எகிப்து பிரமிடுக்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய தாழ்வாரம்: உள்ளிருந்து கிடைத்த அதிசயம்

தாழ்வாரத்தின் உட்பகுதி.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, எண்டோஸ்கோபி கேமரா படமெடுத்த தாழ்வாரத்தின் உட்பகுதி
    • எழுதியவர், டேவிட் கிரிட்டன்
    • பதவி, பிபிசி நியூஸ்

பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்தில் உள்ள மாபெரும் கிசா கிரேட் பிரமிடு கட்டமைப்புக்குள் அதன் முதன்மை நுழைவாயிலுக்கு மேலே ஒரு மூடப்பட்ட ரகசிய தாழ்வாரம் போன்ற பகுதி இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்குள்ளே உள்ள காட்சி இப்போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகாலம் கழித்து அந்நாட்டு தொல்லியல் துறை அதிகாரிகள் அதன் உள்ளே எப்படி உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

என்டோஸ்கோபி முறையில் எடுக்கப்பட்ட வீடியோ அந்தத் தாழ்வாரத்தின் உட்புறங்களைப் படமெடுத்துக் காட்டியுள்ளது. 30 அடி நீளமும், 7 அடி அகலமும் உள்ளது ஆங்கிலத்தில் காரிடார் என்று குறிக்கப்படும் அந்தத் தாழ்வாரம்.

நுழைவாயில், அல்லது இது போல கண்டுபிடிக்கப்படாமல் உள்ள இன்னொரு தாழ்வாரம் இரண்டில் ஏதேனும் ஒன்றைச் சுற்றி, பிரமிடின் பாரம் மிக அதிகமாக இறங்காமல் தடுக்கும் வகையில் அந்த பாரத்தை பரவலாக்கி கொடுப்பதற்கான கட்டுமான உத்தியாக இந்த தாழ்வாரம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இப்படி ஒரு ரகசியத் தாழ்வாரம் இருப்பது 2016ஆம் ஆண்டு முதல் முறையாக மியூவோகிராஃபி என்ற ஊடுருவி படமெடுக்கும் தொழில்நுட்பத்தின் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்டது.

மியூவான்கள் என்ற அணுவுட் துகள்களைச் செலுத்தி ஆய்வு சோதனை செய்து, அதில் கிடைத்த தரவுகளை ஆய்வு செய்தது ஸ்கேன் பிரமிட்ஸ் என்ற ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு. இந்த மியூவான்கள் காஸ்மிக் கதிர்களின் துணை வினையாக விளைவது. இதைச் செலுத்தும்போது கற்கள் இவற்றில் பகுதியளவை உறிஞ்சிக்கொள்ளும். அந்தத் தரவுகளில் தெரிந்த அடர்த்தி மாறுபாடுகளைக் கண்டறிந்தது.

கிரேட் பிரமிடு கட்டமைப்பின் வடக்கு முகத்துக்குப் பின்னால் ஒரு காலி இடம் இருப்பதை இந்த ஊடுருவாத் தொழில்நுட்பம் காட்டிக் கொடுத்தது. முதன்மை நுழைவாயிலுக்கு 7 மீட்டருக்கு மேலே இது கண்டறியப்பட்டது. ஆங்கில V எழுத்தின் வடிவத்தில் அமைந்த செவ்ரான் கட்டமைப்பு ஒன்று இந்த இடத்தில் அமைந்துள்ளது.

குஃபு பாரோ மன்னன் கல்லறையை நெருங்கிவிட்டார்களா?

பிரமிடு தாழ்வாரம்.

பட மூலாதாரம், EPA

இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து, ரேடார், அல்ட்ரா சவுண்ட் ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, செவ்ரான் கட்டமைப்பின் இணைப்பில் உள்ள ஒரு மெல்லிய இடைவெளி வழியாக, 0.24 அங்குல அளவுள்ள மெல்லிய எண்டோஸ்கோப் குழல் ஒன்றினை அனுப்பி உள் அமைப்பைப் படம் எடுத்தார்கள்.

இந்த எண்டோஸ்கோப் கேமரா மூலம் அந்தத் தாழ்வாரத்தின் உள்ளே எடுக்கப்பட்ட படங்கள் வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன. அந்த வீடியோவில், உள்ளே ஒரு காலியான தாழ்வாரம் போன்ற அமைப்பு இருப்பதும், அதன் கூரை வளைவான கற்களால் ஆகியிருப்பதும், அதன் பக்கச் சுவர்கள் கரடுமுரடான கற்களால் பின்னிப் பின்னி உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

"இந்த ஸ்கேனிங் ஆய்வைத் தொடர்ந்து செய்து, இதற்குக் கீழே ஏதாவது இருக்கிறதா, இல்லை வெறும் இந்தத் தாழ்வாரம் மட்டும்தானா என்பதைக் கண்டறிய என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்," என்றார் எகிப்தின் தொல்பொருள்கள் உச்சநிலை கவுன்சிலின் தலைவரான முஸ்தஃபா வாசிரி.

இந்த கிரேட் பிரமிடு கிசா பீடபூமியின் மீது கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 146 மீட்டர். தோராயமாக கிமு 2609 முதல் கி.மு. 2584 வரையிலான காலப்பகுதியில் ஆட்சி செலுத்திய சியோப்ஸ் அல்லது குஃபு பாரோ மன்னர்களின் காலத்தில் இது கட்டப்பட்டது.

புவியில் உள்ள மிகப் பழைய, மிகப்பெரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான இதை எப்படிக் கட்டியிருப்பார்கள் என்பது குறித்து அறிஞர்களிடம் மாறுபட்ட கருத்துகளே நிலவுகின்றன. கிசாவில் காணப்படும் மூன்று பிரமிடுகளில் மிகப் பெரியது இந்த கிரேட் பிரமிடு.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் விவாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது என்று பொருள் தரும் வகையில் “உலகின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்லும் பெரிய கண்டுபிடிப்பு இது” என்று குறிப்பிட்டார் எகிப்து தொல்லியல் அறிஞர் ஜஹி ஹவாஸ்.

குஃபு மன்னர் புதைக்கப்பட்ட குழி இன்னும் பிரமிடுக்குள் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவி செய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

அந்தத் தாழ்வாரத்துக்கு அடியில் ‘முக்கியமான ஒன்று’ இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.

"இப்போதில் இருந்து இன்னும் சில மாதங்களில், நான் சொல்வது சரியா இல்லையா என்பதை நாம் பார்க்கமுடியும்," என்றார் அவர்.

இதைப் போல இரண்டாவது, இதைவிடப் பெரிய வெற்றிடம் ஒன்று 2017ஆம் ஆண்டு மியூவோகிரஃபியை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.

30 மீட்டர் நீளமும், பல மீட்டர் உயரமும் உள்ள இந்த வெற்றிடம், கிராண்ட் கேலரி என்று அறியப்படும் பகுதிக்கு நேர் மேலே அமைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: