You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்து யாத்திரை: கடை பெயர்ப் பலகையில் உரிமையாளர் பெயர் கட்டாயமா? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள கடைகளின் வெளியே அதன் உரிமையாளர் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்ற உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகளின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் ஜூன் 22-ம் தேதி இடைக்கால தடை விதித்துள்ளது.
நீதிபதி ரிஷிகேஷ் ராய் மற்றும் நீதிபதி எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனுடன், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் கடை வைத்திருப்பவர்களின் பெயர்களை பெரிய எழுத்துகளில் கடையின் பெயர் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ள மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகளுக்கும் இந்த அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உணவங்களின் என்ன வகையான உணவுகள் வழங்கப்படுகிறன என்பது குறித்து தெரியப்படுத்தலாம் ஆனால், உரிமையாளர்களின் பெயர், பணியாளர்களின் பெயர் ஆகியவற்றை வெளிப்படுத்த கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
பிபிசி கள ஆய்வு
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வருவதற்கு முன்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாஃபர் நகரில் கன்வார் யாத்திரைக்காக என்னென்ன மாற்றங்கள் செய்ய கடை உரிமையாளர்கள் வற்புறுத்தப்பட்டனர் என்பதை அறிய பிபிசி கள ஆய்வு செய்தது.
ஹரித்வார் செல்லும் வழியில், முசாபர்நகர் அருகே பஜேரி புறவழிச் சாலையில் நடத்தப்பட்டு வரும் பஞ்சாபி தாபாவை இந்து, இஸ்லாமிய உரிமையாளர்கள் இருவர் ஒன்றாக நடத்தி வருகின்றனர்.
இப்போது, உரிமையாளர் தவிர, இந்த உணவு விடுதியில் ஒரு இஸ்லாமியர் கூட பணிபுரியவில்லை. இங்கே வேலை செய்து வந்த ஷாருக்கான் என்ற கடைசி இஸ்லாமிய ஊழியரும் இப்போது வெளியேறிவிட்டார்.
இந்த உணவு விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வரும் பிரவீன் இதுகுறித்து கூறுகையில், ‘இப்போது இங்கே இந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். சர்ச்சை வெடித்த பிறகு, ஷாருக்கான், தன்னால் இந்த உணவு விடுதிக்கு எந்த ஆபத்தும் வந்துவிட வேண்டாம் என்று அவராகவே பணியில் இருந்து விலகிவிட்டார்’ என கூறுகிறார்.
முசாபர்நகர் நிர்வாகத்தினர் கன்வார் யாத்திரையின் போது, பழக்கடை, தாபா, இனிப்புக்கடை போன்ற உணவு விற்பனை இடங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்களை பெரிதாகவும், தெளிவாகவும் இருக்கும்படி எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதை மக்கள் தானாக முன்வந்து செய்ய வேண்டும் என காவல்துறையினர் பின்னர் கூறியிருந்தனர்.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில், "ஆன்மிக நிகழ்வான கன்வார் யாத்திரையின் போது மக்கள் யாரும் அவர்களது மதவுணர்வு ரீதியாக புண்பட்டுவிடாமலும், எந்த குழப்பங்களும் நிகழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்." என்று தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள், இந்த அறிவிப்பு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றே வெளியாகி இருப்பதாக உணர்கின்றனர். இந்த அறிவிப்பால், இந்த பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் சாலையோர தாபா-க்களில் இனி இஸ்லாமியர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
சிலர் தங்கள் வேலையை விட்டுவிட்டனர், சிலர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். சில உரிமையாளர்கள் இந்த புனித யாத்திரை மாதமான ‘ஷ்ரவன்’-க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது என வாதிடுகின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கன்வார் யாத்திரை என்றால் என்ன?
ஒவ்வோர் ஆண்டும் ஷ்ரவன் மாதத்தின் போது லட்சக்கணக்கான கன்வாரியர்கள் ஹரித்வாரில் இருந்து புனித நீருடன் முசாபர்நகர் வழியே செல்கின்றனர்.
இந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உணவுக் கடை உரிமையாளர்கள் அவர்கள் கடைகளில் பணிபுரியும் வேலையாட்களின் பெயர்களை கடைக்கு வெளியே எழுதிவைக்க காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறை உத்தரவுக்கு பிறகு, பெரும்பாலான இஸ்லாம் கடைகளில், உரிமையாளர் மற்றும் வேலையாட்களின் பெயர்கள் பெரிய எழுத்துகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
சிலர் அவர்களாக முன்வந்து எழுதி வைத்ததாக கூறினாலும், சிலர் காவல்துறையின் கட்டாயத்தின் பேரில் இதனை செய்ததாக கூறுகிறார்கள்.
ஹரித்வாரில் இருந்து வரும் பிரதான சாலை மதீனா சவுக் (Madina Chowk) வழியாக முசாபர்நகருக்குள் நுழைகிறது.
இப்போது, கடைகளின் வெளியே வெள்ளைப் பலகைகளில் சிவப்பு நிறத்தில் பெரிய எழுத்துகளில் இஸ்லாமிய உரிமையாளர்களின் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி - ஹரித்வார் நெடுஞ்சாலை மற்றும் பிற பகுதிகள் மற்றும் நகர்ப்புற சாலைகளிலும் இதே சூழல் தான் நிலவுகிறது.
முசாபர்நகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங், கடைக்காரர்கள் அவர்களாக முன்வந்து பெயர் பலகை வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறுகிறார்.
உண்மை நிலவரம் என்ன?
ஆனால், உண்மை நிலவரம் வேறுவிதமாக இருக்கிறது.
கத்தவுளி (Khatauli) எனும் இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக லவ்வர்ஸ் டீ பாயின்ட் (Lovers Tea Point) என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த தேநீர் விடுதியின் பெயர் இப்போது வகீல் சாப் சாய் (Vakil Saab Chai) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடையின் உரிமையாளர் வகீல் அகமது காவல்துறையினர் ஆட்சேபம் தெரிவித்ததால் பெயர் மாற்றம் செய்ததாக கூறுகிறார்.
மேலும் இவர் கூறுகையில். காவல்துறை அறிவுறுத்தல் பெயரில் ‘வகீல் சாப்’ என பெயர் மாற்றிய பிறகு காவலர்கள் மீண்டும் என்னிடம் வந்து, நான் இஸ்லாமியர் என்பதை தெரியும்படியாக வகீல் அகமது என பெரிய எழுத்தில் எழுதி பெயர்பலகை வைக்க கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளாக நடத்தி வந்த கடையின் பெயரை மாற்றியது வருத்தமளிப்பதாக வகீல் கூறுகிறார்.
மேலும் இவர், ‘இது மத ரீதியான பிரிவினையை அதிகரித்து, இஸ்லாமியர்களை தனிமைப்படுத்துவதற்கான முயற்சி. நாங்கள் தொழில் செய்தாக வேண்டும். நிர்வாகத்தை எதிர்த்து நாங்கள் என்ன செய்ய முடியும்’ என கூறுகிறார்.
முசாபர்நகர் பங்கேலா (Bhangale) கிராமத்தின் நெடுஞ்சாலையில் தேநீர் கடை நடத்தி வரும் ஆசிப் என்பவர், பெயர் பலகையை மாற்ற உட்படாததால்காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவலர்கள் மிரட்டியதாக கூறுகிறார்.
"உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேந்திரா மாலிக் தலையிட்ட பிறகு தான் என்னை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தனர். விடுவிக்கும் முன், என் பெயருடனான பெரிய பலகையை காவல்துறையினரே தன் கடைமுன் வைத்துவிட்டனர்" ஆசிப் மேலும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பணியாளர்களை நீக்க உத்தரவு
பெரும்பாலான உணவு விடுதி உரிமையாளர்கள் காவல்துறையினர் எங்களிடம் வந்து முஸ்லிம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குமாறு கூறியதாக தெரிவிக்கின்றனர்.
இந்த தாபா அருகே வேறொரு உணவு விடுதி நடத்தி வரும் இந்து உரிமையாளர், ‘சில நாட்களுக்கு முன் காவல்துறையினர் என்னிடம் வந்து, என் உணவகத்தில் முஸ்லிம்கள் பணிபுரிகிறார்களா என விசாரித்தனர். நான் ஒருவர் வேலை செய்கிறார் என கூறினேன். முஸ்லிம்களை வேலைக்கு பணியமர்த்த வேண்டாம் என அறிவுறுத்தி சென்றனர்’ என கூறுகிறார்.
முன்பு, இந்த உணவு விடுதியை ஒரு இஸ்லாமியர் தான் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஒரு சர்ச்சைக்கு பிறகு, அவர் இந்த உணவு விடுதியை மூடிவிட்டார். இப்போது அந்த கடையை ஒரு இந்து நடத்தி வருகிறார்.
தற்போது இந்த உணவு விடுதியை நடத்தி வரும் இந்து உரிமையாளர் கூறுகையில், ‘இங்கே வியாபாரம் செய்து வந்த இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதைக்கு இந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்து வருகின்றனர்’ என்கிறார்.
தனது உணவகத்தில் இருந்து மேலாளர் உட்பட நான்கு வேலையாட்களை நீக்கிய உரிமையாளர், ‘ எங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளுங்கள், நாங்கள் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை’ என கூறுகிறார்.
காவல்துறை கூறுவது என்ன?
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முசாபர்நகரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் பதில் கூற மறுத்துவிட்டார்.
‘காவல்துறை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதைத் தவிர நாங்கள் சொல்வதற்கு வேறேதும் இல்லை’ என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் கத்தவுலி பகுதியில் நிறைய கடை உரிமையாளர்கள், தங்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால், காவல் நிலைய அதிகாரி, ‘காவல்துறையினர் எந்த கடைகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் சென்று முஸ்லிம் பணியாளர்களை பணியில் இருந்து நீக்குமாறு கூறவில்லை’ என்கிறார்.
இந்த சர்ச்சை எப்படி துவங்கியது?
இந்து தெய்வங்கள் பெயர்களில் இஸ்லாமியர்கள் நடத்தும் உணவு விடுதிகளை மூட வேண்டும் என உள்ளூர் இந்து மதவாதத் தலைவர் சுவாமி யஷ்வீர் கடந்த ஆண்டு துவங்கிய பிரசாரத்தில் இருந்து இந்த சர்ச்சை உருவெடுத்துள்ளது.
சுவாமி யஷ்வீரின் பிரசாரத்திற்கு பிறகு, நிர்வாகத்தினர் இந்து பெயர்களில் நடத்தப்பட்டு வந்த இஸ்லாமிய உரிமையாளர்களின் கடைகளுக்கு எதிராக கடுமையான நடவடக்கைகள் எடுத்தனர்.
சுவாமி யஷ்வீர் இதுகுறித்து கூறுகையில், "இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க இஸ்லாமியர்கள் தூய்மையற்ற மற்றும் புனிதமற்ற உணவுகளை தயாரிக்கின்றனர். கடந்த வருடம் எங்கள் குரல் ஓங்கி ஒலித்த பிறகு, இஸ்லாமியர்களின் உணவகங்கள் மூடப்பட்டன. இம்முறை அரசு நிர்வாகத்தினரிடம் இஸ்லாமியர்களுடன் எங்களுக்கு பிரச்னையும் இல்லை, அவர்கள் பெரிய எழுத்துகளால் பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைத்தால் போதும், எனவே யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்கள் கவனமாக இருப்பார்கள் என தெரிவித்துவிட்டோம்." என்று கூறியுள்ளார்.
இந்த பிரசாரம், சமூகத்தில் பிரிவினை ஏற்படுத்த வழிவகுத்துவிடாதா என்ற கேள்விக்கு, "தாங்கள் சாப்பிடப் போகும் உணவகத்தின் உரிமையாளர் யார் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை இந்துக்களுக்கு இருக்கிறது. எங்கள் கோரிக்கைக்கு இணங்கி நிர்வாகம் இதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இது உத்தரபிரதேசம் மற்றும் இந்தியா முழுக்க பின்பற்றப்பட வேண்டும், அதனால் உணவகங்களை யார் நடத்துகின்றனர் என்பது பகிரங்கமாக்கப்படும்" என்கிறார்.
இது இஸ்லாமிய தொழிலதிபர்களுக்கு எதிரானது அல்ல என்று கூறுகிறார் யஷ்வீர்.
மேலும் இவர், ‘கன்வார் யாத்திரை செல்லும் பக்தர்கள், தாங்கள் யாரிடமிருந்து உணவுப் பொருட்கள் வாங்குகிறோம் என்பதை கட்டாயம் அறியவேண்டும்’ எனும் யஷ்வீர், ‘இந்துக்கள் இஸ்லாமியர்களின் கடைகளுக்கு செல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனில், இருக்கட்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை விட, நம் மதத்தின் புனிதம் தான் முக்கியம்’, என கூறியுள்ளார்.
பஜேரி கிராமத்தில் வசித்துவரும் வாசிம் அகமது கடந்த 9 ஆண்டுகளாக கணபதி தாபா என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு எழுந்த சர்ச்சையால் அவர் தனது உணவகத்தை விற்பனை செய்துவிட்டார்.
மேலும் இவர் கூறுகையில், ‘என் பெயர் வாசிம் அகமது. இப்போது சிலர் அரசியல் ஆதாயத்திற்காகவும், அவர்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் எங்களை போன்ற மக்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்கின்றனர். நான் 2014 ஆம் ஆண்டிலிருந்து கணபதி தாபா நடத்தி வந்தேன். கடந்த ஆண்டு ஒரு காவல் குழுவினர் என்னிடம் வந்து என் பெயரைக் கேட்டு, உணவகத்திற்கு கணபதி என பெயர் வைக்க யார் உனக்கு உரிமை அளித்தது? என கேட்டனர். இந்நாட்டின் சட்டம் எனக்கு தொழில் செய்ய உரிமை அளித்துள்ளது என பதில் கூறினேன்’ என்றார்.
என் உணவகத்தின் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பிரசாரங்கள் மேற்கொண்டனர். அதனால் என் உணவகத்தை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் என்கிறார் வாசிம் அகமது.
இந்துக்களுடன் இணைந்து உணவகம் நடத்தி வந்த இஸ்லாமிய உரிமையாளர்கள் வர்த்தக ரீதியாக இழப்பைச் சந்தித்துள்ளனர்.
பஞ்சாப் தட்கா தாபாவின் உரிமையாளர் நசீம் தியாகி, ‘கடந்த வருடம் இந்த சர்ச்சையால் பெரியளவு இழப்பு நேரிட்டது. அதில் இருந்து நாங்கள் மீண்டுவிடுவோம் என்று நினைத்திருந்த நேரத்தில், இப்போது ஒரு புதிய உத்தரவு வந்துள்ளது’, என்கிறார்.
மேலும் நசீம் தியாகி, ‘எங்கள் உணவகத்தில் எந்த மத ரீதியான குறியீடும் இல்லை. ஆனால், நிறைய முறை எங்கள் உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள், உரிமையாளர் இஸ்லாமியர் என அறிந்த பிறகு சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகின்றனர். ஆரம்பத்தில் இது வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது, சாப்பிட விரும்புவோர், அவரவர் சாப்பிட விரும்பும் இடத்தில் சாப்பிடட்டும், நமக்கு எது கிடைக்குமோ அது கிடைக்கும் என பொறுமையாக இருக்கிறேன்’ என கூறுகிறார்.
கன்வாரியர்கள் கூறுவது என்ன?
கன்வார் யாத்திரை வருகிற ஜூலை 22 ஆம் தேதி துவங்கவுள்ளது. ஆனால், பளுவான கன்வார் ஏந்தி செல்லும் பக்தர்கள் ஏற்கனவே தங்கள் பயணத்தைத் துவங்கிவிட்டனர்.
200 கிலோ கன்வார் ஏந்தி செல்கிறார் ஆகாஷ் எனும் சிவ பக்தர். இவருடன் பயணம் மேற்கொள்ளும் விஷால் 100 கிலோ கன்வார் (மூங்கிலால் செய்யப்பட்டு பக்தர்கள் தங்கள் தோளின் மீது ஏற்றி செல்லும் காவடி போன்ற பொருள்) ஏந்தி செல்கிறார். இவர்கள் சில அடிதூரங்களுக்கு ஒருமுறை நிறுத்தி, நிறுத்தி பயணத்தைத் தொடர்கின்றனர்.
அமைதிக்காகவும், குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் பளுவான கன்வார் ஏந்தி செல்வதாக ஆகாஷ் கூறுகிறார்.
பெயர் மாற்றம் குறித்த சர்ச்சைப் பற்றி பேசிய விஷால், ‘பொருட்கள் வாங்கும் கடை இந்துவுடையதா, இஸ்லாமியர் உடையதா என்றெல்லாம் எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் பொருட்களை வாங்கும் போது யாருடைய பெயரையும் பார்த்து வாங்குவதில்லை. இந்த இந்து - முஸ்லிம் பேச்செல்லாம் வெறும் அரசியலுக்காக தான். யாரேனும் ரத்தத்தைக் கண்டு, எது இந்துவுடையது? இஸ்லாமியர் உடையது? என்று சொல்ல முடியுமா’ என கூறுகிறார்.
இதுகுறித்து பெரிய மற்றுமொரு கன்வாரியரான ஹிமான்சு பேசுகையில், ‘ நான் 18 ஆண்டுகளாக கன்வார் ஏந்தி செல்கிறேன். என் மீதமுள்ள வாழ்நாளில் இதைத் தொடர்வேன். கன்வாருடன் நான் வீடு திரும்பும் போது எனக்கு நிம்மதி கிடைக்கிறது.’
