பொது சிவில் சட்டம்: மோதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் எதிர்கட்சிகள்

modi

பட மூலாதாரம், Getty Images

பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்கட்சிகள் எதிர்வினையாற்றியுள்ளன. இதுதொடர்பாக தற்போது தேசிய அளவில் விவாதங்களும் எழுந்துள்ளன.

வாக்கு வங்கி அரசியலுக்காக பிரதமர் மோதி பொது சிவில் சட்டம் குறித்து தற்போது பேசுவதாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக, ஐக்கிய ஜனதா தளம், அகில இந்திய மஜ்லிஸ் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

மோடி பேசியது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசும்போது, “பொது சிவி்ல் சட்டத்தின் பேரில் பொது மக்களை தூண்டிவிடும் வேலை நடைபெற்று வருகிறது.

ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஓர் சட்டம்; மற்றொரு நபருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த குடும்பத்தை எப்படி நடத்துவது என்று நீங்களே (பொதுமக்கள்) சொல்லுங்கள்,” என்று பேசி இருந்தார். மோதியின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், “குடிமக்களின் சம உரிமை குறித்தும் நமது அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று உச்ச நீீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் ஊறியவர்கள் இந்த சட்டத்தை கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,” என்று எதிர்கட்சிகளை சாடினார் பிரதமர் மோதி.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பொது சிவில் சட்டத்தை திமுக கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.

"எப்போதும் ஒரே நிலைப்பாடுதான்"

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திமுக இந்த பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. 1999திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோதே கருணாநிதி முன்வைத்த மூன்று நிபந்தனைகளில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பது ஒரு நிபந்தனையாக இருந்தது. மற்ற இரு நிபந்தனைகள் ராம ஜன்ம பூமி குறித்தும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்தும் பேசக்கூடாது என்பதுதான். தற்போதும் அதே நிலைப்பாடு தொடர்கிறது. திமுக இந்த பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறது." என்றார்.

மேலும், "ஒவ்வொரு மதத்திற்கும் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் இருக்கும். அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் எந்தவித மதத்திரும் எந்தவித பழக்கத்தையும் கடைப்பிடிக்க அரசியல் அமைப்புச் சட்டம் இடம் கொடுக்கிறது.

ஒரே வீட்டில் ஒவ்வொரு நபருக்கு ஒரு சட்டமா என மோதி கேட்கிறார், ஒரு வீட்டில் ஏன் அனைவரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அனைத்து வீட்டிலும் ஒவ்வொருக்கும் தனித்தனி ஆசைகள் விருப்புகள் இருக்கும். அனைவரையும் ஒரே மாதிரி இருக்க சொல்ல முடியாது." என்றார்.

காங்கிரஸ் என்ன சொல்கிறது?

"நாட்டில் நீடிக்கும் வறுமை நிலை. அத்தியாவசிய பொருட்களி்ன் விலையேற்றம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மணிப்பூர் வன்முறை போன்ற நாட்டின் முக்கியமான பிரச்னைகள் குறித்து பேச பிரதமர் மோதி தயாராக இல்லை. மாறாக, இந்த பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை திசைத் திருப்பும் நோக்கில் பொது சிவில் சட்டம் குறித்து அவர் பேசியுள்ளார்", என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.

“பிரதமர் மோதி வாக்கு வங்கி அரசியல் செய்கிறார் என்பதே பொது சிவில் சட்டம் குறித்த அவரது இன்றைய பேச்சு வெளிப்படுத்தி உள்ளது,”என்று காங்கிரஸ் மூத்த தலைவரான தாரிக் அன்வர் விமர்சித்துள்ளார்.

“கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. எனவே, பொது சிவில் சட்டத்தை அவர்கள் எப்போதோ நிறைவேற்றி இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அப்போதெல்லாம் இந்தச் சட்டத்தை கொண்டு வராமல், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தற்போது இந்த விஷயத்தை பிரதமர் கிளறுகிறார்” என்று தாரிக் அன்வர் குற்றம்சாட்டி உள்ளார்.

“அம்பேத்கர் உருவாக்கி கொடுத்துள்ள அரசியலமைப்பு சட்டத்தின் மீது தேசத்திற்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையை சீர்குலைக்கும் விதத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால் நாடு அதை அனுமதிக்காது” என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ஆரிஃப் மசூத் தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டம் குறித்து பாஜக தற்போது பேசுவது, அப்பட்டமான வாக்கு வங்கி அரசியல் என்று ஐக்கிய ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.

“பொது சிவில் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து மத்திய பாஜக அரசு முதலில் அனைத்து அரசியல் கட்சிகள் உள்ளிட்டோருடன் ஆலோசிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றுவதே அரசின் வேலையே தவிர, அவர்களை ஆள்வதல்ல” என்று ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.

owaisi

பட மூலாதாரம், Getty Images

“முத்தலாக், பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோதி சில கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் அவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவருக்கு அண்மையில் கூறிய அறிவுரைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது” என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரான ஓவைசி தமது ட்விட்டர் பதிவில் விமர்சித்துள்ளார்.

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

இந்தியாவில் உள்ள பல்வேுறு சமூகங்கள், தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் திருமணம் , விவகாரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் வெவ்வேறு சட்டங்களை பின்பற்றி வருகின்றன.

இருப்பினும் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானதொரு சட்டம் ( பொது சிவில் சட்டம்) கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு சுதந்திரம் அடைந்த காலம்தொட்டே இருந்து வருகிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் மதம், பாலினம் உள்ளிட்ட பாகுபாடுகள் கருத்தில் கொள்ளப்படாது. அதாவது நாடு முழுவதும் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டம் இருக்கும்.

பாஜக தனது நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: