ஹமாஸை நேரில் அழைத்துப் பேச்சு: இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னையில் ரஷ்யா, சீனா என்ன செய்கின்றன?

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்
    • எழுதியவர், பால்லா ரோஸா
    • பதவி, பிபிசி முண்டோ

சீனாவும் ரஷ்யாவும் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தன. ஆனால் சமீபத்திய நடவடிக்கைகள், அந்த நாடுகளின் வித்தியாசமான போக்கை பிரதிபலிக்கின்றன.

காஸாவில் ஓராண்டு காலமாக நீடித்த போருக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான மோதலில் சீனாவும் ரஷ்யாவும் மத்தியஸ்தர்களாக இருந்தன.

ஜூலை மாதம், ஹமாஸ், ஃபத்தா மற்றும் பிற பாலத்தீன பிரிவுகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, மோதல் முடிவுக்கு வந்ததும், காஸாவை நிர்வகிக்க 'இடைக்கால அரசு' அமைக்கப்படும்.

இந்த குழுக்கள் முன்னதாக பிப்ரவரி மாதம் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கூடியபோது இதேபோன்ற ஒப்பந்தத்தை கோரின.

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சீனாவும் ரஷ்யாவும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிக முக்கியமான நாடுகளான இரான், சிரியா மற்றும் துருக்கியுடன் நல்லுறவை கொண்டுள்ளன.

இருநாடுகளும் தாங்கள் எதிரியாக கருதும் அமெரிக்காவைப் போலல்லாமல், ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதவில்லை. ஹமாஸை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

சீனா மற்றும் ரஷ்யாவின் இத்தகைய மத்தியஸ்தம் ஏதேனும் உறுதியான விளைவுகளை ஏற்படுத்துமா? அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், சீனாவும் ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் தலையிடுவதன் மூலம் எதை சாதிக்க விரும்புகின்றன எனும் கேள்வி எழுகிறது.

இதற்குப் பின்னால் இரண்டு முக்கிய நோக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது. முதலாவது சர்வதேச செல்வாக்கைப் பெறுவது. மற்றொன்று உலகில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கையை தடுப்பது.

மாவோ முதல் ஷி ஜின்பிங் வரை

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் சீனத் தலைவர் மாவோவின் புகைப்படம்

சீன மக்கள் குடியரசு 1949 இல் உருவானதில் இருந்து, மாபெரும் ஆசிய நாடான சீனா, பாலத்தீனப் பிரச்னையில் அனுதாபம் காட்டி வருகிறது.

சீனாவின் கம்யூனிஸத் தலைவர் மாவோ சேதுங் தைவானைப் போலவே இஸ்ரேலையும் பார்த்தார். அவர் இஸ்ரேலை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் அடையாளமாகக் கண்டார். அமெரிக்காவின் ஆதரவில் இயங்குவதாக நம்பினார்.

சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் ஆய்வாளர் அஹ்மத் அபுது, பிபிசி முண்டோவிடம், "இது புதிய சீனாவின் மேற்கத்திய எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் கதை. அது 'பாலத்தீனம் எதிர்கொள்ளும் துன்பங்களோடு தனது சொந்த அனுபவத்தை ஒப்பிட்டு பார்க்கிறது" என்று விளக்கினார்.

இருப்பினும், இந்த ஆதரவு நிலைப்பாடு கருத்துகளை பதிவு செய்வதோடு நிற்கவில்லை. மாவோ பாலத்தீன விடுதலையை ஆதரித்தபோது, ​​அவர் பாலத்தீன விடுதலை அமைப்புக்கு (பிஎல்ஓ) ஆயுதங்களை அனுப்பினார். அதன் நடவடிக்கைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

சீனாவில் 1979 ஆம் ஆண்டு டெங் ஜியோ பிங் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை மாறியது. அவர் சீனாவில் வணிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 'பணக்காரர்களாக இருப்பது பெருமைக்குரியது’ என்னும் முழக்கத்தை முன்வைத்தார்.

சோசலிச சந்தைப் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த, சீனா உலகிற்கு அதன் கதவுகளைத் திறந்தது. சித்தாந்தத்தை விட நடைமுறைவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது.

அரச சார்பற்ற அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கு மாறாக, உலகின் பெரிய மற்றும் நடுத்தர நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டியது.

ஷி ஜின்பிங் 2012-ஆம் ஆண்டில் சீன அதிபராக பதவியேற்ற பிறகு இந்த நிலைமை மாறியதாக அபுது கூறுகிறார்.

ஷி ஜின்பிங் தனது வெளியுறவுக் கொள்கையில் சித்தாந்தத்திற்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்தார். அதே சமயம் சீனாவின் நடைமுறை நலன்களுக்கு முதலிடம் கொடுத்தார்.

இஸ்ரேல்-பாலத்தீன மோதல் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு இந்த அணுகுமுறையை தெளிவாக நிரூபிக்கிறது.

ஸ்டாலின் முதல் புதின் வரை

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1948-ஆம் ஆண்டில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது இஸ்ரேலை அங்கீகரித்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.

பாலத்தீனர்கள் உடனான ரஷ்யாவின் உறவு சற்று வித்தியாசமானது. 1948 இல் இஸ்ரேல் சுதந்திரத்தை அறிவித்தபோது, ​​​​அதை அங்கீகரித்த முதல் நாடுகளில் ஒன்றாக ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் இருந்தது.

"அந்த சமயத்தில், அனைத்து அண்டை நாடுகளும் ஐரோப்பாவின் காலனிகளாக இருந்தன. ​​இஸ்ரேல் சோசலிசத்துடன் தொடர்புடைய நாடு போல தோன்றியது" என்று ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் அரசு மற்றும் அரசியல் துறை பேராசிரியர் மார்க் காட்ஸ் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

இருப்பினும், இஸ்ரேல் ஒரு சோசலிச நாடாக வளர்ச்சி அடையவில்லை. 50களின் நடுப்பகுதியில் முன்னாள் சோவியத் தலைவர் நிக்கிதா குருசேவ் அரபு தேசியவாத கொள்கைகளில் ஈடுபாடு காட்டினார்.

"பாலத்தீன பிரச்னை ரஷ்யாவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஏனெனில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்தது, சோவியத் ஒன்றியம் பாலத்தீன மக்களை ஆதரித்தது. இது அரபு நாடுகளில் அவர்களை மிகவும் பிரபலமாக்கியது" என்று பேராசிரியர் காட்ஸ் கூறுகிறார்.

பல அரேபிய மக்களுக்கு பாலத்தீனப் பிரச்னை என்பது ஒரு கொள்கை ரீதியான பிரச்னை. ஆனால், ரஷ்யாவைப் பொறுத்தவரை இது ஒரு சாதகமான சூழல்.

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாஸ்கோவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் முன் பாலத்தீனக் கொடி

பாலத்தீனத்துக்கு ரஷ்யா அளிக்கும் ஆதரவு ஒருபோதும் சொந்த நாட்டிற்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தாது. குறிப்பாக அமெரிக்கா உடன் மோதல் ஏற்படும் அளவுக்கு செல்லாது என்றும், இஸ்ரேலுக்கு எதிரான நாடாக இருக்காது என்றும் காட்ஸ் கூறுகிறார்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு ரஷ்யா காட்டும் எதிர்ப்பு சற்று தணிந்தது. ரஷ்யாவில் யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

2000-ஆம் ஆண்டில் விளாடிமிர் புதின் ரஷ்யாவின் அதிபரான நேரத்தில், 1 மில்லியனுக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் சோவியத் பாரம்பரியத்துடன் இணைந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ரஷ்ய மொழி பேசினர்.

அதன்பிறகு, ரஷ்யா இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் வழங்கும் ஆதரவை சமநிலைப்படுத்த முயன்றது. ஆனால் சமீபத்தில் இஸ்ரேலிய அரசாங்கத்துடனான அதன் உறவுகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நிலைப்பாடு மாறியது. ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் கடத்தப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்குப் பிறகு, காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சீனாவின் முயற்சிகள் பொருளாதார நலன்களுடன் தொடர்புடையதா?

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மே 2024 இல் பெய்ஜிங்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக சீனா உருவெடுத்துள்ளது. சீனாவின் எண்ணெயில் பாதிக்கும் மேல் மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடாவில் இருந்து வருகிறது.

இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் சீனாவின் முயற்சிகள் அதன் பொருளாதார நலன்களுடன் தொடர்புடையது என்று அர்த்தப்படுகிறதா?

சாத்தம் ஹவுஸ் ஆய்வாளர் அகமது அபுது இதை மறுக்கிறார்.

"இஸ்ரேலுடன் பல அரபு நாடுகள் நல்லுறவை மேம்படுத்தியுள்ளன, அவ்வாறு செய்யாத நாடுகளும் பழைய பகையை மறந்து இஸ்ரேலுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளன. சௌதி அரேபியா போன்ற நாடுகளும் இதில் அடங்கும். சீனா இதைப் புரிந்து கொண்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. எனவே இந்த இரண்டு பிரச்னைகளையும் ஒரே மாதிரியாக சீனா கருதவில்லை" என்கிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மத்திய கிழக்கு மோதலில் சீனாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில் எந்த நாடும் அதற்கு எண்ணெய் விற்பதை நிறுத்த போவதில்லை.

இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யும் சீனாவின் முயற்சி, அமெரிக்கா உடனான அவர்களின் போட்டியை வைத்து மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச அளவில் தங்களை பெரிய உலக வல்லரசாக முன்னிறுத்த சீனா முயற்சித்து வருகிறது. அதை மனதில் வைத்து தான் பாலத்தீனத்துக்கு ஆதரவளித்து வருகிறது.

"சீனா தன்னை ஒரு பகுத்தறிவு மிக்க பொறுப்பான சக்தியாக காட்ட விரும்புகிறது, அது அமைதியை நிலைநாட்ட ஆர்வமாக உள்ளது" என்று அபுது கூறுகிறார்.

அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன் ஒப்பிடுகையில் சீனா மாற்றுக் கருத்தை முன்வைக்க விரும்புகிறது என்றும் அவர் கூறுகிறார். உலகளாவிய தெற்கு நாடுகளில் பாலத்தீனத்திற்கு ஆதரவு உள்ளது. அவர்கள் மத்தியில் சீனாவின் செயல்பாடு அதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், "பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சிக்கலான பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பது சீனாவுக்குத் தெரியாது என்று நான் நினைக்கிறேன். மேலும் இந்த பிரச்னைக்கு தீர்வு எட்டினாலும் அது சீனாவுக்கு பயனளிக்காது." என்கிறார் அபுது.

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (நடுவில்) ஃபதாவின் மஹ்மூத் அல்-அலூல் (இடது) மற்றும் மூத்த ஹமாஸ் தலைவர் மூசா அபு மர்சூக்

யுக்ரேனில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி

ரஷ்யாவைப் பொறுத்தவரை, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர், யுக்ரேன் போரிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஒரு சாதகமான வழி என்று பேராசிரியர் காட்ஸ் கூறுகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல், ஐரோப்பாவில் நடக்கும் மோதல்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் இருந்து மறைந்துவிட்டன. அதுமட்டுமின்றி மேற்கத்திய நாடுகளிடம் இருந்து யுக்ரேன் பெறும் உதவியில் ஒரு பகுதி இஸ்ரேலுக்குப் போய் சேர்கிறது.

பேராசிரியர் காட்ஸ் கூறுகையில், "ரஷ்யா யுக்ரேனைத் தாக்குவதாகக் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. அதே சமயம் பாலத்தீன மக்கள் விஷயத்தில் மெளனம் காக்கின்றன. எனவே மேற்கத்திய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ரஷ்யா கருதுகிறது" என்கிறார்.

சாத்தம் ஹவுஸின் அகமது அபுது கூறுகையில், "ரஷ்யாவின் மத்தியஸ்த முயற்சி, சர்வதேச அரங்கில் தனக்கான இடத்தை திரும்பப் பெறுவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம். யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வளைகுடாவில் உள்ள சில நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது." என்று கூறினார்.

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, யுக்ரேனின் செர்னிஹிவ் நகரில் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுச்சின்னத்தின் அருகே யுக்ரேனிய வீரர் நிற்கிறார்

ஹமாஸ் 2007 இல் காஸாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. ரஷ்யா அதன் இஸ்லாமிய சித்தாந்தத்தின் காரணமாக ஹமாஸை வெறுக்கிறது. ஆனால் அதையும் மீறி ரஷ்யா ஹமாஸுடன் தொடர்பில் உள்ளது.

"செச்னியா போன்ற ரஷ்ய மாகாணங்களில் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை ஹமாஸ் ஆதரிப்பதை புதின் விரும்பவில்லை. எனவே அவர் ஹமாஸுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்” என்று பேராசிரியர் காட்ஸ் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்த கூட்டாண்மை ரஷ்யாவுக்கு பயனுள்ளதாக இருந்தது. 2008 இல் ரஷ்யா ஜார்ஜியாவைத் தாக்கிய போது, ​​ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலா ஆகிய இரண்டு அமைப்புகளும் ரஷ்யாவை ஆதரித்தன. இந்த இரண்டு அமைப்புகளும் ரஷ்யாவிற்குள் முஸ்லிம்களின் நலன்களைப் பற்றி பேசவில்லை." என்றார்.

ஹமாஸுடன் உறவுகளைப் பேணி வருகின்ற போதிலும், ரஷ்யா அதற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு செய்தால், இஸ்ரேலும் யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கத் தொடங்கலாம் என்று ரஷ்யா நினைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வெவ்வேறு உத்திகள்

இஸ்ரேல் - பாலத்தீனம், ரஷ்யா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் புதின் மற்றும் கத்தார் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி

மேலே விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களில் சில, இரண்டு நாடுகளுக்கும் பொதுவானவை. உதாரணமாக அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைப்பது சீனா மற்றும் ரஷ்யாவுக்கு பொதுவான நோக்கம். ஆனால் இரு நாடுகளின் நடவடிக்கைகளும் சற்றே வேறுபட்டவை.

முதலாவதாக, ரஷ்யா அப்பகுதியில் ராணுவ ரீதியாக தீவிரம் காட்டுகிறது. சிரிய போரில் அதன் ஈடுபாடு வெளிப்படையாக தெரிந்தது. சீனாவுக்கு அத்தகைய எண்ணம் இல்லை.

"மத்திய கிழக்கில் தற்போதுள்ள பிராந்திய சமநிலையை பராமரித்து, அதன் நலன்களுக்கு சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதே சீனாவின் குறிக்கோள்" என்கிறார் அபுது.

"ஆனால் ரஷ்யா தீவிர மாற்றங்களை விரும்புகிறது, இதனால் புதிய மத்திய கிழக்கு ரஷ்யாவின் நலன்களுக்கு உதவி செய்யும் என்று அது நம்புகிறது" என்பது அவரது கருத்து.

பாலத்தீன நாட்டை ஸ்தாபிப்பதை சீனா விரும்புகிறது, அதன் மீது கணிசமான செல்வாக்கு செலுத்த முடியும் என நம்புகிறது.

"ரஷ்யாவுக்கு சில மறைமுக நோக்கங்கள் உள்ளன. ரஷ்யா பிரச்னைக்கு ஒரு தீர்வை விரும்புவது போல் பிம்பத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் உண்மையில் இந்த நெருக்கடி தீர்க்கப்படுவதை விரும்பவில்லை" என்று அபுது கூறுகிறார்.

பேராசிரியர் காட்ஸ் கூறுகையில், "இந்த பிரச்னை தீர்க்கப்பட்டாலும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இரண்டும் ரஷ்யாவிடம் இருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள். இரு நாடுகளும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவார்கள், அதற்காக அவர்கள் மேற்கு அல்லது சீனா மீது கவனம் செலுத்துவார்கள். எனவே இதில் ரஷ்யாவுக்கு எந்த ஆதாயமும் இல்லை” என்கிறார்.

"உறுதியற்ற தன்மை நீடிப்பதை ரஷ்யா விரும்புகிறது. அதே சமயம் அந்த உறுதியற்ற தன்மை வரம்பற்று போகக் கூடாது என்பதால் மத்தியஸ்தம் செய்கிறது” என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)