மேன்டோஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னென்ன?

மேன்டோஸ் புயல் மகாபலிபுரத்தில் கரையை கடந்த பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றால் மின்சார கம்பங்களும் மரங்களும் விழுந்து கிடக்கின்றன. மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கடலோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. கட்டடங்கள், கடைகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை நகரில் மரங்கள் விழுந்து பல வாகனங்கள் சேதமடைந்திருக்கின்றன. இரவு நேரத்தில் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

மேன்டோஸ் புயல் வலுவிழந்து வட தமிழகக் கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்றும் ஏறக்குறைய மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் தாக்கம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு மக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைதுறை அறிவுறுத்தியுள்ளது. இரவு முழுவதும் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக பேருந்துகள் இயக்குவதும் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து, சாலைகளில் விழுந்துள்ளன. நள்ளிரவில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 60க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் விழுந்துள்ளன என்பதால், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வருவதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது.
மேன்டோஸ் புயலின் தாக்கத்தால் காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 150 படகுகள் சேதமடைந்துவிட்டதாகவும் தேசிய மீனவர் பேரவையை சேர்ந்த எம். இளங்கோ தெரிவித்துள்ளார்.
''கடந்த இரண்டு நாட்களாக காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பல படகுகள் சேதமாகியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை என்பதால், பலரும் வருமானமின்றி தவிக்கின்றனர். அரசின் கவனம் எங்கள் மீது படவேண்டும்,'' என இளங்கோ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












