ஜம்மு காஷ்மீர், ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது பா.ஜ.க.
ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு முக்கியமான பாடத்தைச் சொல்லியிருக்கின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அது என்ன?

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகள்
ஹரியாணா மாநிலத்திலும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் செவ்வாய்க் கிழமையன்று வெளியாகின. ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில், 48 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் 37 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் இந்திய தேசிய லோக் தளம் இரண்டு இடங்களிலும் சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 90 இடங்களில் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் பா.ஜ.க. 29 இடங்களிலும் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல்கள் இவை. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவால் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போன நிலையில், ஹரியாணாவில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அக்கட்சி தொடர்ந்து சரிவை சந்திக்கக் கூடும் என்ற கூற்றை இந்த வெற்றி பொய்யாக்கியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு- காஷ்மீர் மக்களின் மனநிலையை எதிரொலித்த தேர்தல்
இந்தியாவில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு நடந்த முதல் தேர்தல் இது என்பதால், இந்த நடவடிக்கைகள் குறித்த மக்களின் மனநிலையை அறியத் தரும் தேர்தலாக இந்த சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஒமர் அப்துல்லா அதிர்ச்சி தரத்தக்க வகையில் தோல்வியடைந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. ஒமர் அப்துல்லா மாநிலத்தின் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஏமாற்றம் தரக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கிறது. ஹரியாணாவில் அக்கட்சி வெல்லக்கூடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், கடந்த முறையைவிட கூடுதல் இடங்களுடன் மீண்டும் பா.ஜ.கவே ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஜம்மு - காஷ்மீரிலும் 38 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களையே காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமையாததால் தவறிய வாய்ப்பு
ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையில் சரியான கூட்டணி ஏற்பட்டிருந்தால், எளிதாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் என்ற நிலையில், அந்த வாய்ப்பு தவறவிடப்பட்டதாக குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
"ஹரியாணாவில் தொகுதி தொகுதியாக பார்த்தால், ஆம் ஆத்மி கட்சி பல இடங்களில் காங்கிரசின் வாக்குகளைப் பிரித்திருப்பது தெரியும். ஆகவே, இது காங்கிரசின் தோல்வி மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் தோல்வியும்கூட. ஹரியாணாவில் கூட்டணி ஏற்படுவதில் யார் தவறு செய்தார்கள் என இங்கிருந்து கூற முடியாது" என்கிறார் அவர்.
ஹரியாணாவில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆம் ஆத்மி கட்சி 10 - 12 இடங்களைக் கோரிய நிலையில், காங்கிரஸ் சுமார் 6 இடங்கள் வரை அளிக்க முன்வந்தது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், எந்தெந்த இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவது என்பதை முடிவுசெய்வதில் சிக்கல் ஏற்பட்டது. முடிவில், இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட முடிவுசெய்தன. இந்த விவகாரத்தில் காங்கிரசை மட்டும் குறைசொல்ல முடியாது என்கிறார் பன்னீர்செல்வன்.
"தமிழ்நாட்டில் தி.மு.க. சொல்வதை காங்கிரஸ் கேட்கிறது என்றால், இன்னொரு மாநிலத்திலும் பிராந்தியக் கட்சி சொல்வதை காங்கிரஸ் கேட்க வேண்டுமென சொல்ல முடியாது. அந்தந்த மாநிலத்தின் கட்சி நிலவரங்களோடு சம்பந்தப்பட்ட விஷயம் அது. பெரிய கட்சிக்கு மட்டும்தான் கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. ஆம் ஆத்மிக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், ANI
‘கூட்டணியின் வலிமையை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்’
இந்தத் தேர்தல் முடிவுகளை கூர்ந்து கவனிக்கும்போது, தமிழ்நாடும் உத்தரப்பிரதேசமும் அளித்த பாடத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் கற்றுக்கொள்ளவில்லை என்பது புரிகிறது என்கிறார் பன்னீர்செல்வன்.
"எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் கூட்டணியை தொடர்ந்து தக்க வைக்கவேண்டும். தமிழ்நாட்டில் மக்கள் நலக் கூட்டணி என்ற பரிசோதனை முயற்சி தோற்ற பிறகு, அதில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் பல தி.மு.க. கூட்டணியில் இணைந்து, எவ்வித பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுதான் இத்தனை தேர்தல்களைச் சந்தித்திருக்கிறார்கள். இதேதான் உத்தரப்பிரதேசத்திலும் நடந்தது.”
“தேர்தல்களில் கூட்டணிக் கணக்கு என்பது மிக மிக முக்கியம். ஆனால், இந்த நிதர்சனம் இந்தி பேசும் மாநிலங்களில் இன்னும் எடுபட ஆரம்பிக்கவில்லை. இன்று ஹரியாணாவில் நடந்ததுதான் சில மாதங்களுக்கு முன்பாக மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. கூட்டணி வலிமையை உணராதவரை, எதிர்க்கட்சிகள் பா.ஜ.கவை வீழ்த்துவது எளிது எனத் தோன்றவில்லை" என்கிறார் பன்னீர்செல்வன்.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்தன. அந்தக் கூட்டணி, ஓரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை. ஆளும் அ.தி.மு.கவே திரும்பவும் வெற்றிபெற்றது. தமிழ்நாட்டில் 1984க்குப் பிறகு, ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதுதான் முதல் முறை.
"அந்தத் தருணத்தில், அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான வாக்குகளாக மக்கள் நலக் கூட்டணியும் தி.மு.கவும் பெற்ற மொத்த வாக்குகள், அ.தி.மு.க. பெற்ற வாக்குகளைவிட 13 சதவீதம் அதிகமாக இருந்தது. ஆனால், பிரிந்து நின்றதால் தி.மு.க. தோற்றுவிட்டது. அடுத்த தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பதைவிட வெற்றி முக்கியம் என்பது கட்சிகளுக்கு புரிந்தது. இந்த புரிதல் அகில இந்திய அளவில் பரவ வேண்டும். உ.பியில் அகிலேஷ் பெற்ற வெற்றியும் இங்கே ஸ்டாலின் பெற்றுவரும் வெற்றிகளும் கூட்டணிக் கணக்குகளால் கிடைத்தவை. இதை மற்ற கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார் பன்னீர்செல்வன்.

பட மூலாதாரம், Getty Images
பாஜவுக்கு எதிரான ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
ஹரியாணாவில் கிடைத்த தோல்வியால், காங்கிரஸ் துவண்டு போயிருந்தாலும் ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்று என்கிறார் அவர்.
"ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகளை மிக முக்கியமான எதிர்வினையாக பார்க்க வேண்டும். அந்த மாநிலத்தில் ஐந்து நியமன எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என அறிவித்துவிட்டதால், வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பே அவர்களிடம் ஐந்து எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்துக்கள் அதிகமுள்ள ஜம்முவில் அதிக இடங்களும் முஸ்லிம்கள் அதிகமுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தொகுதிகள் குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும் முடிவுகள் தீர்க்கமாக பா.ஜ.கவுக்கு எதிராக வந்திருக்கின்றன. 370ஐ நீக்குவதன் மூலமாக காஷ்மீரிகள் என்ற உணர்வை அம்மாநில மக்களிடம் நீக்க முடியவில்லை.” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆகவே இன்னும் நீண்ட நாட்களுக்கு ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக வைத்திருக்க முடியாது. விரைவிலேயே அதன் மாநில அந்தஸ்தை திரும்பத் தர வேண்டியிருக்கும். 370வது பிரிவை திரும்ப கொண்டுவர மாட்டார்கள் என்றாலும் சில அம்சங்களாவது திருப்பியளிக்கப்படும். ஜம்மு - காஷ்மீரில் நாங்கள் எடுத்த முடிவை மக்கள் ஆதரிப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் அதற்கு நேரெதிராக, தீர்க்கமாக வாக்களித்திருக்கிறார்கள்" என்றார்.
2014ல் இருந்து பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 81 இடங்களில் போட்டியிட்டு, சுமார் 9 சதவீத வாக்குகளையும் மூன்று இடங்களையும் மட்டுமே அக்கட்சி பிடித்திருக்கிறது.
"பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த எல்லோருமே அதன் ஆகிருதியை இழந்தார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசானாலும் சரி, சிவசேனாவாக இருக்கட்டும், அ.இ.அ.தி.மு.கவாக இருக்கட்டும் - எல்லோருமே பெரும் சிக்கலைச் சந்தித்தார்கள். ஆகவே, தற்போது பி.டி.பிக்குக் கிடைத்த தோல்வி என்பது அந்தக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி மட்டுமல்ல. இறுதியாக அங்கே ஆட்சியில் இருந்த பா.ஜ.க. - பி.டி.பி. கூட்டணிக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் பார்க்க வேண்டும்.” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் தாக்கம் இருக்குமா?
இந்தத் தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். விரைவிலேயே மகாராஷ்டிர மாநிலத்திலும் ஜார்க்கண்டிலும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. மகாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாதக காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணியில் தானே பலம் வாய்ந்த கட்சி என்ற காங்கிரஸின் இமேஜ், இந்தத் தோல்வியால் சற்று மங்கக்கூடும். இது இடங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் எதிரொலிக்கக்கூடும்.
"ஆனால், மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்தாமல் தேர்தல் ஆணையம் தள்ளிப்போடுவதே, காங்கிரஸ் கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது" என்கிறார் பன்னீர்செல்வன்.
இந்தத் தேர்தல் முடிவுகளில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஜம்மு - காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் இருக்கும் என்றும் கூறின. ஆனால், ஹரியானாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்திருப்பதோடு, ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி தெளிவான வெற்றியோடு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
"2017க்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய எல்லாக் கருத்துக் கணிப்புகளுமே தவறாகத்தான் முடிந்தன. அதனுடைய நீட்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்புகளை ஒரு சோம்பேறித்தனமான இதழியலாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அதில் எவ்வித கடின உழைப்பும் செலுத்தப்படுவதில்லை என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












