நாசா விண்கலம் மோதிய சிறுகோளை நோக்கி விரையும் மற்றொரு விண்கலம் - எதற்காக தெரியுமா?

பட மூலாதாரம், NASA
- எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
- பதவி, அறிவியல் நிருபர்
அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த சிறுகோளைப் பார்வையிட ஒரு விண்கலம் சென்று கொண்டிருக்கிறது.
ஆம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 10:52 மணிக்கு (15:52 BST) புளோரிடாவில் உள்ள கேப் கேனவரலில் இருந்து `ஹெரா கிராஃப்ட்’ ( Hera craft) ஏவப்பட்டது.
பூமியைத் தாக்கும் ஆபத்தான சிறுகோள்களை நம்மால் தடுக்க முடியுமா என்பதை சோதித்து பார்க்கும் ஒரு சர்வதேச ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில், நாசாவால் திட்டமிடப்பட்ட அந்த மோதல் மூலம், 'டார்ட்' விண்கலம் டிமார்போஸ் (Dimorphos) என்ற சிறுகோள் மீது மோதியது. அவ்வாறு மோதிய போது `டிமார்போஸ்’ என்ன ஆனது என்பதை ஆய்வு செய்வதே தற்போது ஏவப்பட்டுள்ள `ஹெரா கிராஃப்ட்’ விண்கலத்தின் பணி.

இரண்டு ஆண்டுகளில் இலக்கை அடையும் ஹெரா விண்கலம்
எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், 2026 டிசம்பரில் `ஹெரா கிராஃப்ட்’ ஏழு மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள டிமார்போஸை சென்றடையும்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் மேற்கொள்ளப்படும் `ஹெரா மிஷன்’, நாசாவின் இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை (Double Asteroid Redirection Test - DART) திட்டத்தின் ஒரு பகுதி.
டிமார்போஸ் (Dimorphos) என்பது 160 மீ அகலமுள்ள ஒரு சிறிய நிலவு. இது பூமிக்கு அருகில் உள்ள டிடிமோஸ் (Didymos) எனப்படும் சிறுகோளை சுற்றி வருகிறது. டிமார்போஸ் , டிடிமோஸை சுற்றி வருவதால் இது இரட்டை சிறுகோள்கள் அமைப்பு ( binary asteroid system) என அழைக்கப்படுகிறது.
2022-ஆம் ஆண்டில் மோதல் ஏற்படுத்தியதன் மூலம் டிமார்போஸின் போக்கை வெற்றிகரமாக மாற்றியமைத்ததாக நாசா கூறியது. நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த மோதல் சிறுகோளின் பாதையை சில மீட்டர்களுக்கு மாற்றியது.
டிமார்போஸ் சிறுகோள் அமைப்பு பூமியைத் தாக்கும் போக்கில் இல்லை. ஆனால், பூமியை சிறுகோள்கள் மோதும் அபாயம் வரும்போது, விண்வெளி முகமைகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சோதிக்கவே இந்த திட்டம் செயல்படுகிறது.
இரண்டு வருடங்களில் `ஹெரா கிராஃப்ட்’ இலக்கை சென்றடைந்ததும், டிமார்போஸ் சிறுகோளின் மேற்பரப்பு, நாசாவின் டார்ட் விண்கலம் மோதி ஏற்பட்ட பள்ளம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ய உள்ளது.

பட மூலாதாரம், SpaceX
இரண்டு கனசதுர வடிவிலான இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் டிமார்போஸின் அமைப்பு மற்றும் நிறை அளவை பகுப்பாய்வு செய்யும்.
"இந்த சிறுகோள்களின் இயற்பியல் பண்புகள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவை எதனால் ஆனவை? அவை மணலால் உருவானவையா? என அதன் அமைப்பை நாம் ஆராய வேண்டும்” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் விஞ்ஞானி நவோமி முர்டோக் கூறினார்.
எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களைக் கொண்ட பிற சிறுகோள்களை இடைமறிக்க முயற்சிப்பதற்கான சிறந்த வழியைப் புரிந்துகொள்ள இது விஞ்ஞானிகளுக்கு உதவும்.
சிறுகோள்களால் டைனோசர் காலத்தில் நிகழ்ந்த அழிவு மீண்டும் நிகழுமா?
ஒருவேளை சிறுகோள் பூமியைத் தாக்கினால், டைனோசர் காலகட்டத்தில் நடந்ததை போன்று நாம் அழிந்துவிடுவோம் என்பதை விஞ்ஞானிகள் நம்பவில்லை. அதுபோன்ற அபாயம் தற்போது இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர். பூமியை சேதப்படுத்தும் அளவுள்ள ஒரு சிறுகோள் விண்வெளியில் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும்.
டார்ட் மற்றும் ஹெரா விண்கலங்கள் இலக்கு வைக்கும் சிறுகோள்களின் அளவு சுமார் 100-200m அகலம் கொண்டது. இவற்றை நமது கிரகத்தில் இருந்து பார்ப்பது மிகவும் கடினம்.
சில விண்கற்கள் அவ்வப்போது பூமியைத் தாக்கும். 2013-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் நகருக்கு மேலே, வானத்தில் ஒரு வீட்டளவில் இருந்த சிறுகோள் ஒன்று வெடித்துச் சிதறியது. அதன் விளைவாக அப்பகுதியில் கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும், 1,600 பேர் காயமடைந்தனர்.
இதுபோன்ற சிறுகோள்களை எதிர்காலத்தில் அடையாளம் கண்டு அவற்றை திசைதிருப்ப முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
"இது மனித இனத்தின் அழிவைத் தவிர்ப்பதற்காக அல்ல. நம்மால் முடிந்த அளவு சேதத்தை குறைக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். டைனோசர் காலத்தில் விண்வெளித் திட்டங்கள் இல்லை, ஆனால் நம்மால் அது முடியும்” என்கிறார் பேராசிரியர் முர்டோக்.
ஆனால், ஒரு சிறுகோளின் போக்கை மாற்றுவது சாத்தியம் என்று நாசா நிரூபித்திருந்தாலும், எல்லா விண்வெளிப் பாறைகளிலும் இவ்வளவு எளிதாக நம்மால் மோதல் நிகழ்த்த முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஒரு சிறுகோள் பூமியைத் தாக்குவதற்கு முன் இடைமறிக்க வேண்டுமெனில், முதலில் பூமியை அது நெருங்கி வருவதை நாம் முன்னதாகவே கண்டறிவது அவசியம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












