பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், கலந்தாய்வில் எப்படி கலந்துகொள்வது, எப்படி சரியான கல்லூரிகளைத் தேர்வுசெய்வது?
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி இன்று வெளியிட்டார். முதல் மூன்று இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர். விரைவில் கலந்தாய்வுத் தேதி அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் சுமார் ஒன்றரை லட்சம் இடங்கள் இருக்கின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளில் உள்ள பொறியியல் படிப்புகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுக்கான இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்தக் கலந்தாய்வை ஆன் - லைன் மூலம் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. தனியார் கல்லூரிகளில் உள்ள ஐம்பது சதவீத இடங்களும் இந்த ஒற்றைச் சாளர முறையின் மூலமே நிரப்பப்படுகின்றன.
இந்த ஒற்றைச் சாளர முறையில் பங்கேற்க மாணவர்கள் மே மாதம் 4ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதிவரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். மொத்தமாக 2,29,167 பேர் இதில் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களில் 1,87,693 பேர்தான் சரியான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனர். இந்தச் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணிகள் கடந்த இருபதாம் தேதிவரை நடைபெற்றது. இதில் 1,55,124 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இதற்குப் பிறகு, இந்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தரவரிசையை www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின்படி நேத்ரா என்ற மாணவி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். ஹரினிகா என்ற மாணவி இரண்டாவது இடத்தையும் ரோஷிணி பானு என்ற பெண் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தமாக 102 மாணவர்கள் 200க்கு 200 என்ற கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர்.
பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, 18,766 பேர் கூடுதலாக தகுதி பெற்றிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் 28,425 பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தர வரிசை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 5,842 பேர் கூடுதலாகத் தகுதிபெற்றுள்ளனர்.
தற்போது பொறியியல் படிப்புக்குத் தகுதி பெற்றிருப்பவர்களில் 1,57,661 பேர் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள். 20,084 பேர் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழும் 809 பேர் ஐ.சி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழும் படித்தவர்கள். 405 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இனி அடுத்ததாக மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
விண்ணப்பித்து தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்கான இணையதளத்தில் log-in செய்து உள்ளே நுழைய வேண்டும். கலந்தாய்வு துவங்கும் தினத்தில் முதல் இரண்டு நாட்கள் பதிவுக்கென ஒதுக்கப்படும். இதற்குப் பிறகு அவர்கள் எந்தச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்பதெனத் தெரியும். மொத்தம் ஐந்து சுற்று கலந்தாய்வு நடக்கும்.
கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள், கல்லூரி மற்றும் பாடங்களைத் தேர்வு செய்வதற்கான நாட்கள். இந்த மூன்று நாட்களுக்குள் நாம் சேர விரும்பும் கல்லூரியையும் பாடத்திட்டத்தையும் தேர்வுசெய்யலாம். இதில் எவ்வளவு கல்லூரிகளை வேண்டுமானாலும் பாடத்திட்டங்களை வேண்டுமானாலும் மாணவர்கள் தங்கள் விருப்பமாக தேர்வுசெய்யலாம். மூன்றாவது நாள் ஐந்து மணிக்குள் மாணவர்கள் இதனைத் தேர்வுசெய்து முடிக்க வேண்டும்.
ஒரு நாள் கழித்து இந்த சுற்றின் முடிவுகள் வெளியாகும். ஒரு மாணவருக்கு விரும்பிய கல்லூரியில், விரும்பிய படிப்பு அவருடைய கட் - ஆஃபை வைத்து கிடைக்கலாம். அல்லது கிடைக்காமல் போகலாம். அவருடைய தேர்வின் அடிப்படையில் வேறு கல்லூரிகளிலும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.
இதனை ஏற்கவோ, மறுக்கவோ மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். அதாவது சம்பந்தப்பட்ட மாணவர்கள் இதனை முழுமையாக ஏற்கலாம். அல்லது தான் விரும்பிய கல்லூரியோ படிப்போ கிடைத்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லலாம். அல்லது இதை நிராகரித்துவிட்டு, அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கலாம். அல்லது கலந்தாய்விலிருந்தே விலகிக் கொள்ளலாம்.
இப்படியாக, ஐந்து சுற்று கலந்தாய்வுகள் நடக்கும். பிறகு, மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சென்று பணத்தைக் கட்டி சேர்ந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு கலந்தாய்வு யாருக்கு சாதகமாக இருக்கும், யாருக்கு சவாலாக இருக்கும்?
இந்த ஆண்டு கலந்தாய்வைப் பொறுத்தவரை 200 முதல் 170வரை கட் - ஆஃப் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்கும் என்கிறார் கல்வி ஆலோசகரான ஜெயப் பிரகாஷ் காந்தி.
"இந்த ஆண்டு தரவரிசையில் மாணவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, 200 முதல் 170வரை கட் ஆஃப் கொண்ட மாணவர்களுக்கு சாதகமான நிலை இருக்கிறது. கடந்த ஆண்டு 170 கட் - ஆஃபுக்கு மேல் சுமார் 35 ஆயிரம் பேர் எடுத்திருந்தார்கள். இந்த ஆண்டு அது 33 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது. ஆகவே, இந்த மதிப்பெண்களுக்குள் உள்ள மாணவர்களுக்கு நல்ல கல்லூரிகளைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு கூடுதலாகக் கிடைக்கும்.
அடுத்ததாக, கட் - ஆஃப் மதிப்பெண்கள் 150 முதல் 160வரை இருப்பவர்களின் நிலையில் பெரிய மாற்றம் இருக்காது. கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி சுமார் 50,000 பேர் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களது நிலையில் மாற்றமில்லை.
ஆனால், 120க்கு மேல் கடந்த ஆண்டு 1,10,000 பேர் பெற்றிருந்தார்கள். அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரமாக உயர்ந்திருக்கிறது. ஆகவே, போட்டி அதிகமாக இருக்கும்" என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.
கல்லூரிகளை எப்படித் தேர்வுசெய்வது?

பட மூலாதாரம், Getty Images
"கல்லூரிகளைத் தேர்வுசெய்யம்போது National Institutional Ranking Frameworkல் அதன் தர வரிசையைப் பார்க்க வேண்டும். அல்லது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலின் (NAAC)மதிப்பீட்டைப் பெற்ற கல்லூரியா என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்ததாக, பாடத்திட்டத்தில் இருப்பதைவிட கூடுதலாக கற்றுத்தருவார்களா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கூடுதல் மொழிகளைக் கற்கும் வாய்ப்புள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
இதற்குப் பிறகு, அந்த கல்லூரிக்கு Core நிறுவனங்கள் எனப்படும் அடிப்படை பொறியியல் நிறுவனங்கள் எவ்வளவு வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்டர்ன்ஷிப் வாங்கித் தருவார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.
பிறகு, அந்தக் கல்லூரியில் தேர்ச்சி விகிதம் எப்படியிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு மாணவர் சேரும் கோர்சுக்கு முக்கியத்துவம் தருவதைவிட, கல்லூரிக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. விரும்பிய கோர்ஸ் கிடைக்காவிட்டாலும் நல்ல கல்லூரியில் வேறு கோர்ஸைத் தேர்வுசெய்யலாம்" என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.
100-150க்குள் மதிப்பெண்களை வைத்திருப்பவர்கள் கூடுதலாக கல்லூரிகளையும் பாடத்திட்டங்களையும் தேர்வுசெய்வது அவசியம் என்கிறார் அவர்.
மேலும், மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டிய வேறு சில விஷயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு கல்லூரியை தேர்வுசெய்யும் முன்பு, அந்தக் கல்லூரி குறித்து நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி. எல்லாக் கட்டணங்களையும் தெரிந்து கொண்டு, அந்தக் கல்லூரியைத் தேர்வுசெய்வது நல்லது என்கிறார் அவர். அதேபோல, அங்கு படிக்கும் மாணவர்களிடமும் விசாரிப்பது கல்லூரியைத் தேர்வுசெய்வதில் கூடுதலாக உதவும் என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












