சீனா பக்கம் பார்வையைத் திருப்பிய மாலத்தீவுக்கு இந்தியா நிதியுதவி - முய்சு கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நெயாஸ் ஃபரூக்கி
- பதவி, பிபிசி செய்திகள்
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலத்தீவுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக வந்திருக்கும் மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.
இந்தியா அறிவித்துள்ள நிதி உதவிகளில் நாணய பரிமாற்ற ஒப்பந்தமும் அடங்கும். 400 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், கூடுதலாக ரூ.30 பில்லியன் (3000 கோடி) இந்திய பணத்தையும் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு பதிலாக உள்ளூர் பணத்தில் நிறுவனங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள ஏதுவாக இந்திய பணம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமான சூழலில் இருந்த நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த மாலத்தீவு அதிபருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள புதிய அத்தியாயம் முய்சுவின் வருகை என்று மோதி கூறினார்.

மாலத்தீவு மக்களின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் மோதி தெரிவித்தார்.
முய்சு கடந்த நவம்பர் மாதம் மாலத்தீவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிபரான காலம் முதலே டெல்லி மற்றும் மாலேவுக்கு இடையேயான உறவில் விரிசல் விழ துவங்கியது.
இத்தகைய சூழலில் மோதியின் இந்த அறிக்கையும், இந்தியாவின் நிதி உதவியும் ஒரு முக்கியமான முன்னேற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
மாலத்தீவில் அதிபர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அரசுமுறை பயணமாக அவர்கள் இந்தியா வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால், முய்சு அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் துருக்கிக்கும் சீனாவுக்கும் பயணம் மேற்கொண்டார். இந்த ஆண்டின் துவக்கத்தில், ஜனவரி மாதம் அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது இந்தியாவுக்கு அவமானமாக கருதப்பட்டது.
அதே நேரத்தில் மோதி குறித்து மாலத்தீவு அதிகாரிகள் வெளியிட்ட இழிவான கருத்துகள் இந்தியாவை கோபம் அடைய செய்தது.

பட மூலாதாரம், Getty Images
பொருளாதார நெருக்கடியில் மாலத்தீவு
மாலத்தீவின் அந்நிய செலாவணி கையிருப்பானது, ஒன்றரை மாதத்திற்கு மட்டுமே போதுமானது என்கிற அளவுக்கு 440 மில்லியன் அமெரிக்க டாலராக குறைந்ததும், பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் சூழலுக்கு ஆளானது மாலத்தீவு.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டணியை துவங்குவதற்காக மோதியுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக அக்டோபர் 7-ஆம் தேதி அன்று முய்சு தெரிவித்தார்.
இந்தியாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட முய்சு, "இந்தியா வழங்கியிருக்கும் நிதி உதவி மாலத்தீவின் அந்நிய செலாவணி தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்," என்று குறிப்பிட்டார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
மோதியை சந்திப்பதற்கு முன்பு பிபிசியிடம் பேசிய முய்சு, கடந்த காலங்களில் இந்தியா மாலத்தீவுக்கு உதவியது போல் தற்போதும் உதவும் என்று எதிர்பார்த்ததாக கூறினார்.
"எங்களின் நிதி நிலைமை குறித்து இந்தியாவுக்கு நன்றாக தெரியும். எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா எங்களின் சுமையை குறைக்கவும், நாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகளை கண்டறியவும், மாற்று வழிகளை கண்டறியவும் எப்போதும் தயாராக இருக்கிறது," என்றும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவில் நடத்தப்பட்ட பரப்புரை குறித்து பேசிய அவர், இனி வரும் காலங்களில் பேச்சுவார்த்தை மூலமாகவும் பரஸ்பர புரிதல் மூலமாகவும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் வேற்றுமைகளை களைய முயல்வோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சீனாவையும் சார்ந்திருக்கும் மாலத்தீவு
முய்சுவின் சமீபத்திய இந்த கருத்து அவரின் முந்தைய கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இந்தியாவின் போட்டி நாடான சீனாவுடன் தன்னுடைய உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் சில முடிவுகளை அவர் முந்தைய காலத்தில் எடுத்திருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம், மாலத்தீவில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் நங்கூரமிட முய்சு நிர்வாகம் அனுமதி வழங்கியது. இது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த அனுமதி ஆழ்கடல்சார் நிகழ்வுகள் தொடர்பான தரவுகளை சேகரித்து சீனாவின் ராணுவத்திற்கு வழங்கும் வாய்ப்பாக மாறலாம் என்று சிலர் கருதினார்கள்.
சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மறுத்த முய்சு அவரின் கொள்கைகள் அனைத்தும் மாலத்தீவுக்கு முன்னுரிமை வழங்குவதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியுள்ள சீனாவையும் மாலத்தீவு தொடர்ச்சியாக சார்ந்தே இருக்கிறது.
கூடுதல் செய்திகளை வழங்கியவர் அன்பரசன் எத்திராஜன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












