குரூப் 1 தேர்வு: 4 உயரதிகாரிகள் உட்பட 9 பேர் மீது சான்றிதழ் முறைகேடு வழக்கு - எப்படி நடந்தது?

- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ் வழியில் படித்ததாக முறைகேடான சான்றிதழைச் சமர்ப்பித்து அரசுப் பணியில் சேர்ந்ததாக நான்கு உயர் அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
போலிச் சான்றிதழ்களை விநியோகிப்பதை ஒரு வணிகமாகவே சிலர் செய்து வந்துள்ளதாகக் கூறுகிறார், வழக்கு தொடர்ந்த சக்தி ராவ்.
சான்றிதழ் முறைகேடுகளைக் கண்டறியும் வகையில் தனி துறை ஒன்று விரைவில் செயல்படவுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வேலைகளை மேற்கொண்டு வருவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து அரசுப் பணியை பெற முடியுமா? தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மோசடி நடைபெற்றது எப்படி?

மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 3ஆம் தேதி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அதில், 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தமிழ் வழிக் கல்வியில் படித்ததாக சான்றிதழ் கொடுத்து 4 உயரதிகாரிகள் மோசடி செய்துள்ளதாகக் கூறியிருந்தது.
இந்தப் பட்டியலில், கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கீதா, சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் டி.எஸ்.பி சதீஷ்குமார், மாநில வரிகள் பிரிவின் மதுரை உதவி ஆணையராக உள்ள திருநங்கை ஸ்வப்னா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இவர்களுக்கு முறைகேடாக சான்றிதழ் கொடுத்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
மோசடியின் பின்புலத்தில் இயங்கியதாக, தேனியை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நிர்வாகி முரளி, இதே அறக்கட்டளையின் திட்ட அலுவலர் நாராயண பிரபு, கோவையைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் மீது 120 (பி), 420, 465 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கைக்கு அடிப்படையாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சக்தி ராவ் என்பவர் தொடர்ந்த வழக்கு பிரதான காரணமாக இருந்தது.
'தமிழ்வழிக் கல்வியில் படிக்கவில்லை'
"எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவே நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. குற்றம் சுமத்தப்பட்டவர்களும் அரசுப் பணியில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டனர். நீதிமன்றம் தலையிடாமல் இருந்திருந்தால் இந்த மோசடி வெளியில் வந்திருக்காது" என்கிறார் வழக்கறிஞர் சக்தி ராவ்.
பிபிசி தமிழிடம் பேசிய சக்தி ராவ், "2019ஆம் ஆண்டு 181 இடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்வை நானும் எழுதினேன். எழுத்துத் தேர்வு வரை தேர்ச்சி பெற்ற எனக்கு நேர்காணலுக்கு அழைப்பு வரவில்லை" என்றார்.
இந்தத் தேர்வில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி தேர்வானவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.
"நான் முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை தமிழ் வழியில்தான் படித்தேன். தேர்வுக்கு சிறப்பான முறையில் தயாராகி இருந்தேன். நம்மைவிட சிறப்பான மதிப்பெண் எடுத்து இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களின் விவரத்தை அறிய விரும்பினேன். ஆனால், அந்த விவரங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை" என்கிறார் அவர்.

குரூப் 1 தேர்வில் முதல் ஐந்து இடங்களில் தேர்வான தேர்வர்களின் கல்வித் தகுதி, அவர்கள் படித்த கல்வி நிறுவனம் உள்படப் பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தருமாறு டி.என்.பி.எஸ்.சி-க்கு சக்தி ராவ் விண்ணப்பித்துள்ளார்.
"மூன்றாம் நபர்களுக்கு இந்த விவரங்களைத் தர முடியாது" என டி.என்.பி.எஸ்.சி பதில் கொடுத்ததால், 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்ததாகக் கூறுகிறார் சக்தி ராவ்.
"முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை படித்தவர்களுக்குத்தான் இந்த இட ஒதுக்கீடு செல்லும். ஆனால், சிலர் கல்லூரியில் ஆங்கில வகுப்பில் சேர்ந்துவிட்டு தொலைதூரக் கல்வியில் தமிழில் பட்டம் படித்துவிட்டு அந்தச் சான்றிதழை சமர்ப்பிக்கின்றனர். இதனால் சட்டத்தின் நோக்கம் சிதைவதாக வழக்கின் மனுவில் குறிப்பிட்டேன். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது" என்கிறார் அவர்.
வழக்கின் விசாரணையில், தேர்வர்களின் கல்வித்தகுதி விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது.
"டி.என்.பி.எஸ்.சி தாக்கல் செய்த பட்டியலின்படி, ஒருவர்கூட ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படிக்கவில்லை என்பது தெரிய வந்தது" என்கிறார் சக்தி ராவ்.
குரூப் 1 தேர்வுக்கு பட்டப்படிப்பு அடிப்படைத் தகுதியாக உள்ளது. இவர்கள் வேறு கல்லூரிகளில் படித்திருந்தாலும், தொலைதூரக் கல்வியில் தமிழ் மொழியில் படித்ததற்கான, பி.எஸ்.டி.எம் (Person studied in tamil Medium) சான்றிதழை தேர்வாணையத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது என்ன?
ஆனால், "இந்தச் சான்றிதழ்களும் போலியானவை" என்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் தமிழ் வழியில் படித்ததாக ஸ்வப்னா, சங்கீதா, சதீஷ்குமார், நமச்சிவாயம், கலைவாணி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவர்களில் நமச்சிவாயம் தவிர மற்ற நான்கு பேரும் தொலைதூரக் கல்வியில் சேர்ந்ததற்கான சேர்க்கைக் கட்டணத்தை வரவு வைக்கவில்லை. அந்தந்த காலகட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலிலும் இவர்கள் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் இதுதொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், சேலம் மாவட்டம் ஆத்தூர் சப் டிவிஷனில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வரும் சதீஷ்குமார், 2015ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் சேர்வதற்காக நெல்லையைச் சேர்ந்த ஜெயம் நிறுவனம் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

