தமிழ்நாட்டில் இனி வீட்டில் நாய் வளர்க்க ரூ.5,000 கட்டணம், 11 ரக நாய்களை வளர்க்க தடை - புதிய கட்டுப்பாடுகள் என்ன?

தமிழ்நாடு, நாய்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் வீடுகளில் நாய்களை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது ஆகியவை குறித்து புதிய கொள்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நாய் வளர்ப்பு உரிமம் பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் கட்டணமும் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் என்கின்றனர், விலங்குகள் நல ஆர்வலர்கள்.

அரசின் கொள்கையில் சிரமம் இருந்தால் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர், கால்நடைத்துறை அதிகாரிகள்.

வீடுகளில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய கொள்கை வகுக்கப்பட்டது ஏன்? அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறுவது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாய் வளர்ப்பு கொள்கை - அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய கொள்கைகளை (Tamil Nadu State Dog Breeding Policy) வகுத்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி அரசாணை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்ட நாய் வளர்ப்புக் கொள்கையைப் பின்பற்றி இவை வடிவமைக்கப்பட்டதாக, மாநில அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, கட்டை, ராமநாதபுரம் மண்டை நாய், மலைப்பட்டி, செங்கோட்டை நாய் ஆகியவற்றுக்கு நாட்டு நாய் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.

11 நாய் ரகங்களுக்குத் தடை

நாட்டு நாய்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், உரிமம் புதுப்பிப்பது உள்பட பல்வேறு நிலைகளில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசின் நாய் வளர்ப்புக் கொள்கை பட்டியலில், தமிழ்நாட்டின் தட்பவெப்பச் சூழலுக்கு ஒத்துவராத கீழ்கண்ட 11 வகை வெளிநாட்டு நாய் இனங்களை வீட்டில் வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்து விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது:

  • பிரெஞ்ச் புல்டாக் (French Bulldog)
  • பாசெட் ஹவுண்ட் (Basset Hound)
  • அலாஸ்கன் மலாமுட் (Alaskan Malamute)
  • கீஷாண்ட் (Keeshond)
  • சோ சோ (Chow Chow)
  • நியூ ஃபவுண்லான்ட் (Newfoundland)
  • நார்வேஜியன் எல்கவுண்ட் (Norwegian Elkhound)
  • திபெத்தியன் மாஸ்டிஃப் (Tibetan Mastiff)
  • சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky)
  • செயின்ட் பெர்னார்ட் (Saint Bernard)
  • பக் (Pug)

குளிர்பிரதேசத்தில் மட்டுமே வளர்க்கப்படும் நாய்களை இனப்பெருக்கம் செய்யவும் மாநில அரசின் நாய் வளர்ப்புக் கொள்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கொள்கையின்படி, வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் உள்ளாட்சி அமைப்புகளிலும், இனப்பெருக்கம் செய்து விற்பவர்கள் விலங்குகள் நல வாரியம் அல்லது கால்நடை பராமரிப்புத் துறையில் அனுமதி பெற வேண்டும்.

தமிழ்நாடு, நாய்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனியார் செல்போன் நிறுவன விளம்பரத்தால் பக் இன நாய்கள் பிரபலம் அடைந்தன

மத்திய அரசு கடிதம்

முன்னதாக, இந்தியாவில் பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக் உள்பட 23 வகையான ‘ஆபத்தான’ நாய்களை வளர்க்கவும் விற்பனை செய்யயும் கடந்த மார்ச் மாதம் இந்திய அரசு தடை விதித்திருந்தது.

இவை சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதால் இவற்றை இனப்பெருக்கம் செய்யாமல் கருத்தடை செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய விலங்குகள் நல அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.

விலங்குகள் நல குழுக்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்திய அரசின் முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், நாய் வளர்ப்பில் புதிய கொள்கையை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"மத்திய அரசு உருவாக்கிய கொள்கையைப் பின்பற்றி தமிழ்நாட்டுக்கு ஏற்ப சில மாற்றங்களை கொண்டு வந்து அரசாணை வெளியிட்டுள்ளோம். இவை நடைமுறைக்கு வந்துவிட்டன," என்கிறார் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் இளங்கோவன்.

தமிழ்நாடு, நாய்கள்
படக்குறிப்பு, பாசெட் ஹவுண்ட் நாய்களை வீட்டில் வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்து விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

புதிய கட்டுப்பாடுகள் என்ன?

அரசாணையில், நாய் குறித்த விவரங்களை விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்தல், உடல்நிலை சான்று பெறுதல், நாய் உரிமையாளர் விவரங்கள், வளர்ப்பு முறை, உணவு, இனப்பெருக்கம், செயல்பாடுகள், நாய்களின் மனம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி:

  • நாய்களின் வயது குறித்து மருத்துவரின் சான்று பெறவேண்டும்
  • நாய்களின் நகங்கள், காதுகளை வெட்டுவதற்கு தடை
  • நாயின் உடல் பாகங்களின் வடிவத்தை மாற்றுவதற்குத் தடை
  • நாயின் தோற்றத்தை மாற்றுவதற்குத் தடை
  • நாய் வளர்ப்பவர் அல்லது விற்பவரது வயது 18-ஆக இருக்க வேண்டும்

ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அபராதம்:

  • நாய் வளர்ப்பு உரிமம் பெற பதிவுக் கட்டணம் ரூ.5,000
  • 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்க தவறினால் நாளொன்றுக்கு அபராதம் ரூ.500

இவற்றில் சில விதிமுறைகள் நாய் வளர்ப்போர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு, நாய்கள்

பட மூலாதாரம், ANSPrasad

படக்குறிப்பு, நாய் வளர்ப்பு ஆர்வலர் ஏ.என்.எஸ்.பிரசாத்

நாய் வளர்ப்புக்கு ரூ.5,000 கட்டணம் ஏன்?

"நாய்களை வளர்க்க விரும்புவோருக்கான பதிவுக் கட்டணம் என்பது ஏற்புடையதாக இல்லை," என்கிறார் நாய் ஆர்வலர் ஏ.என்.எஸ்.பிரசாத். இவர் தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஆவார்.

"இரண்டு ஆண்டுகள் மட்டும் செல்லுபடியாகும் நாய் வளர்ப்பு உரிமத்தைப் புதுப்பிக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏழை மக்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. தமிழகத்தில் நாய்களை வளர்க்கும் மக்களில் 80% முதல் 90% பேர் வரை கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்கள். தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவர்கள் நாயை வளர்க்கின்றனர்," என்கிறார் அவர்.

"நகர்ப்புறங்களில் வெளிநாட்டு ரக நாய்களை பாதுகாப்புக்காகவும் பெருமைக்காகவும் சிலர் வளர்க்கின்றனர். அவர்களுக்கு இந்தக் கட்டணம் பெரிதல்ல. அரசிடம் நல உதவிகள் பெறும் ஏழைகளுக்கு பதிவுக் கட்டணத்தை ரூ.500 நாட்டு நாய்களுக்கு ரூ.250 மாற்றியமைக்க வேண்டும்," என்று ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தினா.

தமிழ்நாடு, நாய்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செயின்ட் பெர்னார்ட் நாய் இனத்தை வீட்டில் வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்து விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

நாய் விற்பனையில் நடப்பது என்ன?

நாய்களின் இனப்பெருக்கம், மரபு சார்ந்த பிரச்னைகளுடன் குட்டிகள் பிறப்பது, நாட்டு நாய்களை பாதுகாப்பது, உரிமம் பெறுவது, முகவர்களைக் கண்காணிப்பது ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

கடந்த 15 ஆண்டுகளாக நாய் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார், தமிழ்நாடு அரசின் நாய் வளர்ப்பு கொள்கையை வரவேற்றுள்ளார்.

அரசின் உத்தரவு மூலம் நாய்களைக் கட்டுப்பாடு இல்லாமல் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்துவது குறையும் என்று கூறும் சதீஷ்குமார், "ஆண்டுக்கு இருமுறை நாய் கருத்தரிக்கும். ஆனால், ஒருமுறை கருத்தரிப்பதே ஆரோக்கியம் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலர் வருமானத்துக்காக இருமுறை இனப்பெருக்கம் செய்ய வைக்கின்றனர். குட்டி நாய் பிறந்த 25-வது நாளிலேயே அதை விற்று விடுகிறார்கள். குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகு முதல் தடுப்பூசி போட்ட பிறகே அவற்றை விற்க வேண்டும். ஆனால், பலரும் அவ்வாறு செய்வதில்லை," என்கிறார் சதீஷ்குமார்.

கொரோனா காலத்தில் வீட்டிலேயே பலரும் முடங்கியதால், பலரும் நாய் வளர்ப்பில் ஆர்வம் காட்டியதாக கூறுகிறார் சதீஷ்குமார்.

“செல்லப் பிராணிகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்போது விற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாததால் நாய்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது" என்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நாய் வளர்ப்போர் உள்ளதாகவும் அரசின் நடவடிக்கையால் நாய்களை வளர்த்து விற்போருக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சதீஷ்குமார் கூறுகிறார்.

தமிழ்நாடு, நாய்கள்

பட மூலாதாரம், SaiVignesh

படக்குறிப்பு, விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ்

ஆவணங்களைப் பராமரிப்பதில் சிக்கலா?

தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், “அரசின் நாய் வளர்ப்புக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தாலும், நாய் பிறந்தது முதல் பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் என அரசு குறிப்பிடும் விஷயங்களைக் கடைபிடிப்பது சற்று சிரமமான விஷயம்," என்கிறார்.

தமிழக அரசின் நாய் வளர்ப்பு தடைப் பட்டியலில் பக் இன நாய்கள் இடம்பெற்றுள்ளதை வரவேற்கும் விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ், "தனியார் செல்போன் நிறுவன விளம்பரத்தால் பக் இன நாய்கள் பிரபலம் அடைந்தன. அதன் விளைவாக ஏராளமானோர் அதனை இனப்பெருக்கம் செய்து விற்றனர். பக் இன நாய்களுக்கு இந்திய தட்பவெப்பம் ஒத்துவருவதில்லை," என்கிறார்.

"நாட்டு நாய்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்க வேண்டிய விஷயம். இவற்றை ஒழுங்குபடுத்தினால் அவற்றிற்கு வாழ்வு கொடுத்தது போல அமையும்," என்கிறார் சாய் விக்னேஷ்.

கட்டண சர்ச்சை - கால்நடைத்துறை விளக்கம்

"அரசின் நாய் வளர்ப்புக் கொள்கையின்படி உரிமம் பெறாமல் இனப்பெருக்கம் செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்," என்கிறார் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் இளங்கோவன்.

நாய் வளர்ப்பு தொடர்பாக, இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் வகுத்துள்ள கொள்கை, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது எனக் கூறும் இளங்கோவன், "மாநில அரசுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன," எனக் கூறுகிறார்.

பதிவுக் கட்டண சர்ச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இளங்கோவன், "அனைத்தையும் ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என்கிறார்.

இதுதொடர்பாக, பத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், நிபுணர்கள் என அனைத்து தரப்பினரையும் கேட்ட பின்னரே முடிவெடுக்கப்பட்டதாக கூறுகிறார் இளங்கோவன்.

"வரைமுறைப்படுத்தாவிட்டால், எப்படி வேண்டுமானாலும் இனப்பெருக்கம் செய்து விற்கலாம் என்ற நிலை வந்துவிடும்," எனக் கூறும் இளங்கோவன், "நாய் வளர்ப்பு நிபந்தனைகளில் ஏதேனும் சிரமம் இருந்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்," என்றார்.

தமிழ்நாடு, நாய்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பது கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது

சென்னையில் 1.8 லட்சம் தெருநாய்கள்

"வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே அதீத கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு, தெருநாய்களைக் கண்டுகொள்வதில்லை," எனக் கூறும் விலங்குகள் நல ஆர்வலர் சதீஷ்குமார், "தெருநாய்களால் மக்கள் துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கும் தீர்வு கொடுத்தால் நல்லது," என்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதாக மாநகராட்சி கணக்கெடுப்பு கூறுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மாநகராட்சியின் கணக்கெடுப்பில், அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் மட்டும் 23,000-க்கும் மேற்பட்ட நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

இதில் 65% ஆண் நாய்கள் எனவும் 35% பெண் நாய்கள் எனவும் தெரியவந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவற்றில் 20% குட்டி நாய்கள் எனவும் 95% நாய்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 30% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

தெரு நாய்களுக்கு பொருந்துமா?

சென்னை மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறையின் தலைமை மருத்துவர் கமால் ஹூசைன், "அரசின் நாய் வளர்ப்புக் கொள்கை என்பது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மட்டுமே பொருந்தும். எங்களைப் பொறுத்தவரையில் கருத்தடை செய்வது, ரேபிஸ் தடுப்பூசி போடுவது ஆகிய இரண்டு விஷயங்கள் முக்கியமானவை" என்கிறார்.

கடந்த ஆண்டு மட்டும் 15,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் வரும் ஆண்டில் 50,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார், மருத்துவர் கமால் ஹூசைன்.

"விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி (Prevention of Cruelty to Animals Act) கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவது மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாத குட்டிகள், பால் ஊட்டும் நாய்கள் ஆகியவற்றுக்கு கருத்தடை செய்யப்படுவதில்லை," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)