15 நாளே பழகிய நண்பன் மறைவால் வாடிய குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் பணம் திரட்டிய தோழன்

15 நாள் நட்பின் நெகிழ்ச்சிக் கதை

பட மூலாதாரம், LAXMI PATEL

படக்குறிப்பு, விபத்தில் உயிரிழந்த மங்கள்பாய்
    • எழுதியவர், லக்ஷ்மி படேல்
    • பதவி, பிபிசி குஜராத்தி

"நட்பு எவ்வளவு காலம் நீடித்தது என்பது முக்கியமில்லை. அந்த நட்பு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்பதே உறவின் வலிமையை தீர்மானிக்கும். என்னுடைய நட்பு வெறும் 15 நாட்கள் மட்டுமே நீடித்தது. ஆனால், 15 ஆண்டுகள் பழகிய உணர்வைத் தந்தது."

15 நாள் பழகிய நண்பர் உயிரிழந்ததால், அவருடைய குடும்பத்திற்கு உதவ வேண்டி லட்சக்கணக்கான ரூபாயை திரட்டிக் கொடுத்த 27 வயதேயான கான்ஜி தேசாயின் வார்த்தைகள் இவை.

குஜராத் மாநிலம் பானஸ்கந்தா மாவட்டத்தில் நெனாவா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 நாட்களுக்கு முன்புதான் கான்ஜி தேசாய் வேலைக்குச் சேர்ந்துள்ளார். 30 வயதான மங்கள் பாண்டியா அங்கே அவருடன் பணிபுரிந்துள்ளார்.

வெறும் 15 நாட்களில் அவர்களிடையே நல்ல நட்பு உருவாக, விபத்து ஒன்றில் மங்கள் பாண்டியா உயிரிழந்துவிட்டார்.

இருவரும் வெறும் 15 நாட்கள் மட்டுமே ஒன்றாக பணிபுரிந்து நட்பாக இருந்துள்ளனர். ஆனால், உயிரிழந்த நண்பரின் குடும்பத்திற்கு உதவ வேண்டி, சமூக வலைதளம் வாயிலாக கான்ஜி தேசாய் பிரசாரத்தை முன்னெடுத்தார். சில நாட்களிலேயே பெரும்பணத்தையும் திரட்டிவிட்டார்.

நெனாவா கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில் மங்கள்பாய் பாண்டியா சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

விபத்தில் திடீரென நண்பன் உயிரிழந்ததும் அவனது குடும்பத்தின் நிலை குறித்த கவலை கான்ஜி தேசாயை ஆட்கொண்டுவிட்டது. நண்பன் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான் என்று மனதை தேற்றிக் கொண்ட கான்ஜி தேசாய், அவனது குடும்பத்தினரின் துயர் போக்க பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்று தீர்மானித்துள்ளார்.

"வாட்ஸ்அப் குழு தொடங்கி பணம் திரட்டினோம்"

பிபிசியிடம் பேசிய கான்ஜி தேசாய், "வால்சத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தேன். 15 நாட்களுக்கு முன்புதான் நெனாவா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டேன். அங்கேதான் மங்கள்பாய் பாண்டியாவுடன் நட்பு ஏற்பட்டது. அவர் அங்கே 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்." என்று கூறினார்.

மங்கள்பாய் வீட்டிற்குத் திரும்பும் போது அவர் சென்ற இருசக்கர வாகனம் சறுக்கி கீழே விழுந்ததால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தததாக கான்ஜி தேசாய் கூறுகிறார். மங்கள்பாய் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்திற்கு உதவுமாறு பணியாளர்களிடம் அவர் பேசியுள்ளார்.

"பணியாளர்கள் உதவத் தயாராக இருந்தார்கள். ஆனால், பணத்திற்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அதனால், நானே பணத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறி வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கினோம்" என்கிறார் அவர்.

15 நாள் நட்பின் நெகிழ்ச்சிக் கதை

பட மூலாதாரம், LAXMI PATEL

படக்குறிப்பு, கான்ஜி தேசாய்

"என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டசை பார்த்ததும், பானஸ்கந்தாவில் இருந்து மட்டுமல்ல, வால்சத்தில் என்னுடன் பணிபுரிந்தவர்களும், நெனாவா கிராம நண்பர்களும் உதவினர். பானஸ்கந்தாவில் உள்ள பல்வேறு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களும், ஆசிரியர்கள் போன்ற பலரும் உதவத் தயாராக இருப்பதாகக் கூறினார்கள். ஆகவே, அவர்கள் அனைவரையும் வாட்ஸ்அப் குழுவில் இணைத்தேன்

வெறும் 15 பேருடன் தொடங்கிய வாட்ஸ்அப் குழு இரண்டே நாட்களில் 375 உறுப்பினர்களைக் கொண்டதாக பெருகியது. அந்த 375 பேரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு 3.25 லட்ச ரூபாயைத் திரட்டினோம். இதனை மங்கள்பாய் பாண்டியாவின் குடும்பத்திற்கு நாங்கள் நேரில் சென்று அளித்தோம்" என்று கான்ஜி தேசாய் கூறினார்.