பெயர் மாற்ற சர்ச்சைப் பற்றி பேசிய ஹிமான்சு, ‘ கன்வார் எங்களுக்கு மிகவும் புனிதமானது. எங்கள் நம்பிக்கை சீர்குலைந்துவிட கூடாது என்று மட்டும் தான் விரும்புகிறோம். இதில் தூய்மை இருக்க வேண்டும். எனக்கு இஸ்லாமியர்கள் உடன் எந்த பிரச்னையும் இல்லை. இஸ்லாமியர்களின் கடைகளில் இருக்கும் பொருட்கள் எனக்கு பிடித்திருந்தால், அதை வாங்குவேன். இதனால் என் கான்வார் சேதமடைந்துவிடாது. செல்லும் வழியில் நிறைய இஸ்லாமியர்கள் ஜெய் ஷங்கர் என கோஷமிடுகின்றனர். இது நல்ல உணர்வை அளிக்கிறது’ என கூறுகிறார்.
கன்வார் யாத்திரையில் குழுவாக பலருடன் சேர்ந்து பயணிக்கும் கன்வார் பக்தரான சோனு சர்மா இதுகுறித்து பேசுகையில், ‘எங்களுடன் பிரச்னையில் யாரும் ஈடுபடாத வரையில், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் தூய மனதுடன் கன்வார் ஏந்தி செல்கிறோம். இவற்றுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது. ஆனால், இதில் சாமானிய மக்கள் யாரும் சம்மந்தப்பட மாட்டார்கள் என நம்புகிறேன்.’ என கூறுகிறார்.
பஜேரி புறவழிச் சாலையில் தேநீர் கடை நடத்தி வருகிறார் ரஷீத். பெயர் மாற்றத்துடன் கூடிய பெரிய பலகை வைக்க பணம் இல்லாததால், இவர் ஒரு வெள்ளை அட்டையில் பெயர் எழுதி வைத்துள்ளார்.
ரஷீத் ஒரு குடிசையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூட்டமாக வந்த கன்வார் பக்தர்கள் இவரது கடையில் நின்று தேநீர் குடித்தனர்.
‘எனது 12 வயதில் இருந்து சிவபக்தர்களுக்கு சேவை செய்து வருகிறேன். நான் இதை மன மகிழ்ச்சியுடன் செய்கிறேன். நான் அவர்களுடன் பழகுவதில் யாருக்கும் பிரச்னை இல்லை’ என்கிறார் ரஷீத்.
சோனிபத் எனும் இடத்தில் இருந்து கன்வார் ஏந்தி வரும் தீபக் சர்மா, தனது குழுவினருடன் இங்கே தங்கி இருக்கிறார். இவர், "நாங்கள் ஆன்மீக பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் மனதில் எந்த பிரிவினையும் இல்லை. சமூகத்தில் மதப் பிரிவினை முடிவுக்கு வர வேண்டும். நாம் இன்னமும் இந்து - முஸ்லிம் என பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், மதம் நமக்கு எதை தான் கற்பித்துள்ளது?" என கூறுகிறார்.
‘சூழலை கெடுக்க முயற்சிக்கின்றனர்’
பைகம் இ இன்சானியத் (Paigham E Insaniyat) எனும் அமைப்பினர் முசாபர்நகரில் கன்வார் யாத்திரை பக்தர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் முகாம் அமைத்து வந்தனர். ஆனால், இம்முறை அவர்கள் முகாம் அமைக்கவில்லை.
இந்த அமைப்பின் தலைவர் ஆசிப் ரஹி பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் பக்தர்களுக்காக முகாம்கள் அமைத்து வைப்போம். ஆனால், இம்முறை முன்னெச்சரிக்கை காரணங்களால் நாங்கள் முகாம்கள் அமைக்கவில்லை. வெகுதூரத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் எங்கள் முகாம்களில் தங்குவார்கள். நாங்கள் இஸ்லாமியர் என அவர்கள் அறிந்து தான் எங்களுடன் தங்குவார்கள். ஆனால், இம்முறை சூழல் வித்தியாசமாக உள்ளது. எங்கள் மனதில் நிறைய அச்சங்கள் எழுந்துள்ளன" என்றார்.
தொடர்ந்து பேசிய ரஹி, ‘கலவரங்களை சந்தித்திருப்பது முசாபர்நகரின் துரதிர்ஷ்டம். இந்த புதிய பிரிவினை இங்கிருந்து துவங்கி இருக்கிறது. துரித உணவை ராம் சாட் பந்தரில் சாப்பிடுவதும், பழங்களை ஆரிஃப்பிடம் இருந்து வாங்குவதும் மக்களின் விருப்பம். ஆனால், மக்களின் இந்த விருப்பம் இப்போது அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த புதிய நடைமுறையின் வெளிப்பாடு நிச்சயம் சமூகத்திற்கு நல்லதல்ல.”
(முசாபர்நகரில் இருந்து அமித் சைனி வழங்கிய செய்தி)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)