ரோகித், கோலி இல்லாத இந்திய இளம் படை வங்கதேசத்தை துவம்சம் செய்தது - பாகிஸ்தான் சாதனை சமன்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ரோகித், கோலி இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றுள்ளது. குவாலியரில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 19.5ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்கு அடித்தளமிட்ட அர்ஷ்தீப் சிங்
இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டது அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சுதான். தொடக்கத்திலேயே வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை தனது பந்துவீச்சு மூலம் உடைத்தெறிந்து பர்வேஷ் ஹூசைன்(8), லிட்டன் தாஸ்(4) இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியில் முஸ்தபிசுர் ரஹ்மான் விக்கெட்டையும் அர்ஷ்தீப் எடுத்தார்.
இதனால் அதிரடியாக தொடக்கம் அளிக்க முயன்ற வங்கதேசத்தின் பேட்டிங் உத்தி நொறுங்கியது. 2.1 ஓவர்களில் வங்கதேசம் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்தடுத்துவந்த பேட்டர்கள் தங்கள் விக்கெட்டை நிலைப்படுத்திக்கொள்ள முயன்று ரன் சேர்ப்பை கோட்டைவிட்டனர், விக்கெட்டுகளையும் இழந்தனர்.
தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 3 ஆண்டுகளுக்குப்பின் சர்வதேச போட்டியில் விளையாடினார். வருண் தனது மாயஜால பந்துவீச்சு மூலம் தெளஹித் ஹிர்தாய்(8), ரிஷாத் ஹூசைன்(11), ஜாக்கர் அலி(8) ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் சரிவுக்கு துணையாகினார்.
அறிமுகப் போட்டியிலேயே மயங்க் யாதவ் அருமையாகப் பந்துவீசி 4 ஓவர்களில் ஒருமெய்டன் உள்பட 21 ரன்கள் கொடுத்து மெகமதுல்லா(1) விக்கெட்டை வீழ்த்தினார். வங்கதேச கேப்டன் ஷாண்டோ(27) ஆங்கர் ரோல் எடுத்து நிதானமாக பேட் செய்த நிலையில் அவர் விக்கெட்டை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி ரன்ரேட் உயர்வுக்கு தடை போட்டார். கடைசி 7 ஓவர்களில் வங்கதேச அணி இரட்டை இலக்க ரன்களைக் கூட சேர்க்க முடியவில்லை, ஆனால், விக்கெட் சரிவு தொடர்ந்தது.
இந்திய அணியில் புதிய நம்பிக்கையுடன் சேர்க்கப்பட்ட இளம் வீரர்கள் தங்கள் தேர்வு நியாயமானது என்பதை நிரூபித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா அதிரடி தொடக்கம்
இந்திய அணிக்கு சஞ்சு சாம்ஸன், அபிஷேக் ஷர்மா அதிரடியான தொடக்கம் அளித்தனர். தஸ்கின் அகமது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தநிலையில், 16 ரன்னில் அபிஷேக் வெளியேறினார். சாம்ஸன் வழக்கத்துக்கு மாறாக நிதானமாக பேட் செய்து அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார்.
அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் வழக்கம்போல் பந்துகளை மைதானத்தின் நான்கு திசைகளிலும் சிதறவிட்டார். 3 சிக்ஸர்கள், 2பவுண்டரி என 14 பந்துகளில் 29ரன்கள் என கேமியோ ஆடி முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இந்தியஅ ணி பவர்ப்ளே ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது.
அடுத்துவந்த நிதிஷ் குமார் ரெட்டி, சாம்ஸனுடன் இணைந்தார். அதிரடியாக ஆட நினைத்த சாம்ஸன் 29 ரன்களில் மிராஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 9.3 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.
ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்திபின் ரன்ரேட் வேகமெடுத்து. பாண்டியா தான்சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அதிரடியாகத் தொடங்கினார். முஸ்தபிசுர் வீசிய 10-வது ஓவரில் ஹர்திக் 2 பவுண்டரிகளை விளாசினார். ஆட்டத்தை விரைவாக முடிக்க நினைத்த ஹர்திக் பாண்டியா, ஹூசைன் வீசிய 11-வது ஓவரில் சிக்ஸரும், தஸ்கின் அகமது வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரும் விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்வு
வங்கதேச அணியின் சரிவுக்கு காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து 3 வீரர்கள் மட்டுமே இந்த புதிய இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். மேலும் 2 வீரர்கள் அறிமுகமாகியிருந்த நிலையில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றி மூலம் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
குவாலியர் ஸ்ரீ மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடந்த முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும். 14 ஆண்டுகளுக்குப்பின் குவாலியர் நகரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இங்கு கடைசியாக கேப்டன் ரூப் சிங் அரங்கில் நடந்த ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார். இதன்பின் இந்த ஆடுகளத்தின் பயன்பாடு கைவிடப்பட்டு, புதிதாக மாதவராவ் சிந்தியா மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மயங்க் யாதவ் மைல்கல்
இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் அறிமுகமாகினர். இதில் ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாகப் பந்துவீசி கலக்கிய மயங்க் யாதவ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் மயங்க் நேற்று 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி வங்கதேச பேட்டர்களை திணறவிட்டார்.
மயங்க் யாதவ் தான் வீசிய முதல் ஓவரையே மெய்டனாக வீசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பில் அறிமுக ஆட்டத்திலேயே மெய்டன் ஓவர் எடுத்த பந்துவீச்சாளர்களில் 3வதாக மயங்க் யாதவ் இணைந்தார். இதற்கு முன் அஜித் அகர்கர், அர்ஷ்தீப் மட்டும் அந்த சாதனையைச் செய்திருந்த நிலையில் மயங்க் யாதவும் இணைந்தார்.
இந்திய அணிக்கு சிறந்த இரு வேகப்பந்துவீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பும்ராவோடு இணைந்து, மயங்க் யாதவ் பந்துவீசுவதை நினைக்கவே எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இதுதவிர ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்தபடியாக புதிய ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி அடையாளம் காணப்பட்டு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
127 ரன்களை இந்திய அணி இந்த ஆட்டத்தில் 12 ஓவர்களில் சேஸ் செய்ய ஹர்திக் பாண்டியா ஆடிய கேமியோ முக்கியக் காரணம். குவாலியர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் தஸ்கின் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரும், ரிஷாத் ஹூசைன் வீசிய 11வது ஓவரில் ஒருசிக்ஸரும் விளாசி ஹர்திக் பாண்டியா மீண்டும் தனது ஃபார்மை நிரூபித்தார்.
ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 2 சிக்ஸர், 5பவுண்டரி உள்பட 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் நிலைப்படுத்திக்கொண்டு 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
"இன்பத் தலைவலியாக இருந்தது"
வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் “ எங்கள் திறமையை மீண்டும் கொண்டுவர அணியின் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுத்தோம் அதை செயல்படுத்தினோம். அணி வீரர்களும் தங்களின் பந்துவீச்சு, பேட்டிங் திறமையை களத்தில் வெளிப்படுத்தினர், புதிய மைதானத்தில் முதல்முறையாக விளையாடியது மகிழ்ச்சி.
அடுத்தடுத்த ஆட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கூடுதலாக பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கும்போது, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கேப்டனுக்கு இருக்கும் இன்ப தலைவலி. ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் போதும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறோம். சில விஷயங்களில் இன்னும் நாங்கள் மேம்பட வேண்டும், அது குறித்துப் பேசி, அடுத்த ஆட்டத்தில் அந்தக் குறைபாடுகளைக் களைவோம்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் சாதனை சமன்
இந்த வெற்றி மூலம் இந்திய அணி சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் சாதனையையும் சமன் செய்துள்ளது. டி20 போட்டிகளில் எதிரணிகளை அதிகமுறை ஆல்அவுட் செய்த வகையில் பாகிஸ்தானின் சாதனையை இந்திய அணி நேற்று சமன் செய்தது. பாகிஸ்தான் அணி 42முறை எதிரணிகளை டி20 போட்டிகளில் ஆல்அவுட் செய்தது, இந்திய அணியும் அந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












