கொல்கத்தாவின் பாரம்பரிய டிராம் சேவை இனி இல்லாமல் போகுமா?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், சந்தீப் ராய்
- பதவி, பிபிசி செய்திகள்
கடந்த வாரம், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ‘டிராம்’ வண்டிகளை முற்றிலுமாக அகற்றும் முடிவை அந்நகரின் அதிகாரிகள் அறிவித்தனர். டிராம்கள் செல்லும் பாரம்பரியமான, ஒரு சிறிய வளைய வடிவிலான பாதை மட்டும் தக்கவைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த முடிவை எதிர்க்கும் டிராம் ஆர்வலர்களின் குழு ஒன்று, டிராம்கள் வெறும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் சாதனங்கள் அல்ல, அவை கொல்கத்தா நகரின் முக்கியப் போக்குவரத்து முறை என்று கூறுகிறது.
2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கொல்கத்தா தனது டிராம் வண்டிகளின் 150-ஆம் ஆண்டைக் கொண்டாடியது. இதன் பகுதியாக, இசை நிகழ்ச்சிகள், கேக் வெட்டுதல், மரத்தினாலான ஒரு நூற்றாண்டு பழமையான டிராம் வண்டி உட்பட பழங்கால டிராம்களின் அணிவகுப்பு ஆகியவை நடந்தன. இதற்காக, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து ராபர்டோ டி'ஆண்ட்ரியா என்ற மூத்த டிராம் நடத்துநர் வரவழைக்கப்பட்டார்.
மெல்போர்ன் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் உலகின் பழமையான டிராம் சேவைகளைக் கொண்டுள்ளன. மெல்போர்னின் டிராம்கள் 1885-ஆம் ஆண்டிற்கும் முந்தையவை. கொல்கத்தாவின் முதல் டிராம் குதிரையால் இழுக்கப்பட்டது. அது 1873-இல் துவங்கப்பட்டது.
ஆனால், இவற்றைத் தவிர இந்த இரு நகரங்களின் டிராம் சேவைகளுக்கிடையில் வேறு ஒற்றுமைகள் இல்லை.

டிராம்களை அகற்ற விரும்பும் அரசு
மெல்போர்னின் டிராம் அமைப்பினை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒருமுறை அகற்ற முயற்சித்தது, ஆனால் அது நடக்கவில்லை. அங்கு டிராம்கள் மேம்படுத்தப்பட்டு, சிலவை சூரிய சக்திக்கு மாற்றப்பட்டு, இன்னும் வலுவாகச் செயல்படுகின்றன.
ஆனால், கொல்கத்தா டிராம்களின் கதையே வேறு. அவற்றின் எண்ணிக்கை பல ஆண்டுகளாகப் படிப்படியாக குறைந்து வருகிறது. 1970-களில் 52-ஆக இருந்த டிராம் வழித்தடங்களின் எண்ணிக்கை, 2015-இல் 25 ஆகக் குறைந்தது. இப்போது வெறும் மூன்று வழித்தடங்கள் மட்டுமே உள்ளன.
கொல்கத்தாவின் டிராம்கள் பல ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படவில்லை. அவை நகரும்போது சத்தமிடுகின்றன. அவற்றின் உள்ளே இருக்கும் அடையாளங்கள் கூட மாறவில்லை. ‘பிக்பாக்கெட்காரர்களிடம் ஜாக்கிரதை’, "100 ரூபாய், 50 ரூபாய்க்கு சில்லறை இல்லை’ மற்றும் ‘டிராமை நிறுத்த மணியை ஒருமுறை மட்டும் அடிக்கவும்’ ஆகிய வாசகங்கள் இன்னும் அவற்றின் உள்ளே காணப்படுகின்றன.
இப்போது, ஒரு சிறிய வழித்தடத்தை மட்டும் விட்டுவிட்டு, டிராம்களை முற்றிலுமாக அகற்ற விரும்புவதாக கொல்கத்தா மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், டிராம் ஆர்வலர்களின் ஒரு பிடிவாதமான குழு இதை எதிர்த்துப் போராடிவருகிறது.
"புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் ஆகிய காரணங்களுக்காக உலகெங்கிலும் உள்ள நகரங்கள் போக்குவரத்துச் சேவைகளின் புதைபடிவ எரிபொருள் சார்பினைக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் கொல்கத்தாவின் முடிவு ஒரு பிற்போக்கானதாகும்," என்று பல ஆண்டுகளாக கொல்கத்தா-மெல்போர்ன் டிராம் நட்பை வளர்ப்பதற்கு உதவிய டி'ஆண்ட்ரியா கூறுகிறார்.
