மூன்றாவது முறையாக சீன அதிபராகி வரலாறு படைத்தார் ஜின்பிங்

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஸ்டீபன் மெக்டோனல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
    • இருந்து, பெய்ஜிங்
    • எழுதியவர், ஜோயெல் கின்டோ
    • பதவி, பிபிசி செய்தியாளர்
    • இருந்து, சிங்கப்பூர்

சீன அதிபர் ஷி ஜின்பிங், அந்நாட்டின் பொம்மை நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுள்ளார். மாவோவுக்குப் பிறகு சீன தலைவர்கள் இருமுறை மட்டுமே அதிபர் பதவியை வகித்துள்ளனர். அவருக்குப் பிறகு தற்போது ஷி ஜின்பிங் தான் மூன்றாவது முறையாக சீன அதிபர் பதவியை வகிக்கிறார்.

இந்த அதிகார பலப்படுத்துதலைத் தொடர்ந்து, 69 வயதான ஷி ஜின்பிங், சீனாவின் மிகுந்த மேலாதிக்கம் கொண்ட தலைவராக மாறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் உள்ளதன் பின்னணியில் இருந்து அவருக்கான அதிகாரம் கிடைத்துள்ளது.

அவர் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி ஏற்பார் என்பது பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டதுதான். வரும் நாட்களில் புதிய பிரீமியர்(பிரதமர்) மற்றும் பல்வேறு அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் ஷி ஜின்பிங் விசுவாசிகளாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஷி ஜின்பிங்கின் நம்பர் டூவாக லி கியாங்கும் அடக்கம்.

அரசாங்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களைத் தூண்டிவிட்ட தனது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைத் தொடர்ந்து சீனாவை வெளியுலகுக்குத் திறந்தபோது ஷி ஜின்பிங் தனது ஆட்சியை உறுதிப்படுத்தினார்.

இந்த வாரம் நடக்கும் தேசிய மக்கள் காங்கிரஸ் மற்றும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு ஆகியவற்றின் இரண்டு அமர்வுகள், வரும் ஆண்டுகளில் சீனாவின் பாதையைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதால் அவை உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

மாவோ சேதுங்கிற்கு பிறகு, சீனாவில் தலைவர்கள் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருந்துள்ளனர். ஷி ஜின்பிங் 2018ஆம் ஆண்டில் இந்தக் கட்டுப்பாடு மாற்றப்பட்டபோது, சீன தலைவர் மாவோவுக்கு பிறகு வரலாற்றில் காணப்படாத ஒரு நபராக அவரை மாற்றியது.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

அதிகாரத்தில் தனது பிடியை வலுவாக்கும் ஷி ஜின்பிங்

ஷி ஜின்பிங், தன்னை மையமாக வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஷி ஜின்பிங் மாற்றி அமைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை.

கிட்டத்தட்ட 3,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ரப்பர் ஸ்டாம்ப் அமர்வான வருடாந்திர அரசியல் கூட்டத்தில், சீன பிரீமியர் (பிரதமர்) மாற்றம் செய்யப்படுவதில் இது வெளிப்படும்.

உலகின் 2வது பெரிய பொருளாதார நாட்டின் பிரீமியராக தேர்ந்தெடுக்கப்படுவர் பெயரளவில் அந்நாட்டை நிர்வகிப்பவராக இருப்பார். அதிகார அமைப்பில் ஷி ஜின்பிங்கிற்கு அடுத்த இடத்தில் அவர் இருப்பார்.

தேசிய மக்கள் காங்கிரஸின் முதல்நாள் அமர்வில் சீனாவின் தற்போதைய பிரீமியர் லி காச்சியாங் நடுநாயகமாக இருப்பார். பின்னர், புதிய பிரீமியர் -அனேகமாக லி கியாங்- இந்த இடத்தைப் பெறுவார்.

ஷி ஜின்பிங் மீதான விசுவாசத்தை வைத்துப் பார்க்கும்போது லி காச்சியாங் , லி கியாங் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன.

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த குழுவான ஏழு பேர் கொண்ட பொலிட்பீரோ நிலைக்குழுவிற்குப் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் அனைவரும் ஷி ஜின்பிங்கிற்கு விசுவாசமானவர்கள்.

தற்போது நடைபெறும் தேசிய மக்கள் காங்கிரஸில் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் தலைமை பதவியும் மாற்றப்படவுள்ளன. ஷி ஜின்பிங்கிற்கு விசுவாசமானவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் தகுதியற்றவர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் ஷி ஜின்பிங்கிற்கு அவர்கள் அச்சமில்லாமல், வெளிப்படையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

"இந்த மாற்றங்கள் மூலம் ஒருபுறம், ஷி தனது புதிய தலைமையை வைத்து தான் செய்ய விரும்புவதைச் செய்துகொள்ள முடியும். ஆனால் மறுபுறம், தன் கருத்துக்கு எதிர் கருத்தே இல்லாத சூழலில் அவர் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது," என்று வணிகப் பிரமுகர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: