டி20 மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்தி ராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி இன்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, நிதானமான பேட்டிங்கால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது.
இதன் மூலம் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2 புள்ளிகளுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக முதல் ஆட்டத்தில் மோசமாகத் தோற்றதால், நிகர ரன்ரேட் இன்னும் இந்திய அணிக்கு மைனஸ் 1.217 என்று இருக்கிறது. இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா?

பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிவு
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சானா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் அடைந்த தோல்வியால், அணியில் சிறிய மாற்றத்துடன் இந்திய அணி களமிறங்கியது. பூஜா வஸ்த்ராக்கருக்குப் பதிலாக எஸ்.சஞ்சனா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
முனிபா, குல் பெரோசா ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரை இந்திய வீராங்கனை ரேணுகா சிங் வீசினார். தொடக்கத்திலிருந்தே ரேணுகா சிங் ஓவரில் திணறிய பெரோசா, க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் முதல் ஓவரில் வெளியேறினார்.
அடுத்து சிதாரா அமின் களமிறங்கி, முனிபாவுடன் சேர்ந்தார். சிதாரா அமின் 8 ரன்கள் சேர்த்தநிலையில் தீப்தி ஷர்மா சுழற்பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். பவர்ப்ளே ஓவருக்குள் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
3வது விக்கெட்டுக்கு முனிபாவுடன், ஓமைமா சோஹைல் சேர்ந்தார். ஆனால், அவரும் நிலைத்து பேட் செய்யவில்லை. அருந்ததி ரெட்டி வீசிய 7-வது ஓவரில் ஷபாலி வர்மாவிடம் கேட்ச் கொடுத்து சோஹைல் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து நிதா தார், களமிறங்கி, முனிபாவுடன் இணைந்தார்.
இந்திய வீராங்கனைகளின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் பேட்டர்கள் போராடினர். 5வது ஓவருக்குப்பின் பாகிஸ்தான் அணியால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் பேட்டர்கள் திணறல்
ஸ்ரேயங்கா பாட்டீல் வீசிய 10-வது ஓவரில் செட்டில் பேட்டர் முனிபா 17 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்திருந்தது. பாகிஸ்தான் பேட்டர்கள் பேட் செய்த விதத்தைப் பார்த்த போது, அவர்களால் 100 ரன்களைக் கடக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
அடுத்து களமிறங்கிய அலியா ரியாஸ், நிதா தாருடன் சேர்ந்தார். இருவரும் பலமுறை ஆட்டத்தில் ஏற்படும் இக்கட்டான நிலையில் இருந்து பாகிஸ்தான் அணியை மீட்டுள்ளனர் என்பதால் இருவர் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஏறக்குறைய 7 ஓவர்களாக பவுண்டரி அடிக்காத பாகிஸ்தான் அணி, ரேணுகா சிங் வீசிய 11வது ஓவரில் நிதா தார் பவுண்டரி அடித்தார். 13-வது ஓவரை அருந்ததி ரெட்டி வீசினார். அருந்ததி வீசிய முதல் பந்தில் ரியாஸ் கால்காப்பில் வாங்கி 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது.
அடுத்ததாக கேப்டன் பாத்திமா சானா வந்து, நிதா தாருடன் இணைந்தார். அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய பாத்திமா 2 பவுண்டரிகளை ஆஷாவின் ஓவரில் விளாசி ஓவரில் விக்கெட் கீப்பர் கோஷிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்னில் கேப்டன் பாத்திமா ஆட்டமிழந்தார். இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் மின்னல் வேகத்தில் இந்த கேட்சைப் பிடித்தார். 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பட மூலாதாரம், Getty Images
100 ரன்களுக்கு போராட்டம்
அடுத்து வந்த துபா ஹசன் வந்தவேகத்தில் ஸ்ரேயங்கா பாட்டீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து டக்அவுட் ஆனார். 8-வது விக்கெட்டுக்கு அரூப் ஷா வந்து, நிதா தாரின் நிதானமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்து 100 ரன்களுக்கு அருகே கொண்டு வந்தனர்.
