ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தி மீது என்ன தாக்கம் ஏற்படுத்தும்?

காங்கிரஸ், ராகுல் காந்தி, ஹரியாணா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபய் குமார் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

2024-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘இந்திய மக்கள் ஒன்றிணைந்து எங்களுக்கு மோதி வேண்டாம் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்’ என்று ராகுல் காந்தி கூறினார்.

அரசியல் சாசன நகலைக் காட்டியபடி அவர், ’இந்தத் தேர்தல் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் தேர்தல்’ என்றும் கூறினார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகத் தோன்றியது.

அக்னிவீர் திட்டம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, ஓய்வூதியத் திட்டம், அரசு பணிகளில் நேரடி நியமனம் உள்ளிட்ட பல விஷயங்களில் ராகுல் காந்தியும், எதிர்க்கட்சிகளும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை மேற்கொண்டு சாலைகளில் இருந்து நாடாளுமன்றம் வரை அரசைச் சுற்றி வளைத்தனர். லேட்டரல் என்ட்ரி திட்டத்தைத் திரும்பப்பெறும் முடிவையும் அரசு எடுக்கவேண்டியிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர், மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸ் கட்சி மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்பட்டது.

‘வெற்றி வாகை சூடுவோம்’ என்று ராகுல் காந்தி கூறினார்.

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி "ஹரியாணாவில் ‘துன்ப தசாப்தத்தை’ முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டுள்ளது, ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, அர்ப்பணிப்புடன் உள்ளது," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட புகைப்படத்தில் ராகுலுக்கு ஒருபுறம் பூபேந்திர ஹூடாவும் மறுபுறம் குமாரி செல்ஜாவும் காணப்பட்டனர்.

அக்டோபர் 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாயின. எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றிபெற்றது. மொத்தம் 39% வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

அதே நேரம் ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் 6 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. ஜம்மு பகுதியில் ஒரு இடமும் இதில் அடங்கும். இந்தப் பிராந்தியத்தில் இப்போது வரையிலான காங்கிரஸின் மிக மோசமான செயல்பாடாக இது உள்ளது.

ஹரியாணாவில் தோல்வி, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரஸின் செயல்பாடு மற்றும் ராகுல் காந்தியின் தலைமை குறித்து மீண்டும் விவாதம் துவங்கியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காங்கிரஸ், ராகுல் காந்தி, ஹரியாணா

பட மூலாதாரம், X/RahulGandhi

ராகுல் காந்தி மீது பழி ஏன்?

மக்களவையில் காங்கிரசின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பிறகு அக்கட்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால் ஹரியாணாவில் அந்த எதிர்பார்ப்புகளை ராகுல் காந்தியால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் வினோத் ஷர்மா கூறுகிறார்.

"அவரால் அதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்லமுடியாது. அரசியலில், ’ஒரு தேர்தலில் தோல்வி’ என்பது முடிவல்ல. அது புதிய தொடக்கம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“காங்கிரஸ் வலுப்பெற்று விட்டது என்ற எண்ணம் இப்போது தகர்ந்து விட்டது. நேரடிப் போட்டியில் பா.ஜ.க-வுக்கு முன்னால் காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாக மக்கள் மீண்டும் கூறத் தொடங்கியுள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும் மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் இந்த பிம்பம் மேம்படும் என்று வினோத் ஷர்மா கருதுகிறார்.

ஹரியாணா தேர்தலில் இருந்துமட்டும் ராகுல் காந்தியின் செயல்திறனை மதிப்பிட முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் அதிதி பட்னிஸ் நம்புகிறார். “தோல்விக்கான பொறுப்பு பூபேந்திர ஹூடாவின் தலையில் விழுமேயன்றி ராகுல் காந்தி மீது அல்ல,” என்கிறார் அவர்.

ஹரியாணா தேர்தலில் காங்கிரஸை விட பா.ஜ.க எல்லா வகையிலும் முன்னிலை பெற்றுள்ளது என்றும், இந்தச் சரிவு காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் பாதிக்கும் என்றும் அவர் கூறுகிறார். ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 40% வாக்குகளுடன் 48 இடங்களில் வென்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

அதே சமயம் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசிய மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அனுராதா பஸீன், “90 சட்டமன்றத் தொகுதிகளில் 49 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி அங்கு ஆட்சி அமைக்கப் போகிறது என்றாலும் காங்கிரஸின் செயல்பாடு குறிப்பாக ஜம்மு பகுதியில் மிகவும் மோசமாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.

"காஷ்மீரில் இந்தக் கூட்டணிக்குத் தெளிவான மக்கள் தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் காங்கிரசுக்கு வலுவான பிடி உள்ள ஜம்மு பிராந்தியத்தில் அக்கட்சி ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றுள்ளது. 2014-ஆம் ஆண்டின் செயல்பாட்டை விட இது மோசமாக உள்ளது," என்றார் பஸீன்.

"தவறான வேட்பாளர்களின் தேர்வு அல்லது ஆட்சிக்கு எதிரான அலை மீது கவனம் செலுத்தாதது என்று எதுவாக இருந்தாலும் அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை காங்கிரசின் செயல்பாடு காட்டுகிரது. இவை அனைத்தும் காங்கிரசின் மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் என்பது என் கருத்து. இருப்பினும் முழுப் பழியையும் ராகுல் காந்தி மீது சுமத்த முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

"இது ஒரு கட்சி பிரச்னை. காங்கிரசின் வெற்றிக்கான பெருமையாக இருந்தாலும் சரி, காங்கிரஸின் குறைபாடுகளாக இருந்தாலும் சரி, அவற்றை முழுமையாக ராகுல் காந்தி மீது சுமத்த முடியாது. ஆனால் அவர் கட்சியை வழிநடத்துகிறார். அவர் ஒரு நட்சத்திரப் பிரசாரகரும் கூட. எனவே அவர் இல்லாத நேரத்தில் அவர்கள் காஷ்மீரில் அதிக கவனம் செலுத்தினர், அதே நேரம் ஜம்மு மீது மிகக் குறைந்த கவனம் செலுத்தினர். ராகுல் காந்தி இரண்டு முறை வந்து பேரணி நடத்தினாலும், வலுவாக இருந்திருக்க வேண்டிய கட்சியின் இருப்பு அங்கு இருக்கவில்லை,” என்று பஸீன் தெரிவித்தார்.

இருப்பினும், காஷ்மீரில் ராகுல் காந்தியின் நல்ல பிம்பத்தின் தாக்கம் தேசிய மாநாட்டின் செயல்திறனிலும் தெரிவதாக வினோத் ஷர்மா கருதுகிறார்.

காங்கிரஸ், ராகுல் காந்தி, ஹரியாணா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஃபரூக் அப்துல்லா மற்றும் ராகுல் காந்தி (கோப்பு படம்)

‘இந்தியா' கூட்டணியில் ராகுலின் பிம்பத்துக்கு பாதிப்பா?

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய முகமாகவும் உள்ளார். மக்களவை தேர்தலுக்குப் பிறகு அவர் மிகவும் சுறுசுறுப்பாகத் தோன்றினார். கடந்த சில மாதங்களில் பல விஷயங்களில் ராகுல் காந்தி அரசைத் தாக்கிப் பேசியபோது,​​ ‘இந்தியா’ கூட்டணியின் மற்ற கட்சிகளின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தியின் அங்கீகாரம் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த மூத்த பத்திரிக்கையாளர் அதிதி பட்னிஸ், “இந்தத் தோல்வியால் ‘இந்தியா’ கூட்டணியில் ராகுல் காந்தியின் பிம்பத்திற்கு எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. இதை ராகுல் காந்தியின் தோல்வியாக இந்தியா கூட்டணி கருதாது என்று நான் நினைக்கிறேன். இந்தத் தோல்வி பூபேந்திர ஹூடாவினுடையது," என்று கூறினார். “ ‘ராகுல், நீங்கள் எங்களை தோற்கடித்தீர்கள்’ என்று கேஜ்ரிவாலோ அல்லது இந்தியா கூட்டணியில் உள்ள வேறு யாரோ கூற மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

இந்தத் தோல்விக்குப் பிறகும், ராகுல் காந்தியின் தேர்தல் அணுகுமுறை, அவரது குரல் தொனி, அரசைச் சாடும் விதம் ஆகியவற்றில் எந்தக் குறைவும் இருக்காது என்றும் அதிதி கருதுகிறார்.

ஆனால், ஹரியாணா தோல்வியால், காங்கிரஸ் மீதான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கை குறையும் என்று மூத்த பத்திரிகையாளர் வினோத் ஷர்மா தெரிவித்தார். “காங்கிரஸ், தான் பிடித்திருந்த வாளின் மீது தானே விழுந்துவிட்டது. தனது சொந்த உள் முரண்பாடுகளால் அது தோற்கடிக்கப்பட்டது. வெற்றி பெற வேண்டிய தேர்தலில் தோல்வியடைந்தது. இது காங்கிரசின் தன்னம்பிக்கை மீது கேள்விகளை எழுப்புகிறது. காங்கிரஸ் மீதான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையும் குறையும்,” என்றார் அவர்.

“ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியாணா தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின் தலைமையின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இப்போதே பேவது மிகவும் அவசரமானதாக இருக்கும். மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ், ராகுல் காந்தி, ஹரியாணா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தி மற்றும் உத்தவ் தாக்ரே (கோப்பு படம்)

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்களில் ராகுலுக்கு சவாலா?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறக்கூடும். மகாராஷ்டிராவில், காங்கிரஸ், சிவசேனை (யு.பி.டி) மற்றும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் (ஷரத் பவார்) கூட்டணி உள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஹேமந்த் சொரேனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா ஹளம் மற்றும் சி.பி.எம்.எல் கட்சியும் உள்ளன.

ஹரியாணா தேர்தல் முடிவுகள், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் காங்கிரசுக்கும், ராகுல் காந்திக்கும் சவால் ஓரளவு அதிகரிக்கும்.

காங்கிரசின் மேலாதிக்கம் குறைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் அதிதி பட்னிஸ்.

தொகுதிப் பங்கீடு மற்றும் பிற விஷயங்களில் கூட்டணிக் கட்சிகள் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

ஹரியாணா தேர்தலின் விளைவு, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீட்டில் தெரியும் என்று வினோத் ஷர்மா கூறுகிறார். "மகாராஷ்டிராவில் காங்கிரஸ் இனி சாதகமான சூழ்நிலையில் பேரம் பேச முடியாது. ஹரியாணாவில் அக்கட்சி வெற்றி பெற்றிருந்தால் அது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்திருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

ஹரியாணாவில் உள்கட்சி பூசலை ராகுல் எப்படி சமாளிப்பார்?

ஹரியாணாவில் தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அக்கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் நிலவுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பூபேந்தர் சிங் ஹூடாவின் முகாமில் இருப்பது யார், குமாரி செல்ஜாவுக்கு நெருக்கமானவர் யார் என்ற கண்ணோட்டத்தில் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பார்க்கப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த கோஷ்டிப் பூசலும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதை காங்கிரசாலும், ராகுல் காந்தியாலும் தீர்க்க முடியவில்லையா?

“செல்ஜாவுக்கும், ஹூடாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டபோது இருவரையும் கைகோர்க்க வைத்தனர். ஆனால் கைகுலுக்குவதால் மனங்கள் இணையுமா,” என்று கேள்வி எழுப்பினார்.

​​“உள்கட்சி மோதலைத் தடுக்க முடியாமல் போனது அவர்களின் தவறு என்பதை கட்சி ஏற்றுக்கொள்ளலாம். கட்சி தலைமை இந்த திசையில் செயல்பட்டிருக்க வேண்டும். இரு தலைவர்களையும் உட்கார வைத்து, 'இருவரும் இணைந்து தேர்தல் பணிகளை செய்யுங்கள். இல்லையெனில் உங்களுக்கும் கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும்' என்று சொல்லியிருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் இந்த விஷயத்தில் ராகுல் காந்தியின் முதிர்ச்சி வெளிப்பட்டது என்கிறார் அதிதி பட்னிஸ். "ஒரு வகையில் பார்த்தால், ராஜஸ்தானில் தலைமை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்ட அளவிற்கு இங்கு இருக்கவில்லை," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சச்சின் பைலட் மற்றும் அஷோக் கெலாட் இடையேயான தகராறு பகிரங்கமானது. அதன் காரணமாக ஏற்பட்ட விளைவை சட்டமன்றத் தேர்தலில் கட்சி அனுபவிக்க வேண்டியிருந்தது.

இந்தத் தேர்தலில் பூபிந்தர் ஹூடாவுக்கு ராகுல் காந்தி முழு சுதந்திரம் அளித்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘தோல்விக்கான பழி’ ஹூடா மீதுதான் விழும் என்கிறார் அதிதி.

ஹரியாணாவின் இந்த முடிவுகளை 'உட்கட்சிப் பூசல்’ போன்ற பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பாக மூத்த பத்திரிக்கையாளர் ஷ்ரவன் கர்க் பார்க்கிறார். பிபிசி இந்தியிடம் பேசிய அவர், “இந்தத் தோல்விக்குப் பிறகு ஹரியாணாவில் புதிய தலைமை உருவாகும். காங்கிரஸை மீட்டெடுக்க ராகுல் காந்திக்கு ஒரு வாய்ப்பு தேவையாக இருந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் ஐந்தாண்டுகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. எனவே இந்த முடிவு காங்கிரஸ் மீது ஆக்கபூர்வத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்,”என்று குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரசின் செயல்பாடு

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத்தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் அனுராதா பஸீன், “இந்தக் கூட்டணியின் செயல்பாடு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்,” என்று கூறினார்.

