாரம், Twitter/BCCI
கடைசி நேர ட்விஸ்ட்
இலங்கை அணி வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை அக்ஷர் படேல் வீசினார்.
முதல் பந்தை வைடாக வீசிய அக்ஷர் படேல் அடுத்த பந்தில் ஒரு ரன் கொடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் எடுக்காத கருணாரத்னே, மூன்றாவது பந்தில் அபாரமாக சிக்சர் அடித்தார்.
இதனால், 3 பந்துகளில் 5 ரன் என்ற எளிய இலக்காகி, ஆட்டம் இலங்கைக்கு சாதகமானது போல் தோன்றியது. இதையடுத்து, கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு முனைக்கு சென்று, அக்ஷர் படேலுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இதையடுத்து, நான்காவது பந்தில் அக்ஷர் படேல் ரன் ஏதும் விட்டுக் கொடுக்கவில்லை. 5-வது பந்தில் கருணாரத்னே, டீப் மிட் விக்கெட் செய்து பந்தை ஃப்ளிக் செய்து 2 ரன்களை எடுக்க முயல, தீபக் ஹூடாவின் அபார பீல்டிங்கால் மறுமுனையில் இருந்த தில்ஷன் மதுஷங்கா ரன் அவுட்டானார்.

பட மூலாதாரம், BCCI/Twitter
கடைசி பந்தில் பவுண்டரி எடுத்தால் இலங்கை அணி வெற்றி என்ற நிலை ஏற்பட்டதால் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். மிகவும் பரபரப்பான கட்டத்தில், ஆட்டத்தின் கடைசி பந்தை கருணாரத்னே எதிர்கொண்டார்.
அக்ஷர் படேல் வீசிய பந்தை அவர் ஓங்கி அடிக்க முயல, அது பேட்டில் சரியாக படாமல் மிட் விக்கெட் திசையில் ஓடியது. அப்போது இலங்கை வீரர்கள் 2 ரன்களை எடுக்க முயற்சிக்க, இம்முறையும் சரியாக செயல்பட்ட தீபக் ஹூடா தனது அபார செயல்பாட்டால் தில்ஷன் மதுஷங்காவை ரன்அவுட் செய்தார். இதனால், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்களில் அடங்கிப் போனது.
கடைசிப் பந்து வரை பரபரப்பாக நீடித்த முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