அதற்கு கட்டணமாக ரூ.5,200 ரூபாயை அவர் செலுத்தியதாக ஆவணம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் கணக்குப் பிரிவில் கட்டணம் எதுவும் சதீஷ்குமார் பெயரில் வரவு வைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) பணிபுரிந்து வரும் சங்கீதா, 2020ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பி.ஏ வரலாறு படித்ததாக சான்றிதழில் கூறப்பட்டுள்ளது. இவர் தேனியில் உள்ள தனியார் கல்வி அறக்கட்டளை மூலம் போலி ஆவணம் பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது.
"போலியாக பி.எஸ்.டி.எம் சான்றிதழ் பெறுவதற்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். இதை ஒரு வணிகமாகவே அவர்கள் செய்து வந்துள்ளனர்" என்று சக்தி ராவ் குற்றம் சாட்டுகிறார்.
நீதிமன்ற உத்தரவு
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்வதற்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியதாகக் கூறுகிறார் சக்தி ராவ். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை தன்னிச்சையாகச் சேர்த்து விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் தாமதம் ஏற்படவே மூன்று மாத அவகாசத்தை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
"அப்போதும் அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன். கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு சில கேள்விகளை எழுப்பியது."
நீதிபதிகள் பேசும்போது, "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தி முடிக்கவே ஓராண்டு ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் 11 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அங்கெல்லாம் எப்போது ஆய்வு செய்து முடிப்பீர்கள்?" எனக் கேட்டனர்.

இதன் பின்னரே, கடந்த 3ஆம் தேதி 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ததாகக் கூறுகிறார் சக்தி ராவ்.
கடந்த 4ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "மூன்று ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது. அக்டோபர் 3ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் திருப்தி இல்லை, இதே நிலை நீடித்தால் வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைப்போம்" எனவும் நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு எச்சரித்தது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் நான்கு அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
டிஎஸ்பி கூறுவது என்ன?
"போலியாகச் சான்றிதழ் பெற்றது உண்மையா?" என ஆத்தூர் போலீஸ் டி.எஸ்.பி சதீஷ்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
"நான் படித்துதான் பட்டம் வாங்கினேன். அதில் தவறுகளை செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதற்காக இரண்டு முறை விசாரணைக்கு அழைத்தனர். என் தரப்பில் இருந்து ஆவணங்களைச் சமர்ப்பித்துவிட்டேன். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பார்த்த பிறகு பேசுகிறேன்" என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கீதாவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இப்போதைக்கு இதுகுறித்துப் பேச விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைதூர கல்வி அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் சார்பாகப் பேசியபோது, முறைகேடு புகாரில் சிக்கிய இருவரில் ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்காக சிண்டிகேட்டின் ஒப்புதலைப் பெறும் வேலைகள் நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கு குறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆரின்படி முறைகேடாக சான்றிதழ் கொடுத்தாக நிரூபிக்கப்பட்டால் அவர்களின் தேர்வு செல்லாது என அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
"மதுரை வழக்கில் போலியாக சான்றிதழ் சமர்ப்பித்ததுதான் பிரச்னைக்குக் காரணம்" எனக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, பி.எஸ்.டி.எம் சான்றிதழில் முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதற்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் தனி துறையே விரைவில் செயல்பட உள்ளதாகவும் கூறினார்.
"தொலைநிலைக் கல்வியில் பெறும் பட்டம் தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா?" எனக் கேட்டபோது, "அதைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அது செல்லுமா என்பதை பல்கலைக்கழக மானியக் குழுதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
பி.எஸ்.டி.எம் சான்றிதழ்களில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அந்த அதிகாரி, "சான்றிதழைச் சமர்ப்பிக்கும்போது, பத்தாம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை தமிழில் படித்ததற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த வழக்கில், 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் 20% இட ஒதுக்கீட்டில் பலன் பெற்ற தேர்வர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மோசடியின் முழு பின்புலமும் வெளியில் வரலாம் எனக் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
"குரூப் 1 தேர்வில் நடந்த முறைகேடுகளைப் பற்றித்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, 2ஏ, குரூப் 4 என அனைத்து தேர்வுகளுக்கும் இந்த 20% இடஒதுக்கீடு செல்லும். அதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும்" என்கிறார் சக்தி ராவ்.
20% இடஒதுக்கீடு சட்டம் சொல்வது என்ன?
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்காக 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்கான அவசர சட்டத்தை ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா, 2010 செப்டம்பர் 5ஆம் தேதி பிறப்பித்தார். செப்டம்பர் 7ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
மாநில அரசின் நிர்வாகம் வெளிப்படையாகவும் ஒளிவு மறைவின்றியும் நடப்பதை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வசதியாக இந்தச் சட்டம் இயற்றப்படுவதாக, 2010ஆம் ஆண்டு சட்டத்துறை செயலராக இருந்த தீனதயாளன் விளக்கம் அளித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மற்ற சட்டங்களுக்கு உட்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறையில் குறைவான வாய்ப்புகளே உள்ளதால், அவர்களுக்கு முன்னுரிமை தேவைப்படுவதாகவும் தீனதயாளன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாநில அரசின்கீழ் உள்ள பணிகளில் காலியிடங்களை நிரப்பும்போது, அதில் 20% இடத்தை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்குவதற்காக இந்தச் சட்டத்தைக் கொண்டு வரும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












