டி20 மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தானுடன் இன்று மோதல் - இந்திய அணியின் 8 ஆண்டு வீறுநடை தொடருமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
துபாயில் இன்று நடக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி.
உலகளவில் ஆடவருக்கான கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் மோதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு சற்றும் குறையாமல் மகளிர் அணியினர் மோதும் ஆட்டத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
துபாயில் நடக்கும் இந்த ஆட்டத்தைக் காண்பதற்கு பத்தாயிரம் டிக்கெட்டுகள் இதுவரை விற்பனையாகியுள்ளதாக ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் இந்திய அணி
மகளிர் டி20 உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணி, முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 புள்ளிகளுடன் வலுவாக இருக்கிறது.
ஆனால், இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, நிகர ரன்ரேட் மைனஸ் 2.900 ஆகச் சரிந்துள்ளது.
இதனால், அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேற அடுத்து வரும் இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்துவது கட்டாயமாக்கியுள்ளது. அதிலும் இன்று நடக்கும் பாகிஸ்தான் அணியை வென்றே தீரவேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு மருகிவிடும்.
இதுவரை இந்தியா-பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை வரலாற்றைப் பொருத்தவரை இதுவரை இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் 7 முறை மோதியுள்ளன. அதில் 5 ஆட்டங்களில் இந்திய அணி வென்றுள்ளது சாதகமான அம்சம்.
ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் இதுவரை 15 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 12 ஆட்டங்களில் இந்திய அணி வென்றுள்ளது. இப்போதுள்ள நிலையில் வெற்றியுடன் பாகிஸ்தான் அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறது.
கடைசியாக 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது. அதன் பிறகு 8 ஆண்டுகளாக டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வெல்ல முடியவில்லை.
கூடுதல் பேட்டர், சுழற்பந்துவீச்சாளர் தேவை

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியைப் பொருத்தவரை டி20 உலகக்கோப்பைக்காக வலுவாகத் தயாராகி வந்தாலும், நியூசிலாந்து அணியிடம் மோசமாக விளையாடியது.
இந்திய பேட்டர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் 15 ரன்களாகத்தான் இருந்தது, அடுத்ததாக உதிரிகள் எண்ணிக்கையே இருந்தது.
மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் உத்தி எடுபடவில்லை. ஆதலால், இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக ஒரு பேட்டருடன் இந்திய அணி களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. நடுவரிசையில் ரோட்ரிக்ஸ் ஆட்டமிழந்து விட்டால், அதன்பின் எந்த பேட்டரும் இல்லை என்பது கவலைக்குரியது.
அதைத் தீர்க்க கூடுதலாக ஒரு பேட்டரை அணியில் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அணி இருக்கிறது.
கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக அருந்ததி ரெட்டியை சேர்ப்பதற்கு பதிலாக தமிழக வீராங்கனை தயாளன் ஹேமலதாவை சேர்க்கலாம். தயாளன் ஹேமலாதாவை அணிக்குள் கொண்டு வரும்போது, பேட்டிங் வரிசை வலுப்பெறும்.
தேவையற்ற பரிசோதனை முயற்சி

பட மூலாதாரம், Getty Images
அது மட்டுமல்லாமல் ஹர்மன்ப்ரீத்தை 3வது இடத்தில் களமிறக்கியது, ரோட்ரிக்ஸை 4வது இடத்திலும், ரிச்சா கோஷை 5வது இடத்திலும் களமிறக்கி பரிசோதித்தது விமர்சிக்கப்பட்டது.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் இதற்கு முன் 4வது வரிசையில்தான் களமிறங்கி பேட்டிங்கிற்கு தூணாக இருந்துள்ளார். அவர் இதுவரை 3வது இடத்தில் களமிறங்கி ஒரு அரைசதம்கூட அடிக்காத நிலையில் அவரின் பேட்டிங் வரிசையை மாற்றியது பெரிய விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்திய பேட்டர்கள் வழக்கமாகக் களமிறங்கும் வரிசையில் பேட் செய்தால் எளிதாக விக்கெட்டை நிலைப்படுத்தி பேட் செய்வார்கள். ஆதலால் பரிசோதனை முயற்சியைக் கைவிட்டு இந்திய அணி வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது.
இதைவிட முக்கியமானது, நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வியில் இருந்து விரைந்து மீண்டெழ வேண்டிய கட்டாயத்திலும், இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வெற்றி பெறுவதும் அவசியமாகியுள்ளது.
ராதா, பூஜா தேவை
இந்த ஆண்டின் 2வது சிறந்த பந்துவீச்சாளர் எனப் பெயரெடுத்த பூஜா வத்ராஸ்கருக்கு முதல் ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டுமே வழங்கப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை. அதுபோல சுழற்பந்துவீச்சாளர் ராதா யாதவும் சேர்க்கப்படாதது பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது.
சுழற்பந்துவீச்சாளர் ராதா யாதவ் இந்த ஆண்டில் 13 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணி பந்துவீச்சாளராகத் திகழும் நிலையில் அவரைச் சேர்க்காதது கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.
இந்த விமர்சனங்களை நிவர்த்தி செய்யவேண்டிய நிலையிலும், சரியான கலவையில் கூடுதல் பேட்டர், சுழற்பந்துவீச்சாளரைச் சேர்க்க வேண்டிய நிலையிலும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் இருக்கிறார்.
வலுவான பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரை இலங்கை அணியை அதிரடியாக வீழ்த்தி 2 புள்ளிகளுடன் வலுவாக இருக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளும்.
பாகிஸ்தான் அணியின் பலமே அதன் பந்துவீச்சாளர்கள்தான். இந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சாதியா இக்பால், 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதலாவது ஆட்டத்திலும் நடுவரிசை விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்குக் காரணமாக இருந்தார். சாதியா இக்பால் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு கருப்புக் குதிரையாக இருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் சாதியாவின் பந்துவீச்சு பாகிஸ்தான் அணிக்கு துருப்புச் சீட்டாக அமையும். இதுதவிர கேப்டன் ஃபாத்திமா சானா, நிதா தார் ஆகியோரின் பந்துவீச்சும் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.
இலங்கைக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் டயானா பெய்கிற்கு கணுக்காலில் சிறிய காயம் ஏற்பட்டது. ஆதலால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவாரா என்பது சந்தேகம்தான்.
ஆடுகளம் எப்படி?
துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருந்து வந்துள்ளது, பேட்டர்களுக்கும் நன்கு ஒத்துழைக்கும். இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருப்பதால், இந்த ஆடுகளத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்து பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக ஆடுகளம் மாறும் என்பதால், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோரும், பாகிஸ்தானில் நஷாரா சாந்து, சாதியா இக்பால் ஆகியோரும் ஆட்டத்தின் திருப்புமுனையாளர்களாக மாறலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












