You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் ஒருவர் அதிகபட்சம் எத்தனை சிம் கார்டு பயன்படுத்தலாம்? கூடுதலாக இருந்தால் என்ன தண்டனை?
ஒருவர் தனது பெயரில் 9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் கடுமையான அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பெயரில் சிம் கார்டு இருக்கிறதா என்பதை எப்படி அறிந்துகொள்வது? அப்படியிருந்தால் என்ன செய்வது?
2023ஆம் ஆண்டின் புதிய தொலைத்தொடர்பு சட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், ஒருவர் தனது பெயரில் அளவுக்கு அதிகமான மொபைல் போன் இணைப்புகளை வைத்திருந்தால் சிறை தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்கப்படலாம்.
ஒருவர் தனது பெயரில் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம், உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டிருந்தால் என்ன செய்வது போன்ற விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சிக்கலை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமான மொபைல் இணைப்புகள்
கேள்வி: ஒருவர் தனது பெயரில் எத்தனை மொபைல் இணைப்புகளை வைத்திருக்கலாம்?
பதில்: ஒருவவர் தனது பெயரில் எத்தனை மொபைல் போன் இணைப்புகளை வைத்திருக்கலாம் என்பதை புதிய தொலைத் தொடர்பு சட்டம், 2023 வரையறுக்கவில்லை. ஆனால், ஏற்கனவே உள்ள விதிமுறைகளின்படி, ஒருவர் தனது பெயரில் 9 சிம் கார்டுகளை வைத்திருக்கலாம்.
ஆனால், இந்த விதி சில மாநிலங்களுக்குப் பொருந்தாது. ஜம்மு - காஷ்மீர், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்கள் பெயரில் ஆறு சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும்.
கேள்வி: ஒருவரது பெயரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் இணைப்புகள் இருந்தால் என்ன செய்வது?
பதில்: தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களில் புதிய சிம் கார்டை வாங்கும் போதே, ஒருவரது பெயரில் எத்தனை எண்கள் இருக்கின்றன என்பதை அந்த நிறுவனங்கள் பரிசோதித்து, வாடிக்கையாளருக்குத் தெரிவித்துவிடுகின்றன.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதிவாக்கில், ஒருவர் தனது பெயரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான இணைப்புகளை வைத்திருந்தால், அவற்றை மறுபரிசீலனை செய்யும்படி தொடர்ச்சியாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவுறுத்தி, கூடுதல் இணைப்புகள் குறித்து எச்சரித்திருக்கின்றன.
கூடுதலாக இணைப்புகளை வைத்திருந்தவர்கள், அந்த இணைப்புகளை துண்டிக்கவோ, வேறு ஒருவர் பெயரில் மாற்றவோ வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.
தன்னுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது தொலைபேசி எண்களைப் பெற்றிருக்கிறார்களா என்பதை தனி நபர் ஒருவர் தானாகவே சோதிக்க முடியும்.
இந்திய தொலைத்தொடர்புத் துறையின் இணையதளம்
கேள்வி: ஒருவர் தானாகவே தன் பெயரில் எத்தனை இணைப்புகள் இருக்கின்றன என்பதை எப்படி அறிவது?
பதில்: இதற்கென இந்திய தொலைத்தொடர்புத் துறை https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற இணையதளத்தை வைத்திருக்கிறது.
இந்த இணையதளத்தில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவிட்டால், உங்கள் பெயரில் எத்தனை இணைப்புகள் இருக்கின்றன, அந்த எண்கள் என்ன என்பதை அறிய முடியும்.
கேள்வி: அப்படிப் பரிசோதிக்கும் போது, தனக்குத் தெரியாமல் தன் பெயரில் இணைப்புகள் இருப்பது தெரியவந்தால் என்ன செய்வது?
பதில்: இதே இணையதளத்தில், உங்கள் பெயரில் உள்ள மொபைல் எண்களைப் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியாமல் கூடுதலாக எண்கள் இருப்பது தெரியவந்தால், அது தான் வாங்கிய எண் அல்ல என்பதை தொலைத் தொடர்புத்துறைக்குத் தெரிவிக்க முடியும்.
தெரிந்தே வாங்கியிருந்த எண், தற்போது தேவையில்லை என்றாலும், அந்த எண் தேவையில்லை என்பதைப் பதிவுசெய்ய முடியும்.
நீங்கள் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ததும், உங்கள் பெயரில் இருக்கும் மொபைல் எண்களை இந்தத் தளம் பட்டியலிடும். ஒவ்வொரு எண்ணுக்கு எதிராகவும் 'Not My Number', 'Not Required', 'Required' என்ற வாய்ப்புகள் இருக்கும்.
உங்களுக்குத் தெரியாமல் எண் வாங்கப்பட்டிருந்தால், 'Not My Number' என்ற வாய்ப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.
நீங்கள் தெரிந்தே வாங்கிய எண்கள் தற்போது தேவையில்லையென்றால் 'Not Required' என்ற வாய்ப்பைத் தேர்வுசெய்யலாம்.
3 ஆண்டுகள் வரை சிறை
கேள்வி: நம்முடைய மொபைல் எண்ணை வேறொருவர் இந்த இணையதளத்தின் மூலம் செல்லாததாக்கவோ, ரத்துசெய்யவோ முடியுமா?
பதில்: முடியாது. மொபைல் எண்ணைப் பதிவிட்டவுடன், ஒரு முறை பயன்படுத்தத்தக்க கடவுச் சொல் நம்முடைய மொபைல் எண்ணுக்குத்தான் வரும் என்பதால், நாம் வைத்துள்ள எண்ணை வேறொருவர் ரிப்போர்ட் செய்ய முடியாது.
கேள்வி: ஒருவரது பெயரில் ஒன்பதுக்கும் மேற்பட்ட எண்கள் இருந்தால் என்ன ஆகும்?
பதில்: இது தொடர்பாக புதிய தொலைத் தொடர்புச் சட்டம் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், "obtains telecommunication identifiers through fraud, cheating or personation" என்பதைக் குற்றமாகக் குறிப்பிடுகிறது.
இந்தக் குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையோ, 50 லட்ச ரூபாய் வரை அபராதமோ விதிக்கப்படலாம். இது ஒருவர் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்ற எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. ஆனால், ஏற்கனவே உள்ள விதிகளை மீறி கூடுதல் எண்களைப் பெறுவது இதன் கீழ் தண்டிக்கப்படலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)