“காங்கிரஸ் தனது முழு பலத்தையும் ஹரியாணாவில் செலவிட்டது. ஜம்மு மீது குறைவான கவனமே செலுத்தப்பட்டது. சில இடங்களில் கூட்டணி தோல்வியடைந்து. அங்கு பா.ஜ.க-வுக்கு வெற்றி கிடைத்தது. ஜம்முவில் இருந்திருக்க வேண்டிய காங்கிரசின் இருப்பு அங்கு காணப்பட்டவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி ஜம்முவில் சரியாகப் போட்டியிடவில்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் வினோத் ஷர்மாவும் கருதுகிறார். கூட்டணியின் நன்மை, தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே கிடைத்தன என்று அவர் சொன்னார். ராகுல் காந்தியின் பங்களிப்பு பற்றிப்பேசிய அவர், “காஷ்மீரில் ராகுல் காந்தியின் பிம்பம் நன்றாக உள்ளது என்பது உண்மைதான். இதனால் தேசிய மாநாடு கட்சிக்குப் பலன் கிடைத்தது," என்றார்.

இருப்பினும் ஒட்டுமொத்தமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் ‘ஜனநாயகம் வென்றுள்ளது’ என்று வினோத் ஷர்மாவும், அனுராதா பஸீனும் நம்புகின்றனர்.

"இப்போது நீங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு முடிவுகளைப் பார்த்தால், அங்கு தேசிய மாநாடு வெற்றி பெற்றது. பள்ளத்தாக்கின் வாக்காளர்கள் அரசியல் ரீதியாக நன்கு படித்தவர்களாகவும் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் ஒரு உறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளார். அங்கு வாக்காளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்,” என்று அனுராதா பஸீன் தெரிவித்தார்.

காங்கிரஸ், ராகுல் காந்தி, ஹரியாணா

பட மூலாதாரம், X/@INCIndia

படக்குறிப்பு, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாட் உடன் ராகுல் காந்தி (கோப்பு படம்)

‘ராணுவ வீரர், விவசாயி, மல்யுத்த வீரர்’ விவகாரம்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பிருந்து தற்போது வரை, ராணுவ வீரர்கள், விவசாயிகள், மல்யுத்த வீரர்கள் விவகாரம் ராகுல் காந்தி மற்றும் காங்கிரசின் பிரசாரத்தில் இடம் பெற்றது. அக்னிவீர் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றம் முதல் சாலைகள் வரை குரல் எழுப்பிய ராகுல் காந்தி, தேர்தலிலும் அதை ஒரு பிரச்னையாக்கினார். இதேபோல் விவசாயிகள் இயக்கம் மற்றும் மல்யுத்த வீரர்கள் போராட்டம் ஆகியவைவும் ஹரியாணா தேர்தலில் ஆதிக்கம் செலுத்தின.

​​​​இவ்வளவு பெரிய விவகாரங்கள் இருந்தபோதிலும் ஹரியாணா தேர்தலில் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. அது எங்கே தவறு செய்தது?

ராணவ வீரர்கள், விவசாயிகள், மற்றும் மல்யுத்த வீரர்கள் பிரச்னைகளின் கூடவே வேலைவாய்ப்பு என்பது நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும் என்கிறார் அதிதி பட்னிஸ்.

“இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஹரியாணாவின் நைப் சிங் சைனி மற்றும் நரேந்திர மோதியின் பணிகளை மக்கள் முழுமையாக நிராகரிக்கவில்லை. தவிர சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரித்ததன் காரணமாகவும் இந்த முடிவு ஏற்பட்டிருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

வரவிருக்கும் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத் தேர்தல்களில் உள்ளூர் பிரச்சனைகள் இருக்கும். அதற்கேற்ப காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வினோத் ஷர்மா குறிப்பிட்டார்.

இறுதியாக ராகுல் காந்தியின் ‘செயல்திறன்’ குறித்து கருத்து தெரிவித்த வினோத் ஷர்மா ஓரிரு தேர்தல்களை வைத்து மட்டுமே அதை மதிப்பிட முடியாது என்று கூறினார்.

“ஒரு முறை அடல் பிஹாரி வாஜ்பாய் என்னிடம் 'நான் ஒரே ஒரு தேர்தலில் தோல்வியடைந்தேன், ஆனால் போராட்டம் தொடர்கிறது’ என்று கூறினார். ஒரு தேர்தலில் தோற்றதால் போராட்டம் முடிந்துவிடாது. அரசியல் என்பது ஒரு தொடர் போராட்டம்,” என்று வினோத் ஷர்மா குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)