தாமிரபரணியில் நீர்நாய்களின் எண்ணிக்கை குறைவதால் என்ன பிரச்னை?

நீர் நாய், காவிரி, தாமிரபரணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீர் நாய்
    • எழுதியவர், சு.மகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சமீபத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை வளம்பெறச் செய்யும் தாமிரபரணி நதியில் நீர்நாய்கள் வாழ்வதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளதாக தனியார் அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வு கூறுகிறது.

அதிகம் அறியபடாத நன்னீர் நாய்கள் தமிழ்நாட்டின் ஆறுகளில் எங்கெல்லாம் உள்ளன என்ற தரவு அந்த ஆய்வின் வழியாகத் தெரிய வந்துள்ளன.

ஆறுகளில் நன்னீர் நாய்களின் வாழ்வதன் மூலம், ஆறு வளமாக இருப்பதை அறிய முடியும் என காட்டுயிர் நிபுணர்கள் கூறினாலும், மனிதத் தலையீட்டின் காரணமாக அவற்றின் வாழ்விடம் பாதிக்கப்படுவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாநிமாநில அரசு சார்பாக நன்னீர் நாய்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

நீர் நாய், காவிரி, தாமிரபரணி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தாமிரபரணியில் நீர்நாய்கள்

தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல் கிராமத்தில் கடலில் கலக்கிறது.

தாமிரபரணி ஆற்றுப் பாசன அமைப்பு மூலம் 86,107 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைகளும், தொழிற்சாலைகளின் நீர்த் தேவைகளும் பூர்த்தியாவதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் கள ஆய்வு நிலையமான அகத்திய மலை மக்கள்சார் இயற்கைவளப் பாதுகாப்பு மையம் (Agasthyamalai Community Conservation Centre) நன்னீர் நாய்கள் குறித்த ஓர் ஆய்வை தாமிரபரணி நதியில் மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆய்வு குறித்து அந்த மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிறிஸ்டோபர் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார்.

"தாமிரபரணி ஆறு மாசடைவதால் அதில் வாழும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களான நீர்நாய்களின் வாழ்வியல் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் மருதூர் வரை எங்கெல்லாம் நீர்நாய்கள் வாழ்கின்றன, அவற்றின் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறியவும், அவற்றைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆராயவும் இந்தப் பூர்வாங்க ஆய்வு (Preliminary study) கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வு பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு (Reserve Forest) வெளியே, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் மூன்று வகை நீர்நாய்கள்

நீர் நாய், காவிரி, தாமிரபரணி

பட மூலாதாரம், Peter Christopher

படக்குறிப்பு, அதிகம் அறியப்பட்டாத நன்னீர் நாய்கள் தமிழ்நாட்டின் ஆறுகளில் எங்கெல்லாம் உள்ளன என்ற தரவு அந்த ஆய்வின் வழியாக தெரிய வந்துள்ளன

ஆங்கிலத்தில் ஓட்டர் (Otters) என்று அழைக்கப்படும் நீர்நாய்கள், ஒரு நீர்நில வாழ் உயிரினம். உலகளவில் சுமார் 13 வகை நீர்நாய்கள் உள்ளன.

இந்தியாவில் யூரேஷியன் நீர்நாய் (Eurasian Otter), ஸ்மூத் கோட்டட் நீர்நாய் (Smooth coated Otter), ஏசியன் ஸ்மால் கிளாட் நீர்நாய் (Asian small clawed Otter) ஆகிய 3 நீர்நாய் இனங்கள் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்த மூன்று வகை நீர்நாய் இனங்களுமே உள்ளன.

நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய நீர்நாய்கள் மிகவும் பயந்த சுபாவம் உடையவை, அவை ஆற்றங்கரையோர புதர்களில் பொந்துகள் அமைத்து வாழ்பவை என்று அவற்றின் நடத்தைகள் குறித்து விளக்கினார் ஆய்வாளர் கிறிஸ்டோபர்.

ஒரு பகுதியில் நீர்நாய் உள்ளதா என்பதை அறிய அப்பகுதியில் நீர்நாய்களின் காலடித்தடம் மற்றும் எச்சம் கிடைக்கிறதா என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். நீர்நாய்களின் நடமாட்டம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தானியங்கி கேமராக்களை பொருத்தி ஆய்வு செய்யப்படுகிறது.

நீர் நாய், காவிரி, தாமிரபரணி

பட மூலாதாரம், Peter Christopher

படக்குறிப்பு, காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயத்தில் படம் பிடிக்கப்பட்ட நீர்நாய்

மேலும், இந்தியாவில் காணப்படும் மூன்று வகை நீர்நாய்கள் குறித்து விளக்கினார் ஆய்வாளர் பீட்டர் கிறிஸ்டோபர்.

ஸ்மூத் கோட்டட் நீர்நாய்: இந்த வகை நீர்நாய்கள் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர்நாய் இனமாகும். வாத்துகளுக்கு இருப்பது போல் விரலிடைத் தோல் உள்ள இந்த வகை நீர்நாய்கள் பெரும்பாலும் மீன்களையே உணவாக உட்கொள்ளும். சுமார் 12 முதல் 15 கிலோ வரை எடையுள்ள இந்த வகை நீர்நாய்கள் 15 முதல் 20 என்ற எண்ணிக்கையில் பெரிய குடும்பமாக வாழும்.

ஏசியன் ஸ்மால் கிளாட் வகை நீர்நாய்: இவை உலகிலுள்ள நீர்நாய் இனங்களிலேயே மிகச்சிறிய வகை நீர்நாய் இனத்தைச் சேர்ந்தவை. சுமார் 4 கிலோ வரை எடை இருக்கும். இவ்வகை நீர்நாய்களுக்கு மிகச்சிறிய அளவில் மட்டுமே விரலிடைத்தோல் இருக்கும். அது பார்ப்பதற்கு மனித விரல் அமைப்பு போலவே இருக்கும். இவ்வகை நீர்நாய்கள் 3 முதல் 4 என்ற எண்ணிக்கையில் சிறிய குடும்பமாக வாழக்கூடியவை.

இந்த வகை நீர்நாய்கள், ஓட்டுமீன் (Crustacean) வகைகளான நத்தை, நண்டு உள்ளிட்டவற்றை அதிகமாகவும் பிற நீர்வாழ் உயிரினங்களையும் உட்கொள்ளும். ஓட்டுமீன் வகைகளை உடைத்து உண்பதற்காகவே இவ்வகை நீர்நாய்களுக்குக் கூடுதலாக ஒரு கடவாய்ப் பல் இருக்கும்.

யூரேஷியன் (Eurasian) நீர்நாய்: இந்த வகை நீர்நாய்களுக்கு வாத்துகளுக்கு இருப்பது போல் விரலிடைத் தோல் உண்டு. சுமார் 5 முதல் 8 கிலோ எடை வரை இருக்கும் இவை 6 முதல் 8 வரையிலான எண்ணிக்கையில் குடும்பமாக வாழும். இவை மீன்கள், நண்டுகள், பாம்புகள், பறவைகள், நத்தைகள் என அனைத்தையும் இரையாக உட்கொள்ளும்.

யூரேஷியன் நீர்நாய், ஸ்முத் கோட்டட் நீர்நாய், ஏசியன் ஸ்மால் கிளாட் நீர்நாய் ஆகிய மூன்று வகைகளும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. "தாமிரபரணி தவிர, பவானி, காவிரி ஆகிய ஆறுகளிலும் நன்னீர் நாய்கள் அவ்வப்போது தென்பட்டுள்ளன" என்கிறார் கிறிஸ்டோபர்.

நீர்நாய்களின் புத்திசாலித்தனம்

நீர் நாய், காவிரி, தாமிரபரணி

பட மூலாதாரம், Peter Christopher

படக்குறிப்பு, ஓட்டுமீன் வகைகளை உடைத்து உண்பதற்காகவே ஏசியன் ஸ்மால் கிளாட் வகை நீர்நாய்களுக்குக் கூடுதலாக ஒரு கடவாய்ப் பல் இருக்கும்.

நீர்நாய்கள் மிகவும் பயந்த சுபாவம் உடையவை என்றாலும் அது மிகவும் புத்திசாலியான விலங்கு என்கிறார் பீட்டர் கிறிஸ்டோபர்.

"மனிதர்களின் இடையூறு இருக்காது எனத் தெரிய வந்தால் இவை தண்ணீரை விட்டு வெளியே வந்து மணலில் புரளும்."

காட்டில் புலிகள் தனது வாழ்விடத்தைச் சுற்றி எல்லை நிர்ணயித்து வாழ்வது போலவே, நீர்நாய்களும் ஆற்றங்கரையோரங்களில் தனது வாழ்விடத்தில் எல்லைகளை வரையறுத்து வாழ்வதாகக் கூறுகிறார் அவர்.

"ஒரு நீர்நாய் குடும்பத்தின் எல்லைக்குள் அடுத்த நீர்நாய் நுழைந்துவிட்டால் அவற்றுக்குள் சண்டை நடைபெறுவதும் உண்டு" என்கிறார்.

அழிந்து வரும் நீர்நாய்களின் வாழ்விடம்

தாமிரபரணி உற்பத்தியாகும் மலைப் பகுதிகளில் ஸ்மால் கிளாட் வகை நீர்நாய்களும், சமவெளிப் பகுதிகளில் ஸ்மூத் கோட்டட் வகை நீர்நாய்களும் வாழ்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆறுகள் வளமாக இருப்பதற்கான முக்கிய அடையாளம் அங்கு நீர்நாய்கள் வாழ்வதுதான் என்கிறார் நீர்நாய்களை ஆய்வு செய்து வரும் கிறிஸ்டோபர்.

“தாமிரபணி ஆற்றில் பாபநாசம் மற்றும் நதியுண்ணி அணைக்கட்டு பகுதிகளில் நீர்நாய்களை நேரடியாகப் பார்த்துள்ளோம். நதியுண்ணி பகுதியில் நீர்நாய்களின் நடமாட்டம் கேமராவிலும் பதிவாகியுள்ளது.

இப்பகுதிகளில் பார்த்தது ஸ்மூத் கோட்டட் வகை நீர்நாய்கள். இதேபோல், மருதூர் பகுதிகளிலும் நீர்நாய்களின் நடமாட்டம் உள்ளதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்,” என்று பிபிசி தமிழிடம் பேசியபோது கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.

நீர் நாய், காவிரி, தாமிரபரணி
படக்குறிப்பு, தாமிரபணி ஆற்றில் பாபநாசம் மற்றும் நதியுண்ணி அணைக்கட்டு பகுதிகளில் நீர்நாய்களை நேரடியாகப் பார்த்துள்ளதாகக் கூறுகிறார் பீட்டர் கிறிஸ்டோபர்.

நீர்நாய்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட குழு முக்கியமான பிரச்னையை முன்வைக்கிறது.

"தொடர்ச்சியாக நடைபெறும் மணல் கொள்ளை, ஆலைக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பது, ஆற்றோரப் புதர்கள் அழிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் நதிகள் மாசடைந்து வருகின்றன. இதனால் நீர்நாய்களின் வாழ்விடங்கள் அழிந்து அதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாக" ஆய்வுக் குழு கூறுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் நீர்நாய்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து அவை அழிவதற்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கிறார் பீட்டர் கிறிஸ்டோபர்.

நீர்நாய்கள் பாதுகாப்பு

காட்டுயிர் சூழியல் நிபுணரான முனைவர் க.நரசிம்மராஜன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சத்தியமங்கலம் அருகே உள்ள மோயார் நதியில் வாழும் நீர்நாய்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

நீர்நாய்களின் வாழ்விடம் தொடர்பாக பிபிசி தமிழிடம் நரசிம்மராஜன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நீர் நாய், காவிரி, தாமிரபரணி
படக்குறிப்பு, காட்டுயிர் சூழியல் நிபுணர் முனைவர் க.நரசிம்மராஜன்

எப்படி புலிகள் வாழும் காடு எவ்வாறு ஒரு வளமான காடு எனப் புரிந்து கொள்ளப்படுகிறதோ, அதேபோல், நீர்நிலைகளில் நீர்நாய்கள் இருந்தால் அந்த நீர்நிலை ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுவதாகப் பொருள் என்று விவரித்தார் முனைவர் நரசிம்மராஜன்.

அவரது கூற்றுப்படி, நீர்நாய்கள், நீர்நிலைகளில் உள்ள வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட மீன்களை உணவாக உட்கொள்கின்றன. இதனால் அந்த நீர்நிலையில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்படுவதோடு மீன் இனம் அங்கு சரியான எண்ணிக்கையில் இருக்க இது உதவுகிறது.

மேலும், "நீர்நாய்கள் உணவாக உட்கொள்வதன் மூலம் மீன்களின் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. இதனால் நீரிலுள்ள மற்ற நுண்ணுயிர்களும் சமநிலையில் இருப்பதால், நீர்நிலை மிக ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

அதிக ஆய்வுகள் தேவை

யானை, புலி, காண்டாமிருகம், சிங்கம் ஆகியவற்றுக்கு நிகராக நீர்நாய்களின் ஆய்வுக்கும் முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம் எனக் கூறுகிறார் முனைவர் நரசிம்மராஜன்.

“சர்வதேச அளவில் நீர்நாய்கள் குறித்தான ஆய்வுகள் அதிக கவனம் பெறுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் நீர்நாய்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் நீர்நாய்கள் குறித்தான விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கின்றன. அதே நிலையில்தான் அவை குறித்த ஆய்வுகளும் இருக்கின்றன."

தேசிய அளவில் நீர்நாய்கள் குறித்தான முனைவர் பட்ட ஆய்வுகளும் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் நரசிம்மராஜன்.

நீர் நாய், காவிரி, தாமிரபரணி

பட மூலாதாரம், Peter Christopher

படக்குறிப்பு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலும் நீர்நாய்கள் பரவலாக வாழ்கின்றன.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலும் நீர்நாய்கள் பரவலாக வாழ்கின்றன. ஆனால் நீர்நாய்கள் குறித்து தமிழக வனத்துறை சார்பில் முறையாக ஆய்வுகளோ, கணக்கெடுப்புகளோ இதுவரை நடத்தப்படவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தமிழக வனத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நீர்நாய்கள் குறித்து ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிறார் முனைவர் நரசிம்மராஜன்.

அப்படி நடந்தால், நீர்நாய்கள் எங்கெல்லாம் வாழ்கின்றன, எந்த ஆற்றில் இருந்து எந்த ஆற்றுக்கு இவை பயணிக்கின்றன, எவ்வாறு அங்கு தங்குகின்றன, நீர்நாய்களின் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது, மக்கள் நீர்நாய்கள் குறித்து என்ன நினைக்கின்றனர், மக்களால் நீர்நாய்களுக்கு என்ன வகையான இடையூறுகள் ஏற்படுகின்றன என்பன உள்ளிட்ட பல தகவல்கள் தெரிய வரும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

இவ்வாறு கிடைக்கும் தகவல்கள் எதிர்கால ஆய்வுகளுக்கும், அவற்றைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடவும் வசதியாக இருக்கும் எனப் பரிந்துரைக்கிறார்.

மேலும், "தமிழக அரசு மாநில அளவில் நீர்நாய்கள் குறித்து கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையையும் நரசிம்மராஜன் முன்வைத்தார்.

தமிழக வனத்துறை கூறுவது என்ன?

நீர் நாய், காவிரி, தாமிரபரணி

பட மூலாதாரம், Peter Christopher

படக்குறிப்பு, "போதுமான தகவல்கள் இல்லாத விலங்குகள் குறித்து ஆராய்ச்சிகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் திருப்ப வேண்டும்"

இதுதொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை இலாகாவை கவனித்து வந்த போது அவரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம் (சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவர் ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்) நன்னீர் நாய்கள் அழிந்து வருவதைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார்.

‘‘உண்மையில் நன்னீர் நாய்கள் மிகவும் அரிதாகி வரும் ஓர் உயிரினம்தான். அதைக் காக்க வேண்டிய பொறுப்பை வனத்துறை உணர்ந்துள்ளது. நிச்சயமாக இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்,” என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)