ஒரே நாளில் மாறிய ஆட்டம் - வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வெற்றி

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடியாக ரன்களைக் குவித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
    • எழுதியவர், போத்திராஜ். க
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் டிராவில் முடியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் எதிரொலியாக, இந்த வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடியாக ரன்களைக் குவித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்தியா- வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்டின் கடைசி நாளான இன்று, சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால், வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் என்ற நேற்றைய ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடங்கியது. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி இன்று கூடுதலாக 120 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியின் சரிவுக்கு வித்திட்டனர். வங்கதேச வீரர் ஷத்மன் இஸ்லாம் அதிகபட்சமாக 50 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியின் சரிவிற்கு உதவினர்

இதையடுத்து, 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. கேப்டன் ரோகித் சர்மா - இளம் வீரர் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். முதலிரு ஓவர்களிலேயே அவர்கள் 18 ரன் சேர்த்தனர்.

ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால், இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக நடைபோட்டது. முதல் இன்னிங்சைப் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 45 பதுகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 51 ரன் சேர்த்து அவர் அவுட்டானார்.

இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சென்னையில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்தியா - வங்கதேசம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கான்பூரில் நேற்று (திங்கள், செப்டம்பர் 30) இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் கண்ட ரசிகர்கள், நடப்பது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என்று குழம்பியிருக்கலாம்.

ஏனென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித், ஜெய்ஸ்வால், கில், ராகுல், கோலி என அனைவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டு டி20 போட்டியைப் போல் பேட் செய்தனர்.

டெஸ்ட் போட்டிக்கென இருக்கும் தாத்பரியத்தை உடைத்து, தொடக்கத்திலிருந்தே இந்திய பேட்டர்கள் வங்கதேசப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நொறுக்கி, ரன்களைக் அள்ளிக் குவித்தனர்.

கான்பூரில் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் 2-வது டெஸ்ட் எந்தவிதமான முடிவுமின்றி டிராவில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது.

ஆனால், கடைசி இரு நாட்கள்(செப்டம்பர் 30, அக்டோபர் 1) ஆட்டத்தின் வெற்றியை வங்கதேசத்திடமிருந்து பறிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் வியூகம் அமைத்துச் செயல்பட்டனர்.

ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் எப்படியாவது வெற்றியை எட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்திய அணியினர் பேட் செய்து வருகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 5 டெஸ்ட் வெற்றிகள் தேவைப்படுகிறது.

ஆஸ்திரேலிய பயணம் கடினமாக இருக்கும் என்பதால், வங்கதேசம், நியூசிலாந்திடம் இந்த 5 வெற்றிகளை பெறும் முயற்சியில் இந்திய அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

நேற்றைய 4-வது நாள் ஆட்டமும் சற்று தாமதமாகத் தொடங்கிய நிலையில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி அதிகவேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 8 என்ற ரன்ரேட்டில் விளையாடத் தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியைவிட 52 ரன்களை இந்திய அணி அதிகமாக குவித்து முன்னிலை வகித்தது.

வங்கதேச அணி, 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய 4வது நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் சேர்த்திருந்தது.

ஒரே நாளில் 18 விக்கெட்டுகள்

கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது

நேற்று ஒரே நாளில் மட்டும் 18 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் என 18 விக்கெட்டுகள் சரிந்தன.

கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது

வங்கதேச அணியின் விக்கெட்டுகள் சரிவு

வங்கதேச அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. மோமினுள் ஹக் 40, முஸ்பிகுர் ரஹ்மான் 6 ரன்களில் களத்தில் இருந்தனர். மழையால் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் நான்காவது நாளான இன்று தொடர்ந்தது.

நேற்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பும்ராவின் வேகப்பந்துவீச்சில் முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 11 ரன்கள் சேர்த்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணி விக்கெட்டைப் பறிகொடுத்தது. விக்கெட் சரிந்தாலும், மோமினுல் ஹக் ரன்களை வேகமாகச் சேர்த்தார். மதிய உணவு இடைவேளையின் போது வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேசம் அணி 28 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியின் பின்வரிசை பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணித் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர், ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

அதிரடி துவக்கம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் இன்னிங்ஸை அதிரடியாகத் துவங்கினர். டி20 ஆட்டம் போல் துவக்கத்திலிருந்தே பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் துரத்தி, வங்கதேசத்தின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

ஜெய்ஸ்வால், ரோகித் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 2.6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. 31 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த சுப்மான் கில் (39), ரிஷப் பந்த் (9) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து (2 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

கடந்த டெஸ்டில் ஏமாற்றிய கோலி, இந்த ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 47 ரன்கள் சேர்த்து 3 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டார்.

அதிரடியாக பேட் செய்த கே.எல்.ராகுல், 33 பந்துகளில் அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய அணி புதிய சாதனை

இந்திய அணி 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் அதிவிரைவாக சதம் அடித்த அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி இன்று படைத்தது.

இதற்கு முன் கடந்த ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியதுதான் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்த ஆட்டத்தில் இந்திய அணி முந்தி, 2.1 ஓவர்கள் குறைவாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

18.2 ஓவர்களில் 150 ரன்களையும், 24.2 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டி அதிவேகத்தில் 150 மற்றும் 200 ரன்களைச் சேர்த்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

இந்திய அணி 50 ரன்களை எட்டுவதற்கு 3 ஓவர்களே தேவைப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் ஆடவர் அணிப் பிரிவில் இந்திய அணி அதிவேகத்தில் 50 ரன்கள் எட்டியுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 23 பந்துகளில் அரைசதம் பார்ட்னர்ஷிப் அடித்தனர்.

கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்

ஜடேஜாவின் மைல்கல்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 3,000-க்கும் அதிகமான ரன்களையும் 300 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 11-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன் அஸ்வின், கபில்தேவ் இருவரும் அந்த சாதனையைச் செய்திருந்தனர். 74 போட்டிகளில் ஜடேஜா இந்தச் சாதனையை நிகழ்த்தி இயான் போத்தம் (72) அடுத்தார்போல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.

உலகளவில் 300 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 3,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்த இரண்டாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி இந்த மைல்கல்லை அடைந்திருந்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)