அருந்ததி ரெட்டி வீசிய கடைசி ஓவரில் க்ளீன் போல்டாகி நிதா தார் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நஷாரா சாந்து 2 ரன்கள் அடிக்கவே பாகிஸ்தான் அணி 100 ரன்களைக் கடந்தது, கடைசிப்பந்தில் நஷாரா பவுண்டரி அடிக்கவே பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் சேர்த்தது.
அரூப் ஷா 14 ரன்களிலும், நஷாரா 6 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரேணுகா சிங், தீப்தி ஷர்மா, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
கட்டுக்கோப்பான பந்துவீச்சு
இந்திய பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை ஸ்ரேயாங்கா பாட்டீல் 4 ஓவர்கள் வீசி ஒருமெய்டன் 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை.
அருந்ததி ரெட்டியும் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களில் ஒரு பவுண்டரி மட்டுமே கொடுத்திருந்தார். ரேணுகா சிங், தீப்தி ஷர்மா,ஷோபனா என இந்திய வீராங்கனைகள் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். அவர்கள் 59 டாட் பந்துகளை வீசினர்.
ஸ்மிருதி மந்தனா ஏமாற்றம்
106 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர்.
சாதியா இக்பாலின் பந்துவீச்சில் 5வது ஓவரிலேயே ஸ்மிருதி மந்தனா 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து ரோட்ரிக்ஸ் களமிறங்கி, ஷபாலி வர்மாவுடன் சேர்ந்தார்.
7 ஓவர்களுக்குப் பின் முதல் பவுண்டரி
கடந்த ஆட்டத்தில் 3வது வரிசையில் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த முறை களமிறங்கவில்லை, அதற்குப் பதிலாக ஜெமிமியா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார். ஷபாலி, ரோட்ரிக்ஸ் இருவரும் நிதானமாக பேட் செய்து ஸ்கோரை உயர்த்தினர். பவர்ப்ளே ஓவரில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் சேர்த்தது.
7 ஓவர்களாக இந்திய பேட்டர்கள் ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. துபா ஹசன் வீசிய 8-வது ஓவரில் ஷபாலி வர்மா முதல் பவுண்டரி அடித்தனர். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.
ஓமைமா சோஹைல் வீசிய 12வது ஓவரில் ஷபாலி வர்மா பவுண்டரி அடித்த நிலையில் அதே ஓவரில் அலியா ரியாஸிடம் கேட்ச் கொடுத்து 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் களமிறங்கி, ரோட்ரிக்ஸுடன் சேர்ந்தார். இந்திய அணி வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட்டது.
குறைந்த ஸ்கோரை எளிதாக அடித்திருக்கலாம், ஆனால், இந்திய பேட்டர்கள் விக்கெட்டை நிலைப்படுத்தும் நோக்கில் பந்துகளை வீணடித்தனர், பவுண்டரி, சிக்ஸர் பெரிதாக அடிக்க தவறியதும் ஸ்கோரை உயர்த்த முடியாதமைக்கு காரணமாக இருந்தது.
நிதானமாக பேட் செய்த ரோட்ரிக்ஸ் 23 ரன்கள் சேர்த்தநிலையில் கேப்டன் பாத்திமா சானா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் முனிபா அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரிச்சா கோஷ் வந்தவேகத்தில் முனிபா அலியிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். இந்திய அணி அடுத்தடுத்த பந்தில் இரு விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடியில் சிக்கியது.

பட மூலாதாரம், Getty Images
கேப்டனின் பொறுப்பான ஆட்டம்
அடுத்து தீப்தி ஷர்மா களமிறங்கி, ஹர்மன்ப்ரீத்துடன் சேர்ந்தார். 24 பந்துகளில் இந்திய அணி வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. சாதியா இக்பால் வீசிய 17-வது ஓவரில் தீப்தியும், ஹர்மன்ப்ரீத் கவுரும் பவுண்டரிகூட அடிக்காமல் 2 ரன்கள், 3 ரன்கள் , ஒற்றை ரன் என ஒரே ஓவரில் 10 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
இந்திய அணி வெற்றிக்கு 18 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. சானா வீசிய 18-வது ஓவரில் ஹர்மன்ப்ரீத் பவுண்டரி உள்பட 8 ரன்கள் சேர்த்து அழுத்தத்தைக் குறைத்தனர். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை நிதா தார் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் ஹர்மன்ப்ரீத் காயத்தால் ரிட்டயர்ட் ஹட்ர் முறையில் 29 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த சஜனா பவுண்டரி அடிக்கவே இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
18.5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தீப்தி ஷர்மா 7 ரன்களிலும், சஜனா 4 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்டநாயகியாக அருந்ததி
இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சுதான் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்த அருந்ததி ரெட்டி ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.
வெற்றிக்கு காரணம் என்ன?
இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்துக்கு காயம் ஏற்பட்டதால் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டியளித்தார். அவர் பேசுகையில்
“ஹர்மன்ப்ரீத்துக்கு ஏற்பட்ட காயத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். பந்துவீச்சில் நாங்கள் மிகுந்த கட்டுக்கோப்புடன் செயல்பட்டோம், திட்டங்களையும் சரியாகச் செயல்படுத்தினோம்.
பேட்டிங்கிலும் நல்ல தொடக்கம் கிடைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். வெற்றி கிடைத்தாலும் நிகர ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை. நானும், ஷபாலியும் விக்கெட்டை சரிவைவிட ரன்ரேட்டை உயர்த்துவதில்தான் கவனமாக இருந்தோம்.
இருப்பினும் எங்களால் வேகமாக ரன்களைக் குவிக்க முடியவில்லை. இலங்கை, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த வெற்றி எங்களுக்கு சிறந்த நம்பிக்கையை அளித்துள்ளது” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், Getty Images
மந்தமான பேட்டிங்
ஒருவேளை பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 105 ரன்களை 10 ஓவரில் இந்திய அணி சேஸ் செய்திருந்தால், நிகர ரன்ரேட் உயர்ந்திருக்கும். ஆனால், இந்திய மகளிர் மிகவும் மந்தமாக பேட் செய்தனர். இந்திய வீராங்கனைகள் மொத்தமே 5 பவுண்டரிகள்தான் அடித்தனர்.
ஆனால், பாகிஸ்தான் பேட்டர்கள் 8 பவுண்டரிகள் அடித்தனர். இந்திய அணியின் மந்தமான ரன்சேர்ப்புதான் நிகர ரன்ரேட்டை உயரவிடாமல் செய்தது. இந்திய அணியின் நிகர ரன்ரேட் இன்னும் ப்ளஸ்க்குள் வராததால் அடுத்துவரும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றியை பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.
ஆனால், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் ஒரு தோல்வி அடைந்தாலும், அதன் நிகர ரன்ரேட் 0.555 என ப்ளஸில்தான் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு இருக்கிறதா?
ஏ பிரிவில் இருந்து இரு அணிகள் மட்டுமே அரையிறுதி செல்ல முடியும். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாகவும், நடப்பு சாம்பியனாகவும் இருப்பது அந்த அணியை அரையிறுதிக்கு கொண்டு செல்லும்.
இந்திய அணி அடுத்துவரும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாய வெற்றியைப் பெற்று 6 புள்ளிகளைப் பெற வேண்டும்.
அதேநேரம், ஆஸ்திரேலிய அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தினால், இந்திய அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒருவேளை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் சமபுள்ளிகளுடன் இருந்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் அரையிறுதி செல்லும்.
ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. அதாவது நியூசிலாந்து அணி தனது அடுத்த 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானிடம் தோற்க வேண்டும், அல்லது, ஆஸ்திரேலிய அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்து, பாகிஸ்தானிடம் தோற்க வேண்டும்.
அப்போது 4 புள்ளிகளுடன் இரு அணிகள் இருக்கும்போது, நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது அணியாக இந்திய அணி செல்ல முடியும். இதற்கு இந்திய அணி தனது அடுத்த இரு ஆட்டங்களிலும் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் வெற்றி பெற வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