“உலகெங்கும் 400-க்கும் மேற்பட்ட நகரங்கள் டிராம் சேவைகளை இயக்குகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஃபின்லாந்தின் ஹெல்சின்கி போன்ற இடங்களிலும், பிரான்ஸ் முழுவதிலும் டிராம் சேவைகளை அகற்றிய நகரங்கள், இப்போது பெரும் செலவில் அவற்றை மீண்டும் உருவாக்கி வருகின்றன. ஹாங்காங், தனது குறுகிய தெருக்களில் அதிக எண்ணிக்கையில் டிராம்களை இயக்குகிறது,” என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், AFP
கொல்கத்தாவின் அடையாளம்
ஆனால், ஊடகங்களிடம் பேசிய மேற்கு வங்க போக்குவரத்து அமைச்சர் சினேகசிஸ் சக்ரவர்த்தி, கொல்கத்தாவின் மக்கள்தொகை மற்றும் வாகன எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறினார். “ஆனால் நகரின் சாலைகள் விரிவடையவில்லை. மும்பையில் சாலைகளின் பரப்பு 18%, டெல்லியில் 10%. ஆனால் கொல்கத்தாவில் இது வெறும் 6%,” என்கிறார்.
டெல்லி, மும்பை ஆகிய இரண்டு நகரங்களிலும் ஒரு காலத்தில் டிராம் சேவைகள் இருந்தன. மும்பையில் இரட்டை அடுக்கு டிராம்கள் இருந்தன. இந்த இரண்டு நகரங்களுமே டிராம் சேவைகளை அகற்றிவிட்டன. இப்போது டிராம் சேவைகளை இன்னும் வைத்திருக்கும் ஒரே இந்திய நகரம் கொல்கத்தா தான்.
ஒரு வகையில் டிராம்கள் கொல்கத்தாவின் அடையாளமாக மாறிவிட்டன.
கொல்கத்தாவுக்கு மற்ற அடையாளங்களும் உள்ளன – ஹௌரா பாலம், விக்டோரியா மெமோரியல், நகரின் மையத்தில் உள்ள காலனித்துவ கட்டடங்கள் ஆகியவை. ஆனால், லண்டனில் சிவப்பு நிற இரட்டை-அடுக்குப் பேருந்துகள் இருப்பது போல், கொல்கத்தாவில் டிராம்கள் உள்ளன. அந்நாட்களில் ஒரு நாளின் முதல் டிராமின் ‘டிங்-டிங்’ சத்தம் தான், கொல்கத்தா மக்கள் பலரது அலாரம் மணி.
திரைப்படங்களில் டிராம்கள்
கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அவை ஒரு முக்கிய அங்கமாக இருந்தன.
வங்காள மொழித் திரைப்படத் இயக்குநர் அஞ்சன் தத், “எனது இரண்டு படங்களில் டிராம்களைக் காட்டியிருக்கிறேன். டிராம் டிப்போவையும் காட்டியிருக்கிறேன்,” என்றார்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரேயின் மகாநகர் (1963) திரைப்படம், இரண்டு நிமிடம் நீளும் டிராம் காட்சியுடன் துவங்குகிறது. டிராம் வண்டியின் மேலிருக்கும் கேபிள்களில் இருந்து தீப்பொறிகள் பறக்கும் காட்சியில் துவங்கி, வண்டிக்குள் சென்று, வேலை முடிந்து வீடு திரும்பும் கதாநாயகனின் சோர்வான முகத்தில் நிலைகொள்கிறது காட்சி. இங்கே, டிராம் கொல்கத்தா நகரத்தை உருவகப்படுத்துகிறது. அதன் கனவுகளை, அன்றாட வாழ்க்கையைக் குறிக்கிறது.
ஒரு காலத்தில், கொல்கத்தாவின் பெல்காச்சியா டிராம் டிப்போ, டிராம் வண்டிகளைப் பழுதுபார்ப்பது, பராமரிப்பது, கட்டுவது என பரபரப்பாக இயங்கியது. இன்று அவ்விடம் ஒரு திரைப்பட ‘ஷூட்டிங் செட்’ ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. 39 வருட சேவைக்குப் பிறகு 2022-இல் ஓய்வு பெற்ற டிராம் நிறுவன ஊழியரான சுபீர் போஸ், “ஒரு வேலை நாளில் கூட, அங்கு படப்பிடிபப்பு நடப்பதைப் பார்த்தேன். கொல்கத்தா படம் என்றால் கண்டிப்பாக டிராம் வண்டியைக் காட்ட வேண்டும்," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா வரலாற்றுடன் பிணைந்தவை
டிராம்கள் கொல்கத்தாவின் வரலாற்றின், அதன் உணர்வின் ஒரு பகுதி.
1902-ஆம் ஆண்டில், கல்கத்தா என்று அறியப்பட்ட கொல்கத்தா, மின்சார டிராம்களைக் கொண்ட முதல் ஆசிய நகரமாக மாறியது. சுதந்திரத்திற்குப் பிறகும், ‘கல்கத்தா டிராம்வேஸ்’ நிறுவனம் லண்டனில் இருந்து நடத்தப்பட்டது. அந்நிறுவனம் 1968-ஆம் ஆண்டு வரை லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ‘பர்ன் ஸ்டாண்டர்ட்’ ‘ஜெஸ்ஸாப்’ போன்ற பெயர்களைக் கொண்ட நிறுவனங்கள் டிராம் வண்டிகளைத் தயாரித்தன.
அது ஒரு போக்குவரத்து அமைப்பு மட்டுமல்ல. டிராம் பாதைகள் நகரத்தை ஒன்றாக இணைக்கின்றன.
1947-இல் பிரிவினையின் போது, கல்கத்தாவில் ரத்தக்களரி மிக்க இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடந்தபோது, இயல்பு நிலையை மீட்க உதவுவதற்காக, டிராம் தொழிலாளர்கள் காலி டிராம் வண்டிகளில் நகரத்தில் ரோந்து சென்றனர்.
"ஒரு கும்பலிடம் இருந்து சிலரைக் காப்பாற்ற என் தந்தை உதவினார்," என்கிறார் டிராம் ஓட்டுநர் கோபால் ராம். "டிராம் பணியாளர்கள் ஒரு குடும்பமாக இருந்தார்கள். இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் அவர்கள் ஒரு குடும்பமாகவே இருந்தனர்," என்கிறார் அவர்.
'புதுமையான தீர்வு'
கோபால் ராமின் பெரியப்பா அந்து ராம் நீராவி டிராம்களின் காலத்திலிருந்து இருந்து டிராம் ஊழியராக இருந்தார். அவரது தாத்தா மகாவீர் மற்றும் தந்தை ஜகந்நாத் ஆகியோரும் டிராம்களில் பணிபுரிந்தனர். கோபால் ராம் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவர்தான் கொல்கத்தா டிராம்களில் பணியாற்றிய அவரது குடும்பத்தின் நான்காவது மற்றும் கடைசி தலைமுறை.
ஆனால், கொல்கத்தாவின் டிராம்கள் இவ்வளவு காலம் உயிர் பிழைத்திருந்தது ஒரு வகையில் ஆச்சரியமானதுதான்.
போக்குவரத்து ஆலோசகர் சுவேந்து சேத் கூறுகையில், “1950-கள் மற்றும் 1960-களில், தனிநபர் வாகனங்கள் பெருகியபோது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் டிராம்கள் அகறப்பட்டன,” என்கிறார்.
"ஆனால், இப்போது அவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இன்று அமெரிக்காவின் பல நகரங்களில் உள்ள இலகு ரயில் என்பது டிராம்களின் புதிய வடிவம்தான். ஆனால், டிராம்களைத் தொடர்ந்து வைத்திருந்த கொல்கத்தா, அதை மேம்படுத்துவதற்குப் பதிலாக அதை புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது,” என்கிறார் அவர்.
சுவேந்து சேத், சாலையின் பற்றாக்குறையைப் பற்றி புகார் கூறுவதற்குப் பதிலாக, சில சாலைகளைப் பாதசாரிகள் மற்றும் டிராம்களுக்கு மட்டுமே ஒதுக்குவது ஒரு புதுமையான தீர்வாக இருக்கும் என்கிறார்.

பட மூலாதாரம், AFP
டிராம்களை மீட்க சில முன்னெடுப்புகள்
கொல்கத்தா நகரின் பள்ளிகள், மருத்துவமனைகள், திரையரங்குகள் அகியவற்றை இணைத்ததால்தான், கொல்கத்தாவில் டிராம்கள் இத்தனை ஆண்டுகள் செயல்பட்டதாக, ஓய்வுபெற்ற பேராசிரியரும், கல்கத்தா டிராம் பயனர்கள் சங்கத்தின் தலைவருமான தேபாஷிஷ் பட்டாச்சார்யா கருதுகிறார்.
1990-களில், கார்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அப்போதைய மாநிலத்தில் இருந்த கம்யூனிஸ்ட் அரசாங்கம் டிராம்களை ‘காலாவதியானது’ என்று அழைத்தது. அவற்றை அகற்ற விரும்பியது.
"நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்," என்கிறார் பட்டாச்சார்யா. "டிராம்கள் இல்லாமல் போனால், எனது முழு இருப்பும் அச்சுறுத்தப்படும் என்று உணர்ந்தேன். கண்காட்சிகள், ஸ்லைடு ஷோக்கள் ஆகியவற்றை நடத்தினேன். வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து வந்தேன். டிராம்களை அழிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவற்றுக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்துக்கு அரசாங்கம் விண்ணப்பிக்க வேண்டும்,” என்கிறார் பட்டாச்சார்யா.
இன்று, கொல்கத்தாவின் டிராம் ஆர்வலர்கள், அவற்றைக் காப்பாற்ற கலாசாரத்தைப் பயன்படுத்த முயன்று வருகின்றனர்.
1996-ஆம் ஆண்டு முதல், திரைப்படத் தயாரிப்பாளர் மகாதேப் ஷி, டி'ஆண்ட்ரியாவுடன் இணைந்து, ‘டிராம்ஜாத்ரா’ விழாவை ஏற்பாடு செய்து வருகிறார். கலை மாணவர்கள் டிராம்களுக்கு வண்ணம் தீட்டுகிறார்கள், உள்ளூர் இசைக்குழுக்கள் டிராம்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.
ஒவ்வொரு டிராம்ஜாத்ராவிற்கும் ஒரு ‘தீம்’ உள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி நூல் அல்லது கொல்கத்தா நகரின் புகழ்பெற்ற துர்கா பூஜை போன்றவை இந்தத் ‘தீம்’கள்.
"டிராம்ஜாத்ரா நிகழ்வுகள், இளைஞர்களுக்கு டிராம்களைப் பரிச்சயப்படுத்த உதவின," என்று மகாதேப் ஷி கூறுகிறார்.
வடக்கு கொல்கத்தா டிராம் பாதை ஒன்று சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. மேற்கு வங்கப் போக்குவரத்துக் கழகம், டிராம் நூலகம், சுதந்திர தின சிறப்பு டிராம் சேவை, சிலகாலமே இருந்த டிராம் உலக அருங்காட்சியகம் போன்ற சிறப்பு திட்டங்களால் டிராம்களை மீண்டும் பிரபலமாக்க முயற்சித்தது.

பட மூலாதாரம், Getty Images
டிராம்களுக்கு இன்னொரு நம்பிக்கை
கொல்கத்தா 2019-ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் ‘C40 சிட்டீஸ்’ என்ற அமைப்பின் ‘பசுமை போக்குவரத்து’ விருதைப் பெற்றபோது, கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், 2030-ஆம் ஆண்டுக்குள் கொல்கத்தாவின் போக்குவரத்தை முழுவதுமாக மின்மயமாக்குவதற்கான திட்டத்தில் டிராம்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
ஆனால் இப்போது அந்த உறுதிமொழியை அவர் மறந்துவிட்டார் போலும். டிராம்கள் ஒரு ‘பசுமை போக்குவரத்து முறை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் அதற்குப் பதிலாக வேறு பசுமைப் போக்குவரத்து வடிவங்களில் முதலீடு செய்வதாகக் கூறுகிறது. இவை மின்சார பேருந்துகள், மின் கார்கள் போன்றவர். நிலத்தடி மெட்ரோ அமைப்பும் விரிவுபடுத்தப்படுகிறது.
தேபாஷிஷ் பட்டாச்சார்யா, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி அரசாங்கத்திற்கு வாக்கு வங்கியாக மாறியிருக்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள் டிராம் வழித்தடங்களைத் தின்றுவிட்டன என்கிறார். பல டிராம் டிப்போக்கள் அரசாங்கம் விற்கக்கூடிய மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் நிலங்களில் அமைந்துள்ளன.
ஆனால் இறுதி மணி இன்னும் ஒலிக்கவில்லை. ஏனெனில் இந்தப் பிரச்னை இப்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நீதிமன்றம், கொல்கத்தாவின் டிராம் சேவைகளை எவ்வாறு மீட்டெடுக்கலாம், பராமரிக்கலாம் என்பதை ஆராய்வதற்காக ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தது. டிராம்களை அகற்றும் நடவடிக்கை எடுக்கும் முன் அக்குழுவின் அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது.
ஓய்வுபெற்ற டிராம் தொழிலாளியான சுபீர் போஸ், அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு முன்பே டிராம்களை மூடியிருக்க முடியும், ஆனால் ஒவ்வொரு முறையும் அதைச் செய்வதிலிருந்து பின்வாங்கியது, என்கிறார். கொல்கத்தாவிற்கு டிராம்கள் எவ்வளவு முக்கியம் என்பதை அரசாங்கமும் உணர்கிறது போலும், என்று அவர் கூறுகிறார்.
"மூன்று விஷயங்கள் கொல்கத்தாவை உருவாக்கின - ஹௌரா பாலம், விக்டோரியா மெமோரியல் மற்றும் டிராம்கள். அவற்றில் ஒன்றை நாம் இழக்க நேரிடும் என்று நினைப்பது இதயத்தை நொறுக்குகிறது," என்கிறார் சுபீர் போஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