மங்கள்பாய் குறித்து நெகிழும் கான்ஜி

மங்கள்பாய் பாண்டியா குறித்துப் பேசும் போது, "மங்கள் பாய் அனைவராலும் விரும்பக் கூடிய ஒருவர். நேசம் காட்டக் கூடியவர். மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் மனதளவில் மிகவும் வலிமையானவர்." என்கிறார் கான்ஜி தேசாய்.

"நாங்கள் அவன் வீட்டிற்குச் செல்லும் போதுதான் அது ஒரு குடிசை போனறு இருந்ததை தெரிந்துகொண்டோம். ஒரே ஒரு படுக்கையும், ஒரு இருசக்கர வாகனமுமே அவரது சொத்தாக இருந்தன.

10 பேரைக் கொண்ட குடும்ப பாரத்தை மங்கள்பாய் சுமந்தார். அவருக்கு 4 சகோதரர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 2 பேர் மட்டுமே உயிரோடு இருக்கின்றனர். அவர்களும் படிக்கத் தெரியாதவர்கள். அவர்களையும் மங்கள்பாய் தான் கவனித்து வந்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது அண்ணன் விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார்." என்று அவர் கூறினார்.

மங்கள்பாய் பாண்டியாவின் போராட்ட வாழ்க்கை பற்றிப் பேசிய கான்ஜி தேசாய், "மறைந்த அண்ணனின் இரு குழந்தைகள், விதவையான அவரது மனைவி ஆகியோரையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மங்கள்பாயே ஏற்றுக் கொண்டிருக்கிறார். வயதான பெற்றோருக்கும் அவரே ஆதாரமாக இருந்து வந்துள்ளார்." என்று கான்ஜி தேசாய் கூறினார்.

மங்கள்பாய் பாண்டியாவுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் திருமணமானதாக தகவல்கள் கூறுகின்றன.

நெனாவா ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 ஆயிரம் ரூபாய் என்ற நிலையான ஊதியத்தில் 5 ஆண்டுகளாக அவர் பணிபுரிந்து வந்துள்ளார். ஏராளமான குடும்ப பொறுப்புகளைச் சுமந்த அவருக்கு எந்தவொரு சேமிப்பும் இல்லை, காப்பீடும் இல்லை.

"மங்கள்பாய் - அந்த குடும்பத்தின் ஆதாரம் "

15 நாள் நட்பின் நெகிழ்ச்சிக் கதை

பட மூலாதாரம், LAXMI PATEL

படக்குறிப்பு, உடன் பணியாற்றும் சக தோழர்களுடன் கான்ஜி தேசாய்

மறைந்த மங்கள்பாய் பாண்டியா தான் அவரது குடும்பத்தின் தூணாக விளங்கியதாக பிபிசியிடம் பேசிய அவரது உறவினர் தயாபாய் பாண்டியா கூறினார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவர் ஒருவரே பராமரித்து வந்துள்ளார். மூத்த சகோதரரின் மறைவால் அவரது குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பும் அவரிடமே வந்துள்ளது.

"4 ஆண்டுகளுக்கு முன்பு மங்கள்பாயின் அண்ணன் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். தற்போது இரண்டாவது மகனையும் அந்த குடுமபத் சாலை விபத்தில் பறிகொடுத்துவிட்டது. அந்த குடும்பமே செய்வதறியாது தவிக்கிறது. மங்கள்பாய் பாண்டியாவுடன் பணிபுரிந்த கான்ஜி தேசாய் உடனடியாக அந்த குடும்பத்திற்கு உதவினார். மேலும் உதவி செய்வதாக அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்." என்று தயாபாய் பாண்டியா கூறினார்.

மங்கள்பாய் பாண்டியாவின் தந்தை ஒரு டெய்லராக இருந்துள்ளார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவர் தற்போது படுத்த படுக்கையாக இருக்கிறார். வயல் வெளியில் மங்கள்பாய் கட்டிய ஒரு அறையில்தான் அந்த குடும்பமே வாழ்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: