நிலவில் தண்ணீரை தேடும் முயற்சியில் முக்கிய மைல்கல் - மனிதர்கள் வாழ்வது சாத்தியமாகுமா?

நாசா

பட மூலாதாரம், BERHANU BULCHA

    • எழுதியவர், டேமியன் ஸேன்
    • பதவி, பிபிசி

எத்தியோப்பிய-அமெரிக்க நாசா விஞ்ஞானி பெர்ஹானு புல்சா, நிலவில் தண்ணீரை தேடும் முயற்சியில் நிலவும் சிக்கலை தீர்க்கவும் அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வாழ்வதற்கு தீர்வு காணும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

தண்ணீர் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

பூமியில் வாழும் மனிதர்களானாலும் சரி அல்லது இந்த பிரபஞ்சம் முழுவதிலும் சரி இந்த விதி பொருந்தும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் கடந்த வாரம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமிக்கு அப்பால் வேறொரு வெளியில் தண்ணீரை கண்டடைவது குறித்த சிக்கலை தீர்ப்பது முக்கியமானது. நிலவில் மனிதர்கள் வாழ்வது என்பது இந்த விலைமதிப்பற்ற திரவம் இன்றி சாத்தியமே இல்லை. நிலவில் தண்ணீரை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து ஆய்வு செய்துவரும் குழு ஒன்றை டாக்டர் பெர்ஹானு வழிநடத்தி வருகிறார். பூமியிலிருந்து நிலவுக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம். ஆனால், இந்த திட்டம் செலவுகரமானது, மேலும் திறன்வாய்ந்ததும் அல்ல. நிலவில் உள்ள தண்ணீரை ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்தலாம், இதன்மூலம் விண்வெளி பயணத்திற்கு நிலவு ஒரு தளமாக விளங்க முடியும். இதனால், நமது கிரகத்தின் புவி ஈர்ப்பு விசையை கடக்கத் தேவையான பெரிய ராக்கெட்டுகளின் தேவையை குறைக்க முடியும்.

‘மில்லியன் டாலர் கேள்வி’

நிலவில் எங்கு தண்ணீர் உள்ளது என்பதை உறுதியாக அடையாளம் காணும் வகையில், குறைந்த எடை கொண்ட, கையடக்க ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி ஒன்றை உருவாக்கும் பணியில் பெர்ஹானு மற்றும் அவருடைய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

“இது மில்லியன் டாலர் கேள்வி,” என அமெரிக்காவில் உள்ள நாசா அலுவலகத்திலிருந்து பெர்ஹானு பிபிசியிடம் தெரிவித்தார். 

12 ஆண்டுகளுக்கு முன் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெர்ஹானு, நாசாவின் பல்வேறு பிரச்னைகளை தீர்க்கக்கூடிய விண்வெளி கருவிகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்துகிறார்.

இவற்றுள் நிலவில் தண்ணீரை தேடுவது என்பது அனைத்தையும்விட பெரும் பிரச்னையாக நீடிக்கிறது.

லேசர் கருவி

பட மூலாதாரம், NASA/MICHAEL GUINTO

படக்குறிப்பு, சிறிய லேசர் கருவி

நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனால் ஆன தண்ணீரையும் ஹைட்ரஜன் அடங்கிய ஹைட்ராக்சில் என்பதையும் வேறுபடுத்திக் காட்டும் முறைகளில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

என்ன கருவி?

லேசரின் உதவியுடன் இயங்கும் வகையில் பெர்ஹானு வடிவமைத்துவரும் கருவியானது, தண்ணீருக்கான குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒளித்துகள்களை வெளியிடுகிறது, இதன்மூலம் தண்ணீரின் இருப்பை துல்லியமாக கண்டறிய முடியும்.

இந்த அதிர்வெண்ணை அடைவதற்கு குவாண்டம் கேஸ்கேட் லேசர் எனப்படும் குறைக்கடத்தி லேசரை அவருடைய குழு வடிவமைத்து வருகிறது.

இந்த அதிர்வெண்ணை அடைவது கடந்த காலத்தில் கடினமான பணியாக இருந்தது என நாசாவின் செய்தி அறிக்கை கூறுகிறது.

‘புதுமையான தொழில்நுட்பம்’

இதுவொரு புதுமையான தொழில்நுட்பம் என வரையறுத்துள்ள பெர்ஹானு, விஞ்ஞானிகள் இந்த கையடக்கக்கருவியைக் கொண்டு நிலவில் தண்ணீர் எங்கு உள்ளது, எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய முடியும் என்கிறார். இது கடந்த காலத்தில் யாரும் செய்யாத ஒன்றாகும்.

இந்த சிறிய கருவியை ரிமோட் மூலமாகவும் இயக்க முடியும். நிலாவுக்கு பயணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட எந்தவொரு பொருளின் அளவையும் எடையையும் குறைப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.

நாசா

பட மூலாதாரம், Reuters

மேரிலாண்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தை அடிப்படையாகக் கொண்டு, இத்தகைய கருவியை வடிவமைப்பதில் தொடர்ந்து செயலாற்ற 2.5 மில்லியன் டாலர்களை பெர்ஹானு சமீபத்தில் பெற்றுள்ளார்.

இந்த கருவியை முழுமையாக வடிவமைக்க இன்னும் இரண்டு ஆண்டுகளாகும். ஆனால், அப்பணியை செய்து முடிக்க முடியும் என்றும், அது செயலாற்றும் வகையில் இருக்கும் என்றும் பெர்ஹானு நம்பிக்கையுடன் கூறுகிறார். அவரின் உறுதியை சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்த உறுதியை தன்னை வரையறுக்கும் குணமாக பெர்ஹானு பார்க்கிறார்.

யார் இந்த பெர்ஹானு?

38 வயதான பெர்ஹானு எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் வளர்ந்தார். பின், உயர்கல்வியை முடித்தபின் வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் பொறியியல் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார்.

தன்னம்பிக்கை கொண்ட மனிதராக அவர் திகழ்கிறார்.

“அமெரிக்காவுக்கு நான் வந்தபோது எனக்கு பக்கபலம் என்று ஒன்று இல்லை, நானே எனக்கு பக்கபலமாக இருந்தேன். நான் வளர்ந்துவந்த கலாசாரத்திலிருந்து தனித்துவிடப்பட்டது போன்றும் புதிய கலாசாரத்தில் மூழ்குவது போன்றும் உணர்ந்தேன். அந்த சமயத்தில் கடினமாக உழைப்பதும் கல்வியில் வெற்றி பெறுவது குறித்தும்தான் நீங்கள் முதலில் சிந்திக்க வேண்டும்” என ஆரம்பகாலத்தில் அமெரிக்காவுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டது குறித்து கூறினார்.

நாசா

பட மூலாதாரம், Nasa/Michael Giunto

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறும் முடிவு ஆபத்தானது என்றாலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உற்சாகமளிக்கும் ஆய்வுதிட்டங்கள் குறித்து பணியாற்றும் வாய்ப்புகளை தவிர்க்க முடியாது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

சிறுவயதில் தொடங்கிய தேடல்

பிரபஞ்சம் குறித்தும் அதில் என்ன இருக்கிறது என்ற ஆச்சர்ய தேடல் அவருக்கு தன்னுடைய நாட்டிலிருந்தே தொடங்கியுள்ளது.

கிறிஸ்தவ மதப்படி வளர்க்கப்பட்ட அவர், பைபிள் அறிமுகத்தின் வாயிலாக பிரபஞ்சம் குறித்த கேள்விகளை தனக்குள் கேட்டுள்ளார்.

சிலருக்கு வேதங்களை கண்டிப்பாக கடைபிடிப்பது மற்ற தேடல்களை நிறுத்துவதற்கு வழிவகுக்கலாம், ஆனால் பெர்ஹானுவுக்கு அதுவே அவற்றை தாண்டி யோசிக்க செய்துள்ளது.

“பல விஷயங்கள் எப்படி உருவாகின என்பதை அறிவதில் எனக்கு ஆர்வம் உண்டு. அவற்றைப் பற்றி அதிகம் அறிந்துகொள்வதில் வேட்கை அதிகம். பிரபஞ்சம் எப்படி இருக்கும், அது எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கிறது,” என்கிறார் அவர்.

கேள்விகளை கேட்பதில் உள்ள விருப்பமும் அதற்கான விடைகளை அறிவதில் உள்ள தேடலும் அடிஸ் அபாபாவாவில் வளர்ந்த அந்த சிறுவனை விண்வெளி ஆராய்ச்சிக்கான முக்கிய தடைகளில் ஒன்றை தீர்க்க உதவியது.

கடின உழைப்பும் சரியான வழிகாட்டிகளை கண்டறிவதும் தன்னுடைய வெற்றிக்கான கருவி என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் அவர்.

“கனவு காண்பதும் அதற்காக திட்டமிட்டு கனவை நோக்கி பயணிப்பதும் முதல் படி. நிச்சயமாக சவால்கள் வரும். ஆனால், நிறுத்திவிடாமல் பணிகளை செய்துகொண்டே இருக்கவேண்டும்” என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து காட்டை சுத்தமாக்கும் மனிதர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்